மன அமைதியைத் தருகிறது விவசாயம்!

விவசாயம் DSC00307 scaled

உணர்ந்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018

மிழகத்தின் முன்னாள் அமைச்சர்; தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் அமைவதற்குக் காரணமாக இருந்தவர்; தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்; மனதில் நியாயம் என்று படுவதை ஒளிவு மறைவின்றிச் சொல்லும் தகைமையாளர் என, பல பெருமைகளுக்கு உரிமையானவர் கு.ப.கிருஷ்ணன். அவரிடம், பச்சை பூமி இதழின் இந்த மாத வி.ஐ.பி. விவசாயம் பகுதிக்காகப் பேசினோம். எனது பண்ணைக்கு வாங்களேன் என்று அழைத்தார். அதைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள அவரது விவசாயப் பண்ணைக்குச் சென்றோம்.

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 கி.மீ. தொலைவில்  விராலிமலைக்கு அருகே அமைந்திருந்தது அவரது பண்ணை. பண்ணைக்குச் சென்றதும் நம்மை வரவேற்ற அவர், தொடர்ந்து பண்ணையைச் சுற்றிக் காட்டினார். முதலில் நாம் பார்த்தது மாடுகள் தான். கருப்பு – வெள்ளை, காங்கேயம், சிந்து, காளை மாடுகள், ஜல்லிக்கட்டு மாடு என ஒவ்வொன்றையும் நமக்கு விளக்கிக்கொண்டே வந்தவர், தொடர்ந்து அவர் பயிரிட்டுள்ள தக்காளி, மிளகாய், மல்லி, தென்னை என எல்லாவற்றையும் சுற்றிக் காட்டினார்.

அப்போது அவருடைய பண்ணையைச் சுற்றி எல்லா நிலங்களும் வறட்சியில் தரிசாய்க் கிடக்க, இவரது பண்ணை மட்டும் பசுமையாய் இருந்தது. ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாய பூமியாக மாற்றியிருந்ததைக் கவனித்தோம்; வியப்பாக இருந்தது. தொடர்ந்து, பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

“எங்கள் முன்னோர் காலத்திலிருந்தே விவசாயம் தான் செய்து வருகிறோம். நெல், கரும்பு, வாழை, இஞ்சி முதலியவற்ரைப் பயிர் செய்வோம். அதனால், எனக்கும் விவசாயத்தில் நீங்காத ஈடுபாடு. நான் இந்தப் பகுதியில் விளையும் பொருள்களை மட்டுமல்லாமல், மற்ற பகுதிகளில் விளையும் பயிர்களையும் விளைவிக்க முயற்சி செய்து வருகிறேன். இங்கு, இஞ்சியைப் பயிர் செய்ய முடியாது. ஆனால், நான் பசுமைக்குடில் அமைத்து இஞ்சியைப் பயிர் செய்தேன். நல்ல விளைச்சலும் கிடைத்தது.

விவசாயத்தைப் பொறுத்தவரை இலாபம் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு, ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய சராசரியாக 25,000 ரூபாய் செலவாகும். பயிரிட்ட மூன்று மாதத்தில் ஏக்கருக்குச் சுமார் 30 மூட்டை நெல் கிடைக்கும். ஒரு மூட்டை நெல் சுமார் 1,000 ரூபாய் என்றால் 30 மூட்டைக்கு 30,000 ரூபாய். அதுபோக, வைக்கோலில் 6,000 ரூபாய் வரை கிடைக்கும். மொத்தத்தில் 3 மாதத்தில் 36,000 ரூபாய் கிடைக்கிறது. நாம் செலவு செய்தது போக, 11,000 ரூபாய் இலாபம் கிடைக்கிறது. ஆனால், இந்த 25,000 ரூபாயை எந்த வங்கியில் போட்டாலும் 3 மாதத்தில் 11,000 ரூபாய் இலாபம் கிடைக்காது. எனவே, என்னைப் பொறுத்தவரை விவசாயத்தில் இலாபம் தான்’’ என்றார்.

