கட்டுரை வெளியான இதழ்: மே 2019
நாரை பறக்காத நாற்பத்தெட்டு மடைக் கண்மாய் என்று பெருமையாகச் சொல்லப்படும், கடலைப் போன்ற கண்மாயைக் கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். வைகை பெருக்கெடுத்துக் கிளம்பினால் தான் இந்தக் கண்மாய் நிறையும். அதனால், பெரும்பாலான காலங்களில் இந்தக் கண்மாய் முழுமையாக நிரம்புவதில்லை.
இதைத் தவிர, திருப்புல்லாணி, பரமக்குடி, போகலூர், மண்டபம், நயினார் கோயில் திருவாடானை, இராஜசிங்க மங்கலம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடியிலுள்ள கண்மாய்கள், இராமநாதபுரம் மாவட்டப் பாசனத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இந்த மாவட்டத்தில் மொத்தம் 1,694 கண்மாய்கள் உள்ளன.
கண்மாய் நீர் மூலம் இறவையாகவும், மழையை நம்பி மானாவாரியாகவும் இங்கே நெல் சாகுபடி நடக்கிறது. இதுபோக, கம்பு, சோளம், குதிரைவாலி, பருத்தி, மிளகாய் போன்றவை மானாவாரியில் விளைகின்றன. மானாவாரி விவசாயமே இந்த மாவட்டத்தில் அதிகம்.
இங்குள்ள பெரும்பகுதி மக்களின் வாழ்க்கை ஆதாரமே விவசாயம் தான்.
இப்படி, விவசாயிகள் நிறைந்த கிராமம் பரமக்குடி வட்டத்தில் உள்ள முத்துச்செல்லாபுரம். இங்குச் சுமார் 250 விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் ஜெ.அந்தோணியின் குடும்பமும் ஒன்று. இவரது மனைவி சகாயமேரி.
இவர்களுக்கு ஜாபர்ராஜா என்னும் பெயரில் மகனும், ஜோன் லிபிசா என்னும் பெயரில் மகளும் உள்ளனர்.
முழுநேர விவசாயியான இவர், நெல், பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறார். தாத்தா, தந்தை எனப் பரம்பரை பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவருக்கும் 23 ஆண்டு விவசாய அனுபவம் உள்ளதும், இவருடைய விவசாயத்துக்குப் பக்கபலம்.
ஆனாலும், இப்போது காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும், தொழில் நுட்பங்களையும் கவனத்தில் கொண்டு செயல்படா விட்டால், விவசாயத்தில் எதிர்பார்க்கும் பயனை அடைய முடியாது.
இந்நிலையில், விவசாய ஆலோசனைகளைப் பெற வேண்டுமானால், அந்தோணி தனது ஊரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வேளாண்மைத் துறை அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும். இது அன்றாட நடவடிக்கைக்குச் சாத்தியமில்லாத நிலையில், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த கதையாக, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மூலம் விவசாய ஆலோசனைகளைப் பெறலாம் என்னும் தகவல் இவருக்குக் கிடைத்தது.
மேலும், இவரது ஊரிலேயே ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இலவச ஆலோசனைக் கூட்டமும் அடிக்கடி நடந்தது அந்தோணிக்கு அரிய வாய்ப்பாக அமைந்தது.
இத்துடன், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் விவசாயக் குறுஞ்செய்திகள், விவசாயக் கலந்துரையாடல்கள் மூலம் தேவையான விவசாய உத்திகளைத் தெரிந்து கொள்கிறார். அதனால், விவசாயத்தில் முன்னைவிடக் கூடுதல் வருமானத்தைப் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கும் அந்தோணி, ரிலையன்ஸ் அறக்கட்டளையால், தனக்குக் கிடைத்த பயன்களை நம்மிடம் விளக்கினார்.
“இன்றைய விவசாயத்தில் புதுப்புது உத்திகள், புதுப்புது இரகங்கள் வந்து கொண்டே உள்ளன. பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தைப் பாதிப்புகளும் நிறைய ஏற்படுகின்றன. இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொண்டால் தான், விவசாயத்தில் சாதிக்க முடியும்.
ஆனால், எந்நேரமும் நிலத்தில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இவற்றை அறிவதற்கான வசதியோ ஆர்வமோ இருப்பதில்லை. இதற்கு நல்ல தீர்வைத் தரும் விதமாக, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் விவசாயக் குறுஞ்செய்திகள், ஆலோசனைகள் உள்ளன.
