நீர் இருப்பை அறிந்து விவசாயம் செய்ய வேண்டும்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களைத் தவிர, தமிழகம் முழுவதும் உள்ள அணைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளன.

அணைப் பாசனப் பகுதிகளில் உள்ள சில இடங்களில் இந்த மழையால் இளம் பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றாலும், தவிர்க்க இயலாதது.

எனவே, இந்த மழையால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளை, அரசாங்கம் தோள் கொடுத்துத் தூக்கிவிட வேண்டும்.

உற்பத்திச் செலவுக்கு ஏற்ப, அவர்களுக்குத் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும்.

மொத்தத்தில் பார்க்கும் போது, இந்தாண்டில் இந்தப் பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி மன நிறைவைத் தரும் என்று சொல்லலாம்.

நிலத்தடி நீரை நம்பி வேளாண்மை செய்யும் பகுதிகளில், பரவலாக மழை பெய்திருக்கிறது.

வங்கத்தில் புயலென்றால் சீண்டிக்கூடப் பார்க்காத மதுரை மாவட்டப் பகுதிகளில், இந்த ஆண்டு மேம்போக்கான மழை தான். கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை. அதனால், கிணறுகளிலும் நீரூற்று இல்லை.

எனவே, இந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், நீரின் தேவை குறைந்த பயிர்களையே சாகுபடிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

மானாவாரியில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியப் பயிர்களும், துவரை, உளுந்து, பாசிப்பயறு, மொச்சை, கொள்ளு போன்ற பயறுவகைப் பயிர்களும், மானாவாரியில் தான் அதிகமாக விளைகின்றன.

எனவே, வேளாண்மை உற்பத்தி மனநிறைவாக இருக்கும் என்னும் நம்பிக்கை வருகிறது. அதோடு, உழவர் பெருமக்களின் தோழர்களாம் கால்நடைகளின் தீவன உற்பத்திக்கும் குறைவிருக்காது என்று நம்பலாம்.


2014 அக்டோபர் இதழில் வெளியான ஆசிரியர் பக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!