பொதிகுளம் பாரதத்தின் ஆடு வளர்ப்பு வாழ்க்கை!
பத்து ஆடுகள் இருந்தால் பணத்துக்குப் பஞ்சமில்லை என்பது பழமொழி! வீட்டில் ஆடுகள் இருப்பது பெட்டியில் பணம் இருப்பதற்கு ஒப்பாகும். தேவைக்கு ஆடுகளை விற்று உடனே பணமாக்கிக் கொள்ள முடியும். அதனால், கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் ஆடுகள் இருக்கும். வீட்டுத் தேவைக்கும் விவசாயத் தேவைக்கும் வேண்டிய பணத்தை இந்த ஆடுகள் ஈட்டித் தரும்.
இந்த ஆடு வளர்ப்புச் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இராமநாதபுர மாவட்டம் பெரும்பாலும் மானாவாரியாக இருப்பதால், இப்பகுதி மக்களில் ஒரு பிரிவினர், ஆடு வளர்ப்பை முக்கியத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
மேய்ச்சலுக்காக ஆடுகளைத் தமிழகம் முழுவதும் ஓட்டிச் செல்கின்றனர். மேய்ச்சல் இருக்கும் பகுதிகளில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஆடுகளைப் பராமரித்து வருகின்றனர். கீழக்கரிசல் செம்மறி ஆடுகளையே அதிகமாக வளர்த்து வருகின்றனர்.
இவர்களில் ஒருவர் தான் இராமநாதபுர மாவட்டம், கடலாடி வட்டம், பொதிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதம். இவர் இப்போது தனது ஆடுகளின் மேய்ச்சலுக்காக, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எழுமலைக்கு வடக்கே வாசிமலை அடிவாரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்.
அவரிடம் ஆடு வளர்ப்புக் குறித்து விசாரித்தோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது:
“எங்க பரம்பரைத் தொழிலே ஆடு வளர்ப்பு தான். எங்க தாத்தா கருப்பணக் கோனார், எங்க அப்பா இராமுக் கோனாருக்குப் பிறகு இப்போ நானு இந்த ஆடு வளர்ப்புல ஈடுபட்டுருக்கேன்.
என் மனைவியும் பிள்ளைகளும் ஆதரவு குடுக்குறதுனால தான் என்னால இந்தத் தொழில நல்ல முறையில செய்ய முடியுது. ஒரே எடத்துல தங்கியிருக்க மாட்டோம். ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல் இருக்கும் எடங்களுக்கு மாறி மாறிப் போயிக்கிட்டே இருப்போம்.
ஆடு வளர்ப்புல இருக்குறவங்களுக்கு ஓய்வே இருக்காது. பகல் நேரத்துல மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போகணும். இராத்திரிக்குக் கிடைக்குப் போகணும். எந்நேரமும் ஆடுகளோட தான் இருக்கணும்.
ஏதாவது விசேசம்ங்கிற கட்டாயம் இருந்தாத் தான் சொந்த ஊருக்குப் போக முடியும். அதுவும் குடும்பத்தோட எல்லாரும் போக முடியாது. யாராவது ஒருத்தர் தான் போக முடியும். அந்த அளவுக்கு ஆடுகளோட நாமளும் ஒரு ஆடு மாதிரி கிடக்கணும்.
ஆறு மாசம் தான் சினைக்காலம்ன்னு சொன்னாலும் செம்மறியாடு வருஷத்துக்கு ஒரு குட்டிதான் போடும். ஆறு மாசத்துக்குச் சும்மா தான் இருக்கும். வெள்ளாடுகள விட செம்மறியாடுகள நோய்கள் அதிகமா தாக்கும். அதனால, ரொம்பவும் கவனமா இருக்கணும். எங்க மந்தையில 200 ஆடுக இருக்கு. போன வருஷத்துல காணை வந்து நெறைய குட்டிக சேதாரமாகிப் போச்சு. ஒரு எழுபது குட்டிக தான் தேறிச்சு.
செம்மறியாடுகளுக்கு வருஷத்துல ரெண்டு தடவை குடல் பூச்சி மருந்து குடுப்போம். பங்குனி சித்திரையில கோடை மழை பேஞ்சதும் தழைக்கக் கூடிய இளம்புல்லை மேயும் ஆடுகள் ஆந்த்ராக்ஸ் நோய்த் தாக்கம் வந்து திடீர்ன்னு துள்ளி விழுந்து செத்துப் போகும்.
இந்த நோயிலிருந்து ஆடுகள காப்பாத்த, இளம்புல் மேய்ச்சல் விழுகும் சமயத்துல ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடுவோம். அதேபோல, காணை நோயிலிருந்து காப்பாத்த, புரட்டாசி மாசத்துல காணைத் தடுப்பூசி போடுவோம்.
கண்ணுக்குக் கண்ணா பொன்னுக்குப் பொன்னா எங்க வீட்டுப் புள்ளைக மாதிரி இந்த ஆடுகள நாங்க வளர்க்குறோம். அதனால, இந்த ஆடுக எங்கள வாழ வைக்குது. விவசாயிகளோட நெலத்துல கிடை அமர்த்துறதுல கிடைக்கக் கூடிய பணத்த வச்சு எங்க அன்றாடச் செலவுகள சமாளிக்கிறோம்.
பெட்டைக் குட்டிகள இன விருத்திக்கு வச்சுக்கிட்டு, கிடாக் குட்டிகள நல்லா வளர்த்து வித்து, குடும்பத்துக்குத் தேவையான மற்ற செலவுகள சமாளிக்கிறோம்.
மழையின்னும் இல்லாம, வெயிலுன்னும் இல்லாம, இராவு பகலுன்னும் பார்க்காம, எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத எடங்கள்ல தங்கியிருந்து நாடோடிகளா பொழப்பை நடத்திக்கிட்டு இந்த ஆடுகள வளர்க்குறோம். அதுக்குக் கைம்மாறா, எங்க உழைப்புக்குப் பங்கமில்லாம, இந்த வாயில்லா ஜீவன்கள் நல்ல பலனைக் குடுத்து எங்கள வாழ வைக்குது’’ என்றார்.
எழுமலை கு.சுப்பிரமணியம்