எங்கள் ஊரில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் விவசாயம் தொடர்பான கூட்டங்கள் அடிக்கடி நடக்கும். இதில் நான் தவறாமல் கலந்து கொள்வேன். இந்தக் கூட்டத்தின் மூலம், மண் பரிசோதனை செய்வதைப் பற்றி, அதன் அவசியத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
அதைத் தொடர்ந்து என் நிலத்து மண்ணை ஆய்வு செய்து மண்வள அட்டை கொடுத்தார்கள். அந்த அட்டையில் கூறியுள்ளபடி, இயற்கை உரம், உயிர் உரங்கள், தழை, மணி, சாம்பல் சத்து உரங்களைப் பயிர்களுக்குக் கொடுத்தேன்.
இந்த நேரத்தில், பருத்திக் கூடுகளை உரமாக மாற்றும் பயிற்சியை, ரிலையன்ஸ் அறக்கட்டளை வேளாண் வல்லுநர்கள் அளித்தனர். அவர்கள் கூறியபடி, பத்தடி நீளம், நான்கடி அகலம், மூன்றடி ஆழமுள்ள குழியை வெட்டி, அதில் மூன்று டன் பருத்திக் கூடுகளை மூன்று அடுக்குகளாகப் பரப்பி, பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பயிரில்லம், மாட்டுச்சாணக் கரைசலைத் தெளித்து மட்க வைத்தேன்.
இதில் 90 நாளில் அந்தப் பயிர்க்கழிவு மட்கி ஒன்றரை டன் உரமாக மாறியது. இதை மிளகாய்ப் பயிருக்கு இட்டு நல்ல மகசூலைப் பெற்றேன்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் காணொளிக் காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று வருகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் அலைபேசிக் குறுஞ்செய்தி மூலம் கிடைக்கும் வேளாண் தகவல்களையும் எனது விவசாயத்தில் பயன்படுத்தி வருகிறேன்.
கடந்த காலத்தில் என் அனுபவ முறையில் ஒன்றேகால் ஏக்கர் நிலத்தில் மிளகாயைப் பயிரிட்டதில் 375 கிலோ மிளகாய் வற்றல் கிடைத்தது. அதைக் கிலோ 80 ரூபாய்க்கு விற்றதில், 30 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைத்தது.
இந்த ஆண்டில், ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட மண்வள அட்டைப்படி உரமிட்டதுடன், பருத்திக்கூடு மட்கையும் அடியுரமாக இட்டேன். மேலும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உதவி எண் மூலம் பயிர்ப் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பெற்றுச் சரியான நேரங்களில் பயன்படுத்தினேன்.
அதனால், 756 கிலோ குண்டு மிளகாய் வற்றல் கிடைத்தது. இதை 80 ரூபாய் வீதம் விற்றதில் 60,480 ரூபாய் வருமானமாகக் கிடைத்தது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆலோசனைகளைச் செயல்படுத்தியதால், எனக்குக் கூடுதல் மகசூலாக 381 கிலோ குண்டு மிளகாய் வற்றல் கிடைத்தது. இதன் மூலம் கிடைத்த கூடுதல் வருமானம் 30,480 ரூபாய் ஆகும்.
மண்வள அட்டைப்படி, தழை, மணி, சாம்பல் சத்துகளை இட்டதில், உரச்செலவில் 1,400 ரூபாய் குறைந்தது. பயிர்ப் பாதுகாப்புச் செலவு 2,500 ரூபாய் மிச்சமானது. ஆக, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வேளாண்மை வழிகாட்டுதல் மூலம் ஒன்றேகால் ஏக்கர் மிளகாய் சாகுபடியில் 34,380 ரூபாய் கூடுதல் வருமானமாகக் கிடைத்தது.
பருத்திக் கழிவை உரமாகப் பயன்படுத்தியதால் வறட்சியிலும் எனது நிலம் ஈரத்தன்மையுடன் இருந்தது. அதனால், என்னைப் போன்ற விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்து வரும் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தக்க சமயத்தில் தேவையான விவசாய ஆலோசனைகளைப் பெற்றுப் பயனடைய, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் 1800-419-8800 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.
பொ.பாண்டி