தென்னையைத் தாக்கும் பூச்சிகள்!

pb_coconut-tree

தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. இத்தகைய சிறப்புமிக்க தென்னையைப் பல்வேறு பூச்சிகள் தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

காண்டாமிருக வண்டு

தலையில் மேல்நோக்கிய கொம்புடன் காண்டாமிருகத்தைப் போல இருப்பதால், இது இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இவ்வண்டு நீள்வட்டமாக வெள்ளை முட்டைகளை எருக்குழி, அழுகிய பொருள்களில் இடும். இளம்புழுவின் தலை பழுப்பு நிறத்திலும், உடல் அழுக்கு வெள்ளை நிறத்திலும் இருக்கும். புழுக்கள் எருக்குழிகளில் இருக்கும். இவ்வண்டு 4-8 மாதங்கள் வரை வாழும்.

சேத அறிகுறிகள்: இளங்குருத்தைத் துளைத்து உள்ளே செல்வதால் குருத்தோலையும் பாளைகளும்  பாதிக்கப்படும். குருத்தின் துளை வழியே இளம் ஓலையின் சக்கை  தள்ளப்பட்டிருக்கும். விசிறியைப் போல V வடிவில் ஓலை இருக்கும். சிறிய கன்றுகள் தாக்கப்பட்டால் காய்ந்து விடும்.

கட்டுப்படுத்துதல்: இந்த வண்டு தாக்கி மடிந்த மரங்களை வெட்டி அழிக்க வேண்டும். குப்பை, சாணமின்றித் தோப்புச் சுத்தமாக இருக்க வேண்டும். எருக்குழியில் இருக்கும் முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டுகளை அழித்து விட்டு, குழியை மண்ணால் மூட வேண்டும். வண்டு துளைத்த துளையில் நீண்ட கம்பியை விட்டு உள்ளேயிருக்கும் வண்டைக் குத்தி வெளியே எடுக்க வேண்டும். இரண்டாம் மூன்றாம் ஓலை இடுக்குகளில் வேப்பங்கொட்டைத் தூள்+ மணலைச் சமமாகக் கலந்து, மரத்துக்கு 150 கிராம் வீதம் இட வேண்டும்.

மின்விளக்குப் பொறிகளை வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். 2.5 கிலோ ஆமணக்குப் புண்ணாக்குடன் 5 கிராம் ஈஸ்ட் அல்லது 5 மில்லி  அசிடிக் அமிலம் கலந்த கலவையில், நீளவாக்கில் வெட்டப்பட்ட இளம் மட்டைத் துண்டுகளை நனைத்து ஏக்கருக்கு 30 இடத்தில் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். மூன்று பாச்சை உருண்டைகளை நொறுக்கி, அடிக்குருத்தில் இருந்து மூன்றாம் குருத்தில் இட வேண்டும்.

எருக்குழியில் உள்ள புழுக்களை, பச்சை மஸ்கார்டின் என்னும் பூசணத்தைத் தெளித்து அழிக்கலாம். ரைனோலூர் என்னும் இனக்கவர்ச்சிப் பொறியை ஏக்கருக்கு ஒன்று வீதம் வைத்து இவ்வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். மாட்டுச்சாணம் + ஆமணக்குப் புண்ணாக்கைச் சமமாக எடுத்து நீரில் கரைத்து, அகல வாயுள்ள மண் சட்டிகளில் நிரப்பி, ஏக்கருக்கு நான்கு வீதம் தரை மட்டத்தில் புதைத்து வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். பேக்குசூலா வைரஸ் தாக்கிய வண்டுகளை எக்டருக்கு 15 வீதம் மாலையில் விட்டால், இந்த வைரஸ் பிற வண்டுகளுக்கும் பரவி அவற்றை அழித்து விடும்.

சிவப்புக் கூன்வண்டு

இது நீண்ட உடலுடன் சிவப்பு நிறத்தில் 6 கரும் புள்ளிகளுடன் இருக்கும்.  வாய் தும்பிக்கையைப் போல நீண்டு வளைந்திருக்கும். ஆண் வண்டின் வாயில் உரோமங்கள் அடர்ந்திருக்கும். புழுவின் தலை சிவப்பாகவும், உடல் வெளிரிய மஞ்சளாகவும் இருக்கும்.

