அழிந்து வரும் வரையாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர்.

ரையாடு நமது மாநில விலங்கு. மலைகளை வாழ்விடமாகக் கொண்ட இந்த விலங்கினம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்தப் பூமி முழுவதும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் மனிதர்களால், எத்தனையோ விலங்கினங்கள், பறவையினங்கள் இன்று காணாமல் போய் விட்டன. இதைப்போல, வரையாடுகளின் வாழ்விடங்களையும் இந்த மனிதர்கள் ஆக்கிரமித்து வருவதால், இந்த இனம் சிதறுண்டு அழிந்து வருகிறது. இதைக் காப்பாற்ற என்ன வழி? இதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்புகளில் வரையாடும் அடங்கும். இதனை நீலகிரி வரையாடு என்றும் அழைப்பர். இது, 4,000 அடி உயரத்துக்கு மேலேயுள்ள மலை முகடுகளில் மட்டும் வாழும் பண்புடையது. மிகவும் அழிந்து வரும் இனங்களில் ஒன்றான இவ்வினம், தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே உள்ளது. வரை என்பது மலை, மலையுச்சி, குன்று, குவடு ஆகிய பொருள்களை உணர்த்தும். ஆடு என்பது, விலங்கினங்களில் ஒன்றான ஆட்டின் இனத்தை உணர்த்தும்.

தமிழ் இலக்கியத்தில் வரையாடு

தொகு ஓங்குமால் வரையாடு வரையாடுழக்க வினுடைந்துகு பெருந்தேன் என்று, சீவக சிந்தாமணியில் வரும் அடி, முற்காலத்தில் இருந்தே வரையாட்டினம் தமிழ்நாட்டில் இருப்பதையும், இதன் மலைச்சிகர வாழ்க்கையையும் விளக்குகிறது. மதுரைக் கண்டராதித்தன் பாடலில், வரையாடு நெல்லிக்காயை உண்பதாகக் கூறப்பட்டுள்ளது. நற்றிணையில், வருடை என்ற சொல் வரையாட்டைக் குறிக்கிறது. இதுதவிர, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, பதிற்றுப்பத்து மற்றும் பரிபாடலிலும் வரையாட்டைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

உடலமைப்பு

காட்டாடு இனங்களில், வரையாடு மிகவும் பெரிய உடலமைப்பைக் கொண்டது. இந்தியாவில் காணப்படும் மற்றொரு காட்டாடு இனமான இமாலயக் காட்டாட்டை விடச் சற்றுப் பெரியது. ஆண் வரையாடு, பெண் வரையாட்டைக் காட்டிலும், உடல் எடையில் இரண்டு மடங்கு கூடுதலாக இருக்கும். வளர்ந்து பருவமடைந்த வரையாட்டில், பாலியல் ஈருருவத் தோற்றம் உண்டு,

அதாவது, ஆண் மற்றும் பெண் வரையாட்டின் உடலமைப்பில் வேறுபாடு உண்டு. பெண் மற்றும் பருவமடையாத ஆண் வரையாட்டின் உடலின் மேற்பகுதி, மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி மங்கலான நிறத்திலும் காணப்படும். ஆண் வரையாட்டின் வயது கூடக்கூட, அதன் உடல் மயிரும் கறுப்பாகிக் கொண்டே இருக்கும்.

நன்கு வளர்ந்து பருவமடைந்த ஆண் வரையாட்டின் பிட்டம் மற்றும் முதுகுக்கு இடைப்பட்ட பகுதி வெள்ளி நிறத்தில் காணப்படும். இருபாலுக்கும் தாடியில்லை. பெண் வரையாட்டில் இரண்டு காம்புகள் உண்டு. ஆனால், மற்ற காட்டாடு இனங்களுக்கு நான்கு காம்புகள் உண்டு.

