வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள சமூகப் பொருளாதாரச் சாதிவாரிக் கணக்கெடுப்பில், தேசிய அளவில் 73 சதவீதக் குடும்பங்கள், கிராமங்களில் வசிப்பதாகச் சொல்லப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 57.53 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்ந்து வருவதாக அந்தக் கணக்கெடுப்புக் கூறுகிறது. இந்த மக்களின் முக்கிய வாழ்க்கை ஆதாரங்களாக விளங்குவன, விவசாயமும், அதையொட்டிய கால்நடை வளர்ப்பும் தான்.
இந்த வாழ்வாதாரங்கள் நிலத்தைச் சார்ந்தே அமைந்துள்ளன. அந்த நிலம் நீர்வளம் நிறைந்த ஆற்றுப் படுகையாக இருக்கலாம்; தோட்டக்காலாக இருக்கலாம்; மழையை நம்பியுள்ள மானாவாரியாக இருக்கலாம்; பயிர் செய்யப்படாமல் கிடக்கும் தரிசாக இருக்கலாம்.
ஆனால், இங்கே கூறப்பட்டுள்ள இந்த நிலங்கள் அனைத்தும் கிராமத்து மக்களுக்குத் தேவை. இந்த நில வகைகள், ஒவ்வொரு விதத்தில் அந்த மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.
ஆற்றுப் படுகைகளில் நெல் விளைகிறது. தோட்டக் கால்களில் கரும்பு, வாழை, காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகள், கால்நடைகள் உண்ணும் பச்சைத் தீவனங்கள் என, விதவிதமாய் விளைகின்றன.
மானாவாரியில் கம்பு, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, தினை ஆகிய சிறு தானியங்களும், உளுந்து, மொச்சை, பாசிப்பயறு, துவரை, கொள்ளு ஆகிய பயறு வகைகளும் விளைகின்றன. பாலையும் இறைச்சியையும் கொடுக்கும் கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாகத் தரிசு நிலம் பயன்பட்டு வருகிறது.
கிராமத்து மக்கள் விளைவிக்கும் இந்த உணவுப் பொருள்களை அவர்கள் மட்டுமா சாப்பிடுகிறார்கள்? இந்த நாட்டு மக்களுக்கும் தானே பயன்படுகின்றன? இந்த உணவுப் பொருள்களில் எதைப் புறந்தள்ள முடியும்? இந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியும் கிடைக்கிறதே?
இந்த நாட்டின் வளத்தைக் கட்டிக் காப்பதில், இந்த மக்கள் எந்த வகையில் குறைச்சல்? வகை வகையாய் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படும் இந்த நில வகைகளில் எந்த நிலத்துக்குத் தகுதிக் குறைச்சல்? தரிசு நிலம் என்றால் ஈனமா? இல்லையே!
விவசாயிகளின் ஆன்மாக்கள் குடியிருக்கும் இந்த நிலங்களைப் பறித்து, தொழில் வளத்தைப் பெருக்குவதாகச் சொல்லி, உள்நாட்டு, வெளிநாட்டுப் பண முதலைகளிடம் கொடுக்க, இந்தியாவை ஆளுகின்ற அரசியல் கட்சிகள் அல்லாடுகின்றன.
உலகமெங்கும் நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றத்தால் இயல்பான சாகுபடியும் விளைச்சலும் குறைந்து கொண்டே வரும் நிலையில், ஒவ்வொரு நாடும், அவரவர் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதே பெரும் பாடாய் இருக்கும்.
இந்த நிலையில், நம் விளைநிலங்களை ஆலைகளாக மாற்றி விட்டு, உணவுப் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பது சரியாக இருக்குமா? அப்படி முடியாத நிலையில், தொழிற் சாலைகளில் உற்பத்தியாகும் உலோகங்களையும் அவற்றால் கிடைக்கும் ரூபாய் நோட்டுகளையும் தின்ன முடியுமா? தின்றால் வயிறு தான் செரிக்குமா?
2015 ஜூலை இதழில் வெளியான ஆசிரியர் பக்கம்.