சேத அறிகுறிகள்: இளந்தென்னையை குறுகிய காலத்தில் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும். இதன் புழுக்கள் இளந்தண்டின் சோற்றுப் பகுதியைத் தின்னும். இப்படித் தண்டைத் துளைப்பதால் மரம் எளிதாக முறிந்து விடும். புழுக்கள் இட்ட துளையில் வெளியான செந்நீர் காய்ந்து, பிசினைப் போல இருக்கும். மேலும், சக்கைகள் வெளியே தள்ளப்பட்டிருக்கும். இதன் தாக்குதல் 20-25 வயதுள்ள மரங்களில் அதிகமாக இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: மரங்களை அவ்வப்போது பழுது பார்க்க வேண்டும். இறந்த மரங்களை வெட்டி எரித்துவிட வேண்டும். மரங்களில் காயங்கள் இருக்கக் கூடாது. துளைகள் இருந்தால், அவற்றை சிமெண்ட் அல்லது களிமண்ணால் அடைத்துவிட வேண்டும். பச்சை மட்டைகளை வெட்டக் கூடாது. தேவையானால் தண்டிலிருந்து 120 செ.மீ. தள்ளி வெட்ட வேண்டும்.

நடுக்குருத்து மற்றும் மட்டை இடுக்குகளில் துளையுள்ள 2 பாலித்தீன் பைகளில் 5 கிராம் வேப்பங்கொட்டைத் தூளை ஆண்டுக்கு இருமுறை வைத்தால், காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்புக் கூன்வண்டு முட்டையிடாது. அல்லது முதல் மூன்று இலை இடுக்குகளில் மூன்று பூச்சி உருண்டைகளை துளையுள்ள 3 பாலித்தீன் பைகளில் ஆண்டுக்கு இருமுறை வைக்க வேண்டும்.

மரத்துளைகளில் 5 மில்லி மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்.எல்+5 மில்லி டைகுளோர்வாஸ் 76 ஈ.சி மருந்தைக் கலந்து ஊற்றி, சிமெண்ட் அல்லது களிமண்ணால் துளைகளை அடைத்துவிட வேண்டும். கடுமையாகப் பாதித்த மரங்களில், வேர் மூலம் 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்.எல் மருந்தை 10 மில்லி நீரில் கலந்து, 45 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை செலுத்த வேண்டும். இதைத் தேங்காய் அறுவடைக்கு 45 நாட்களுக்கு முன்பு அல்லது பின்பு செய்ய வேண்டும்.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ

முதன் முதலில் 2004 இல் மத்திய அமெரிக்காவின் பெலிசில் காணப்பட்ட இந்த ஈ 2009 இல் அங்குள்ள புளோரிடா மாநிலத் தென்னைகளைத் தீவிரமாகத் தாக்கியது. தமிழகத்தில் பொள்ளாச்சியில் 2016 இல் காணப்பட்டது.

வாழ்க்கை: இந்த ஈ வட்டமாக அல்லது சுருள் வடிவில் 0.3 மி.மீ. அளவுள்ள மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடியில் தனித்தனியாக இடும். இவை மெழுகுப் பொருளால் இணைக்கப்பட்டு அரை வட்டமாக இருக்கும். இவற்றிலிருந்து வெளிவரும் முதல்நிலைக் குஞ்சுகள் கால்களுடன் நகரும். அடுத்த நிலைக் குஞ்சுகளால் நகர முடியாது. முதிர்ந்த நிலையில் இறக்கைகள் இருக்கும். ஒழுங்கற்ற இளம் பழுப்புப் பட்டை இறக்கைகளில் இருப்பது இதன் அடையாளம்.

சேத அறிகுறிகள்: குஞ்சுகள் இலைச்சாற்றை உறிஞ்சி வளரும். முப்பது நாளில் முழு ஈயாக மாறி, காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த தென்னைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். தென்னை ஓலைகளின் அடியில் கூட்டங் கூட்டமாக இருக்கும். இவை வெளியேற்றும் திரவக்கழிவு கீழேயுள்ள ஓலைகளில் படிவதால், கேப்னோடியம் என்னும் கரும்பூசணம் வளரும். இதனால் ஒளிச்சேர்க்கை பாதிப்பதால் மகசூல் குறையும். குட்டை வகைத் தென்னைகளைத் தான் அதிகமாகத் தாக்கும். மேலும், இந்த ஈ மா, பலா, வாழை, கொய்யா, சீதா உள்ளிட்ட 200 வகை மரங்களைத் தாக்கும்.