இருபாலுக்கும் வளைந்த கொம்புகள் உண்டு. ஆண் வரையாட்டின் கொம்பு பெண் வரையாட்டின் கொம்பைவிட நீளமாக இருக்கும். அதிகளவாக ஆணில் 44.5 செ.மீ. நீளமுள்ள கொம்புகளும், பெண்ணில் 35.6 செ.மீ. நீளமுள்ள கொம்புகளும் காணப்பட்டுள்ளன. ஆண் வரையாடு 100 கிலோ எடையும், பெண்ணானது 50 கிலோ எடையும் இருக்கும். தலை மற்றும் உடல் நீளம் 110-150 செ.மீ., தோள்வரை உயரம் சுமார் 80-110 செ.மீ., வாலின் நீளம் 9-12 செ.மீ. இருக்கும்.

இனப் பெருக்கம்

பாலுணர்ச்சி எழுச்சிக் காலத்தில் ஆண் வரையாடானது பெண் வரையாடுகள் கூட்டத்தில் சேரும். ஆளுமையுள்ள ஆண் இனச்சேர்க்கைக்கான வாய்ப்பைப் பெறும். ஓங்கி நிற்கும் ஆண் ஆடுகள் ஒன்றுக்கு மேலிருந்தால், அந்த ஆடுகளுக்கு இடையே சண்டை நடக்கும். அவை, ஒன்றுக்கொன்று துரத்தி, தலை மற்றும் கொம்புகளால் முட்டிக் கொள்ளும். சிலநேரம் ஒரு ஆண் மற்றொரு ஆணை, தன் கொம்புகளால் குத்திக் கொன்று விடும்.

பெரும்பாலும் தோற்கும் ஆண் வரையாடு, அந்தக் கூட்டத்தில் இருந்து விரட்டி விடப்படும். வென்ற ஆண் வரையாடு ஒப்புக் கொண்டால் மட்டுமே தோற்றுப் போன வரையாடு அந்தக் கூட்டத்தில் வைத்துக் கொள்ளப்படும். ஒரு ஆண் பல பெட்டைகளோடு சேரும். வரையாட்டின் இனப்பெருக்கக் காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலமாகும்.

இவ்விலங்கின் கர்ப்பக்காலம் 178-190 நாட்களாகும். ஓர் ஈற்றில் ஒன்று அல்லது அரிதாக இரண்டு குட்டிகளே பிறக்கும். பெரும்பாலும், பேறுகாலம் நவம்பர் முதல் பிப்ரவரியில் இருக்கும். இக்காலம் குளிர்காலம் என்பதால், குட்டிகள் அதிக வெப்பத் தாக்கமில்லாமல் இருக்கும். இந்தச் சூழலில் குட்டியைத் தாய் தன் அரவணைப்பில் வைத்துப் பாதுகாக்கும். குட்டியானது தாய்ப்பாலைப் பெரிதும் நம்பியிருந்தாலும், 2-4 வாரங்களில் திட உணவைத் தின்னத் தொடங்கி விடும். இதன் சராசரி ஆயுட்காலம் சுமார் 9 ஆண்டுகள் இருக்கலாம் எனப்படுகிறது.

சூழலியல்

கடல் மட்டத்திலிருந்து 1,200-2,600 மீட்டர் உயர மலை முகடுகளில் உள்ள புல்வெளிகள் வரையாடுகளின் வாழிடமாகும். 6 முதல் 150 வரையிலான ஆடுகள் குழுவாக இணைந்து வாழும். பெரும்பாலும் 11-71 ஆடுகளைக் கொண்ட கூட்டங்களே அறியப்பட்டுள்ளன. பருவமடைந்த ஆண்கள் பெரும்பாலும் தனித்து வாழும் அல்லது சிறு ஆண் குழுக்களாக வாழும்.

இனப் பெருக்கக் காலத்தில் பெண் குழுக்களோடு சேரும். பெண் குழுக்கள் தங்களுக்கென ஒரு எல்லையை வகுத்து அதனுள் வாழும். ஆண் வரையாடுகள் பல பெண் குழுக்களோடு கலந்து வாழும். இவை தங்களுக்கான தகவல் தொடர்புகளை, பார்த்தல், கத்துதல், நுகர்தல் மூலம் பரிமாறிக் கொள்கின்றன.

