இளைஞர் ரெ.சுகுமாருடன் நேர்காணல்
கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019
பசியில்லா மக்கள் வாழும் நாடே பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நாடு. இந்தப் பசியில்லா நாட்டை உருவாக்க வேண்டுமானால், அங்கே விவசாயம் செழிப்புடன் இருக்க வேண்டும். இந்த இலக்கை அடையத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால், புதுப்புது விவசாயத் தொழில் நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நுட்பங்களை உருவாக்கும் பணியில் விவசாய ஆராய்ச்சி நிலையங்கள், விவசாயக் கல்லூரிகள், விவசாயப் பல்கலைக் கழகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
ஒரு பொருள் அதிகமாக விளையும் போது சந்தையில் அதற்கான விலை மதிப்பு வீழ்ச்சியடைகிறது. இதிலிருந்து விவசாயிகள் மீள வேண்டுமானால், தங்களின் விளைபொருளை மதிப்புள்ள உணவுப் பொருளாக மாற்றி விற்க வேண்டும் என்னும் தொழில் நுட்பம் பல்லாண்டுகளுக்கு முன்பே விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. இப்போதும் கூட இந்த நுட்பத்தை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டுமென்று அதிகளவில் வலியுறுத்தப்படுகிறது.
கொஞ்சம் சோம்பல் இல்லாமல் திட்டமிட்டு இயங்கி விட்டால், விவசாயிகள் தொடர்ந்து நல்ல வருவாயை அடைய முடியும். தானியங்களை அரிசி வகைகளாக மாற்றுதல், பயறு வகைகளைப் பருப்புகளாக மாற்றுதல், தரகர்களை நம்பி இருக்காமல், விற்பனையையும் கையிலெடுத்தல் போன்றவை நல்ல வருவாய்க்கு உறுதியளிக்கும். இவை சில எடுத்துக்காட்டுகளே. இவற்றைப் போல நிறையச் செய்யலாம். அவற்றுக்கான பயிற்சிகளையும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் வழங்கி வருகின்றன.
இவ்வகையில், தனது நிலத்தில் விளையும் கரும்பைக் கரும்பாக விற்காமல், அதை அரைத்துச் சாறெடுத்து, நற்சுவை நாட்டுச் சர்க்கரையாக மாற்றி விற்பனை செய்து வருகிறார், தருமபுரி மாவட்டம், கடகத்தூர் இளைஞர் ரெ.சுகுமார். இவரை அண்மையில் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:
“எங்கள் தோட்டத்தில் விளையும் கரும்பில் இருந்து சர்க்கரையைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். இதை என் அப்பா கே.சி.ரெங்கசாமி 1982 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டார். அவருக்குக் கொஞ்சம் வயதாகி விட்டதாலும், எனக்கு இந்தத் தொழிலில் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதாலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பொறுப்பு முழுவதையும் என்னிடம் ஒப்படைத்து விட்டார். ஆனாலும், நான் வெளியே செல்லும் நேரத்திலெல்லாம் அப்பா தான் கவனித்துக் கொள்வார்.
பல ஆண்டுகளாகவே இங்கே மழை சரியாகப் பெய்வதில்லை. அதனால் கிணறுகளிலும் நீரில்லை. வேலைக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயத்தில் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் போவதால், கூலி வேலை செய்வோர் கர்நாடகம் போன்ற வெளி மாநிலங்களுக்குச் சென்று விடுகிறார்கள். வறட்சி கடுமையாக இருப்பதால் எங்கள் பகுதியில் விவசாயம் பெருமளவில் குறைந்து விட்டது. நிலத்தில் முன்பு கிடைத்ததைப் போல நல்ல மகசூலும் கிடைப்பதில்லை.
இந்த நிலையில், எங்கள் நிலத்தில் விளையும் கரும்பு மட்டுமே எங்கள் சர்க்கரைத் தயாரிப்புக்குப் போதாது. இதனால், அடுத்த விவசாயிகளிடம் இருந்தும் கரும்பை விலைக்கு வாங்கி அரைப்போம். அரூர், திருப்பத்தூர், முரப்பூர் போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளிடம் கரும்பை விலைக்கு வாங்கி வருவோம். சில சமயங்களில் இங்கும் கரும்பு கிடைக்காது. இந்த நேரங்களில் கர்நாடகத்துக்குச் சென்று கரும்பை வெட்டியெடுத்து வருவோம்.
