மீன் உணவுகளை உறையிடுதல்!

மீன் உணவு HEADING PIC 575b0ac942947d623757066f978e451d

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

றையிடுதல் (PACKING) என்பது, இன்றைய வணிகத்தில் மிகவும் தேவையாக உள்ளது. ஏனெனில், உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் பாதுகாப்பாகவும், குறைந்த விலையிலும் நுகர்வோரை அடைய, உறையிடுதல் அவசியம்.

நுகர்வோரின் நம்பிக்கைக்கு ஏற்ப, அனைவரையும் கவரும் விதத்தில் உணவுப் பொருள்களை அளிப்பது நல்லது. மேலும், நுண்ணுயிரிகள் தாக்காமல், உணவுப் பொருள்களை உறையிடுவது முக்கியம். எனவே, உறையிடுவதைப் பற்றியும், அதற்குப் பயன்படும் பொருள்களைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம்.

மீன் உணவுகளை உறையிடப் பல்வேறு வகையான பொருள்கள் பயன்படுகின்றன. இதில் சுமார் 200 வகைகள் உள்ளன. 85 ஆண்டுகளுக்கு முன்பே செல்லுலோசைப் பயன்படுத்தி, பிளாஸ்டிக் பிலிம் தயாரிக்கப்பட்டது. உறையிடப் பயன்படும் பொருள்கள் ஒவ்வொன்றும், ஈரப்பதம் உட்புகும் தன்மை, ஒளி ஊடுருவும் தன்மை, வெப்பத்தைப் பயன்படுத்தி அடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

உறையிடுவதன் அவசியம்

தூசி, நோய்க் கிருமிகள், தட்பபெவப்ப மாற்றங்கள் ஆகியவற்றால் பொருள்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. தரம், விலை, அடைக்கப்பட்ட தேதி, தரச்சான்று, உற்பத்தியாளர் முகவரி, பயன்பாடு, முடிவுறும் தேதி, பாதுகாக்கும் முறை போன்ற விவரங்கள் நுகர்வோருக்குத் தெரிய வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்களிடம் இருந்து கடைகளுக்கும், நுகர்வோருக்கும் எளிதில் கொண்டு செல்ல முடிகிறது.

உறைகளில் தேவைப்படும் சிறப்புக் கூறுகள்

பொருள்களை அடைக்கப் பயன்படுத்தும் பொருள்கள், உள்ளேயுள்ள பொருள்களைப் பார்க்க ஏதுவாக இருந்தால், அவற்றை நுகர்வோர் பார்க்கவும், நல்ல பொருள் தான் என நம்பிக்கை கொள்ளவும் வாய்ப்பாக அமையும். உறைகளில் இருந்து நீர் ஆவியாகாமல் இருப்பதும், வாயு புகாமல் இருப்பதும் நுகர்வோருக்கு மன நிறைவைத் தரும்.

உறைப் பொருள்கள்

கண்ணாடிப் புட்டிகள்: கண்ணாடிப் புட்டிகள் காலங்காலமாகப் பயன்படுகின்றன. முக்கிய உறைப் பொருளான இவை, பொருள்களைச் சுத்தமாகப் பாதுகாக்க உதவுகின்றன. இவை, வேண்டிய அளவு, வடிவங்களில் கிடைக்கும்.

உலோக டின்கள்: தரம் மேம்பட்ட தகர டின்கள், கனம் குறைந்த தகர டின்கள், அலுமினிய டின்கள் ஆகியன பயன்பாட்டில் உள்ளன. உலோக டின்களை விரைவாக உற்பத்தி செய்வது, பொருள்களை எளிதாக நிரப்புவது போன்றவற்றால் இவற்றின் பயன்பாடு கூடுகிறது.

இப்படி அடைக்கப்பட்ட பொருள்கள், துருவப் பகுதிகளில் உள்ள ஆய்வாளர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் போர் வீரர்களுக்கு மிகவும் பயன்படுகின்றன. இவற்றிலுள்ள குறை, சில டின்கள் கனமாகவும், பயன்படுத்திய பிறகு மூடவும் அகற்றவும் சிரமமாக இருப்பது தான்.

