அலங்கார மீன் தொட்டி அமைப்பும் பராமரிப்பும்!

நீரைப் பிடித்து வைத்து, அதில் உயிரினங்கள் வாழும் வகையில் அமைக்கப்படும் கலன் மீன் வளர்ப்புத் தொட்டியாகும்.

ஆனால், இதன் வடிவமும் அளவும், மீன்களைப் பொறுத்து மாறுபடும்.

இது, சிறு கண்ணாடிக் குடுவையாக இருக்கலாம். அல்லது வணிக நோக்கம் கொண்ட பெரிய தொட்டியாக இருக்கலாம்.

அலங்கார மீன் தொட்டியை அமைப்பதற்கு முன், இடம், அலங்கார மீனினம் மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிறிய தொட்டிகளை விடப் பெரிய தொட்டிகளை எளிதாக அமைத்து விடலாம். ஆனால், இதற்கு அதிகளவில் பணம் மற்றும் இடம் தேவைப்படும்.

நூறு லிட்டர் அளவுள்ள தொட்டி, சிறந்த தொடக்க நிலைத் தொட்டியாக இருக்கும். இதற்கு மிகப்பெரிய முதலீடு தேவையில்லை.

மேலும், நீரில் இருக்கும் தேவையற்ற கழிவையும் தாங்கிக் கொள்ளும்.

இது, மீன் வளர்ப்போருக்கு, வடிவம் மற்றும் இனத் தேர்வில் ஈடுபடும் வகையில் ஆர்வத்தைத் தூண்டும்.

தொட்டிக்குத் தேவையான பொருள்கள்

வீட்டில் சாதாரண அலங்கார மீன் வளர்ப்புத் தொட்டியை அமைக்க, தொட்டித் தாங்கி, மறைப்பான், விளக்குகள், சூடேற்றி, வடிகட்டி மற்றும் காற்றூதிக் குழாய் ஆகியன தேவைப்படும்.

வடிகட்டிகள்

வடிகட்டிகள் மூன்று வகைப்படும், அவையாவன: உயிரியல் வடிகட்டி, வேதியியல் வடிகட்டி மற்றும் இயந்திரவியல் வடிகட்டி.

இவற்றில் உயிரியல் வடிகட்டியும் இயந்திர வடிகட்டியும், அலங்கார மீன் தொட்டியில் அவசியம் இருக்க வேண்டும்.

உயிரியல் வடிகட்டி

தீவனத்தில் பெரும்பாலும் புரதம் அதிகமாக இருக்கும். இதனால், மீன் கழிவு மற்றும் செவிள் வழியாக அம்மோனியா வெளியேறும்.

இது, நீரில் வெளியேறும் போது, அம்மோனியா மற்றும் அம்மோனிய அயனிகளுக்கு இடையே சமநிலை ஏற்படும்.

அமில காரத் தன்மை குறைவாக இருந்தால், நச்சுத் தன்மை குறைவாக இருக்கும்.

ஆனால், கார அமிலத் தன்மை அதிகமாக இருந்தால், நச்சுத் தன்மை அதிகமாக இருக்கும்.

அயனி நிலையைக் கண்டு கொள்ளாமல், அம்மோனிய மூலக் கூறுகள் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து நைட்ர சோமோனஸ் பாக்டீரியாவால் நைட்ரேட்டாக மாறும்.

நைட்ரோ ஃபாக்டர் பாக்டீரியா, நைட்ரேட்டை நைட்ரைட்டாக மாற்றும். இது, குறைந்தளவு நச்சுத் தன்மை உள்ளது.

ஆனால், உப்பு நீரில் சில சமயங்களில் நச்சுத் தன்மை ஏற்படலாம்.

நைட்ரஜன் சார்ந்த கழிவுகள் ஆக்ஸிஜனேற்றம் அடைவது காற்றேற்ற நிகழ்வாகும்.