கட்டுப்படுத்துதல்: ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறியை வைத்து இதன் நடமாட்டத்தைக் கவனிக்க வேண்டும். மூன்றடி நீளம், ஓரடி அகலத்திலான மஞ்சள் ஒட்டுப்பொறிகளை ஏக்கருக்கு 20 இடங்களில் ஆறடி உயரத்தில் வைத்து, வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். ஓலைகளின் அடியில் நீரைப் பீய்ச்சி அடிக்கலாம்.

இந்தப் பூச்சிகளை உண்ணும் கிரைசோபர்லா இரை விழுங்கிகளை எக்டருக்கு 1,000 வீதம் விடலாம். ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி ம.எண்ணெய் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு சத அசாடிராக்டின் 2 மில்லி வீதம் கலந்து ஒட்டும் திரவத்தையும் சேர்த்து, ஓலைகளின் அடிப்புறம் நன்கு நனையும்படி, 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் மைதா மாவு வீதம் கலந்து ஓலைகளில் நன்கு தெளித்தால், இவற்றில் படரும் கரும்பூசணம் அகலும். இந்த வெள்ளை ஈக்கள் மிகுதியாகப் பரவினால், கிரைசோபர்லா இரை விழுங்கிகள், காக்சினெல்லிட் பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகியன இயற்கையாகவே தோப்பில் உருவாகி விடும். பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து, நன்மை செய்யும் பூச்சிகள் வளரும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

கருந்தலைப்புழு

தாய்ப்பூச்சி சாம்பல் நிறத்தில் சிறிதாக இருக்கும். புழுவின் உடல் பழுப்பாகவும் தலை கறுப்பாகவும் இருக்கும்.

சேத அறிகுறிகள்: தாக்குதல் தீவிரமானால், பழைய மட்டைகள் முற்றிலும் காய்ந்து விடும். 3-4 இளம் மட்டைகள் மட்டும் பச்சையாக இருக்கும். பச்சையம் சுரண்டப்பட்ட ஓலைகளில், நூலாம் படைக்குள் புழுக்கள் இருக்கும். இவை, பாரன்கைமேட்ஸ் செல்களைக் கொண்ட பச்சையத்தைச் சுரண்டித் தின்பதால், ஒளிச்சேர்க்கை குறைந்து மகசூல் பாதிக்கும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஓலைகள் தீயில் கருகியதைப் போலிருக்கும். இவை, எல்லா வயது மரங்களையும் தாக்கும்.

கட்டுப்படுத்துதல்: உயிரியல் முறை: கீழடுக்குகளில் சேதமடைந்த இலைகளை (2-3) வெட்டி எரித்துவிட வேண்டும். கீழ்க்கண்ட ஒட்டுண்ணிகளைத் தேவையான அளவில், 15 நாள் இடைவெளியில் 5-6 முறை விட வேண்டும். புழுப் பருவத்தைக் கட்டுப்படுத்த, பிராக்கனிட் மற்றும் பெத்திலிட் ஒட்டுண்ணிகளை மரத்துக்கு 20 மற்றும் 10 வீதம் விட வேண்டும். சால்சிட் அல்லது யுலோபிட்  ஒட்டுண்ணிகளை மரத்துக்கு 1 மற்றும் 20 வீதம் கூட்டுப்புழு நிலையில்  விட வேண்டும். பூச்சிக்கொல்லியைத் தெளித்திருந்தால் 21 நாட்களுக்குப் பிறகே விட வேண்டும். மேலும், உரம் மற்றும் பாசனத்தைச் சரியாகச் செய்ய வேண்டும்.

