சிறுதானிய உடனடி உணவுக் கலவைகள்!

சிறுதானிய millets

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி.

சிறுதானியங்கள் குறுகிய காலத்தில் விளையக் கூடியவை. இவை உணவு, கால்நடைத் தீவனம் மற்றும் தொழிற்சாலைத் தேவைகள் நோக்கில் பயிரிடப்படுகின்றன. வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் இப்பயிர்கள் அதிகளவில் விளைகின்றன. சிறுதானியங்களில் 10-12 கிராம் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுப்புகள் உள்ளன.

சிறுதானிய வகைகளான சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி ஆகியவற்றை, நம் முன்னோர்கள் அதிகமாக விளைவித்து முக்கிய உணவாக உண்டு வந்தனர். ஆனால், அண்மைக் காலத்தில் சிறுதானிய சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதுடன், அவற்றை நுகர்வோரும் குறைந்து விட்டனர்.

இதனால், சத்துகள், குறிப்பாக, நார்ச்சத்துப் பற்றாக்குறை ஏற்பட, உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு உள்ளாகி மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆய்வின்படி, நாளுக்கு நாள் இவ்வகை நோய்களால் அவதிப்படுவோர் அதிகமாகி வருகிறார்கள்.

இந்நிலையில், சிறுதானியங்களின் முக்கியத்தை உணர்ந்துள்ள மக்கள், இப்போது இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கி உள்ளனர். ஆனால், கடைகளில் அரிசி மற்றும் அரிசி சார்ந்த உணவுகள் உடனடியாகப் பயன்படுத்தும் வகையில் கிடைப்பதைப் போல், சிறுதானிய உணவுகள் கிடைப்பது இல்லை.

இன்றைய அவசர உலகில் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், சிறுதானியங்களைப் பக்குவப்படுத்திப் பயன்படுத்த நேரம் கிடைப்பதில்லை. சரிவிகித உணவு தேவைப்படும் இந்நாளில், சிறுதானியங்களை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

மதிப்புக்கூட்டிய சிறுதானிய உணவுகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், சிறுதானியங்கள் மூலம், சத்துகள் மிகுந்த உடனடி உணவுகளைத் தயாரிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு, நம் வழக்கத்தில் உள்ள உணவு சார்ந்த சத்தான தயாரிப்புகளை உருவாக்கி உள்ளனர்.

தானிய அடைக்கலவை

சோளம், தினை, வரகு, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, கொள்ளு, பாசிப்பயறு, உளுந்து ஆகியவற்றை, தனித்தனியாக சுத்தம் செய்து கழுவி நன்கு உலர்த்தி, ஒன்று சேர்த்து அடைக்கு அரைப்பதைப் போல், கொஞ்சம் பரபரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, இத்துடன், மிளகாய்த்தூள், பெருங்காயப் பொடியைச் சேர்த்து நன்கு கலந்தால், சத்தான தானிய அடைக்கலவை தயார். இதைப் பைகளில் அடைத்து வைக்க வேண்டும்.

அடை தயாரிக்கும் முறை

தேவைப்படும் போது அடைமாவுக் கலவையுடன் தேவையான அளவுக்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, நீர் ஆகியவற்றைச் சேர்த்து ஒருமணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப, கேரட், பீட்ரூட்டைச் சேர்க்கலாம். அதைப்போல், முருங்கைக்கீரை அல்லது மற்ற கீரைகளையும் சேர்க்கலாம். பின்பு, தோசைக்கல்லில் பொன்னிறமாக வேக வைத்து, தேங்காய்ச் சட்னியுடன் சுவையாகச் சாப்பிடலாம்.

சிறுதானியக் கொழுக்கட்டைக் கலவை

கம்பு மாவு, சோளமாவு, உளுந்து மாவு, சோயா மாவு, பச்சரிசி மாவு ஆகியவற்றைச் சரியான அளவுகளில் எடுத்துத் தனித்தனியாக வறுக்க வேண்டும். லேசாகச் சூடுபடுத்தினால் போதும். பிறகு, எல்லா மாவையும் நன்றாகக் கலந்தால், சுவையான சிறுதானியக் கொழுக்கட்டைக் கலவை தயார். இதைப் பைகளில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கொழுக்கட்டைச் செய்முறை

கொழுக்கட்டைக் கலவை 100 கிராம், 200 மில்லி நீர், பால், 5 கிராம் நெய் ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடம் பிசைந்து வைக்க வேண்டும். பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய்யை விட்டு நன்கு வதக்க வேண்டும்.