உயிரியல் வடிகட்டிகள் அம்மோனியாவை ஆக்ஸிஜனேற்றம் செய்து, நைட்ரைட் மற்றும் நைட்ரேட்டாக மாற்றும்.

பிறகு, மீன் வளர்ப்புத் தொட்டிகளில் இருக்கும் தாவரங்கள், நைட்ரேட்டை வெளியேற்றும்.

கற்களுக்கு இடையில் இருக்கும் வடிகட்டி, சிறந்த உயிரியல் வடிகட்டியாகச் செயல்படும்.

ஆயினும், இது நீண்ட காலத்துக்கு உகந்ததல்ல. பீங்கான் வளையங்கள் சிறந்த வடிகட்டியாக இருக்கும்.

இயந்திர வடிகட்டி

இயந்திர வடிகட்டி, நீரில் இருக்கும் நுண் துகள்களை வடிகட்டப் பயன்படும். இது, உயிரியல் வடிகட்டிக்கு முன்பு பொருத்தப்படும்.

உயிரியல் வடிகட்டியில் அதிகளவில் பொருள்கள் சேராமல் இருக்க இப்படிச் செய்யப் படுகிறது.

இந்த இயந்திர வடிகட்டி, பஞ்சு மற்றும் சிறு கற்களால் உருவாக்கப்படும்.

இதற்கு, மணல் ஏற்றதாக இருக்கும். ஏனெனில், சிறுசிறு துகள்கள் இணைந்து காற்றில்லா நிகழ்வுகளுக்கு வழி வகுக்கும்.

இதனால், நச்சுப் பொருள்கள் படிவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வடிகட்டிகளை அடிக்கடி பராமரிப்பதும், சுத்தம் செய்வதும் அவசியம்.

வேதியியல் வடிகட்டி

பெரிய தொட்டிகளில் வேதியியல் வடிகட்டி அவசியம். இதன் வேலை, நீரிலுள்ள தேவையற்ற பொருள்கள் மற்றும் கெட்ட வாடையை வெளியிடும் பொருள்களை அகற்றுவது தான்.

இதற்குப் பலவிதப் பொருள்கள் இருப்பினும் திறன் மேம்படுத்திய கரியே அதிகளவில் பயன்படும்.

இது, நீரிலிருந்து, நைட்ரஜன் சார்ந்த கழிவுகள், குளோரின், நிறமிகள், வேதிப் பொருள்கள் மற்றும் கன உலோகங்களை வெளியேற்றும்.

திறன் மேம்படுத்திய கரியை அடிக்கடி மாற்ற வேண்டும். அம்மோனியாவை உறிஞ்சும் களிமண்,

நேர் மின்னூட்டம் பெற்ற அயனிகள் மற்றும் அம்மோனிய அயனிகளை உறிஞ்சும்.

மேலும், நீரிலுள்ள கால்சிய அயனிகள் மற்றும் மக்னீசிய அயனிகளை உறிஞ்சும். இதைச் சுத்தமான குழாய் நீரில் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.

அயனிப் பரிமாற்றப் பசை

அலங்கார மீன்கள் நன்கு இனப்பெருக்கம் செய்ய, நீரில் அதிகமாக உள்ள கடினத் தன்மையை நீக்க வேண்டும்.

இதற்கு, இருவகை அயனிப் பரிமாற்றப் பசைகள் பயன்படும். நேர்மின் அயனிப் பரிமாற்றிகள், நீரை மென்மையாக மாற்றுவதுடன்,

நீரிலிருந்து கால்சியம் மற்றும் மக்னீசியத்தை, சோடிய அயனியால் பரிமாற்றம் செய்யும்.

படர்பாசி அல்லது உலர்ந்த பனையோலை, மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் நீரை மென்மையாக்க உதவும்.

நீரில் டேனிக் அமிலத்தை ஊற்றினால், நீரின் அமில காரத் தன்மை குறையும்.

