மணமிகு ரோஜா பணந்தரும் ரோஜா!

ரோஜா DSC00045 982b66ced1ff4799794239f973e5981e

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.

திருவண்ணாமலை மாவட்ட மக்களின் முக்கிய வாழ்க்கை ஆதாரமாக விளங்குவது விவசாயம். இதை நீர்வளம் மிக்க மாவட்டம் என்று சொல்ல முடியா விட்டாலும், இங்கே மானாவாரி விவசாயத்துடன் பாசன விவசாயமும் உண்டு. ஆனாலும், சிக்கனமாகப் பாசன நீரைக் கையாளும் வகையில், பெரும்பாலான விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அதற்கு ஏற்றாற் போல், தோட்டக்கால் பயிர்களான காய்கறிகள் மற்றும் மலர் வகைகளைப் பயிரிட்டு வருகிறார்கள்.

மேலும், திருவண்ணாமலை மாவட்ட மக்கள், நமது பாரம்பரிய விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் நேரங்காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். இதனால், இடுபொருள் செலவுகள், வேலையாள் கூலி போன்றவற்றில் இருந்து இவர்களால் மீள முடிகிறது.

பயிர் சாகுபடியுடன், ஆடுகள், கறவை மாடுகள் போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்கள். அதனால், குடும்பச் செலவுகளைச் சரிக்கட்டி, கொஞ்சம் நிம்மதியாக வாழ முடிகிறது.

இந்த வகையில், வீட்டுத் தேவைக்காகக் கொஞ்சம் நெல், நிலக்கடலை, உளுந்து, கேழ்வரகு போன்றவற்றை சாகுபடி செய்துள்ள திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், அத்திப்பாக்கம் இராஜ்கபூர், பந்தல் காய்கறிப் பயிரான பாகலையும், மலர்ப் பயிர்களான பன்னீர் ரோஜா, கேந்திப்பூ என்னும் மஞ்சள் சாமந்திப் பூச்செடிகளைத் தனது நிலத்தில் சாகுபடி செய்துள்ளார். இராஜ்கபூரை அவரது தோட்டத்தில் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தனது பன்னீர் ரோஜா சாகுபடி அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“விவசாயம் தான் எங்களுக்கு முக்கியத் தொழில். ஒரு நாலரை ஏக்கரா நெலம் இருக்கு. விவசாயத்துக்குத் தண்ணி வேணும்ன்னு இந்த நெலத்துல மூனு கிணறு தோண்டியிருக்கோம். போன வருசம் நல்ல மழை. இந்த வருசம் மழையே இல்ல. அதனால தண்ணி வசதி குறைவாத் தான் இருக்கு.

இருந்தாலும், இருக்கக் கூடிய தண்ணிக்கு ஏத்த மாதிரி பயிர்கள சாகுபடி செஞ்சிருக்கோம். தண்ணிய சிக்கனமா பயன்படுத்தணும். அதுக்காகப் பாதி நெலத்துல சொட்டுநீர்ப் பாசனம் போட்டுருக்கோம். மீதி நெலத்துல இருக்குற பயிர்களுக்கு, குழாய் மூலம் தான் தண்ணியைக் கொண்டு போறோம். வாய்க்காலே கிடையாது.

வீட்டுத் தேவைக்காகக் கொஞ்சம் நெல்லு போட்டுருக்கோம். கேழ்வரகு வச்சிருக்கோம். உளுந்து, நிலக்கடலையும் சாகுபடியில இருக்கு. பந்தல் முறையில பாகல் நட்டுருக்கோம். இப்பத்தான் கொடி ஓடிக்கிட்டு இருக்கு.

இதெல்லாம் போக, மஞ்சள் சாமந்தி, பன்னீர் ரோஜா செடிகள் இருக்கு. இந்தப் பன்னீர் ரோஜா செடிகள் முப்பது சென்ட் நெலத்துல இருக்கு. இதுல முள் இரகம், முள்ளில்லா இரகம்ன்னு இருக்கு. இந்த ரெண்டு இரகமும் நம்ம நெலத்துல இருக்கு.

ஒரு செடி பதினஞ்சு ரூபான்னு, ஆயிரம் செடிகள வாங்கி வந்து நட்டுருக்கோம். வரிசைக்கு வரிசை ஏழடி இடைவெளி, செடிக்குச் செடி ஒரு அடி இடைவெளி விட்டு நட்டுருக்கோம். நடவுக்கு முன்னால நெலத்தை நல்ல புழுதி புரள உழுதோம். கடைசி உழவுக்கு முன்னால தொழுவுரத்தை அடியுரமா போட்டோம்.

வாரத்துக்கு ஒருமுறை பாசனம் செய்வோம். சொட்டுநீர்ப் பாசனம் தான். இருபது நாளுக்கு ஒரு தடவை, மேலுரமா காம்ப்ளக்ஸ் குடுப்போம். ரோஜாவுல, புழுக்கள் உற்பத்தியாகி, பூ மொட்டுகள குடைஞ்சு சேதத்தை உண்டாக்கும். இதுக்கு, தாக்கத்தைப் பொறுத்து மருந்தடிப்போம்.

நட்டு நாற்பது நாள்ல செடிகள் பூக்க ஆரம்பிச்சிரும். முதல்ல ஒரு செடிக்கு ஒரு பூதான் பூக்கும். அப்புறம் பக்கக் கிளைகள் வரவர அதிகமான பூக்கள் பூக்கும். ஒரு வருசத்துல அதிகபட்சமான பூக்கள் வந்துரும். இப்போ எங்க நெலத்துல இருக்குற செடிகள் நெறையா பூக்குது.

சராசரியா அன்றாடம் ரெண்டாயிரம் பூக்கள் கிடைக்கும். இதுல கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். நித்தமும் ரோஜாப் பூக்களைப் பறிக்கணும். இந்தச் செடிகளை அஞ்சு வருசம் வரை பாதுகாத்து வருமானம் எடுக்கலாம்.

எங்க தோட்டத்துப் பூக்களை நாங்களே பறிச்சிருவோம். இதுக்கு ஆளெல்லாம் வெக்கிறதில்ல. எங்க அம்மா, என் மனைவி, எங்க பசங்களே பறிச்சிருவாங்க. அதனால பூக்களைப் பறிக்கிற செலவு இல்ல. எங்களுக்குப் பக்கத்துலயே, அதாவது, வந்தவாசியில பூச்சந்தை இருக்கு. நானு எடுத்துட்டுப் போயி அங்கே குடுத்துருவேன்.

ஒரு பூவோட குறஞ்சபட்ச விலை முப்பது பைசா. முகூர்த்தக் காலத்துல விலை இன்னும் கூடும். ஒரு பூ முப்பது பைசான்னா ரெண்டாயிரம் பூவோட விலை அறுநூறு ரூபா. மாசத்துக்குப் பதினெட்டாயிரம் ரூபா வருமானம். இதுல பராமரிப்புச் செலவு, பறிப்புக் கூலின்னு எட்டாயிரம் ரூபா போனாலும், நிகர இலாபமா முப்பது சென்ட்ல மாசம் பத்தாயிரம் ரூபா கிடைக்குது.

பூவோட விலையும், பூக்களோட எண்ணிக்கையும் கூடும் போது வருமானமும் கூடும். அதனால சரியா திட்டம் போட்டு வேலை செஞ்சா விவசாயம் நம்மைக் கைவிடாது’’ என்றார்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!