பிறகு, மண்டை வெல்லம், பொட்டுக்கடலை மாவு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை நன்றாகக் கலந்து, பூரணம் தயார் செய்ய வேண்டும். பிறகு, வதக்கிய மாவை வட்டமாக்கி, நடுவில் பூரணத்தை வைத்து நீராவியில் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இனிப்புக்குப் பதில் காய்கறிகளை வேக வைத்துச் சேர்த்தும் பூரணம் தயாரிக்கலாம்.

சிறுதானிய இனிப்பு அப்பக் கலவை

கம்பு அல்லது சோளம், கோதுமை, மைதாமாவை ஒன்றாகக் கலந்து விட்டால், சிறுதானிய இனிப்பு அப்பக் கலவை தயார். இதைப் பையில் அடைத்துப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

அப்பம் செய்முறை

மண்டை வெல்லத்தைத் தூளாக்கி நீருடன் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, நன்றாக வடிகட்டி அதனுடன் நெய் மற்றும் ஏலக்காய்ப் பொடியைச் சேர்க்க வேண்டும். பிறகு, இனிப்பு அப்பக் கலவையை, பாகுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, வட்டமாகத் தட்டி நன்றாக எண்ணெய்யை விட்டுத் தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்க வேண்டும். இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சுவையான இனிப்பு உணவாகும்.

சிறுதானியக் காராச்சேவ் கலவை

வரகு அல்லது சோளத்தை நன்றாகச் சுத்தம் செய்து மாவாக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன், கடலை மாவைச் சேர்த்து லேசாக வறுத்து, சீரகம், மிளகுப்பொடி, உப்பு ஆகியவற்றைக் கலந்தால், சிறுதானியக் காராச்சேவ் கலவை தயார். இதைப் பைகளில் அடைத்துப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

காராச்சேவ் செய்முறை

நூறு கிராம் காராச்சேவ் கலவையுடன், 50 மில்லி நீரைச் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது பெருங்காயப் பொடியைச் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு, காராச்சேவ் அச்சில் இட்டு எண்ணெய்யில் பிழிந்து பொரித்து எடுத்தால் சுவையான, சத்தான காராச்சேவ் கிடைக்கும்.

சிறுதானியப் பணியாரக் கலவை

கம்பு, அரிசி, ஜவ்வரிசி, உளுந்து ஆகியவற்றை நன்கு கழுவிக் காயவைத்து மாவாக்கி ஒன்றாகக் கலந்தால், சிறுதானியப் பணியாரக் கலவை தயார். இதைப் பைகளில் பாதுகாப்பாக அடைத்து வைத்துக் கொள்ளலாம்.

பணியாரம் தயாரித்தல்

இதற்கு, 75 கிராம் மண்டை வெல்லத்தில் 200 மில்லி நீரைச் சேர்த்துப் பாகாகக் காய்ச்சி வடிகட்டி, அத்துடன் 2 கிராம் ஏலக்காய்ப் பொடி, 2 கிராம் சுக்குப் பொடியைச் சேர்க்க வேண்டும். பிறகு, நூறு கிராம் கலவையை, சூடான பாகுடன் நன்றாகக் கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, பணியாரச் சட்டியைச் சூடாக்கி, மாவை ஊற்றி நன்றாக வேக வைத்தால், சுவையான பணியாரம் கிடைக்கும். இதே கலவை மூலம் காரப் பணியாரமும் தயாரிக்கலாம்.