விவசாயம் HEADING PIC Copy 1

அதைத் தொடர்ந்து பசுமைக்குடில் தக்காளி சாகுபடியைப் பார்த்தபோது, மிகவும் வித்தியாசமாக இருந்தது. நாட்டுத் தக்காளிச் செடிகள் நிறையக் காய்களுடன் ஆளுயரம் வளர்ந்திருந்தன. அந்தச் செடிகளைக் கீழேயே விட்டு விடாமல் பந்தல் மேலே தூக்கிக் கட்டியிருந்தார். “இதனால் தக்காளிப் பூக்கள், காய்கள், பழங்கள் மண்ணில் கிடந்து அழுகிப் போவது தவிர்க்கப்படும். அதிக மகசூல் கிடைக்கும். தற்போது இதைச் சோதனை முறையில் செய்து கொண்டிருக்கிறேன். நல்ல பலன் கிடைத்திருக்கிறது. எனவே, இந்தச் சாகுபடி முறையை அதிகப்படுத்தப் போகிறேன்’’ என்றார்.

தக்காளிச் செடிகள் வாடியிருப்பதைப் பார்த்த அவர், அங்கிருந்த வேலையாட்களிடம், “ஏன் தக்காளிக்குத் தண்ணீர் விடவில்லை?’’ என்று கேட்டார். அவர்கள், “மின்சாரம் இல்லாததால் தண்ணீர் விட முடியவில்லை’’ என்று கூற, உடனே பணத்தைக் கொடுத்து, டீசலை வாங்கி வந்து ஊற்றித் தண்ணீர் விடுமாறு கூறினார். “பாசனத்துக்காகத் தினமும் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா?’’ என்ற நமது கேள்விக்கு, “வாடிக் கொண்டிருக்கும் பயிரைக் காப்பாற்ற வேண்டுமே? வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அதைப்போல நான் வளர்க்கும் பயிர்கள் வாடுவதைப் பார்க்க முடியவில்லை. எனக்கு மகிழ்ச்சியையும், மன அமைதியையும் இந்தப் பயிர்களும், விவசாயமும் தான் தருகின்றன’’ என்றார். 

தொடர்ந்து, “பக்கத்து மாநிலமான தெலுங்கானாவில் 24 மணி நேரமும் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரத்தை இலவசமாகத் தருகிறார்கள். ஆனால் இங்கே மூன்று நான்கு மணி நேரமே கொடுக்கிறார்கள். விவசாயத்துக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலை நாடுகளில் எல்லாத் தொழில்களுக்கும் தரும் முக்கியத்துவத்தை விவசாயத்துக்கும் தருகிறார்கள். ஆனால், நமது நாட்டில் அப்படி இல்லை. பிரதமரும், முதல்வரும் தொழில் தொடங்க வாருங்கள் என்று தான் அழைக்கிறார்களே தவிர, விவசாயத்துக்காக எதையும் செய்வதில்லை. கேட்டால் மானியம் தருகிறோமே என்பார்கள். எந்த ஒரு மானியத்தாலும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாது. மாறாக, அரசு, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலையை, அதாவது, கட்டுபடியான விலையைக் கொடுத்தால் போதும்.

நான் அமைச்சராக இருந்தபோது வெளிநாட்டிலிருந்து ஒரு குழுவினர், நாம் எப்படி விவசாயம் செய்கிறோம் என்பதை அறிவதற்காக வந்தனர். எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து விட்டு என்னிடம் வந்து பேசினார்கள். அப்போது அவர்கள் என்னிடம், “நீங்கள் எல்லோரும் நல்ல விவசாயிகள். ஆனால் நல்ல வியாபாரிகள் இல்லை” என்றார்கள்.

அமெரிக்காவில் ஆப்பிள் விளைகிறது. ஹிமாச்சலத்திலும் ஆப்பிள் விளைகிறது. அந்த ஆப்பிள் பழங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. ஆனால், நாம் விளைவிக்கும் வாழை, சப்போட்டா முதலிய பழங்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. நம் பொருள்களைச் சந்தைப்படுத்த அரசு எதையும் செய்யவில்லை.

மேலும், நம் நாட்டில் தான் நில வரைமுறைச் சட்டம் உள்ளது. மேலை நாடுகளில் அப்படியெல்லாம் இல்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்துப் பெரியளவில் விவசாயம் செய்வார்கள். அதிக விளைச்சலுக்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவார்கள். அதைப்போல நமது அரசும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் அமைச்சராக இருந்தபோது பல போராட்டங்களுக்கு மத்தியில் திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தைக் கொண்டு வந்தேன். நம் வாழ்வாதாரத்தையும், தரத்தையும் மற்றவர்களுக்கு நிகராக உயர்த்த முடியாது என்று தெரிந்தே, விவசாயத்தைச் செய்கிறான் விவசாயி. எந்தவொரு அறிவியல் நுட்பத்தாலும், கணிப்பொறியாலும், விவசாயிகள் விளைவிக்கும் உணவுப் பொருள்களைத் தர முடியாது. விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றும் காலம் விரைவில் வரும்’’ என்று பேசியபடியே பண்ணையில் இருந்த ஓய்வறைக்கு வந்தார்.