மேலும், இது நீருக்கு நிறத்தைத் தரும். சந்தைகளில் பலவித நீர் மென்மை யாக்கிகள் கிடைக்கின்றன. நீரின் தன்மையைப் பொறுத்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

காற்றடிப்பான்

அலங்கார மீன் தொட்டியை அழகாக்க, உயிரியல் வடிகட்டிகளை இயக்க, காற்றடிப்பான் பயன்படும்.

இது, பல அளவுகளில் எளிதாகக் கிடைப்பதால், மீன் தொட்டியின் அளவுக்கு ஏற்ற காற்றடிப்பான் மூலம் மீன் தொட்டியை அழகாக்கலாம்.

மீன் தொட்டி விளக்குகள்

தொட்டியின் வகையைப் பொறுத்து மின் விளக்குகளின் பயன்பாடு அமையும். ஏனெனில், அதிக ஒளி, பாசி அதிகமாகப் படர்வதற்கு வழி வகுக்கும்.

பத்து லிட்டர் நீருக்கு 4 வாட்ஸ் வீதம் விளக்குகளைப் பொருத்த வேண்டும்.

இந்தளவு நீரில் தாவரங்கள் அதிகமாக இருந்தால் 8 வாட்ஸ் வீதம் மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும்.

ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வெளிச்சம் இருந்தால், தாவரங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தொட்டி அமைத்தல்

தொட்டி அமைவிடம், நல்ல காற்றோட்டம் மிக்கதாக, நேரடியாக வெய்யில் படாத இடமாக, அதிக இடையூறு இல்லாத இடமாக,

தொட்டிக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் இணைக்கும் வசதியுள்ள இடமாக இருக்க வேண்டும்.

பராமரிக்க ஏதுவாக, மீன் தொட்டியைச் சுற்றி, போதிய இடவசதி இருக்க வேண்டும்.

புதிய தொட்டியை, சோப்பால் நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

பழைய தொட்டியாக இருந்தால், வினிகர் போன்ற அமிலத்தால் கழுவ வேண்டும்.

தொட்டியில் கூழாங் கற்களை 1-3 அங்குலம் நிரப்ப வேண்டும். தாவரங்கள் நிறைய இருந்தால் 5 அங்குலம் நிரப்ப வேண்டும்.

கற்களுக்கு இடையில் வடிகட்டிகளைப் பயன்படுத்தும் போது, நீரில் போதிய ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தொட்டியின் கொள்ளளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்து, காற்றுக் குழாய் மற்றும் இதர பொருள்களை வாங்க வேண்டும்.

பதினெட்டு அங்குல நீளத்துக்கு மேலுள்ள தொட்டிக்கு, அதிக அழுத்தமுள்ள குழாய்கள் தேவை.

வடிகட்டிகள் சரியாக இருந்தால், அதாவது, உயிருள்ள தாவரங்கள் மற்றும் ஆக்ஸிஜன் நிறைந்த நீரோட்டம் இருந்தால், காற்றூதிக் குழாய்கள் தேவையில்லை.

எளிதாகவும், நெடுநாட்கள் இருக்கவும், குப்பி வடிகட்டிகளைப் பயன்படுத்தலாம்.

வடிகட்டிகள், தொட்டியின் கொள்ளளவை விட நான்கு மடங்கு கூடுதலாக இருக்க வேண்டும்.

எ.கா: ஒரு தொட்டியின் கொள்ளளவு 100 லிட்டர் எனில், வடிகட்டியின் திறன் ஒரு மணி நேரத்துக்கு 400 லிட்டர் என இருக்க வேண்டும்.

குளோரின் இல்லாத நீரைப் பயன்படுத்த வேண்டும். நீரில் 3-4 மணி நேரம் தொடர்ந்து காற்றைச் செலுத்தினால், நீரிலுள்ள குளோரினை நீக்கலாம்.

தொட்டியில் 30 சத இடத்தை, அலங்காரப் பொம்மைகள், கற்கள் மற்றும் தாவரங்களுக்காக ஒதுக்க வேண்டும்.

