மழைநீரைச் சேமிக்கும் கோடை உழவு!

மழைநீரை summer farming

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். மழைக்காலத் தொடக்கத்தில் இருக்கிறோம்.

கடந்த ஆண்டும் போதிய மழை பெய்யாத நிலையில், இயற்கை தரும் அந்தக் கொடை இந்த ஆண்டில் எந்தளவில் இருக்குமெனத் தெரியவில்லை.

கூடுதலோ குறைவோ, இருப்பதைக் கொண்டு தான் வாழ்க்கையை நகர்த்தியாக வேண்டும்.

நீர் இல்லாமல் வாழ முடியாது. ஆகவே, கிடைக்கும் நீரைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும்.

ஆற்று நீரானாலும், குளத்து நீரானாலும், கிணற்று நீரானாலும், எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது மழைநீர் தான். ஆகவே, மழை மூலம் கிடைக்கும் நீரைச் சேமிக்க வேண்டும்.

இந்த மண்ணில் இருக்கும் நீரில் 97.3 சதம் உப்பு நீரென்றும், 2.7 சதம் நல்ல நீரென்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த நல்ல நீரிலும் 1.7 சதம் நிலத்தடி நீராக மண்ணுக்குள் இருப்பதாகவும், நாம் எளிதில் எடுத்துப் பயன்படுத்தும் வகையில், ஆறு, குளம், குட்டை, ஏரி நீராக இருப்பது வெறும் ஒரு சதம் தான் என்றும், அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

இதிலிருந்து நமக்கு நன்றாகப் புலப்படுவது, மழைநீரைச் சேமிப்பது எவ்வளவு அவசியம் என்பது தான்.

எனவே, ஏரி, குளங்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் கூட மழைநீரைச் சேமிக்க வேண்டும் என்னும் கட்டாயம் எழுந்துள்ளது.

அதனால் தான் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், தீர்க்கமான கண்ணோட்டத்தில்,

தனது கடந்த ஆட்சிக் காலத்திலேயே வீடுகள் அனைத்திலும் மழைநீர்ச் சேமிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து, அதை முனைப்புமிகு இயக்கமாகச் செயல்படுத்தினார்.

இப்போதும் மழைநீர்ச் சேமிப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்தி வருகிறார்.

இதைப்போல, பயிர்களை அறுவடை செய்த பிறகு, நிலத்தைத் தரிசாகப் போடாமல் உழுது வைப்பதும் கூட மழைநீர்ச் சேமிப்புக்கான உத்தி தான்.

இப்படிச் செய்வதால், பெய்யும் மழைநீர் உருண்டோடி விடாமல், உழவுச் சால்களுக்கு இடையில் நின்று, மண்ணுக்குள் தங்கி, நிலச் சூட்டைத் தணிக்கும்.

இதனால் பயிர்கள் வாட்டமின்றி, வளமாக வளரும். எனவே, கோடையுழவு என்பது மிகமிக அவசியம்.

நீரின்றி அமையாது உலகு. அந்த நீருக்கு மூலம் மழை. அந்த மழையால் கிடைக்கும் நீரைச் சேமிக்க வேண்டிய கடமை, இந்த மண்ணில் மனிதராகப் பிறந்த அனைவருக்கும் உள்ளது. அதை மகிழ்ச்சியுடன் செய்வோம்.


2014 ஜூலை இதழில் வெளியான ஆசிரியர் பக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!