விவசாயம் DSC00294 scaled

அங்கே வேக வைத்த சூடான நிலக்கடலை வர, அதைச் சாப்பிட்டுக் கொண்டே, விவசாயம் தொடர்பான நமது கேள்விகளுக்கு ஆர்வமுடன் பதிலளித்தார்.

(குறிப்பு: இது 2018 ஆம் ஆண்டில் எடுத்த பேட்டி)

ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றுமா?

மத்திய அரசு நிறைவேற்றும் என்னும் நம்பிக்கையோடு தான் நாம் இருக்க வேண்டும். தீர்ப்பு வழங்கியிருப்பது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றம் தான் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அங்கு தான் நாம் தற்போது நூறாண்டுக்காலப் போராட்டத்தைக் கொண்டு போய் வைத்திருக்கிறோம்.  

ஏற்கெனவே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. தமிழ்நாடு அரசு மாண்புமிகு அம்மாவின் காலத்திலேயே உச்சநீதிமன்றம் வரையில் சென்று போராடினார். ஆனால், அவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே இல்லை. தற்போது இறுதித் தீர்ப்பில் ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார்கள். அப்படி அமைக்கவில்லை என்று சொன்னால், உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.

ஒருவேளை மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால், அந்த நீதியரசர்கள் தங்களுடைய பதவியை இராஜினாமா செய்தாவது இந்த மத்திய அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.

ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டும் நிலையிலும் கூட, நமது நாட்டில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாகச் சென்று கடலில் கலக்கும் சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் இதுவரைக்கும் வந்ததில்லை. ஆனால், ஒரே தேசியக்கொடி, ஒரே தேசிய கீதத்தைக் கொண்ட நம் நாட்டுக்குள் இருக்கும் மாநிலங்கள், குறிப்பாகக் கர்நாடக, கேரள மாநிலங்கள் நீர் விஷயத்தில் தமிழ்நாட்டுடன் இவ்வளவு கடுமையும், பகைமையும் பாராட்டுகின்றனவே?

கர்நாடக மக்களும், தமிழக மக்களும் பகைமை உணர்வைப் பாராட்டவில்லை. அப்படிக் காட்டும் அளவில் திசை திருப்புவது அரசியல் கட்சிகள் மட்டுமே. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி.யானாலும் சரி, காங்கிரசானாலும் சரி. தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது. ஆனால், கர்நாடகத்தில் மாறிமாறி வருவதற்கான சூழல்கள் உள்ளன. தற்போதும் ஆட்சிக்காகத் தான் அவர்கள், காவிரியைப் பிரச்னையாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே இந்தியா என்று மத்திய அரசு உண்மையிலேயே நினைக்குமானால், உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதோடு, காவிரிநீர் பங்கீட்டு வாரியத்தையும் அமைக்க வேண்டும்.

எல்லோரும் தங்களுக்கு வேண்டிய நீதி நியாயத்தைத் தேடிப் போகக்கூடிய கடைசி இடம் உச்ச நீதிமன்றம். அந்த மன்றத்தின் ஆணைக்குக்கூட கர்நாடகம் கட்டுப்பட மறுக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசும் மௌனம் சாதிக்கிறது. இதே நிலை நீடித்தால் பிரிவினைவாதம் தானே தலைதூக்கும்?

தாக்குண்ட புழுகூடத் திரும்பிப் பார்க்கும். இரண்டு மாநிலங்களில் ஒரு மாநிலத்திற்கு வெண்ணெய்யையும், ஒரு மாநிலத்திற்கு சுண்ணாம்பையும் மத்திய அரசு வைக்குமேயானால் நீண்ட நாட்களுக்கு இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் ஒற்றுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

எதிர்காலத்தில் காவிரிப்படுகை பாலைவனமாகி விடுமோ என்னும் அச்சம் இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருக்கிறது. அப்படி ஒரு சூழல் உருவானால் அதிலிருந்து தங்களை மீட்டெடுத்துக் கொள்ள அந்தப் பகுதி விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?

