கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019
‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, உயர்வானதையே எண்ண வேண்டும். அப்படி எண்ணுவதைச் சலனமின்றி மனதில் கொண்டு விட்டால், எண்ணியதை எண்ணியபடி அடைந்து விடலாம். இதை, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்பார் இன்னொரு குறளில். இப்படி, உயர்ந்த சிந்தனையுள்ள ஒரே தொழில்சார் வல்லுநர்கள் இணைந்து நடத்தி வரும் நிறுவனம் தான் கிருஷி. கிருஷி நியூட்ரிஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்பது இதன் முழுப் பெயர்; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மண்ணுக்கு உரத்தையும், மனிதனுக்குச் சத்துமிகு உணவுப் பொருள்களையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி நிறுவனம்.
இவர்களின் எண்ணங்களைப் போலவே, ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொழிற் பேட்டையில் இரண்டு கிருஷி தீவனத் தொழிற்சாலைகள் இரட்டைக் கோபுரங்களைப் போல, கம்பீரமாய் உயர்ந்து நிற்கின்றன. இவ்விரண்டு ஆலைகளும் கிருஷிக்குச் சொந்தமானவை. இவற்றுடன் சேர்த்து மொத்தம் பத்து இடங்களில் தீவன உற்பத்தி நடந்து வருகிறது.
2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது கிருஷி. தொடங்கிச் சில ஆண்டுகளே ஆனாலும், இதன் வளர்ச்சியானது பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வளர்ச்சியை ஒத்ததாக இருக்கிறது. ஏனெனில், கிருஷியை நடத்தி வரும் நிர்வாகிகள் அனைவரும் கால்நடைத் தீவனத் தயாரிப்பில், தீவன மூலப்பொருள்கள் கொள்முதலில், சந்தைகளை உருவாக்குவதில், சிறந்த தீவன உற்பத்தி ஆலைகளை வடிவமைப்பதில், பல்லாண்டு அனுபவம் உள்ளவர்கள்.
மேலும், இவர்கள் முதலீட்டாளர்கள் என்னுமளவில் மட்டும் இருந்து விடாமல், அந்த முதலீட்டை முறைப்படுத்திச் செலவழிக்கும் ஆளுமையும், பணியாளர்களை அரவணைத்துச் செல்லும் பண்பும், துறை சார்ந்த அறிவும் கொண்டவர்களாக இருப்பதால், குறையேதும் இல்லாமல் முறையாக வளர்ந்து கொண்டிருக்கிறது கிருஷி.
மக்காச்சோளம், புண்ணாக்கு, தவிடு போன்ற மூலப்பொருள்களைக் கொண்டு வரும் வாகனங்கள், அவற்றை ஆலைக்குள் இறக்குவதற்காக வரிசையில் நிற்பதும்; உற்பத்தியான தீவனத்தைச் சந்தைக்கு எடுத்துச் செல்வதற்காக வாகனங்களில் தீவன மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருப்பதும்; இயந்திரங்களும், இயந்திரங்களைப் போலவே தொழிலாளர்களும், வேலையில் மட்டுமே கண்ணாக இருப்பதும்; தீவன உற்பத்தியில் கிருஷி நம்பகத் தன்மையுள்ள நிறுவனம் என்பதையும், இதன் வளர்ச்சி மிகக் குறுகிய காலத்தில் பெரியளவில் விரிந்து பரவும் என்பதையும் உறுதிப்படுத்தின.
இந்நிலையில், கிருஷியின் தீவனத் தயாரிப்புக் குறித்த முழுமையான தகவல்களை அறியும் பொருட்டு இதன் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினோம்.
ச.மகாராஜன், முதன்மைச் செயல் அலுவலர்:
“நமது கடுமையான உழைப்பின் காரணமாக, வயிற்றுப் பசிக்கு உணவு என்னும் நிலையிலிருந்து உடல் நலத்துக்கு ஏற்ற சத்தான உணவு என்னும் நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இந்த உயர்ந்த உணவு மாற்றத்தில் இறைச்சி, முட்டை, பால் பொருள்களின் பங்கு முக்கியமானது. ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்ற கால்நடைகள் மூலம் கிடைக்கும் இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வது, இன்றைய கால மாற்றம், கடும் வெப்பம், போதிய மழையின்மை போன்றவை நிறைந்த சிக்கலான சூழ்நிலையில் மிகச் சவாலான வேலை. இந்தச் சூழலைத் திறமையாகச் சமாளிக்க, தரமான, பாதுகாப்பான, சத்துகள் சமச்சீராக உள்ள தீவனப் பொருள்கள் தேவைப்படுகின்றன. மேலும், சுற்றுச்சூழலைக் கெடுக்காத தீவன முறைகளைப் பற்றிய விழிப்புணர்வும் விவசாயிகளுக்குத் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் கிருஷி தருகிறது.