புல்வெளிகளில் உள்ள புல்லையே வரையாடுகள் உணவாகக் கொள்ளும். இவை, காலையில் அல்லது மாலையில் கூட்டமாகச் சேர்ந்து மேயும். அதிக வெப்பமான பகல் வேளையில் செங்குத்தாக இருக்கும் பாறை இடுக்குகளில் ஓய்வெடுக்கும். இத்தகைய இடங்கள், எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள உதவும் என்பதால், இவ்விடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

கூட்டமாக ஓய்வு எடுக்கும் போது, அந்தக் கூட்டத்திலுள்ள ஓர் ஆடு, குறிப்பாக, பெண் வரையாடு, உயரமான இடத்திலிருந்து காவல் காக்கும். மிகவும் கூரிய பார்வையுள்ள வரையாடுகள், தங்களின் எதிரிகளை மிகவும் எட்டத்திலிருந்தே கண்டுபிடித்து விடும். ஆபத்து வரப்போகிறது எனத் தெரிந்து விட்டால், சீ்ழ்க்கை ஒலியெழுப்பும் அல்லது உரக்கக் கத்தும். சிறுத்தை, செந்நாய், புலி போன்றவை, வரையாடுகளைக் கொன்று உண்ணும்.

காப்புநிலை

இப்போது, 2,000 முதல் 2,500 வரையாடுகள் 17 இடங்களில் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. மிகக் குறைந்த அளவில், பல இடங்களில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வாழ்வது, இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதன் மொத்த எண்ணிக்கையில் ஆயிரம் வரையாடுகள், கேரளாவின் இரவிக்குளம் தேசியப் பூங்காவிலும், சுமார் 300 ஆடுகள் ஆனைமலைப் பகுதியிலும், மற்றவை பிற இடங்களிலும் காணப்படுகின்றன.

இவ்விலங்கின் வாழ்விடமான காடுகள், பணப்பயிர் சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டு உள்ளதால், மிகவும் பிளவுபட்டு உள்ளன. மேலும், காடுகளில் கால்நடைகளை மேய்த்தல், மின் உற்பத்திக்கு அணைகளைக் கட்டுதல், சாலைகளை அமைத்தல், வேட்டையாடுதல் போன்ற மனிதர்களின் பல்வேறு செயல்கள், வரையாடுகளின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. குறைந்த எண்ணிக்கையால் ஏற்படும் உள்ளினப் பெருக்கமும், வரையாடுகளின் வாழ்வுக்கு மற்றொரு அச்சுறுத்தலாகும்.

காணப்படும் இடங்கள்

தமிழ்நாட்டில், ஆனைமலை, தேனி – மேகமலை, முக்கூர்த்தி மலைகள், நீலகிரி மலைகள், வால்பாறை, ஆழியார் மலைகள், திருவில்லிப்புத்தூர், கேரளத்திலுள்ள இரவிக்குளம் தேசியப் பூங்கா, அகத்திய மலைகள் மற்றும் ஹைகில்ஸ், மூணார் ஆகிய பகுதிகளில் வரையாடுகள் காணப்படுகின்றன.

பாதுகாக்கும் முறைகள்

வரையாடுகளின் வாழ்விடங்கள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், அவை தனிமைப்பட்டு மிக எளிதாக வேட்டையாடப்படுகின்றன. எனவே, இவ்வரிய விலங்கினத்தை வேட்டையாடுவதைத் தடுக்க வேண்டும். தண்டனையை மேலும் கடுமையாக்க வேண்டும்.

போதிய மேய்ச்சல் நிலங்களை ஒரே இடத்தில் ஏற்படுத்த வேண்டும். அவற்றின் புலம் பெயர்வைத் தடுக்க வேண்டும். இவற்றைச் செய்தால், மிகவும் அழியும் சூழலில் உள்ள வரையாடுகளைப் பாதுகாக்க முடியும். மேலும், அண்டை மாநிலங்களின் பங்களிப்பும், சமூகத்தின் ஒத்துழைப்பும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகமிகத் தேவை.


மரு.ந.வ.இராஜேஷ், மரு.த.அ.விஜயலிங்கம், மரு.ச.இளவரசன், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இராமநாதபுரம் – 623 503.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!