சிறுதானியப் போலிக் கலவை

வரகை நன்றாகச் சுத்தமாக்கி மாவாக அரைக்க வேண்டும். கொள்ளு அல்லது தட்டைப் பயற்றைக் கழுவி நன்கு காய வைத்து லேசாக வறுத்து மாவாக அரைக்க வேண்டும். வரகு, கொள்ளு அல்லது தட்டைப்பயறு மாவு மற்றும் மைதா மாவையும் கலந்தால், சிறுதானியப் போலிக் கலவை தயார். இதைப் பைகளில் அடைத்துப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

போலியைத் தயாரித்தல்

நூறு கிராம் மாவுடன் உப்பு, எண்ணெய் அல்லது டால்டா மற்றும் நீரைச் சேர்த்துப் பிசைந்து ஒருமணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, உருண்டையாகத் தயாரித்துப் பூரணத்தை வைத்து வட்டமாகத் தட்டி, தோசைக் கல்லில் போட்டு வேக வைத்தால் சுவையான போலி தயார்.

சிறுதானியப் புட்டுக் கலவை

சோளத்தையும் மக்காச் சோளத்தையும் நன்றாகச் சுத்தம் செய்து, லேசாக வறுத்து மாவாக அரைத்தால், சிறுதானியப் புட்டுக்கலவை தயார். இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

புட்டுத் தயாரிப்பு

இதற்கு, 100 கிராம் கலவையில் 30 மில்லி நீர், ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்துப் புட்டுப் பதத்துக்குக் கலந்து 10 நிமிடம் நீராவியில் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், தேவையான அளவு சீனி, தேங்காய் மற்றும் ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்தால், சுவைமிகு புட்டுத் தயார். இதே கலவையில் குழாய்ப் புட்டையும் தயாரிக்கலாம்.

கடாயில் எண்ணெய்யை விட்டுக் காய்ந்ததும் அதனுடன் கடுகு, உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி இறக்கி, அதனுடன் வெந்த புட்டுமாவைச் சேர்த்து நன்கு கலந்து காரப்புட்டாகவும் உண்ணலாம்.

சிறுதானிய முறுக்குக் கலவை

வரகையும் உளுந்தையும் நன்றாகச் சுத்தம் செய்து மூன்று நிமிடம் வறுக்க வேண்டும். பிறகு, மாவாக அரைத்துக் கொண்டு, ஓமம், எள்ளு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்தால், சிறுதானிய முறுக்குக் கலவை தயார். இதைப் பைகளில் அடைத்துப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

முறுக்குத் தயாரிப்பு

இதற்கு, 100 கிராம் கலவையில் தேவையான அளவு நீரைச் சேர்த்துப் பிசைய வேண்டும். பிறகு, முறுக்கு அச்சில் இட்டுப் பிழிந்து எண்ணெய்யில் பொரித்து எடுத்தால், சுவையான முறுக்கு நமக்குக் கிடைக்கும்.

சிறுதானியக் களிக்கலவை

வரகு, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை நன்கு கழுவிச் சுத்தம் செய்து நன்றாகக் காய வைத்து வறுக்க வேண்டும். பிறகு, மாவாக அரைத்து உப்பைச் சேர்த்தால், சிறுதானியக் களிக்கலவை தயார். இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

களித் தயாரிப்பு

இதற்கு, 100 கிராம் கலவையில் 200 மில்லி நீரைச் சேர்த்து நன்றாகக் கரைக்க வேண்டும். அடுத்து, 200 மில்லி நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் கரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். கைகளில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி வைத்தால் சத்தான களி தயார். இதை, சர்க்கரை, நல்லெண்ணெய்க் கலவையில் தொட்டுச் சூடாகச் சாப்பிடலாம். இனிப்பைச் சேர்க்காமல், சிறிது உப்பைச் சேர்த்து எல்லாவகைக் குழம்பிலும் தொட்டுச் சாப்பிடலாம்.

சிறுதானியச் சத்துமாவுக் கலவை

கோதுமை, கம்பு, பாசிப்பயறு ஆகியவற்றை நன்றாகச் சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, நன்றாகக் கழுவி நீரை வடித்து விட்டு, சுத்தமான துணியில் இட்டு, முளைக்கட்ட வேண்டும். மறுநாள் முளைக்கட்டிய தானியங்களை 10 மணி நேரம் நிழலில் காய வைத்து நன்றாக வறுத்து அரைக்க வேண்டும். வரகு அரிசியையும், பொட்டுக் கடலையையும் சுத்தம் செய்து வறுத்து மாவாக அரைக்க வேண்டும்.

