சாதா சர்க்கரை, பால் சர்க்கரை, மூலிகைச் சர்க்கரை!

சர்க்கரை Dharmapuri sarkkarai

விதவிதமான சர்க்கரைத் தயாரிப்பில் தருமபுரி இளைஞர்

வீன உணவுப் பொருள்களில் முக்கிய இடத்தில் இருப்பது ஜீனி எனப்படும் வெண் சர்க்கரை. இதன் பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, கொடி கட்டிப் பறக்கிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தேநீர்க் கடைக்குச் சென்றால், சர்க்கரை டீ வேண்டுமா ஜீனி டீ வேண்டுமா என்று கேட்பார்கள். சர்க்கரை டீயை விட ஜீனி டீயின் விலை ஐந்து பைசா கூடுதலாகவும் இருக்கும்.

மறந்து போன உணவுகள்

வசதியானவர்கள் மற்றும் சமூகத்தில் அடையாளம் உள்ளவர்கள் வந்தால், அவர்களைக் கேட்கலாமலே ஜீனி கலந்த தேநீரைப் போட்டுக் கொடுப்பார்கள். அந்தளவுக்கு மக்களிடம் வெண் சர்க்கரை மதிப்பைப் பெற்றிருந்தது. இதன் விளைவாக ஒரு கட்டத்தில் நாட்டுச் சர்க்கரைத் தேநீர் என்பது மறைந்தே போனது. பெரும்பாலான இனிப்பு உணவுகளில் வெண் சர்க்கரையே பயனில் இருந்து வருகிறது. இதைப்போல, மரபு வகை அரிசிகளின் மாற்றம், சிறுதானிய உணவுகளை மறந்தது என, பல மாற்றங்களைச் சொல்லலாம்.

விழிப்புணர்வு

இருந்தாலும், அண்மைக் காலத்தில் உணவு மற்றும் உடல் நலத்தில் உண்டாகி வரும் விழிப்புணர்வால், மக்கள் நமது பழைய உணவு முறையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இதனால், பதனீரிலிருந்து தயாராகும் பனை வெல்லம், கரும்பிலிருந்து தயாராகும் நாட்டுச் சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களை விரும்பிப் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர். இதனால், நமது மரபு வகை உணவுப் பொருள்களுக்கு மீண்டும் மதிப்புக் கூடி வருகிறது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் கடகத்தூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ர.சுகுமார், தன் தந்தை நடத்தி வந்த நாட்டுக் கரும்புச் சர்க்கரைத் தயாரிப்புத் தொழிலைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அவரை அண்மையில் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

“தமிழர்களின் வாழ்க்கையில் நோய்க்கான மருந்தென்பது தனியாக இருப்பதில்லை. பசியை ஆற்றும் உணவே நோயையும் தீர்த்து விடும். அதனால் தான் உணவே மருந்தென்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அந்தளவில் தான் நமது உணவுப் பொருள்களும் இருந்தன. ஆனால், கால ஓட்டத்தில் வெள்ளையர்கள் போன்ற புதியவர்களின் வரவு மற்றும் நாகரிக வளர்ச்சியால், நமது சமையலறையின் உணவுப் பொருள்களும், உணவு முறைகளும் பெரியளவில் மாறத் தொடங்கின.

பழைய சோறு

அந்த மாற்றம் இப்போது உச்சத்தில் உள்ளது. அதைப் போலவே, நோய்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இட்லி, தோசைக்கு நம்மைப் பழக்கி விட்டு, நாம் உண்டு வந்த பழைய சோற்றைக் காலைச் சிற்றுண்டியாக அவர்கள் சாப்பிட்டுக் கொண்டுள்ளார்கள். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்குப் பதிலாக, மருத்துவமனை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் உண்ண, கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்பது நமது முன்னோர் பாடல்.

அதனால், மீண்டும் நமது பழைய உணவு முறையை நோக்கி மக்கள் நகர்ந்து வருகிறார்கள். இப்போது, வரகு, கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற சிறுதானிய உணவுகள் மீது மக்களுக்கு ஈர்ப்பு உண்டாகி வருகிறது. இவ்வகையில், நல்லதொரு உணவுப் பொருளான கரும்புச் சர்க்கரைத் தொழிலை நான் செய்து வருகிறேன்.

33 ஆண்டுகள்

கரும்பிலிருந்து நாட்டுச் சர்க்கரையைத் தயாரிக்கும் தொழிலை என் தந்தை கே.சி.ரங்கசாமி, முப்பத்து மூன்று ஆண்டுகளாகச் செய்து வந்தார். அவர் சமூக நலத்தில் மிகவும் அக்கறை கொண்டவர். 1996 ஆம் ஆண்டு முதல் 2006 வரையில், தொடர்ந்து இரண்டு முறை கடகத்தூர் ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார். மனதளவிலும் சரி, செய்தொழிலிலும் சரி நேர்மையுடன் இருக்க வேண்டும் என்னும் கொள்கைப் பிடிப்பு உள்ளவர். அதனால், நல்ல முறையில் நாட்டுச் சர்க்கரையைத் தயாரித்து வந்தார்.

