கோழிகளைத் தாக்கும் அக ஒட்டுண்ணிகள்!

ஒட்டுண்ணிகள் HEADING PIC 10 e1613825209769

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019

புறக்கடையில் நிகழ்ந்து வந்த கோழி வளர்ப்பு, இப்போது வணிக நோக்கில் தொழில் நுட்பம் நிறைந்த தொழிலாக மாறியுள்ளது. போதிய இடமில்லாமல், சரியான உத்திகளைப் பயன்படுத்தாமல், திறந்த வெளியில் வளர்க்கப்படும் கோழிகள், நச்சுயிரி, நுண்ணுயிரி, பூஞ்சைக் காளான், ஒட்டுண்ணி போன்றவற்றின் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும். இதனால், அதிக இறப்பு, மருத்துவச் செலவு, உற்பத்தித் திறன் குறைவு போன்றவை ஏற்பட்டுப் பண்ணை நலிவடையும். ஆகவே, அக, புற ஒட்டுண்ணிகள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

அக ஒட்டுண்ணிகள்

கோழிகளை, தட்டைப் புழுக்கள், நாடாப் புழுக்கள், உருளைப் புழுக்கள், ஓரணு ஒட்டுண்ணிகள் மிகுதியாகத் தாக்கும். இவை, கோழிகளின் வயிற்றிலும் குடலிலும் காணப்படும்.

பரவும் முறை

பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம் வழியாக, புழு முட்டைகள் மற்றும் முட்டைகளைக் கொண்ட துண்டுப் பகுதிகள் வெளியேறும். இந்த முட்டைகள்  தீவனத்தில், குடிநீரில் விழும் போது அல்லது எச்சத்தைக் கிளறி உண்ணும் போது, ஒட்டுண்ணிப் பாதிப்புக்குக் கோழிகள் உள்ளாகும். மேலும் இவற்றை, ஓடற்ற நத்தை, எறும்பு, சாணி வண்டு, வீட்டு ஈ, மண்புழு போன்ற இடைநிலை உயிரிகள் உண்ணும்போது அவற்றின் வயிற்றில் இந்தப் புழுக்களின் இளம்பருவ நிலைகள் உண்டாகும். இந்த உயிரிகளை உண்ணும் கோழிகள் பல்வேறு புழுக்களின் பாதிப்புக்கு உள்ளாகும்.

ஏற்படும் பாதிப்புகள்

கோழிகளின் உணவுப் பாதையில் வாழும் நாடாப்புழு, உருண்டைப்புழு, ஓரணு ஒட்டுண்ணி போன்றவை, கோழிகளுக்கு வேண்டிய சத்துகளைச் சேர விடாமல் தடுத்தும், இரத்தத்தை உறிஞ்சியும், குடற்பகுதியை அடைத்தும், அரித்தும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உண்ண முடியாமை, உடல் வளர்ச்சியும் எடையும் குறைதல், இரத்தச்சோகை, பருவமடைவதில் தாமதம், உற்பத்திக் குறைதல், தீவன மாற்றுத்திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் உண்டாகிப் பொருளாதார இழப்பு ஏற்படும்.

தட்டைப் புழுக்கள்

புரோஸ்தோகோனிமஸ் இனத் தட்டைப் புழுக்கள் சினைமுட்டைக் குழாயில் ஒவ்வாமையை ஏற்படுத்துவதால், கோழிகள் தோல் முட்டை அல்லது ஓடற்ற முட்டைகளை இடும். இதனால், முட்டை உற்பத்தி வெகுவாகக் குறையும்.

நாடாப் புழுக்கள்

நாடாப் புழுக்கள் கோழிகளில் இரத்தப்போக்கு, குடல் ஒவ்வாமை, திசு அழிவு போன்றவற்றை ஏற்படுத்தும். ரெய்லிடீனோ எகைனோபாத்ரிடியா நாடாப் புழுக்கள், கோழிகளின் சிறுகுடலில் சிறு கட்டிகளை ஏற்படுத்தும். அதிகளவில் பாதிக்கப்பட்ட கோழிகளின் குடலில் நாடாப் புழுக்கள் நிறைய இருக்கும். இவை, உடல் வளர்ச்சியின்மை மற்றும் மெலிதல், முட்டை உற்பத்திக் குறைதல் போன்றவற்றையும், குடலில் அடைப்பை ஏற்படுத்தி இறப்பையும் உண்டாக்கும்.

உருண்டைப் புழுக்கள்

செரிமான வயிறு, கடுந்தசை, இரைப்பை, கண், மூச்சுக்குழாய் ஆகியவற்றில் உருண்டைப் புழுக்கள் இருக்கும். இவற்றால் பாதிக்கப்படும் கோழிகளில் இரத்தப்போக்கு, குடல் ஒவ்வாமை, இரத்தச்சோகை, கழிச்சல் மற்றும் வலுக்குறைவு காணப்படும். அதிகளவில் அஸ்காரிடியா கால்லி உருண்டைப் புழுக்கள் குடலில் இருந்தால், இரத்தப்புள்ளிக் குடல் ஒவ்வாமையுடன், முன் பெருங்குடல் தசை தடித்தும் இருக்கும். முட்டை உற்பத்தி குறையும். மேலும், குடல் அடைப்பால் இறப்பும் ஏற்படும்.