இரசாயன முறை: தாக்குதல் தீவிரமாக இருந்தால், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டைகுளோர்வாஸ் 76 WSC அல்லது 5 மில்லி மாலத்தியான், ஒரு மில்லி ஒட்டும் திரவம் வீதம் கலந்து, ஓலைகளின் அடியிலும் நூலாம்படை மீதும் தெளிக்க வேண்டும். ஒரு மரத்துக்கு 10-20 லிட்டர் கலவை தேவைப்படும். இதற்கு, ராக்கர் அல்லது மிதித் தெளிப்பானைப் பயன்படுத்த வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி மானோகுரோட்டோபாஸ் 36 SL வீதம் கலந்த கலவையை 75×10 செ.மீ. நெகிழிப் பையில் நிரப்பி, மரத்தின் சிவப்பு வேரைச் சாய்வாகச் சீவிவிட்டு இதற்குள் இட்டு இறுக்கிக் கட்டிவிட வேண்டும். இக்கலவையை வேர் உறிஞ்சாத நிலையில் மற்றொரு வேரைப் பயன்படுத்த வேண்டும். இதைத் தேங்காய் அறுவடைக்கு 45 நாட்கள் முன்பு அல்லது பின்பு செய்ய வேண்டும்.

செம்பான் சிலந்தி

ஆசரியா கெர்ரரோனிஸ் என்னும் ஈரியோபைட் சிலந்தியின் தாக்குதல் முதன் முதலில் 1960இல் மெக்ஸிகோவில் காணப்பட்டது. பின்பு 1997 இல் இலங்கை, 1998 இல் இங்கே கேரளம் எர்ணாகுளம் மாவட்டத்தில் காணப்பட்டது. பிறகு இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

வாழ்க்கை: இப்பூச்சி சிறிதாகவும், வெளிரிய புழுவைப் போலவும் இருக்கும். இது முட்டைப் பருவம், இரு புழுப்பருவம் மற்றும் வளர்ந்த சிலந்தி நிலையைக் கொண்டது. நான்கு கால்கள் இருக்கும். வாய், ஊசியைப் போலக் கூர்மையாக இருக்கும். பெண் சிலந்தி வெள்ளை நிறத்தில் 50-200 முட்டைகளை இடும். தட்ப வெப்ப நிலையைப் பொறுத்து, முட்டையிலிருந்து வளர்ந்த சிலந்தியாக மாறுவதற்கு 7-9 நாட்களாகும். மூன்று நாட்களில் பொரிக்கும் புழு, முதல்நிலை, இரண்டாம் நிலையில் இரண்டிரண்டு நாட்கள் இருக்கும். அடுத்துச் சிலந்தியாகும். இது, காற்று, தேனிக்கள், மகரந்தத்தை உண்ண வரும் பூச்சிகள் மூலம் பரவும்.

சேத அறிகுறிகள்: இச்சிலந்தி, தென்னையின் பெண்பூ பருவம் அடையும் போது புல்லி வட்டத்துள் சென்று, கருப்பையின் மேல் தோலிலுள்ள மெரிஸ்டம் திசுவின் சாற்றை உறிஞ்சி வளரும். 1-3 மாதக் குரும்பைகளில் அதிகமாக இருக்கும். குரும்பைக் காம்பின் தோலுக்கு அடியிலிருந்து கொண்டு, குரும்பைத் திசுக்களின் சாற்றை உறிஞ்சுவதால், தொட்டுக்குக் கீழே முக்கோணமாக வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் திட்டுகள் ஏற்படும். இந்தக் குரும்பைகள் வளர்ந்து இளம் காய்களாக மாறும் போது, இந்தப் பழுப்புப் பகுதி அதிகமாகி, நீளவாக்கில் சிறிய வெடிப்புகள் தோன்றும்.

முற்றிய காய்களில் இப்பகுதி கடினமாவதால், நீளவாக்கில் பெரிய வெடிப்புகள் ஏற்படும். மேலும், அதிகமாகப் பாதிக்கப்பட்ட காய்களின் வெடிப்புகளிலிருந்து பிசினைப் போன்ற திரவம் வெளிப்படும். காய்கள் சிறுத்து, பருப்பின் அளவு 10-30% குறைந்து விடும். இளங்காய்கள் உதிர்வதால் மகசூல் இழப்பும், 20-25% கொப்பரைப் பாதிப்பும் ஏற்படும்.

