இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் (IIMR) வழங்கும் தொழிற் பயிற்சிகள்!

சிறுதானியம் என்பது, எல்லா தட்ப வெப்பச் சூழல்களிலும், வறட்சி மற்றும் பூச்சி நோய்களைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும். சோளம், கம்பு, இராகி ஆகியன, சிறுதானியப் பயிர்களாகவும், தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகியன, குறுந்தானியப் பயிர்களாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்துடன் 1966 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டு, அகில இந்திய அளவில் சோளம் பற்றிய மேம்பாட்டு மற்றும் ஒருங்கிணைப்பு ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு முதல், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனமாக இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் நோக்கம்: எளிதில் பயன்படுத்தும் வகையிலான தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து, அவற்றைச் செயல்படுத்தச் செய்து, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது. சிறுதானிய சாகுபடியை, புதிய தொழில் நுட்பங்கள் மூலம் எளிமைப் படுத்துவது.

பின்செய் நேர்த்தி, மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரித்தல் மூலம் சந்தை வாய்ப்பைப் பெருக்கி, வணிக நோக்கில் இலாபத்தை ஏற்படுத்துவது. இந்த நிறுவனத்தில் நியூட்ரி ஹப் மூலம், கீழ்க்காணும் பயிற்சிகளை நடத்தி, புதிதாகத் தொழில் தொடங்கவும், அக்ரி ஸ்டார்ட்அப் தொடங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நெஸ்ட்: இளைய சமுதாயத்தினர், ஸ்டார்ட்அப் ஆரம்பிக்க இருப்போர், ஏற்கெனவே சிறுதானியங்கள் தொடர்பான வியாபாரம் மற்றும் சந்தைப்படுத்தலைச் செய்து வருவோர், இந்தப் பயிற்சிகளில் கலந்து கொள்ளலாம். தொடக்க நிலையில் தொழில் தொடங்க உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.5 இலட்சம் வரையிலான தொகுப்பு நிதி வழங்கப்பட உள்ளது.

என்-கிரைன்: இந்தியாவில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது பொருள்களை விற்பதற்கும், பொருளாதார மேம்பாடு அடைவதற்கும், வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கும் வழிவகை செய்கிறது. தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள், ரூ.25 இலட்சம் வரை தொகுப்பு நிதி பெறலாம்.

ஸ்டார்ட்அப் இக்னீசன்: இப்பயிற்சி, ஸ்டார்ட்அப் தொடங்க உள்ள ஒவ்வொரு நிறுவனத்துக்கும், மாதாந்தோறும் பிரதி நான்காவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஒருநாள் நடைபெறும் இப்பயிற்சிக்குக் கட்டணமாக ரூ.2000 செலுத்த வேண்டும்.

இப்பயிற்சியில் சத்துமிகு சிறுதானியங்கள் உற்பத்தி, அறுவடை, அறுவடைக்குப் பிந்தய தொழில் நுட்பங்கள், அதற்குப் பயன்படும் இயந்திரங்கள், அவற்றைக் கொள்முதல் செய்தல், மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் அவற்றைச் சந்தைப்படுத்துதல் பற்றி விரிவாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குக்கிங் வித் மில்லட்ஸ்: இ்ந்த நிறுவனத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் பிரதி இரண்டாம் வெள்ளிக்கிழமை இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.2,000 ஆகும்.

சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தற்போது நம்மிடையே மாறிவரும் நாகரிக வாழ்வியல் முறையில், சிறுதானியப் பயன்பாடு குறைவாகவே உள்ளது. இதைச் சரி செய்யும் பொருட்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

சிறுதானியங்களில் இருந்து, தோசை, இட்லி, உப்புமா, பிஸ்கேட்ஸ், கேக் மற்றும் பல்வேறு உணவுப் பொருள்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி, இல்லத்தரசிகள், உணவு நிறுவனங்களில் பணியாற்றுவோர் மற்றும் தொழில் நடத்துவோருக்கு வழங்கப்படுகிறது.

இந்நிறுவனத்தில் 15 நாட்கள் பயிற்சி பெற்ற, நாமக்கல் வேளாண்மை அலுவலர் சௌந்தர்ராஜன் (சான்று பெற்ற வேளாண் ஆலோசகர், சிறுதானியங்கள்) அவர்கள், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தைப் பற்றியும், அங்கு வழங்கப்படும் பயிற்சிகளைப் பற்றியும் தெரிவித்துள்ளார்.

எனவே, சிறுதானியத் தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் விவசாயிகள் இப்பயிற்சிகளில் பங்கு கொண்டு, இந்த நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் தொகுப்பு நிதியைப் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு:

இயக்குநர், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம், இராஜேந்திர நகர், ஹைதராபாத்.

தொலைபேசி எண்: 0402 – 4599382.


இயக்குநர், IIMR.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!