பிளாஸ்டிக்: இது தேவையான அளவுகளில் கிடைக்கும். சுருங்கி விரியும். குறைந்த அடர்த்தியுள்ள பாலி எத்திலீன், உயர் அடர்த்தி பாலி எத்திலீன், பாலி புரோபைலீன், பாலி ஸ்டெய்ரீன், பாலிவினைல் குளோரைடு, பாலி எத்திலீன் டெரிப்தேலெட், பாலி கார்பனேட் ஆகிய பிளாஸ்டிக் உறைகள் தற்போது பயனில் உள்ளன.

மேலும், பாலிவினைலின் குளோரைடு, பாலி அமைடு, பாலி அக்ரி அனிட்ரைல், எத்திலீன் வினைல் ஆல்கஹால் ஆகிய, அதிகத் தடுப்புத் தன்மையுள்ள பிளாஸ்டிக் உறைகளும் பயனில் உள்ளன.

எளிதாகக் கையாளுதல் மற்றும் உறுதித் தன்மைக்காக, பிளாஸ்டிக் உறைகள் பயன்படுத்தப் படுகின்றன. உள்ளேயுள்ள பொருள்களின் மணம் வெளியே செல்வதைத் தடுத்தல், வெளியிலுள்ள பொருள்களின் மணம் உள்ளே செல்வதைத் தடுத்தல் மற்றும் வாயு நுழைவதைத் தடுப்பதை, பிளாஸ்டிக் உறைகள் உறுதி செய்கின்றன.

நுண்ணலைப் பெட்டியில் தயாரித்த மீன் உணவுகளை உறையிடுதல்

நுண்ணலைப் பெட்டியில் (MICRO WAVE OVEN) தயாரிக்கப்படும் மீன் பொருள்களை அடைப்பதற்கு, காற்று அழுத்தத்தைத் தாங்கும் பொருள்கள் தேவை. மேலும், கூடுதலான வெப்பத்தைத் தாங்கவும், தயாரிக்கப்பட்ட மீன் பொருள்களை மறுபடியும் சூடுபடுத்தும் போது தாங்கவுமான ஆற்றல் இருக்க வேண்டும்.

இந்த உறைகளில் அடைக்கப்பட்ட பொருள்களை, நுண்ணலைப் பெட்டியில் வைக்கும் போது, நுண்ணலைகள் இவற்றுள் ஊடுருவிச் செல்ல ஏதுவாக இருக்க வேண்டும். பாலி எத்திலீன் டெரிப்தாலேட் மூலம் உருவாக்கப்பட்ட வளைந்த முனை குழித்தட்டுகள், பல்வேறு வகையான மீன் பொருள்களை அடைப்பதற்கு ஏதுவாக உள்ளன.

மாவு, ரொட்டித்தூள் கலந்த மீன் பொருள்களை அடைத்தல்

இவ்வகைப் பொருள்களுக்காக பாலிஸ்டைரின் உறைகள் பயன்படுகின்றன. இவற்றின் உட்புறக் கீழ்ப்பகுதியில் தட்டு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மேல் பாலித்தீன் உறைகள் வைக்கப்பட்டிருக்கும்.

அவற்றுள் நீரை உறிஞ்சும் உப்புப் பொட்டலங்கள் மற்றும் வளைவுகளைக் கொண்ட பிளாஸ்டிக் தட்டுகள் இருக்கும். இவ்வகை உறைகள் குளிரூட்டிய மீன்களை எடுத்துச் செல்ல உதவுகின்றன.

மாவில் தேய்த்து, ரொட்டித் தூளைக் கலந்து தயாரிக்கும் பொருள்களில், மாவும் ரொட்டித் தூளும் உதிராமல் பாதுகாக்க வேண்டும். அதற்காக, குளிர்ப்பதனம் செய்து அடைப்பதற்கு முன்பு, மீன் பொருள்களைச் சுடு எண்ணெய்யில் விரைவாகப் பொரித்து விடுகிறார்கள்.

இத்தகைய மீன் பொருள்களை, காகித அட்டைப் பெட்டிகள் அல்லது பாலித்தீன் உள்ளடங்கிய காகித உறைகள் அல்லது பாலித்தீன் உறைகளில் அடைத்து வைக்கலாம்.