கட்டுப்படுத்துதல்: உழவியல் முறை: இப்பூச்சி தாக்கிய மரங்களிலிருந்து விழும் குரும்பைகளைச் சேகரித்து அழித்துவிட வேண்டும். பாசனம் சரியாக இருக்க வேண்டும். சணப்பையை ஊடுபயிராகவும், சவுக்கை வரப்புப் பயிராகவும் வளர்த்து இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

உரமிடுதல்: ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ வீதம் இட வேண்டும். பொட்டாஷை அதிகமாக இட்டால், இதன் தாக்குதலை எதிர்க்கும் திறன் தென்னைக்குக் கிடைக்கும். மேலும், தொழுவுரம் 50 கிலோ, போராக்ஸ் 50 கிராம், ஜிப்சம் ஒரு கிலோ, மெக்னீஷிய சல்பேட் 500 கிராம் இட வேண்டும்.

தாவரச் சிலந்திக்கொல்லிகள்

இவற்றைக் கைத்தெளிப்பான் அல்லது ராக்கர் மற்றும் கால்மிதித் தெளிப்பான் மூலம் 45 நாட்கள் இடைவெளியில், 1-6 மாதக் குரும்பைகளில் படும்படி, மூன்று முறை தெளிக்க வேண்டும். முதலில் ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி அசாடிராக்டின் வீதமும், அடுத்து, ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வேப்பெண்ணெய்+ ஒட்டும் திரவம் வீதமும் கலந்து தெளிக்க வேண்டும்.

மூன்றாவதாக, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மில்லி கார்போசல்பான் 25 EC மற்றும் 5 மில்லி அசாடிராக்டின் வீதம் கலந்து, வேருக்கருகில் அருகே மண்ணில் இடவேண்டும். இவற்றைத் தெளிக்க முடியாத நிலையில், ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி அசாடிராக்டின் வீதம் கலந்த கலவையை வேர் மூலம் 45 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை செலுத்த வேண்டும். இவற்றை, ஜனவரி-ஜூன் காலத்தில் தெளிக்க வேண்டும். ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் தேவைப்படும்.

வேப்பெண்ணெய், பூண்டுக் கரைசல்: 2 சத வேப்பெண்ணெய், பூண்டு மற்றும் சோப்புக் கரைசலைத் தெளிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி வேப்பெண்ணெய், 20 கிராம் உரித்த பூண்டு, 5 கிராம் சோப்பு என்னுமளவில் கரைசலைத் தயாரிக்க வேண்டும்.

உயிரியல் முறை: ஹிர்சுட்டல்லா தாம்சோனி, வெர்டிசிலியம் லெகானி ஆகிய பூசணங்கள் சிலந்திகளைக் கட்டுப்படுத்தும். இவ்வகையில் செம்பான் சிலந்தியும் கட்டுப்படும்.

எலிகள்

தென்னையை எல்லாக் காலத்திலும் எலிகள் தாக்கும். குறிப்பாக, பாண்டிக்கூட் மற்றும் ஜெர்பில் எலிகள் நாற்றங்காலில் ஆழமாகத் துளைத்து வேர்களைத் தாக்கும். நாற்றுகளின் குருத்து, இலைகளின் அடித்தண்டைக் கடித்துத் தின்னும். குரும்பை மற்றும் இளநீர்க் காய்களைக் கடித்துச் சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்துதல்: பத்து கிராம் புரோமோடைலான் (0.005%) மெழுகுக் கட்டிகளை மட்டைகளில் 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை வைக்க வேண்டும். தேங்காய்க் கீற்றுப் பொறியை, காய்களில்லாத செப்டம்பர்- நவம்பர் காலத்தில் மட்டைகளில்  வைக்க வேண்டும். பருவத்தில் காய்களை அறுவடை செய்ய வேண்டும். 95 பங்கு அரிசிக்குருணை, 3 பங்கு தேங்காய் எண்ணெய், 2 பங்கு ஜிங்க் பாஸ்பைடு கலந்த நச்சுணவை வைக்கலாம். இதை எலிகள் நுகர்ந்து பார்த்துக் கண்டுபிடித்து விடுவதால், இதை வைப்பதற்கு முன் மூன்று நாட்களுக்கு நஞ்சில்லா உணவை வைக்க வேண்டும்.


தென்னை RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ்,

முனைவர் மு.இராமசுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், 

நீடாமங்கலம்-614404, திருவாரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!