ஓரணு ஒட்டுண்ணி

ஐமீரியா வகை ஒட்டுண்ணிகள் குடலில் பாதிப்பை ஏற்படுத்தி இரத்தக் கழிச்சல் நோயை உண்டாக்கும். 

கட்டுப்படுத்தும் முறைகள்

தட்டைப் புழுக்கள்: தட்டைப் புழுக்களைப் பரப்பும் தும்பிகள் மற்றும் அவற்றின் இளநிலைகளைக் கோழிகள் உண்ணாமல் தடுக்க வேண்டும்.

சிகிச்சை: தட்டைப்புழு நீக்க மருந்தைக் கொடுக்கலாம். ஒரு மூட்டைத் தீவனத்துக்கு 400 கிராம் வீதம் காய்ந்த நில வேம்பூவைக் கலந்து, இரு மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது ஒரு நாளைக்குக் கோழிகளுக்குக் கொடுக்கலாம்.

நாடாப் புழுக்கள்: நாடாப் புழுக்களைப் பரப்பும் சாண வண்டுகள், எறும்புகள், ஈக்கள், மண்புழுக்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சைரோமைசின் மருந்தைத் தெளித்து வீட்டு ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். கோழியெச்சத்தைத் தொலைவில் குவியலாகக் கொட்டி வைக்க வேண்டும். பண்ணைகளின் காலியிடத்தை நன்கு காய வைப்பதன் மூலம் மண்புழுவைத் தடுக்கலாம். பி.எச்.சி. மற்றும் எச்.சி.எச். மருந்தைத் தெளிக்கலாம்.

சிகிச்சை: நாடாப்புழு நீக்க மருந்தைக் கொடுக்கலாம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ஒரு கோழிக்கு அரைக் கொட்டைப்பாக்குப் பொடி வீதம் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். ஒரு கிலோ தீவனத்துக்கு 75 மி.கி. நிக்லோசமைடு மருந்து அல்லது ஒரு கொட்டைப்பாக்குப் பொடி வீதம் கலந்தும் கொடுக்கலாம். அல்லது ஒரு கிலோ தீவனத்துக்கு 5 மி.கி. வீதம் பென்பென்டஸோல் என்னும் மருந்தைக் கலந்து கொடுக்கலாம். அல்லது  ஒரு கிலோ தீவனத்துக்கு 15 மி.கி. பிராசிக்குவின்டால் மருந்து வீதம் கலந்தும் கொடுக்கலாம்.

உருளைப் புழுக்கள்: குஞ்சுகளை வளர்ந்த கோழிகளிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும். தீவனம், குடிநீர்க் கலன்கள் சுத்தமாக இருக்க வேண்டும். கோழியெச்சத்தை உடனே அகற்ற வேண்டும். ஹெடிராகிஸ் காலினோரம் என்னும் உருளைப் புழுக்களைத் தடுக்க, ஈரமில்லா இடத்தில் கோழிகளை வளர்க்க வேண்டும். கோழிகளையும் வான்கோழிகளையும் சேர்த்து வளர்க்கக் கூடாது.

சிகிச்சை: உருளைப்புழு நீக்க மருந்துகளைக் கொடுக்கலாம். ஒரு மூட்டைத் தீவனத்துக்கு 400 கிராம் வீதம் காய்ந்த நில வேம்பூவைக் கலந்து, இரு மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது, ஒரு நாளைக்குக் கொடுக்கலாம். ஒரு கிலோ தீவனத்துக்கு 300-400 மி.கி. வீதம் பைப்ரசின் அடிப்பேட் மருந்தைக் கலந்து கொடுக்கலாம். அல்லது ஒரு கிலோ தீவனத்துக்கு 0.01% மே பெண்டஸோல் அல்லது பென்பெண்டஸோல் மருந்து வீதம் கலந்து, 1-2 வாரத்துக்குப் பயன்படுத்தலாம். 

ஓரணு ஒட்டுண்ணி: ஓரணு வகை ஒட்டுண்ணியால் இரத்தக் கழிச்சல் நோய் ஏற்படும். இது கோழிகளில் பரவலாகக் காணப்படும் முக்கிய நோயாகும். ஐமீரியா டெனல்லா மற்றும் ஐமீரியா நிகாடிரிக்ஸ் என்னும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. இரத்தக் கழிச்சலுக்கு உள்ளான கோழிகள் சோர்வாக இருக்கும்; இறக்கைகள் பக்கவாட்டில் தொங்கும்; இரத்தக் கழிச்சல் இருக்கும்; கொண்டை வெளுத்துக் காணப்படும். குடலில் உணவுப் பொருள்கள் இரத்தத்துடன் கலந்திருக்கும். இதைத் தடுக்க, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் சுப்பர் காக்ஸ் மருந்தையும், ஒரு டன் தீவனத்தில் 500 கிராம் டாட் மருந்தையும் கலந்து கொடுக்கலாம்.