ஆண்டுக்காண்டு பருவமழை குறைந்து வருகிறது. அது கர்நாடகம் என்றாலும் சரி, தமிழகம் என்றாலும் சரி. நீர் மேலாண்மைக்கு முதலிடம் கொடுத்து நாம் சாகுபடி செய்ய வேண்டும். மண்வளத்தை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். நிறைய நீரைச் செலவு செய்து நெல்லை எடுப்பதை விட, இருக்கும் நீரைப் பயன்படுத்தி பிற பயிர்களைச்  சாகுபடி செய்ய முன் வர வேண்டும். தோட்டக்கலைப் பயிர்களுக்கு வர வேண்டும். காய்கறிப் பயிர்களைத் தரத்துடன் விளைவித்து, மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். நமது ஏற்றுமதி மிகவும் குறைவாக உள்ளது. நமது அரசு ஒவ்வொரு நாட்டிலும் தூதரகங்களை வைத்திருப்பதைப் போல, வேளாண் விளைபொருள்களுக்கான சந்தைகளையும் உருவாக்க வேண்டும்.

விவசாயம் DSC00326 scaled

இதை நாம் சொன்னால், அப்பேடா இருக்கிறதே என்பார்கள். ஆனால், அந்த அப்பேடா எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறது, எவ்வளவு பொருள்களை விற்பனை செய்திருக்கிறது என்று பார்த்தால், அவர்கள் பணி மிகவும் குறைவு தான்.

விளைச்சல் அதிகமாக இருக்கும் காலங்களில் கடுமையான விலைச்சரிவு ஏற்படுகிறது. குறிப்பாக, பழங்கள், காய்கறிகள் இந்த நிலைக்குத் தள்ளப் படுகின்றன. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். விலை நிலவரம் சீராக இருக்க என்ன செய்யலாம்?

அறுவடைக்குப் பின் நேர்த்தி என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதைப்போலச் சந்தைக்கு கொண்டு செல்லும் முன், அந்தப் பொருள்களைப் பக்குவமாக அனுப்புவதிலும் (பேக்கிங்) கவனம் செலுத்த வேண்டும். மேலும், விளைநிலத்திலேயே தரம் பிரித்து அனுப்ப வேண்டும். எல்லாப் பொருள்களுக்கும் உரிய விலை கிடைக்க வேண்டும் என்றால் அரசாங்கமே கொள்முதல் செய்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

விவசாயம் என்பதே நஷ்டமான தொழில் தான் என்றாகிவிட்ட நிலையில், அனுபவம் பெற்ற விவசாயியாக, தமிழக விவசாயிகளுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை என்ன?

நஷ்டம் என்று தெரிந்தும் செய்யக்கூடிய ஒரே தொழில் விவசாயம் தான். அதற்கு என்ன காரணம், விவசாயிகளிடம் இருக்கும் நிலம் தான். நமது அரசும், மக்களும் சற்றுக் கவனித்துப் பார்க்கவில்லையென்று சொன்னால், இந்தத் தலைமுறையோடு நமது விவசாயம் அழிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயம் செய்யப்படும்.

தமிழக வேளாண்மைத் துறையின் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். விவசாயமும் செய்து வருகிறீர்கள். உணவு உற்பத்திப் பெருகவும், விவசாயிகள் பொருளாதார அடிப்படையில் முன்னேறவும், நமது வேளாண்மைத் துறை என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

வேளாண்மைத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் வேலையைச் செய்கிறார்கள். இதைச் செய்வதற்கு இந்தத் துறை தேவையே இல்லை. மீண்டும் நான் விவசாய அமைச்சரானால் இந்தத் துறையையே இழுத்து மூடி விடுவேன். ஏனென்றால், இந்தத் துறை தொடங்கப்பட்டதே விவரமறியாத விவசாயிகளுக்குத் தொழில் நுட்பங்களைச் சொல்லிக் கொடுப்பதற்காகத் தான். ஆனால், இங்கு வெறும் கணக்கை மட்டும் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வேளாண் இயக்குநர், கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர்களில் எத்தனை பேர் களத்துக்கு, விவசாய நிலத்துக்கு வந்திருக்கிறார்கள்? இந்தத் துறையில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு மிகப்பெரிய நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாட்டில் சூரியனே இருக்காது, ஒரு நாட்டில் சூரியன் கொளுத்தும், ஒரு நாட்டில் மழையே இருக்காது, ஒரு நாட்டில் பெய்து கெடுக்கும். ஆனால், 12 மணி நேரம் சரியாக வெய்யில் அடிக்கக்கூடிய நாடு நம் இந்திய நாடு மட்டுமே. இதை வைத்துக் கூட நாம் முன்னேறவில்லை என்று சொன்னால், நம்மை ஆள்பவர்கள் சரியில்லை. நமக்கு வாய்த்த அதிகாரிகள் சரியில்லை.