தரமான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்து அவற்றை முறையாகச் சோதித்து, கிடங்குகளில் பக்குவமாகச் சேமித்து வைக்கிறோம். இத்தகைய மூலப்பொருள்கள் சேமிப்பு என்பது, தீவனத்தைத் தரமாகவும், பற்றாக்குறை இல்லாத வகையில் தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதற்கும் அடிப்படையாகும். குறிப்பாக, தீவன உற்பத்திக்குத் தேவையான நுண் சத்துகளை அவை உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்தே தருவிக்கிறோம். இந்த நுண் சத்துகளுடன் சோளம், கம்பு, அரிசித் தவிடு, புரதம் நிறைந்த புண்ணாக்கு வகைகள் தகுந்த விகிதத்தில் சேர்த்துக் கலக்கப்படுகின்றன.
பிறகு, இந்தக் கலவையை உலகத் தரமிக்க ஐரோப்பிய எந்திரங்கள் மூலம் தானியங்கி முறைப்படி, சீரான முறையில் கால்நடைத் தீவனமாக உற்பத்தி செய்கிறோம். நவீனத் தொழில் நுட்பங்கள் அடங்கிய தரக் கட்டுப்பாட்டுச் சோதனைக்கூடம் எங்களிடம் உள்ளது. இங்கே தீவன உற்பத்திக்கான மூலப்பொருள்களும், உற்பத்தி செய்யப்பட்ட தீவனங்களும் மிகவும் நுணுக்கமாகச் சோதிக்கப்பட்டு, தரத்துடன் வழங்கப்படுவதால், பண்ணையாளர்கள் அதிக உற்பத்தியையும், அதன் மூலம் நிறைய இலாபத்தையும் அடைகின்றனர்.
தீவனத்தைத் தரமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக, பல்லாண்டுகள் அனுபவம் வாய்ந்த சிறந்த கால்நடை மருத்துவர்கள் பலர் பணியில் உள்ளனர். தீவனத் தயாரிப்புப் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்களை மட்டுமே வைத்துள்ளோம். இப்படி உற்பத்தியாகும் தீவனத்தைச் சுகாதாரமான முறையில் மிகப்பெரிய கிடங்குகளில் சேமித்து வைத்து, பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப, சரியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு சேர்க்கிறோம்’’ என்றார்.
அ.ரெங்கநாதன், சேர்மன்:
“ஆடு, மாடு, கோழிகளின் வாழ்க்கை மனித வாழ்க்கையுடன் இணைந்தது. இந்த விலங்கினங்கள் நம்மைச் சார்ந்து வாழ்ந்தாலும் அவற்றால் கிடைக்கக் கூடிய நன்மைகளே அதிகம். உலகத்தின் முதல் தொழில் மற்றும் முதன்மைத் தொழிலான விவசாயம் சிறப்பாக அமைய, மண்ணுக்கு உரத்தைக் கொடுக்கின்றன. நமக்குப் பால், முட்டை, இறைச்சி என, சத்துகள் மிகுந்த உணவுப் பொருள்களைக் கொடுக்கின்றன. முக்கியமாக, ஊரகத்தில் வாழும் சாமானிய மக்களின் வாழ்க்கையே இவற்றைச் சார்ந்து தான் இருக்கிறது.
இத்தனை நன்மைகளைச் செய்யும் இந்த விலங்கினங்களைப் பராமரிக்கும் முறைகளை நினைத்தால் வருத்தமாகத் தான் இருக்கும். நல்ல கொட்டம் இல்லாமல் மழை, வெய்யில், பனியில் கிடக்கும். விவசாயக் கழிவுகள், சமையலில் மீளும் உணவுக் கழிவுகள் போன்றவற்றைத் தான் உணவாகக் கொடுப்போம்.