மீனினம் மற்றும் நீரின் வெப்ப நிலையைப் பொறுத்து, நீர்ச் சூடேற்றியைப் பயன்படுத்தலாம்.

தொட்டியில் நீரை நிரப்பிய பிறகு, நீரின் வெப்பநிலை சமநிலை அடைய, 24 மணி நேரம் அப்படியே விட வேண்டும்.

காற்றுக் குழாயைப் பொருத்திய பிறகு மீனைகளை விட வேண்டும்.

தொட்டிப் பராமரிப்பு

தொட்டியைச் செய்ததும் முதலில் குறைந்தளவில் மீன்களை விட வேண்டும்.

நிறைய மீன்களை விட்டால் நீரின் தரம் கெட்டு, அதிகளவில் இறப்பு ஏற்படும். இதற்குப் புதிய தொட்டி நோய் என்று பெயர்.

எனவே, கொஞ்சம் கொஞ்சமாக மீன்களை விட்டால், உயிரியல் வடிகட்டி நன்கு இயங்கும்.

நைட்ரைட், அம்மோனியா மற்றும் கார அமிலத் தன்மையை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அன்றாடக் கவனிப்பு

தொட்டியில் உள்ள கருவிகள் நன்கு இயங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தீனியைச் சரியாக எடுக்காமல் இருந்தால், மீனின் பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால், தொட்டியில் பிரச்சனை உள்ளது என்று பொருள்.

வாரக் கவனிப்பு

வாரம் ஒருமுறை மீன்களை எண்ண வேண்டும். 10-15 சத நீரை மாற்ற வேண்டும்.

பஞ்சு அல்லது கடற் பாசியால் தொட்டியைச் சுத்தம் செய்ய வேண்டும்.

கார அமிலத் தன்மை, கடினத் தன்மை, நைட்ரேட் மற்றும் நைட்ரைட்டைக் கவனிக்க வேண்டும். வடிகட்டிகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

மாதக் கவனிப்பு

காற்றூதிக் குழாய் மற்றும் பிற கருவிகள் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கருவிகளின் காலாவதி தேதியைப் பார்த்துப் பயன்படுத்த வேண்டும். தொட்டியின் கூரையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டியவை

தொட்டியை அமைத்ததும் மீன்களை விடக்கூடாது. உயிரியல் வடிகட்டியை அமைத்து, தேவையான பாக்டீரிய வளர்ச்சியை உறுதி செய்த பிறகு தான் விட வேண்டும்.

தொட்டியை அமைத்து இரண்டு வாரங்கள் கழித்து மீன்களை விடலாம்.

அதிகளவில் மீன்களை விட்டால், கழிவுகள் அதிகமாகி உயிரியல் வடிகட்டியின் இயக்கம் பாதிக்கப்படும்.

முதலில் இரண்டு ஜோடி மீன்களை விடுவது நல்லது. தீவனத்தை அதிகமாக இடக்கூடாது.

ஏனெனில், கழிவுகள் அதிகமாகி, உயிரியல் வடிகட்டியின் செயல் திறனைப் பாதிக்கச் செய்யும்.

பொருந்தா மீன்களை விடக்கூடாது. சிறிய மீன்களை விடுவது நல்லது.

மீன்களை விடுமுன், மீனினம் மற்றும் அதன் குணங்களை அறிவது அவசியம். பராமரிப்பு அட்டவணையைத் தவிர்க்கக் கூடாது.

இந்த அனைத்து உத்திகளையும் பயன்படுத்தினால், நம் வீட்டில், நம் அலுவலத்தில் உள்ள அலங்கார மீன் வளர்ப்புத் தொட்டிகள் அழகாக இருக்கும்.


முனைவர் சா.ஆனந்த், ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ் சபரி, பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு – 638 451.

சு.பாரதி, கண்காணிப்பு ஆலோசகர், கடலோர மீன் வளர்ப்பு ஆணையம், சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!