சத்துமிகு பப்பாளி மிட்டாய்!

பப்பாளி papaya8 f90b23d1dafd145e202ba10b16775602

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.

ல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், குறைந்த விலையில் கிடைப்பது பப்பாளிப் பழம். பப்பாளிப் பழம், 7.2 கிராம் மாவுச்சத்து, 0.6 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு, 666 மைக்ரோ கிராம் கரோட்டின், 17 மி.கி. சுண்ணாம்பு, 13 மி.கி. மணிச்சத்து, 0.6 கிராம் இரும்புச்சத்து, 57 மி.கி. உயிர்ச்சத்து சி ஆகிய சத்துகளையும், 40 கிலோ கலோரி எரிசக்தியையும் கொண்டுள்ளது. பப்பாளியில் நிறைந்துள்ள உயிர்ச்சத்து ஏ, மாலைக்கண் நோய்க்கு முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது.

பப்பாளிப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால், குடல் புண், புற்றுநோய், டிப்தீரியா என்னும் இழுப்பு நோய் போன்ற, கொடிய நோய்கள் வராமல் தடுக்கலாம். பப்பாளிப் பழத்தில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் நேரடியாகக் கலப்பதில்லை. எனவே, சர்க்கரை நோயாளிகள் கூட இப்பழத்தை உண்ணலாம். மேலும், தொற்று நோய்க் கிருமிகளை இரத்தத்தில் சேர விடாமல் பாதுகாத்து உடலைப் பலப்படுத்துகிறது.

பப்பாளிப் பாலிலிருந்து பப்பயின் என்னும் பொடி தயாரிக்கப்படுகிறது. இது, முகத்தில் பூசப்படும் பலவகை வாசனைப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. தொற்று நோய்க் கிருமிகளை எதிர்க்கும் சக்தி இருப்பதால், தடுப்பூசி மருந்து தயாரிப்பிலும் பயன்படுகிறது.

பப்பாளியில் மதிப்புக் கூட்டல்

பப்பாளியில் இருந்து ஜாம், ஸ்குவாஸ், தயார்நிலை பானம், ஊறுகாய், சாஸ், பப்பாளி மிட்டாய் போன்றவற்றைத் தயாரிக்கலாம். நிறைய விளைந்து வீணாகும் நிலையிலுள்ள பப்பாளிப் பழங்களை, மதிப்புக்கூட்டுப் பொருள்களாகப் பதப்படுத்தி வைத்தால், ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். இதை, வணிக நோக்கில் சிறு தொழிலாகச் செய்தும் வருமானம் பார்க்கலாம்.

பப்பாளி மிட்டாய்

தேவையான பொருள்கள்: பொடியாக நறுக்கப்பட்ட பப்பாளிக்காய்த் துண்டுகள் 1 கிலோ, சர்க்கரை 450 கிராம், சிட்ரிக் அமிலம் 3 கிராம்.

தயாரிக்கும் முறை

நன்கு விளைந்த பப்பாளிக் காயை ஆங்காங்கே மெல்லக் கீறிவிட்டு, அதிலுள்ள பாலை வெளியேற்ற வேண்டும். பிறகு, நன்கு கழுவித் தோலையும் விதைகளையும் நீக்கிவிட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிதளவு நீரில் வேக வைக்க வேண்டும்.

இதில் பாதியளவு சர்க்கரையைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். மீதியுள்ள சர்க்கரையை மூன்றாகப் பிரித்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியைச் சேர்த்து, பத்து நிமிடம் வரை மூன்று நாட்களும் சூடாக்க வேண்டும்.

இப்படிச் செய்தால், சர்க்கரைப் பாகிலுள்ள சர்க்கரையை, பழத் துண்டுகள் உறிஞ்சிக் கொள்ளும். பின்பு, பாகு இறுகும் வரையில் கொதிக்க விட்டு ஆற வைக்க வேண்டும்.

பழத் துண்டுகளைப் பாகிலிருந்து பிரித்தெடுத்து, காற்றில் உலர வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த பின், கண்ணாடிக் குப்பிகளில் அல்லது நெகிழிப் பைகளில் காற்றுப் புகாமல் அடைத்து வைத்து, மூன்று மாதங்கள் வரையில் பயன்படுத்தலாம்.

தேவையான நிறத்தைச் சர்க்கரைப் பாகில் கலந்தால், அந்த நிறத்தில் பழத் துண்டுகள் மாறும். இப்படித் தயாரித்த பழத் துண்டுகளை பிரட், பன், கேக், பிஸ்கட் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.

பப்பாளி நிறையக் கிடைக்கும் போது, குறைந்த விலைக்கு வாங்கி, அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு தயாரித்து வீட்டுத் தேவைக்கும், விற்பனைக்கும் பயன்படுத்தலாம். இதனால் ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவையான உயிர்ச்சத்து ஏ முழுமையாகக் கிடைக்கிறது.

பப்பாளியில் மதிப்புக்கூட்டுப் பண்டங்களைத் தயாரிக்கும் பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையங்களில் வழங்கப்படுகிறது. பெண்கள் முறையாகப் பயிற்சி பெற்று, பப்பாளியில் மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்துப் பயன்படுத்தி நலமாக வாழலாம்.


முனைவர் பெ.க.தேன்மொழி, முனைவர் எஸ்.செந்தூர் குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!