குறைந்த உற்பத்தித் திறனுள்ள கால்நடைகளை வளர்த்த நமக்கு, இன்றைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, கூடுதலான உற்பத்தித் திறனுள்ள ஆடுகள், மாடுகள், கோழிகள் கிடைத்திருக்கின்றன. இவற்றை முறையாகப் பராமரித்தால், குறிப்பாக, இவற்றின் உடல் வளர்ச்சிக்கும், உற்பத்தித் திறனுக்கும் ஏற்ற வகையில் சத்தான தீவனங்களைக் கொடுத்தால் நாம் நிறைவான பலன்களை அடையலாம்.
இந்த வகையில், பெருகிக் கொண்டிருக்கும் கால்நடைகள் மற்றும் அவற்றின் உற்பத்தித் திறனுக்கு ஏற்ற வகையில், அவற்றின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கிருஷி தீவனத் தொழிற்சாலையில், ஆடு, மாடு, கோழிகளுக்கான அடர் தீவனத்தைத் தரமாகத் தயாரித்து வருகிறோம்’’ என்றார்.
மருத்துவர் சு.இராமமூர்த்தி, நிர்வாக இயக்குநர்:
உலகளவில் கோழி முட்டை, கோழியிறைச்சி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதைப் போல உலகளவில் உற்பத்திச் செலவு குறைவாக உள்ள நாடு பிரேசிலாகும். இதற்கடுத்த நிலையில் இந்தியா உள்ளது. ஒரு கால்நடைப் பண்ணை இலாபமுள்ளதாக இயங்க, சத்துள்ள தீவனமும், பண்ணை மேலாண்மையும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்நிலையில், தீவனத் தயாரிப்பில் கிருஷியைத் தலைசிறந்த நிறுவனமாக ஆக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சிறந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். இதற்காக டென்மார்க்கில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளோம்.
கேஎன்சி புரோ24 என்னும் குச்சித் தீவனத்தை அதிகக் கறவைத் திறனுள்ள மாடுகளுக்காகத் தயாரிக்கிறோம். சிறந்த மூலப் பொருள்களும், நுண் சத்துகளும் அடங்கிய இந்தத் தீவனம், காலதாமதம் இல்லாமல் மாடுகள் சினைப் பிடிக்கவும் உதவியாக இருக்கும். இதைப் போல கேஎன்சி பைபாஸ் ப்ளஸ் என்னும் எங்கள் தயாரிப்பு, புரதம் நிறைந்த தீவனமாகும். மேலும், கன்றுகள், ஆடுகள், விவசாய வேலைக்கான காளைகள் ஆகியவற்றுக்கான தீவனங்களையும் தயாரிக்கிறோம்.
முட்டைக்கோழியில், குஞ்சுத் தீவனம், வளர் பருவத் தீவனம், முட்டைப் பருவத் தீவனம் ஆகியவற்றையும், கறிக்கோழியில், குஞ்சுத் தீவனம், இளம் பருவத் தீவனம், வளர்ந்த கோழித் தீவனம் மற்றும் நாட்டுக்கோழித் தீவனம், இறைச்சிக்காடை, முட்டைக்காடைத் தீவனமும் கிருஷியில் தயாரிக்கப்படுகின்றன. சிறந்த மூலப் பொருள்கள், சிறந்த தொழில் நுட்பம், தரமான தயாரிப்பு முறைகளைப் பின்பற்றுவதால், தீவனத்தின் தரம் உறுதி செய்யப்படுகிறது.
தீவனத் தயாரிப்பில் மூலப் பொருள்களை நீராவியில் வேக வைப்பதால் அவை கால்நடைகளின் உடலில் நன்கு செரிக்கும். இதனால், சத்துகள் முழுவதும் கால்நடைகளுக்குக் கிடைக்கும். பூசண நச்சுகள் கட்டுப்படும். தீவனம் வீணாதல் குறையும். விரும்பிச் சாப்பிடுவதால் தீவன மாற்றுத் திறன் அதிகமாகும்.
இப்போது, செயற்கை முறை கருவூட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டால், அதிக உற்பத்தித் திறனுள்ள கலப்பினப் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால், அதற்கு ஏற்ற வகையில் சத்தான தீவனத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் புண்ணாக்கை மட்டும் அல்லது தவிட்டை மட்டும் அல்லது சோளத்தை மட்டும் என, தனித் தனியாகக் கொடுப்பார்கள். இது சரியான முறையல்ல. இதற்கு மாறாக, கார்போஹைட்ரேட் நிறைந்த சோளம், புரதம் நிறைந்த புண்ணாக்கு, தவிடு, தாதுப்புகள், வைட்டமின்கள் போன்ற எல்லாச் சத்துகளையும் சரியான அளவில் கலந்து, பூசணம், கல், மண் இல்லாமல் சுத்தமான முறையில், குறைந்த விலையில் கொடுப்பது தான் அடர் தீவனம்’’ என்றார்.