இத்தாலிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் கடல்நீரைக் குடிநீராக்குவேன் என்கிறாரே சுப்பிரமணியன் சுவாமி. இது சாத்தியமா? அப்படியெனில் அந்த நீரையே விவசாயத்திற்கும் பயன்படுத்தலாமே?

விவசாயம் DSC00336 scaled

சுப்பிரமணியன் சுமாவி இந்திய நாட்டுக்கே ஒரு ஜோக்கர். தமிழ்நாட்டில் சென்னை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் நாம் எத்தனை பேருக்கு நீரைக் கொடுத்துள்ளோம்? மழைநீரைச் சேமிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? தமிழ்நாட்டில் அணைகளைக் கட்டவில்லை என்று சொல்கிறார்கள். இது சமதளப்பகுதி. இங்கு அணைகளைக் கட்ட முடியாது. இங்குப் படுக்கை அணையும், தடுப்பணையும் தான் கட்ட முடியும். கிளைக் கால்வாய்களை வெட்ட வேண்டும். ஏரிகளைத் தூர்வார வேண்டும். நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டும். அதுதான் நமக்கிருக்கும் ஒரே வழி.

ஆற்று மணல் கொள்ளை போவதாலேயே நிலத்தடி நீர் இல்லாமல் போகிறது என்று தெரிந்தும், அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

வெளிப்படையாகவே சொல்கிறேன். இந்த நிலத்தடி நீர் குறைந்து போனதற்கு அதுவே காரணம். அது மிகப்பெரிய பாதகம். எவர் அடித்திருந்தாலும், எந்த ஆட்சி செய்திருந்தாலும் மிகப்பெரிய பாதகத்தையே, இந்த மண்ணுக்கும் நாட்டுக்கும் வழங்கியிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

ஒரு பக்கம் விவசாயம் நலிவடைந்த தொழில் என்று சொல்லிக் கொண்டிருக்க, மறுபக்கம் மாதம் இரண்டு இலட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் விவசாயத்தை நோக்கி வருகின்றனர்.  ஏன் இந்த முரண்பாடு?

நல்ல கேள்வி. அந்தத் துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் வார இறுதியில் மன அமைதியைத் தேடிச் செல்கிறார்கள். இந்த அமைதி வேளாண்மையில் மட்டும் தான் கிடைக்கும். உண்ண உணவும், உடுக்க உடையும் போதும் என்றார் ஔவ்வையார். எத்தனையோ புதிய புதிய படைப்பையெல்லாம் கொடுக்கிறார்கள். ஒரு கணிப்பொறியால் நெல் மணியைக் கொடுக்க முடியுமா? விவசாயத்தால் மட்டுமே கொடுக்க முடியும்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி, இந்தியாவைச் சுற்றிப் பார்த்து விட்டு ஒரு நூலை எழுதினான். அதன் இறுதிப் பகுதியில், இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி ஓயாமல் ஒலிக்கும் கடல் அலைகள் என்னைக் கவரவில்லை, உயர்ந்த மலைகள் என்னைக் கவரவில்லை. வளைந்து நெளிந்து ஓடும் அறுகள் என்னைக் கவரவில்லை. உச்சி வெய்யிலில் இரண்டு மாடுகளைக் கட்டி, அரை நிர்வாணத்துடன் உழுது கொண்டிருந்த விவசாயி தான் என்னைக் கவர்ந்தவன் என்று எழுதினான். திரும்பவும் சொல்கிறேன், எந்தத் தொழிற்சாலையாலும், எந்தத் தொழிலாலும், உணவைத் தர முடியாது. அதை விவசாயியால் மட்டுமே தர முடியும்’’ என்றார்.


மு.உமாபதி

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!