காற்றுச்சூழல் மாற்றப்பட்ட உறை

இவ்வகை உறைகளின் அடிப்பகுதி, வெப்பத்தைத் தாங்கும் பிவிசி பொருளால் தயாரிக்கப்பட்டு, அவற்றுள் வைக்கப்படும் மீன்கள், வெப்பம் மூலம் அடைக்க ஏதுவான பாலி அமைடால் மூடப்படும்.

இம்முறையில் அடைக்கும் போது, அதிலுள்ள காற்றை வெளியேற்றி விட்டு, அதற்குப் பதிலாக, ஒன்று அல்லது பலவகை வாயுக்களை நிரப்புவர். மீன் உணவுப் பொருள்களைப் பொறுத்து, பயன்படுத்தும் வாயுக்கள் மாறுபடும்.

வெப்பப் பதனப் பொருள்களை உறையிடுதல்

வெப்பப் பதனம் செய்யப்பட்ட பொருள்களை அடைத்து வைக்க, கலன்கள் பயன்படுகின்றன. ஆனால், தற்போது சாஸ் முதலான பொருள்களுடன் மீன் சேர்க்கப்படுவதால், அவை கலன்களுடன் கலந்து வேறுவிதக் கலவையை உருவாக்கி விடுகின்றன.

அதனால், கலன்களுக்குப் பதிலாக, வெப்பம் தாங்கும் உறைகள் பயன்படுத்தப் படுகின்றன. இத்தகைய உறைகளின் மேற்பகுதி பாலி புரோப்பிலீன், நடுப்பகுதி அலுமினியம், உட்பகுதி பாலி எத்திலீன் ஆகிய மூன்று அடுக்குப் பொருள்களால் ஆனவை. இந்த உறைகளின் மேற்பகுதி எளிதில் சேதமாவதால், அப்பகுதி, பாலி எத்திலீன் அல்லது அட்டைப் பெட்டிகள் மூலம் காக்கப்படுகின்றன.

பன்னடுக்குகளின் அவசியம்

பாலியெஸ்டர்: வெப்பத்தைத் தாங்கவும், அச்சிடவும், வேறிடங்களுக்கு அனுப்பும் போதும், வைப்பறையில் இருக்கும் போதும், தவறுதலாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.

அலுமினியத் தாள்: ஒளி மற்றும் வாயுக்கள் உட்புகுவதைத் தடுத்து, பொருள்களை வெகு நாட்கள் பாதுகாக்கிறது.

பாலி புரோபைலின்: உறுதி, வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் மற்றும் வெப்பத்தைப் பயன்படுத்தி அடைக்க உதவுகிறது.

பன்னடுக்கு உறையின் நன்மைகள்

நீண்ட நாட்களுக்குப் பொருள்களைப் பாதுகாக்கலாம். பொருள்களை அறை வெப்ப நிலையிலேயே வைக்கலாம். பொதிகள் லேசாக இருப்பதால், வெப்பம் புகும் தன்மை கூடி, குறைந்த நேரத்தில் பாதுகாக்கவும், உணவின் ஊட்டம் குறைந்து விடாமல் இருக்கவும் உதவுகிறது.

எளிதில் திறக்கலாம். எடை மிகவும் குறைவு. இதை வைப்பதற்கு, குறைந்த இடமே போதும். கொதிக்கும் நீரில் உறைகளை ஐந்து நிமிடம் வைத்திருந்து உடனே பயன்படுத்த முடியும். பயன்படுத்திய பின்பு எளிதில் அகற்றலாம்.

பன்னடுக்கின் குறைகள்

இதற்கெனச் சிறப்பு வெப்பக் கலன்கள் தேவை. அதிகச் செலவாகும். உறைகளை வைப்பதற்கு, காகித அட்டைப் பெட்டிகள் தேவைப்படுவதால், செலவு கூடுதலாகும். ஒரு நிமிடத்தில் 30-60 உறைகளை மட்டுமே நிரப்ப முடியும்.


ஆ.மதிவாணன், மு.முருகானந்தம், ப.சுந்தரமூர்த்தி, யூ.ஹீனோ பெர்னாண்டோ, டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி, தலைஞாயிறு, நாகப்பட்டினம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!