கா.செல்வக்குமார், இயக்குநர், மூலப்பொருட்கள் கொள்முதல்:
ஒரு பொருளைத் தரமாகத் தயாரிக்க வேண்டுமானால், அதற்கான மூலப் பொருள்களும் தரமாக இருக்க வேண்டும். கிருஷியின் மாட்டுத் தீவன வகைகளில், சோளம், மக்காச்சோளம், சோயாப் புண்ணாக்கு, பருத்திப் புண்ணாக்கு, அரிசித் தவிடு போன்றவற்றை 80% சேர்க்கிறோம்.
புண்ணாக்கு வகைகளை உற்பத்திச் செய்யப்படும் இடங்களில் இருந்தே வாங்குகிறோம். கர்நாடகத்தில் ஓராண்டில் ஐந்து மாதங்களுக்கும், பீகாரில் நான்கு மாதங்களுக்கும் மக்காச்சோளம் நிறையக் கிடைக்கும். தமிழ்நாடு, ஆந்திரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மக்காச்சோளம் அதிகளவில் கிடைக்கும். சோயாப் புண்ணாக்கு ம.பி.யில் அதிகமாகவும், மராட்டியத்தில் குறைந்தளவிலும் கிடைக்கும். பருத்திப் புண்ணாக்கு ஆந்திரத்தில் நிறையளவில் கிடைக்கும். அரிசித் தவிடு சத்தீஸ்கர், தமிழ்நாடு, கர்நாடகம், மேற்கு வங்கம், ஆந்திரம், கர்நாடகம், உ.பி., பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கூடுதலாகக் கிடைக்கும். இவற்றை அங்குள்ள பெரு வணிகர்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்கிறோம்.
தற்போதைய மாட்டுத் தீவனத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புண்ணாக்கு வகைகளில் ஒரு சத அளவில் மட்டுமே எண்ணெய் இருக்கும். தரம் முக்கியம் என்பதால், மூலப் பொருள்களும் சரியான தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எந்தச் சூழலிலும் நாங்கள் தரத்தை விட்டுக் கொடுப்பதில்லை. புதிய மற்றும் நாள்பட்ட மூலப் பொருள்களைத் தீவனத் தயாரிப்புக்குப் பயன்படுத்துவதில்லை. நாங்கள் தொடர்ந்து சந்தைகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் பொருள்கள் இருப்பு எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், மூலப் பொருள்கள் பற்றாக்குறை எங்கள் ஆலைகளில் எப்போதுமே இருக்காது.
பெருந்துறை ஆலைகளில், கறிக்கோழி, நாட்டுக்கோழி, காடை மற்றும் மாடுகளுக்கான தீவன வகைகள் தயாரிக்கப்படுகின்றன. நாமக்கல் பகுதி ஆலைகளில், முட்டைக்கோழித் தீவனமும் மாட்டுத் தீவனமும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகையில், ஒரு மாதத்தில் சுமார் 35 ஆயிரம் டன் மூலப் பொருள்களை கொள்முதல் செய்கிறோம்’’ என்றார்.
மருத்துவர் ச.சதீஸ்குமார், பொது மேலாளர், தீவன உற்பத்தி:
கால்நடைகளின் வளர்ச்சி, இனப்பெருக்கம், உற்பத்தித் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவது தான் கால்நடைத் தீவனம். இந்த வகையில், கிருஷி தீவன ஆலைக்குள் வாகனங்களில் மூலப் பொருள்கள் வந்ததும் அவற்றின் மாதிரிகளை எடுத்து, கண் பார்வையிலும், ஆய்வகத்திலும் சோதனை செய்வோம். முன்பெல்லாம் இவற்றைச் சோதிக்க ஒரு நாளாகும். ஆனால் இப்போது அப்படியில்லை. எங்கள் ஆய்வகத்தில் உள்ள நாற்பது இலட்ச ரூபாய் மதிப்புள்ள என்ஐஆர் (நியர் இன்ஃராரெட் ஸ்பெக்ட்ரோஃபோட்டோ மீட்டர்) தொழில் நுட்பக் கருவி, இரண்டு நிமிடத்தில் இந்தச் சோதனையை நடத்தி முடித்து விடும்.
ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற, தேவையான அடிப்படைச் சத்துகளின் அளவை ஆய்வு செய்வோம். பிறகு, மூலப் பொருள்களை அவற்றுக்கான கொள்கலன்களில் சேமிப்போம். அடுத்து, இவற்றைச் சரியான அளவில் கலந்து அரைவை எந்திரத்தில் இடுவோம். அங்கு அரைக்கப்படும் மூலப் பொருள்கள், தீவனக் கலவை எந்திரத்துக்கு மாற்றப்படும். இந்தக் கலவை எந்திரம் தீவன உற்பத்தியில் இதயம் போன்ற பகுதியாகும். இங்கே தேவையான அளவில் தாதுப்புகள் போன்றவையும் சேர்த்துக் கலக்கப்படும்.
இந்தக் கலவை, நீராவியில் வெந்து குச்சித் தீவனப் பிழிவு எந்திரத்துக்கு வந்து சேரும். இங்குச் சர்க்கரைப் பாகுடன் கலக்கப்படும் இந்தக் கலவையானது குச்சி வடிவத் தீவனமாக வெளியே வரும். கோழித் தீவன வகைகளில் சர்க்கரைப் பாகு கலக்கப்படுவதில்லை. அடுத்து, குளிர்வித்தல், சலித்தல் ஆகிய நடைமுறைகளுக்குப் பிறகு 20, 50, 70, 75 கிலோ பைகளில் பிடிக்கப்பட்டு மறுபடியும் தரச்சோதனை செய்த பிறகே விற்பனைக்கு அனுப்பப்படும். மேலும், தீவன உற்பத்தி நடந்து கொண்டிருக்கும் போதும் அவ்வப்போது சோதனைகள் நடைபெறும். இந்த உற்பத்திச் சோதனை மாதிரிகளை ஒரு மாதம் வரையில் ஆலையில் வைத்திருப்போம்’’ என்றார்.
வ.சேகர், பொது மேலாளர், விற்பனை:
“அனுபவம் மிக்கவர்களால் கிருஷி தீவனங்கள் தரமாகத் தயாரிக்கப்படுகின்றன. இதைப் போலவே கிருஷி கால்நடைத் தீவன விற்பனையிலும் 15-25 ஆண்டுகள் அனுபவசாலிகளே உள்ளனர். ஏற்கெனவே எங்களுக்கும் மக்களுக்கும் நல்ல அறிமுகம் இருக்கிறது. அதனால், தரமும் விலையும் சரியாக இருக்கும் கிருஷி தீவனத்தை எந்த இடரும் இல்லாமல் மிக எளிதாக அவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.
ஒரு லிட்டர் பாலுற்பத்திக்கு 400-500 கிராம் வீதம் அடர் தீவனத்தைக் கறவை மாடுகளுக்குக் கொடுக்க வேண்டும். பசு மாட்டுக்கு அன்றாடம் 1- 1½ கிலோ அடர் தீவனமும், எருமைக்கு 1½-2 கிலோ அடர் தீவனமும் உடல் பராமரிப்புக்காகக் கொடுக்கப்பட வேண்டும். கால்நடைகள் நலமாகவும் உற்பத்தித் திறனுடனும் இருக்க, அடர் தீவனம், உலர் தீவனம், பசுந்தீவனம் ஆகியவற்றைச் சரியான அளவில் தினமும் கொடுத்துவர வேண்டும். பால் கறவை இல்லாத நிலையிலும் கறவை மாடுகளின் உடல் பராமரிப்புக்கு அடர் தீவனம் தேவைப்படுகிறது.
ஒரு பொருளின் தரத்துக்கு ஏற்றபடியே அந்தப் பொருளுக்கான விலை முடிவு செய்யப்படுகிறது. இதைப் புரியாமல் விலையை ஒப்பீடு செய்யும் பழக்கம் நம் மக்களிடம் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். எண்ணெய் எடுக்கப்படாத ஒரு கிலோ தவிடு 20 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. ஆனால், தரமான ஒரு கிலோ மாட்டுத் தீவனத்தையே அதே விலைக்குத் தான் கொடுக்கிறோம்’’ என்றார்.
