தரிசு நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல்!

Integrated farm

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021

வேளாண் காலநிலைக்கு ஏற்பவும், மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், ஒருங்கிணைந்த பண்ணையை அமைத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். இம்முறையை, குறிப்பிட்ட இடத்தின் ஆண்டு மழைப்பொழிவு, பயிர் வகைகள் மற்றும் விற்பனை வாய்ப்புகள், இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றைப் பொறுத்துச் செயல்படுத்த வேண்டும்.

பருவமழை பொய்த்து விடுவதால், இறவை சாகுபடியில் கிடைப்பதைப் போல, மானாவாரி சாகுபடியில் வருமானம் பெற முடிவதில்லை. மேலும், உத்திகளைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல், திடீரென்று பெய்யும் அதிக மழை, பயிர்களுக்கு ஏற்படும் சேதம், நிலையில்லாத மகசூல் போன்றவற்றால், உழவர்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வு, மானாவாரி விவசாயிகள் ஒருங்கிணைந்த முறைக்கு மாறுவதேயாகும்.

தரிசு நிலத்துக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்

குறு மற்றும் சிறு விவசாயிகள் தரிசு நிலங்களில், செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் எருமை வளர்ப்பில் ஈடுபட்டால் நல்ல வருவாயைப் பெற முடியும். வீட்டுக்கு ஒன்றிரண்டு கால்நடைகளை வளர்த்து வந்த விவசாயிகள், இப்போது, கால்நடைப் பண்ணைகளை அமைத்து இலாபம் தரும் தொழிலாகச் செய்து வருகின்றனர்.

மழைப்பொழிவு குறைந்த, ஆண்டுக்கு 500 மி,மீ.க்கும் குறைவாக மழையுள்ள பகுதிகளில் செயல்படுத்தும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், செம்மறியாடு வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாகும். இந்தப் பகுதிகளில் உள்ள நிலங்களில் வறட்சியைத் தாங்கும் குறுகியகால மானாவாரிப் பயிர்களுடன், மரவகைத் தீவனப் பயிர்களை வளர்த்துச் செம்மறி ஆடுகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்.

மரவகைத் தீவனப் பயிர்களில், புரதச் சத்தும், தாதுப்புகளும் நிறைந்த, அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா, கருவேல், வெள்வேல், வாகை, வேம்பு, கல்யாண முருங்கை ஆகியன முக்கியமானவை. மரத் தழைகளில் மற்ற  தீவனங்களில் உள்ளதைக் காட்டிலும் சத்துகள்  நிறைந்துள்ளன. இவற்றை வயல் வரப்புகளில் பயிரிட்டால், ஆறு மாதங்களில் தீவனத்தைக் கொடுக்கத் தொடங்கி விடும்.

மரவகைத் தழைகளைத் தனியாகக் கொடுக்காமல், தானியம் அல்லது புல்வகைத் தீவனங்களைக் கலந்து, பசுந்தீவனமாக ஆடுகளுக்குக் கொடுத்தால், அடர்தீவனச் செலவைக் குறைத்து உற்பத்தித் திறனைக் கூட்டலாம்.

தரிசு நிலத்துக்கு ஏற்ற பயிர்கள்

குறுகிய காலப் பயிர்கள்: உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு, நரிப்பயறு, தட்டைப்பயறு மற்றும் சோளம், மக்காச்சோளம், கடலை, இராகி ஆகியவற்றைப் பயிரிடலாம். இந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் சோளத்தட்டு, கடலைச்செடி, கொள்ளுக்கொடி போன்றவை ஆடுகளுக்கு நல்ல தீவனமாகும்.

பண்ணையைத் தொடங்குமுன், விவசாயிகள் தங்களின் நிலங்களிலும், நிலத்தைச் சுற்றியும் தீவனப் புற்கள் மற்றும் தீவன மரங்களை வளர்க்க வேண்டும். மேடான மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் கொட்டிலை அமைக்க வேண்டும்.

கால்நடை வளர்ப்பு 

எருமை வளர்ப்பு: ஒரு ஏக்கர் மானாவாரி மற்றும் தரிசு நிலத்தில் இரண்டு எருமை மாடுகள் மற்றும் பத்து ஆடுகளை வளர்ப்பதற்குத் தேவையான தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து அதிகளவில் நிகர இலாபத்தை ஈட்ட முடியும். மேலும், மேய்ச்சல் நிலத்தை உருவாக்கி மேய்ச்சலுக்கு அனுப்பினால் உற்பத்திச் செலவைக் குறைக்கலாம்.