எச்சத்தை அகற்றுவதன் நோக்கம்

கோழியெச்சத்தில் தான் ஈக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த ஈக்கள் கோழி முட்டைகளின் மேல் எச்சத்தை இட்டுக் கருநிறத் திட்டுகளை ஏற்படுத்துவதால் முட்டைகளின் தரம் வெகுவாகக் குறைகிறது. மேலும், பல்வேறு புழுக்கள் கோழிகளில் பரவக் காரணமாகவும் உள்ளன. எனவே, கோழிப் பண்ணையில் சேரும் எச்சத்தைத் தினமும் அகற்றுவது மிகவும் அவசியம். அல்லது  ஈக்கொல்லி மருந்தை எச்சத்தில் தெளிக்க வேண்டும். கோழித் தீவனத்தில் ஈக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சைரோமைசின் மருந்தையும் கொடுக்கலாம். ஆழ்கூள முறையிலான பண்ணைகளில் ஈக்களைத் தவிர்க்க, எச்சத்தில் நீர் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு நீர்த்தொட்டிகளைத் தரையை விட்டு உயரத்தில் வைக்க வேண்டும்.

பொதுவான தடுப்பு முறைகள் 

வயதான மற்றும் இளங் கோழிகளைத் தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும். தீவன மற்றும் நீர்த்தொட்டிகள் சுத்தமாக இருக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி, குடற்புழு நீக்க மருந்துகளைச் சரியான அளவில் கோழிகளுக்கு அளிக்க வேண்டும். பண்ணையைச் சுகாதாரமாகப் பராமரித்தால் இடைநிலை உயிரிகளை நீக்கலாம்.

குடற்புழு நீக்க மருந்தளித்தல்

கோழிகளுக்குக் காலையில் வழக்கம் போல நீரைக் கொடுக்காமல் 3-4 மணிநேரம் தாமதித்து நண்பகலில் மருந்து கலந்த நீரை மட்டும் குறைந்தளவில் வைக்க வேண்டும். இதனால் மருந்து கலந்த நீர் முழுவதையும் ஒரே நேரத்தில் கோழிகள் குடித்து விடும். 8 மற்றும் 16ஆம் வாரத்தில் இம்மருந்தைக் கொடுக்க வேண்டும். பிறகு, ஆழ்கூள முறையில் வளரும் கோழிகளுக்கு மாதம் ஒருமுறையும், கூண்டு முறையில் வளரும் கோழிகளுக்கு 45 நாட்களுக்கு ஒருமுறையும் குடற்புழு நீக்க மருந்தைத் தர வேண்டும். புறக்கடைக் கோழிகளுக்கு மாதம் ஒருமுறை வயிற்றுப்புழு நீக்க மருந்தைத் தர வேண்டும்.

100 கிராம் லிவாமிசொல் மருந்தை 1,000 கோழிகளுக்குக் கொடுக்கலாம். அல்லது 500 மில்லி டியுமாசிட் மருந்தை 100 கோழிகளுக்குக் கொடுக்கலாம். அல்லது 10 கிராம் நில்டிவர்ம் மருந்தை 4 லிட்டர் நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆல்டிபனிடசால். பிராசிகுயின்டால் போன்ற மருந்துகளை 6 மாதம் வரை மாதம் ஒருமுறையும், 6 மாதங்களுக்கு மேல் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் நீரில் கலந்து கொடுத்தால், குஞ்சுகளின் இறப்பைத் தடுப்பதுடன், கோழிகளின் எடையையும் கூட்டலாம்.

ஒரே மருந்தைத் தொடர்ந்து கொடுக்காமல் பல மருந்துகளை மாற்றி மாற்றிக் கொடுத்தால், இம்மருந்துகளுக்கு எதிரான தடுப்புச் சக்தியைப் புழுக்கள் பெற விடாமல் தடுக்கலாம்.

நன்மைகள்

சரியான காலங்களில் குடற்புழு நீக்கம் செய்வதால் கோழிகள் நலமாக இருக்கும். வளர்ச்சித்திறன் கூடும். உடல் எடையும், முட்டை உற்பத்தியும் கூடும். நோயெதிர்ப்புத் திறன் மிகும். எனவே, பண்ணையாளர்கள் கோழிகளைத் தாக்கும் அக ஒட்டுண்ணிகளைத் தடுக்கும் முறைகளைக் கையாண்டு, கூடுதல் இலாபம் பெற வேண்டும்.


ஒட்டுண்ணிகள் Dr. K.PREMAVALLI e1629361785551

முனைவர் .பிரேமவல்லி,

ச.பிரகாஷ், ச.த.செல்வன், கால்நடை முதுகலை ஆராய்ச்சி நிலையம், 

காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!