மருத்துவர் எ.புவனேந்திர பாபு, துணைத் தலைவர், தொழில் நுட்பம் மற்றும் திட்டம்:
“இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தான் இவர்களுக்கான வாழ்க்கை ஆதாரங்களாக உள்ளன. இந்த மக்களின் கடின உழைப்பால் தான் இன்றைக்குப் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் உலகளவில் நாம் முன்னிலை வகிக்க முடிகிறது. கால்நடைகள் இல்லாத விவசாயம் செழிப்பாக இருக்க முடியாது. அதனால், கால்நடை வளர்ப்பு மிகமிக அவசியமாகிறது.
இந்தக் கால்நடைகளின் உடல் பராமரிப்பு மற்றும் அவற்றின் மரபு சார்ந்த உற்பத்தி இலக்கை அடைய, சத்துகள் சமச்சீராக அடங்கிய தீவனம் தேவை. இதையும், ஊரக மக்களின் பொருளாதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே கிருஷி தீவன உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டது. நவீனத் தொழில் நுட்பம் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு, ஆடுகள், மாடுகள், கோழிகளின் தீவனத் தேவையை நிறைவேற்றும் வகையில், போதுமான சத்துகள் உறுதி செய்யப்பட்ட தீவனத்தை மிகவும் சுகாதாரமான முறையில் தயாரித்து வருகிறோம்.
கால்நடைகள் தரும் பால், முட்டை, இறைச்சியைத் தான் நாம் சாப்பிடுகிறோம். அதனால், கால்நடைத் தீவனத்தில் சரியான கவனத்தைச் செலுத்துதல், நமக்கான உணவில் கவனத்தைச் செலுத்துவது போலாகும். ஆகவே, நாங்கள் தயாரிக்கும் கன்றுத் தீவனம், கறவை மாட்டுத் தீவனம், ஆட்டுத் தீவனம், இறைச்சிக்கோழித் தீவனம், முட்டைக்கோழித் தீவனம், நாட்டுக்கோழித் தீவனம், காடைத் தீவனம் ஆகியன நூறு சதம் தூய்மையானவை; மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காதவை.
‘வாடிக்கையாளர்கள் நலனே முக்கியம்’ என்பதில் அசைக்க முடியா நம்பிக்கை கொண்ட நாங்கள், கிருஷியை, இந்தியாவின் முன்மாதிரி நிறுவனமாக ஆக்கும் வகையில் செயலாற்றி வருகிறோம். ஒரு தொழில் வெற்றியடைவதற்கான திறவுகோலாக இருப்பவர்கள் வாடிக்கையாளர்கள் தான். எனவே, இவர்களை நோக்கியே நாங்கள் பயணம் செய்கிறோம். ‘ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்தல்’ என்னும் கோட்பாட்டை விரும்பும் நாங்கள், எங்கள் வல்லுநர்களைக் கொண்டு பண்ணையாளர்களுக்குத் தேவையான தொழில் நுட்பங்களை வழங்கி, அவர்கள் மிகச் சிறந்த உற்பத்தியை எட்டுவதற்கு உதவியாக இருக்கிறோம்.
அதனால், ஆலையைத் தொடங்கிய இந்தக் குறுகிய காலத்திலேயே தென்னிந்திய அளவில் 400க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை உருவாக்கியுள்ளோம். மேலும், எதிர்காலத் தீவனத் தேவையை எதிர்கொள்ளும் வகையில், நம் நாட்டின் மேற்குப் பகுதியில் தடம் பதிக்கவும் முயன்று வருகிறோம். இந்தியக் கால்நடைத் தீவன உற்பத்தித் துறையில் தொடர்ந்து முன்னேறவும், வருங்கால வணிகத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், விவசாய உற்பத்தி, இடுபொருள் மற்றும் விளைபொருள் சந்தையில் காலூன்றவும் திட்டமிட்டு வருகிறோம்.
நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, சிறந்த வணிக நெறிமுறைகளைப் பின்பற்றி, இந்திய மக்கள் விரும்பத்தக்க தீவன நிறுவனமாகக் கிருஷியை உருவாக்க வேண்டும். இதன் மூலம் இந்தியக் கால்நடைகளின் வளர்ச்சிக்கும், ஊரக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மக்களின் சத்துமிகு உணவுப் பொருள்கள் உற்பத்திக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதை நோக்கியே பயணித்து வருகிறோம்’’ என்றார்.
உயிர் காக்கும் உணவுப் பொருள்கள் உற்பத்தித் துறையில் ஆர்வமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நல்ல மனிதர்களைச் சந்தித்து விட்டு வெளியே வந்தபோது என் நா முணுமுணுத்த குறள்: இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.
பசுமை