ஒரு டன் கரும்பின் விலை ரெண்டாயிரம் ரூபாய். கரும்பு கிராக்கியாக இருந்தால் இந்த விலை இன்னும் அதிகமாகும். வெட்டுக்கூலியும் நாங்கள் தான் கொடுக்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கான வெட்டுக்கூலி 700 ரூபாய். எங்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து டன் கரும்பு வேண்டும். ஒரு டன் கரும்பில் இருந்து 90-100 கிலோ சர்க்கரை கிடைக்கும். ஒரு டன் சர்க்கரை உற்பத்திக்கான ஆட்கள் கூலி 700 ரூபாய். இப்படி அன்றாடம் 500 கிலோ நாட்டுச் சர்க்கரையை எங்கள் ஆலையில் உற்பத்தி செய்கிறோம்.
இந்தச் சர்க்கரையைப் பெங்களூரு, சித்தோடு, ஈரோடு, சேலம், நாமக்கல் குளிக்கல் பாளையம், பழனி நெய்க்காரப்பட்டி, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இருக்கும் வெல்ல மண்டிகள் மூலம் விற்பனை செய்வோம். இதுபோக, பலசரக்குக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகிறோம். மொத்தமாகவும், அரைக்கிலோ பொட்டலமாகவும் கொடுக்கிறோம்.
இன்றைய நிலையில் நல்ல உணவுப் பொருள்களுக்காக மக்கள் ஏங்கித் தவிக்கிறார்கள். அதுவும் நாட்டுச் சர்க்கரை என்பது உடம்புக்கு மிகவும் உகந்தது. நோய்க்கு மருந்தைப் போன்றது. அதனால், இதில் இரசாயனப் பொருள் எதையும் சேர்க்காமல் முற்றிலும் இயற்கையான முறையில், எந்தக் கலப்படமும் இல்லாமல் சுத்தமாகத் தயாரிக்கிறோம். நற்சுவை நாட்டுச் சர்க்கரை என்னும் பெயரில் விற்கப்படும் எங்கள் சர்க்கரையை, எந்தச் சந்தேகமும் கொள்ளாமல் வாங்கிப் பயன்படுத்தலாம்.
நான் ஒரு தமிழன் என்னும் முறையில், நான் ஒரு மனிதன் என்னும் முறையில், தமிழர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கு என்னாலான கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். இதில் இம்மியளவும் தவற மாட்டேன். என் அப்பாவும் மிகவும் நேர்மையான மனிதர். 1986 முதல் கடகத்தூர் ஊராட்சி உறுப்பினராகவும், 1996 இல் இருந்து 2006 வரை, இரண்டு முறை கடகத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். அதனால், வாழ்வியல் ஒழுக்கத்தையும், தொழில் நேர்மையையும் இரண்டு கண்களாக நினைத்துச் செயல்படுகிறோம்.
என் மனைவி கீதாவும் நன்கு படித்தவர். அதனால் அவரும் எங்களின் நாட்டுச் சர்க்கரை உற்பத்தி மற்றும் விற்பனையில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். நற்சுவை நாட்டுச் சர்க்கரை என்னும் பெயரிலான எங்கள் நிறுவனத்தின் தரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, சர்க்கரை வணிகத்தை இன்னும் பெரியளவில் எடுத்துச் செல்லும் முயற்சிக்கு, ஊக்கமும், ஆலோசனையும் அளித்து வருகிறார்.
பெற்று வளர்த்து படிக்க வைத்து என்னை இந்த நாட்டின் நல்ல குடிமகனாக்கிய அப்பா, எனக்கு நல்ல தொழில் ஒன்றையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவர் இந்தத் தொழிலிலும் சரி, சமூகத்திலும் சரி, நேர்மையான மனிதர் என்று எல்லோராலும் பாராட்டப்படுபவர். அவரைப் போலவே நானும் இருக்க விரும்புகிறேன். உணவுத்தொழில் உயிர் வளர்க்கும் தொழில். அதில் எப்போதும் நேர்மையாளனாக, உண்மையாளனாக இருப்பேன் என்பதையும், இந்தத் தொழில் மூலம் நல்ல பெயர் கிடைக்கிறது என்பதையும், நாட்டுச் சர்க்கரை உற்பத்தி நிறைய அனுபவங்களைத் தருகிறது என்பதையும் இந்தச் செய்தி மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
ஒரு கிலோ நற்சுவை நாட்டுச் சர்க்கரையைச் சில்லறை விலையில் 60 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். மொத்தமாகக் கொள்முதல் செய்ய விரும்பினால் இன்னும் குறைந்த விலைக்குக் கொடுப்போம்’’ என்றார். இவர் இத்தொழிலில் மேலும் மேலும் வளர வாழ்த்தி விடை பெற்றோம். இவருடன் பேச: 75503 37337.
பசுமை