மேய்ச்சல் முறை செம்மறியாடு வளர்ப்பு: செம்மறியாடுகள் பெரும்பாலும், பயிரில்லாத மற்றும் தரிசு நிலங்களுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்லப்படும். இம்முறையில் அவற்றுக்குப் போதியளவில் புரதம், தாதுப்பு மற்றும் பிற சத்துகள் கிடைப்பதில்லை. இத்தகைய ஆடுகள் மேய்ச்சலில் இருந்து மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும், கடலைச்செடி, கொள்ளுக்கொடி ஆகியவற்றைத் தரலாம்.

நீர் வசதி குறைவாக உள்ள இடங்களில், வேலிமசால் போன்ற புரதச்சத்து மிக்க பயறுவகைத் தீவனப் பயிர்களை வளர்த்து, வளர்ந்த ஆடு ஒன்றுக்கு 250-500 கிராம் வீதம் கொடுக்கலாம். போதியளவில் மானாவாரி நிலங்களை வைத்துள்ள விவசாயிகள், மழைக்காலத் தொடக்கத்தில் அவற்றில், கொழுக்கட்டைப் புல், கினியாப்புல், ஸ்டைலோ ஹெமட்டா, ஸ்டைலோ ஸ்கேப்ரா ஆகியவற்றை வளர்த்து மேய்ச்சல் நிலத்தை உருவாக்கலாம். மாலையில் அடர் தீவனம் அளித்தல் அவசியமாகும்.

ஆடுகளின் உடல் பராமரிப்பு மற்றும் உற்பத்திக்குத் தீவனம் அவசியம். உற்பத்தி என்பது, உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம், பாலுற்பத்தி, உரோம உற்பத்தி ஆகியவற்றைக் கொண்டதாகும். இந்த அனைத்துக்கும் எரிசக்தி, புரதச்சத்து, நார்சத்து, கொழுப்புச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள், நீர்  ஆகியன மிகவும் அவசியம். இந்தச் சத்துகள் அனைத்தும் செம்மறி ஆடுகளுக்கு அளிக்கும் தீவனத்தின் மூலம் சரி செய்யப்படும்.

வேளாண் காடுகள் இணைந்த மேய்ச்சல் புல் வகைகள்

வெள்வேல், வாகை, சூபாபுல் போன்ற மரங்களுடன், கொழுக்கட்டைப் புல்லையும் வளர்க்கலாம். ஆங்காங்கே சில இடங்கள், சாலையோரங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில், கொழுக்கட்டைப் புல் மற்றும் வெள்வேல்  மரங்களை வளர்த்து, கால்நடைகள், குறிப்பாகச் செம்மறியாடுகள் மேய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.

காளான் வளர்ப்பு

மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணையத்தில் காளானை வளர்த்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். உலர்ந்த காளானில் 20-35% புரதச்சத்து உள்ளது. மேலும், கொழுப்பும் மாவுச்சத்தும் மிகக் குறைவாக உள்ளதால், அனைத்து வயது மக்களுக்கும் இது சிறந்த உணவாகும். காளான் வளர்ப்புக் குடில் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

காளான் குடிலின் கூரை, தென்னை அல்லது பனை ஓலையால் வேயப்பட வேண்டும். ஒரு நாளைக்கு 5 கிலோ காளானை உற்பத்தி செய்ய, 10 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலமுள்ள இரண்டு குடில்கள் தேவைப்படும். தினமும் 15-20 காளான் படுக்கைகளைத் தயாரிக்க வேண்டும். இவற்றை அடுக்குகளில் வைக்கலாம். அல்லது உறி முறையில் கயிறுகளில் தொங்க விடலாம்.

பூசண நோய்த் தாக்காத நெல் வைக்கோல் காளான் வளர்ப்புக்கு உகந்தது. இதைத் துண்டுகளாக வெட்டி நல்ல குளிர்ந்த நீரில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, அலுமினியப் பாத்திரத்தில் இட்டு 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் ஒரு மணி நேரம் வேக வைத்துத் தொற்றுகளை நீக்கி, சுத்தமான சாக்குப் படுதாவில் இட்டு நிழலில் உலர வைக்க வேண்டும். இதுவே காளான் படுக்கைக்கு ஏற்ற வைக்கோல் ஆகும்.