பிறகு, இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, அதனுடன் சர்க்கரை அல்லது மண்டை வெல்லம் மற்றும் கொழுப்பு நீக்கிய பால்பொடியைச் சேர்த்தால், சிறுதானியச் சத்துமாவுக் கலவை தயார். இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

வரகு சர்க்கரைப் பொங்கல்

முதலில் பச்சரிசியைக் கழுவி, கொதிக்கும் வெந்நீரில் இட்டு 5 நிமிடம் கழித்து, அதில் வரகரிசியைப் போட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் மண்டை வெல்லம், ஏலக்காய்ப் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். கடைசியில், நெய், முந்திரிப் பருப்பு, உலர் திராட்சைப் பழத்தைப் போட்டு இறக்கினால், சுவையான வரகு சர்க்கரைப் பொங்கல் தயார்.

அடா-பாயாசக் கலவை

தினை அல்லது வரகு மற்றும் பச்சரிசியை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து ஒருமணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கலவை நன்றாக ஊறியதும் கழுவி நீரை வடித்து விட்டு, நன்கு உலர வைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த மாவில் நெய், மைதா மாவைக் கலந்து நீரைச் சேர்த்துக் கட்டியாக மாவுப் பதத்தில் பிசைய வேண்டும். பிறகு, வாழை இலையை எடுத்துத் தணலில் நன்றாக வதக்கி, இலையின் பின்புறம் திருப்பி, பிசைந்த மாவை மேசைக் கரண்டியில் எடுத்துத் தடவி, 5 நிமிடம் நீராவியில் வேக வைக்க வேண்டும்.

பிறகு, 3-4 தடவை நீரில் நன்றாக அலசி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, அந்தத் துண்டுகளை 40 டிகிரி வெப்ப நிலையில் 2 மணி நேரம் மின் உலர்த்தியில் நன்கு உலர வைத்துப் பைகளில் அடைத்துப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

அடா-பாயாசம் தயாரிப்பு

அடா-பாயாசக் கலவையை லேசாகக் கழுவி விட்டு, இளஞ்சூடான நீரில் 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, நீரை வடித்து விட வேண்டும். பிறகு, அரை லிட்டர் பாலுடன் அரை லிட்டர் நீரைச் சேர்த்து வேக வைக்க வேண்டும். பிறகு, அதனுடன் ஒரு லிட்டர் பால் மற்றும் சீனியைச் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.

நன்றாகக் கட்டியானதும் ஏலக்காய்ப் பொடி மற்றும் வெண்ணெய்யைச் சேர்த்து இறக்கினால், சுவையான அடா- பாயாசம் தயார். இதைச் சூடாகச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

அதிரசக் கலவை

வரகையும் பச்சரிசியையும் 5-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, நன்றாக நீரை வடித்து விட்டு நிழலில் காய வைக்க வேண்டும். அடுத்து, 36 சதவீத ஈரப்பதத்தில் மாவாக இடித்துக் கொள்ள வேண்டும்.

மண்டை வெல்லத்தைக் கம்பிப் பதத்தில் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடியைச் சேர்த்து, வெல்லப்பாகை மாவில் ஊற்றி நன்றாகக் கிளற வேண்டும். இதை ஒருநாள் முழுவதும், அதாவது 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, இதைப் பக்குவமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவை, அறை வெப்ப நிலையில் 15-30 நாட்கள் வரையில் கெடாமல் இருக்கும்.

அதிரசம் தயாரித்தல்

அதிரசக் கலவையை வட்டமாகத் தட்டி எண்ணெய்யில் போட்டு வேக வைத்தால், சுவையான, சத்தான அதிரசம் தயார்.

வரகு அவல்

நன்றாகச் சுத்தம் செய்த வரகை 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, நன்றாக நீரை வடித்து விட்டு 15-18 சத ஈரப்பதம் இருக்குமாறு 2 மணி நேரம் நிழலில் வைக்க வேண்டும். இப்படி உலர்த்திய வரகை அவல் எந்திரத்தில் இட்டால் அவல் தனியாகக் கிடைக்கும்.

