திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் பகுதியில் உள்ள புது எட்டம நாயக்கன் பட்டி சு.தங்கவேலு பாரம்பரிய விவசாயி ஆவார். இவர் தனது நிலத்தில், தானியப் பயிர்கள், எண்ணெய்ப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இரண்டு மூன்று கறவை மாடுகள் மற்றும் ஆடுகள், கோழிகளையும் வளர்த்து வருகிறார்.
தோட்டத்திலேயே வீடு கட்டிக் குடியிருந்தும் வரும் இவரை, அண்மையில் சந்தித்த போது, தனது மிளகாய் சாகுபடி குறித்து நம்மிடம் எடுத்துக் கூறினார்.
“மிளகா சாகுபடிக்கு நெலத்துல நெறய எருவைப் போடணும். அப்பத்தான் செடிக, பூச்சிகள, நோய்கள சமாளிச்சு, தெடமா இருந்து நல்லா காய்க்கும். அப்புறம் நெலத்தைப் புழுதியா உழுகணும். இதனால நெலத்துல இருக்குற களைச்செடி விதைக எல்லாம் நல்லா காஞ்சு போகும். அதனால நெலத்துல களைக வளர்றது குறைவா இருக்கும்.
நெலத்தைத் திரும்பத் திரும்ப உழுகுறதுனால எந்தத் தப்பும் வராது. ஒரு தடவை உழுதா, ஒரு ஒரம் போட்டது மாதிரி தான். நெலம் நல்லா வெளையும். இப்பிடி உழுது வெங்காயக் கரைகளைக் கட்டி நாத்துகள நடணும். வெங்காயக் கரை பாத்திகள்ல தண்ணி மளமளன்னு பாயும். நாமளே சொந்தமா நாத்தங்கால் போட்டு நாத்துகள வளர்த்து எடுத்தும் நடலாம்.
இல்லேன்னா நாத்துகள வளர்த்து விக்கிற நாத்துப் பண்ணைகள்ல போயி நாத்துகள வாங்கி வந்தும் நடலாம். ஒரு ஏக்கருக்கு நாத்தங்கால் அமைக்க 200 கிராம் மிளகா விதை வேணும். இதோட வெலை ரெண்டாயிரம் ரூபா. நாத்தா வாங்கி வந்து நடணும்ன்னா, ஒரு நாத்தோட விலை ஒத்த ரூபா. ஏக்கருக்கு நாலாயிரம் நாத்துக வேணும்.
தண்ணிய பாய்ச்சிக்கிட்டே நாத்துகள நடணும். அப்புறம் நாத்துக நல்லா உசுரு புடிச்சு வளர்றதுக்கு, நட்டு மூணு நாலு நாளுல தண்ணி விடணும். இப்பிடிச் செஞ்சா, பத்துப் பதினஞ்சு நாள்ல நாத்துக நல்லா தழச்சு வரும். அதோட களையும் முளச்சு வரும். இந்த நேரத்துல தண்ணிய பாய்ச்சி, பருவம் பாத்துக் களை எடுக்கணும்.
அதுக்குப் பெறகு, ஒரு மூட்டை டிஏபி, ஒரு மூட்டை பொட்டாசை, செடிகளுக்குக் குடுத்து, கரைகளை நல்லா எடுத்துக் கட்டி தண்ணி விடணும். எப்பிடியும் வாரம் ஒரு தண்ணி விட்டாகணும். மிளகா செடிகள ஏதாவது ஒரு நோய் அல்லது பூச்சி தாக்கிக்கிட்டே இருக்கும். குறிப்பா, அசுவினி விழுகும். அப்புறம் இலைக மொரமொரப்பா மாறும். இதுகள கட்டுப்படுத்த, அப்பப்போ மருந்து அடிச்சுக்கிட்டே இருக்கணும்.
இப்பிடி, கவனமா வளர்த்தா மூனு மாசத்துல மிளகா செடிக காய்ப்புக்கு வந்துரும். எங்க பக்கம் புரட்டாசி ஐப்பசி பட்டத்துல தான் நடுவோம். காய்ப்பு ஆரம்பிச்சதுல இருந்து ஆறு மாசம் வரைக்கும் செடிகள்ல காய்க காய்க்கும். பதினஞ்சு நாளைக்கு ஒருமுறை காய்கள பறிக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்ச ரூவா வருமானமா கெடைக்கும். இதுல அறுபது ஆயிர ரூவா செலவுக் கணக்குல போயிரும்.
நிகர இலாபமா ஏக்கருக்கு நாப்பதாயிரம் ரூவா கிடைக்கும்’’ என்றார்.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!