60 செ.மீ. உயரம், 30 செ.மீ. அகலம், 80 காஜ் தடிமனுள்ள நெகிழிப் பைகளை எடுத்து, காற்றோட்டம் கிடைக்க ஏதுவாக, அவற்றின் மத்தியில் 15-20 துளைகளை இட வேண்டும். பிறகு, பையின் அடிப்பாகத்தை நூலால்  நன்கு கட்டி வட்டமாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். முதலில்  வைக்கோலை 5 செ.மீ. உயரத்துக்கு இட வேண்டும். அதன்மேல் சுமார் 25 கிராம் காளான் விதைகளைத் தூவ வேண்டும்.

அதன்மேல் இரண்டாம் அடுக்கு வைக்கோல் மற்றும் விதைகளைத் தூவ வேண்டும். இப்படி, ஐந்து அடுக்கு வைக்கோலும் நான்கு அடுக்கு விதையும் உள்ளவாறு நிரப்பப்பட்ட பையின் நுனியை நூலால் கட்டிவிட வேண்டும். காளான் படுக்கைகளில், காளான் வித்துகள், வெண்ணிறப் பூசண இழைகளாக வளர, 12 முதல் 15 நாட்களாகும். ஒரு பையிலிருந்து 5-7 முறை அறுவடை செய்யலாம். மொத்தம் 40-50 நாட்கள் வரை காளானைப் பெறலாம்.

தீவனப் பயிர்கள்

மேய்ச்சல் நிலத்தில் ஆடுகள் மற்றும் எருமைகளுக்குத் தேவையான அளவில் இரை கிடைக்காது. கொட்டில் முறையில் வளரும் ஆடுகளின் தீவனத் தேவையை முழுமையாகத் தீர்க்கும் வகையில், அவை விரும்பி உண்ணும் பலவகைத் தீவனங்களை வழங்கினால், அவற்றின் உற்பத்தித் திறனை  அதிகரிக்கலாம்.                                 

பசுந்தீவனங்கள்

கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளம், தீவன மக்காச்சோளம் ஆகியன தானிய வகைத் தீவனங்கள் ஆகும். கோ.3, 4 ஆகிய கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் வகைகள், கினியாப்புல், கொழுக்கட்டைப்புல் ஆகியன, புல் வகைப் பசுந்தீவனங்கள் ஆகும். வேலிமசால், முயல் மசால், தீவனத் தட்டைப்பயறு, கொள்ளு, சணப்பை ஆகியன, பயறுவகைப் பசுந்தீவனங்கள் ஆகும்.

கடலைச்செடி, கொள்ளுக்கொடி, காய்ந்த மரத் தழைகள் ஆகியன, உலர் தீவனங்கள் ஆகும். சூபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காய்ப்புளி, வேம்பு, வாகை, அகத்தி, சித்தகத்தி, பூவரசு ஆகியன, மரத்தழை தீவனங்கள் ஆகும்.

இந்தத் தீவனங்களைக் கலந்து பல பகுதிகளாகப் பிரித்து, தினமும் நான்கு வேளை கொடுக்கலாம். பசுந்தீவனம் குறைவாகக் கிடைக்கும் காலத்தில் இருப்பதைக் கொடுத்து விட்டு மீதித் தேவைக்கு உலர் தீவனங்களைக் கொடுக்க வேண்டும்.

தீவனப் பற்றாக்குறை இருந்தால், மரத்தழைகளைக் குட்டிகள் நன்கு உண்ணும். இவற்றைத் தவிர, வளரும் குட்டிகளுக்குத் தினமும் 100-150 கிராம் வீதம், புரதம் நிறைந்த கலப்புத் தீவனத்தைக் கொடுத்தால், அவற்றின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

எனவே, பருவக் காலங்களில் பெய்யும் மழைநீரைக் கொண்டும், பண்ணைக் குட்டைகளில் சேமித்து வைத்தும், மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் முறையாகப் பயிரிட்டால், கால்நடைகள் மற்றும் பயிர்கள் வளர்வதற்குத் தேவையான நீரைப் பெற்று உற்பத்தியைப் பெருக்கலாம்.


ஒருங்கிணைந்த பண்ணையம் Dr. Senthil

முனைவர் கி.செந்தில்குமார்,

முனைவர் மா,டெய்சி. கால்நடை ஈனியல் மற்றும் இனப்பெருக்கத் துறை,

வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகம், நாமக்கல்-637002.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!