மூலிகைச் சர்க்கரை

கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பொறுப்பை நான் ஏற்று, அவரின் வழிகாட்டலில், தரத்தில் எவ்விதத்திலும் குறையில்லாமல் தயாரித்து, நற்சுவை நாட்டுச் சர்க்கரை என்னும் பெயரில், தமிழ்நாடு மற்றும் பக்கத்து மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறேன். எங்கள் சர்க்கரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், இந்தச் சர்க்கரையை மேலும் மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்ய வேண்டுமென முடிவெடுத்தேன். அதன் விளைவு தான் மூலிகை நாட்டுச் சர்க்கரை.

மூன்று வகைகள்

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், துளசி, அதிமதுரம், ஆவாரை, அஸ்வகந்தா ஆகிய மூலிகைப் பொருள்கள் அடங்கிய சர்க்கரை; சுக்கு, ஏலக்காய் அடங்கிய சர்க்கரை; பசும்பால் கலந்த சர்க்கரை என்று, மூன்று வகைகளில் மூலிகைச் சர்க்கரையைத் தயாரித்து வருகிறோம். சாதாரண நாட்டுச் சர்க்கரையும் எங்களிடம் கிடைக்கும். அடுத்து, சுக்கு, தனியா எனப்படும் மல்லி கலந்த நாட்டுச் சர்க்கரையைத் தயாரிக்க உள்ளோம்.

பயன்படுத்தும் வசதி

இந்தப் பொருள்களை எல்லாம் சேர்த்து மூலிகைக் கசாயம் என்னும் குடிநீராகக் குடித்து வந்தால், உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால், இத்தனை பொருள்களையும் கலந்து தயாரிப்பதில் மக்களிடம் சிரமம், மலைப்பு, இன்னும் சொல்லப் போனால் ஒரு சோம்பேறித்தனம் இருக்கும். நமது தமிழ் மருத்துவத்தில் உள்ள சிக்கலே இதுதான். அதாவது, இந்தப் பொருள்களை ஆங்கில மருத்துவத்தில் ஒரு மாத்திரையாகக் கொடுத்து விடுகிறார்கள். எவ்விதச் சிரமமும் இல்லாமல் கிடைப்பதால் மக்கள் இதைத் தேடி வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

ஆனால், நமது தமிழ் மருத்துவத்தில், இந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து நீங்களே தயாரித்துச் சாப்பிடுங்கள் எனச் சொல்வதால், தயங்கி, விட்டு விடுகிறார்கள். அதனால், நல்ல மூலிகைகளை மக்கள் பயன்படுத்தி உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்னும் நல்ல நோக்கத்தில், நாங்கள் இவை அனைத்தையும் நாட்டுச் சர்க்கரையில் சேர்த்து விடுகிறோம். இந்த மூலிகைச் சர்க்கரையை மிகவும் எளிதாகப் பயன்படுத்தி, தங்களின் உடல் நலத்தைச் சிறப்பாகப் பராமரிக்க முடியும். அதாவது, வெந்நீரில் இந்தச் சர்க்கரையைக் கலந்தால், அந்த வெந்நீர் உடல் நலம் காக்கும் மூலிகைத் தேநீராக மாறிவிடும்.

நல்ல நோக்கம்

மனிதர்களுக்கு மட்டும் ஆறறிவு இருப்பதன் நோக்கத்தை உணர்ந்து செயல்படுகிறேன். உடலில் உயிர் இருக்கும் வரையில் மட்டுமே நாம் இயங்க முடியும். அதுவும் உடல் வளமாக இருந்தால் மட்டுமே முடியும். அந்த உடல் வளத்தைக் கொடுப்பது உணவு. அந்த உணவு, உடல் வளர்ச்சிக்கு, உடல் இயக்கத்துக்கு ஏற்ற சத்துகள் நிறைந்ததாக, தகுதி மிக்கதாக இருக்க வேண்டும். என் தொழிலை இந்த நல்ல நோக்கத்தின் அடிப்படையில் தான் செய்து வருகிறேன்’’ என்று கூறினார்.

சுகுமாரின் நல்ல நோக்கம், இந்தத் தொழில் மென்மேலும் வளர்வதற்குத் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு வாழ்த்துச் சொல்லி விடை பெற்றோம். இவருடன் பேச: 75503 37337, 97863 11441.


பொம்மிடி முருகேசன்

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!