சிறுதானிய இணையுணவு

கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளை நன்கு சுத்தம் செய்து ஊற வைத்து முளைக்கட்ட வேண்டும். பின்பு, இதை உலர வைத்து வறுத்து மாவாக்க வேண்டும். இதுவே மால்ட் எனப்படுகிறது. இந்த மாவு, குழந்தைகளின் இணை உணவைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

முளைக்கட்டிய தானியங்களுடன் முளைக்கட்டிய பயறு வகைகளைச் சேர்க்கும் போது, உடலுக்குத் தேவையான சத்துகள் எளிதாகக் கிடைக்கும். எளிதாகச் செரிக்கும். கேழ்வரகு மற்றும் பாசிப்பயற்றைச் சேர்த்துச் செய்யும் இணை உணவே அதிகமாகப் பயன்படுகிறது.

கேழ்வரகு மாவைத் தயாரித்தல்

கேழ்வரகை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, நீரில் 10-12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அடுத்து, நீரை வடித்து விட்டுச் சுத்தமான துணியில் கட்டி வைக்க வேண்டும். அவ்வப்போது நீரை அதன்மேல் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் ஈரம் காய்ந்து விடாமல் நன்கு முளைவிடும்.

முளைவிட்ட பிறகு எடுத்து நிழலில் உலர்த்தி மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். பின்பு, மாவாக்கிச் சலித்துப் பயன்படுத்த வேண்டும். கேழ்வரகு மாவில் அதிகளவில் கால்சியம், புரதம், மெத்தியோனைன் என்னும் அமினோ அமிலம் ஆகியன அடங்கியுள்ளன. கேழ்வரகு மாவுடன் பொடித்த சர்க்கரை மற்றும் ஏலக்காயைப் பாலுடன் கலந்து சாப்பிடலாம்.

சிறுதானிய நூடுல்ஸ்

சிறுதானிய மாவு, மைதா, உப்பு போன்ற உலர் பொருள்களை ஒன்றாகச் சேர்த்து இளஞ்சூடான நீரில் கலந்து கட்டியாகப் பிசைந்து 10 நிமிடம் நீராவியில் வேகவிட வேண்டும். பின்பு, மாவுக் கலவையை அச்சிலிட்டு பிழிந்து 10 நிமிடம் நீராவியில் வேக வைத்து, வெய்யில் அல்லது மின் உலர்த்தியில் உலர வைக்க வேண்டும்.

நூடுல்ஸ் செய்முறை

நூடுல்ஸை நன்கு வேக வைத்து எடுத்துக் கழுவ வேண்டும். பிறகு, வேக வைத்த காய்கறிகள், நூடுல்ஸ் மற்றும் மசாலாவைச் சேர்த்து நன்கு சூடாக்கிச் சாப்பிடலாம்.

சிறுதானிய அடுமனை உணவுகள்

நம் நாட்டில் உணவைப் பதப்படுத்தும் தொழில்களில் அடுமனை உணவுப் பொருள்கள் உற்பத்தி முக்கியமானது. ஓராண்டில் பிரட், பிஸ்கட், கேக், பன், ரஸ்க் போன்ற உணவுகள் உற்பத்தி, 30 இலட்சம் டன்னுக்கும் மேலாகும். இன்றைய சூழலில், அதிகமாக விற்பனையாகும் அடுமனைப் பொருட்கள் பீஸாவும் பாஸ்தாவும் ஆகும்.

இந்தக் காலத்தில், உடல் நலத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதால், சிறுதானியங்கள், பயறு வகைகள் கலந்த அடுமனைப் பொருள்களுக்கு அதிகத் தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில், சாமை, வரகு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, சோயா மொச்சை போன்ற தானியங்கள் மற்றும் பயறு வகைகளை வைத்து அடுமனைப் பொருள்களைத் தயாரிக்கும் முறைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றைத் தயாரிப்பதன் மூலம் நார்ச்சத்து, புரதச் சத்துகள் நிறைந்த உணவுப் பொருள்களைப் பெறலாம்.


சிறுதானிய Dr. Elamaran

முனைவர் மு.இளமாறன், எ.சுமதி, அர.மணிமாறன், இரா.அகிலா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் – 602 025.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!