கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019
உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 30 கோடிப் பனை மரங்கள் இருந்தன. இப்போது ஐந்து கோடி மரங்கள் மட்டுமே உள்ளன. இவை மேலும் மேலும் அழிக்கப்படுகின்றன. பனையில் ஆண் பனை, பெண் பனை என இருவகை உண்டு. இம்மரம் பூக்கப் பத்தாண்டுகள் ஆகிவிடும். அப்போது தான் ஒரு மரம் ஆண் மரமா பெண் மரமா என்று தெரியும்.
உணவு, உறைவிடம் மற்றும் அழகுப் பொருள்கள் தேவைக்குப் பனைமரம் உதவுகிறது. நுங்கு, பனம்பழம், பதநீர், கள், வெல்லம், கற்கண்டு, கிழங்கு, நார், ஓலை ஆகியன பனை தரும் முக்கியப் பொருள்களாகும். இதனால் தான் கற்பகத்தரு எனப்படுகிறது பனை.
பெண் பனை விடும் பாளையில் இருந்து நுங்கு உருவாகிறது. இளம் பருவத்தில் இதை வெட்டா விட்டால் முற்றிப் பழுத்துப் பழமாகி விடும். இனிப்புச் சுவையுள்ள பனங்கூழில் இருந்து ஜாம் தயாரிக்கலாம். பனங் கொட்டைகளைச் சேகரித்து மழைக்காலத்தில் மணலில் புதைத்து வைத்தால் 22 நாளில் முளைத்து மூன்று மாதங்களில் கிழங்காக மாறும்.
பதநீர்
ஆண் பனையின் பாளையில் இருந்து கிடைக்கும் பதநீர் முழுமையான உணவுப் பொருளாக உள்ளது. பெண் பனையின் பாளையில் இருந்தும் பதநீரை இறக்கலாம். நித்தம் ஒரு குவளை வீதம் 45 நாட்களுக்குப் பதநீரைக் குடித்து வந்தால் உடல் எடை கூடும். மூச்சிரைப்பு நீங்கும். உணவு நன்கு செரிக்கும். உடற்சூடு தணியும். காலைப் பதநீரை விட மாலைப் பதநீரால் உடல் குளிர்ச்சியாகும். பதநீரில் இளம் நுங்கைத் தோண்டிப் போட்டுச் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். இதனால், வயிற்றுப் புண் குணமாகும். வைட்டமின் குறையால் ஏற்படும் பெரிபெரி, ஸ்கர்வி போன்றவை நீங்கும். பதநீர் இரத்தச் சிவப்பணுக்களைப் பெருக்கும். குழந்தைகள் நன்கு வளர்வர்.
நுங்கு
இனிப்பான நீருடன் கூடிய நுங்கு மென்மையாக, ருசியாக இருக்கும். இந்த நீரைத் தோலில் தடவினால் வியர்க்குரு அகலும். வெப்பத்தால் கண்கள் கடுப்பதை மாற்ற, நுங்கு நீரைக் கண்ணில் விடலாம். துவர்ப்புள்ள தோலுடன் நுங்கைச் சாப்பிட்டால் வெப்ப நோய்கள் அகலும். பனம்பழம் தொழுநோயைக் குணப்படுத்த உதவும்.
வெல்லம்
பனை வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டிக் குடித்தால், டைபாய்டு நோயாளிகளுக்குத் தெம்பு கிடைக்கும். குழந்தைகளின் மலச்சிக்கல் அகலும்; உடல் எடை கூடும்.
கற்கண்டு
பனங் கற்கண்டைப் பாலில் கலந்து குடித்தால் உடல் சுறுசுறுப்பாகும். தொண்டைப்புண் குணமாகும். உடற்சூடு தணியும். அம்மை நோயாளிகளின் உடல் குளிர்ச்சியடையும். மிளகுப் பொடியுடன் பனங் கற்கண்டைச் சேர்த்து உண்டால், வறட்டு இருமல், தொண்டை எரிச்சல் குறையும். கர்ப்பிணிகள் வெந்நீரில் பனங் கற்கண்டைச் சேர்த்து உண்டு வந்தால், சிறுநீர்க் கோளாறு சரியாகும். குளிர்ந்த நீரில் இந்தக் கற்கண்டைக் கலந்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், சிவத்தல் குறையும்.
வேர்
பனைவேர் குளிர்ச்சியைத் தரும். இதிலிருந்து பெறப்படும் இளஞ்சிவப்புக் கரைசலைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தினால் பால்வினை நோய் குணமாகும். பனங்கொட்டைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் எலும்பு முறிவைக் குணப்படுத்த உதவுகிறது.
நுங்கு மிட்டாய்
தேவையான பொருள்கள்: நுங்கு 100 கிராம், சர்க்கரை 300 கிராம், சிட்ரிக் அமிலம் 0.5 கிராம்.
செய்முறை: சற்று முற்றிய நுங்கின் தோலை நீக்கித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 100 கிராம் சர்க்கரையில் சிறிது நீரைவிட்டுக் காய்ச்சி (40% TSS) பாகைத் தயாரித்து, நுங்குத் துண்டுகளை இதில் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு நுங்குத் துண்டுகளை எடுத்து விட்டு இன்னொரு 100 கிராம் சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி (50 TSS) நுங்குத் துண்டுகளை ஒருநாள் முழுதும் ஊற வைக்க வேண்டும்.
பிறகு நுங்குத் துண்டுகளை எடுத்து விட்டு இன்னொரு 100 கிராம் சர்க்கரையைப் பாகாகக் காய்ச்சி (75% TSS) திரும்பவும் நுங்குத் துண்டுகளைச் சேர்த்து ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இவற்றை எடுத்து நிழலில் அல்லது இயந்திர உலர்த்தியில் 6-8 மணி நேரம் 50 டிகிரி செல்சியசுக்கு உலர்த்தி, சிறிதளவு சோளமாவைத் தூவினால் நுங்கு மிட்டாய் தயார். முற்றிய நுங்குகளை இப்படி மிட்டாயாகத் தயாரித்துச் சாப்பிடலாம்.
நுங்கு ஜாம்
தேவையான பொருள்கள்: கூழாக அரைத்த நுங்கு 100 கிராம், அன்னாசி 100 கிராம், மாம்பழம் 100 கிராம், சர்க்கரை 300 கிராம், சிட்ரிக் அமிலம் 0.5 கிராம்.
செய்முறை: தோலை நீக்கி நுங்கை அரைக்க வேண்டும். அன்னாசி மற்றும் மாம்பழத்தையும் அரைத்து நுங்குடன் சேர்க்க வேண்டும். இத்துடன் சர்க்கரையைச் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு சிட்ரிக் அமிலத்தை இதில் சேர்க்க வேண்டும். மெதுவான உருண்டைப் பதம் வரும் வரையில் வேக வைத்து இறக்கினால் நுங்கு ஜாம் தயார். இதைச் சுத்தமான புட்டியில் வைத்துப் பயன்படுத்தலாம்.
பனங்கிழங்கு இட்லி
தேவையான பொருள்கள்: அரிசி 800 கிராம், பனங்கிழங்கு 200 கிராம், உளுந்து 200 கிராம்.
செய்முறை: பனங்கிழங்கைச் சுத்தம் செய்து சூரிய அல்லது இயந்திர உலர்த்தியில் காய வைத்துப் பொடியாக்க வேண்டும். அரிசி, உளுந்தைத் தனியாக ஊற வைத்து இட்லி மாவாக அரைக்க வேண்டும். இத்துடன் பனங்கிழங்கு மாவு, உப்பைச் சேர்த்து அவித்தால் பனங்கிழங்கு இட்லி தயார்.
பனையோலை கூரையாகப் பயன்படுகிறது. இந்தப் பனையோலை தான் முற்காலத்தில் நம் முன்னோரால் சுவடிக்காகப் பயன்படுத்தப்பட்டது. பனங் குருத்து, அழகிய பூந்தொப்பி, கைப்பை, பொருள்களை வைக்கும் உருண்டைப் பெட்டி, அஞ்சறைப் பெட்டி, பாய், வெற்றிலைக் கொட்டான், பூங்கொத்து போன்ற கலைநயமிக்க பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. பனை மட்டை, துடுப்பு, கரண்டி செய்யப் பயன்படுகிறது. பனை நார் கட்டில் கயிறாக, பெட்டிகள் தயாரிக்க உதவுகிறது. பனை மரம் வீட்டுக்கு விட்டமாக, தூணாகப் பயன்படுகிறது. இப்படி அருமையான பயன்களைத் தருவது பனைமரம்.
முளைக்க வைப்பதைத் தவிர, நமக்கு எந்த வேலையையும் வைக்காமல் பயன்படும் இந்தப் பனை மரங்களைக் காக்க வேண்டியது நமது கடமையாகும்.
முனைவர் மா.விமலாராணி,
முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம்.