வறட்சியில் வளரும் சோற்றுக் கற்றாழை!

சோற்றுக் கற்றாழை aloe Copy

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019

குமரி எனப்படும் சோற்றுக் கற்றாழை வறட்சிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற மருந்துச் செடியாகும். உலகளவில் பல்வேறு அழகு மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. அலோ பார்படென்ஸிஸ் அல்லது அலோவீரா எனப்படும் இது, லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் ஆப்பிரிக்காவாகும். கிரீஸ், பாப்படோஹ் தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கிறது. இந்தியாவில், இராஜஸ்தானில் ஆழ்வார், ஆந்திரத்தில் சட்நாபள்ளி, குஜராத்தில் ராஜபிப்லா, தமிழ்நாட்டில் சேலம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

கற்றாழையில் இருந்து எடுக்கப்படும் ஜெல் என்னும் கூழ், சருமத்தின் ஈரத்தன்மையைக் காக்கிறது. அதாவது, சூரிய ஒளியுடன் கலந்து வந்து கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா, எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதற்காக, கற்றாழையைச் சேகரித்துப் பதப்படுத்தி, மருந்துப் பொருள்களில் மற்றும் சருமப்பசை, சவரப்பசை, குளியல் பசை ஆகியவற்றில் பயன்படுத்துகின்றனர். தரமான கற்றாழைக் கூழைத் தயாரிக்கும் நோக்கில், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், குர்குவா ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது.

கற்றாழையின் மருத்துவச் சிறப்பை கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க மக்கள், கற்றாழையின் மருத்துவச் சிறப்பை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினர். இதில் அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. அலோயின் 4-25% வரையில் உள்ளது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடற்புண் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக்காயம் ஆகியவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

இரகங்கள்

கற்றாழையில், குர்குபா கற்றாழை-அலோ பார்படென்ஸிஸ், கேப் கற்றாழை-அலோ பெராக்ஸ், சாகோட்ரின் கற்றாழை-அலோ பெர்ரி ஆகிய மூன்று வகைகள் பயிரிடப்படுகின்றன. இவற்றில் முதல் இரண்டு வகைகளில் இருந்து பார்பலோயின், அலொஎமோடின் ஆகிய வேதிப்பொருள்கள் எடுக்கப்படுகின்றன. இவற்றின் கூழிலிருந்து எடுக்கப்படும் முசபார் என்னும் மருந்துப் பொருள் வலி மருந்தாகப் பயன்படுகிறது. கேப் கற்றாழை கால்நடை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

கற்றாழையில் ஜான்சிபார், யுகாண்டா, நேட்டல், ஜபராபாத் ஆகியன தரம் வாய்ந்தவை. இவற்றின் கூழ், கண்ணாடியைப் போன்ற தோற்றத்திலும், மருத்துவத் தன்மை உடையதாகவும் உள்ளது.

இந்தியா முழுவதும் அலோ பார்படன்சிஸ் என்னும் அலோவீரா உள்ளது. இது வறட்சி நிலையில் கடல் மட்டத்திலிருந்து 4,000 அடி உயரம் வரையுள்ள மலைகளில் வளர்கிறது. இலைகள் தடித்து, சற்றுச் சிவப்புக் கலந்த பச்சை நிறத்தில், 30-60 செ.மீ. நீளத்தில் சிறிய முட்களுடன் இருக்கும். நட்ட இரண்டாம் ஆண்டில் தான் கற்றாழை பூக்கும். ஆனாலும், மகரந்தங்கள் செயலற்றவை என்பதால் காய்ப்பதில்லை. இதனால், பக்கக் கன்றுகள் மூலம் தான் கற்றாழையைப் பயிரிட வேண்டும்.

மண்வளம்

மணற்பாங்கான மண், பொறை மண் கற்றாழையைப் பயிரிட ஏற்றவை. எனினும் எல்லாவகை மண்ணிலும் பயிரிடலாம். காரத்தன்மை 7.0-8.5 உள்ள மண்ணில் கற்றாழை வளரும். நல்ல வடிகால் வசதியுள்ள மணல்சார் நிலம் மிகவும் ஏற்றது.

தட்ப வெப்பம்

வறட்சியான சூழலில், அதாவது, 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமுள்ள பகுதிகளில் நன்கு பயிரிடலாம். தமிழ்நாட்டில், இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடலாம்.

பயிர்ப் பெருக்கம்

தாய்ச் செடியிலிருந்து 1-2 மாதப் பக்கக் கன்றுகளைப் பிரித்து நட வேண்டும். ஒரே அளவிலான கன்றுகளை நடுவது முக்கியம். இதனால், செடிகள் சீராக வளர்ந்து ஒரே நேரத்தில் அறுவடைக்கு வரும். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்த கலவையில், கன்றுகளை ஐந்து நிமிடம் நனைத்து நடவு செய்தால் அழுகல் நோயைத் தடுக்கலாம். கற்றாழையைத் தனிப்பயிராகப் பயிரிட, எக்டருக்குப் பத்தாயிரம் கன்றுகள் தேவைப்படும்.

நடவுப் பருவம்

சூன், சூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முதிரும்போது ஓரளவு வறட்சியான சூழல் இருந்தால், தரமான கூழ் கிடைக்கும். இதற்குச் செப்டம்பர் அக்டோபரில் பயிரிடுவது நல்லது.

நிலத் தாயாரிப்பு

நிலத்தை இருமுறை உழுது எக்டருக்கு 10 டன் தொழுயெருவை இட்டு, சிறியளவில் பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்கு, செடிக்குச் செடி மூன்றடி இடைவெளி இருக்க வேண்டும். மலைச்சரிவுகளின் குறுக்கே சிறிய பார்களை அமைத்து அடிப்பகுதியில் கன்றுகளை நடுவது நல்லது.

உரமிடுதல்

தேவைக்கேற்ப இரசாயன உரங்களை இட வேண்டும். கூளமான நிலத்தில் தொழுவுரம் மட்டும் போதும். தரிசு மற்றும் வளமில்லா நிலத்தில், செடிகளை நட்ட 20 நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இட வேண்டும். இதனால் அதிகளவில் கூழ் கிடைக்கும்.

பாசனம்

கற்றாழையை மானாவாரியாகப் பயிரிடலாம். மராட்டியத்தில் இப்பயிரை ஆண்டுக்கு இருமுறை பயிரிடுகின்றனர். கோடையில் பயிரிட்டால், அதன் மொத்த வளர்ச்சிக் காலத்தில் நான்கைந்து முறை பாசனம் அளிக்கின்றனர்.

பயிர்ப் பாதுகாப்பு

கற்றாழையில் பூச்சி, நோய்த் தாக்குதல்கள் அதிகமாகத் தோன்றுவதில்லை. நீர்த் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும். இதைத் தடுக்க, நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

அறுவடை

முறையாகப் பயிரிடும்போது நட்டு 6-7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். இப்போது, அலோயின் வேதிப்பொருள் மிகுதியாக இருக்கும். செடிகளை வேரோடு பிடுங்கி, இலைகளை ஆறுமணி நேரத்துக்குள் பக்குவப்படுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

விளைச்சல்

எக்டருக்கு 15 டன் கற்றாழை இலைகள் கிடைக்கும். இலையில் 80-90% நீர் இருப்பதால் விரைவில் கெட்டு விடும். எனவே, அறுவடை செய்ததும் இலைகளைப் பக்குவப்படுத்திக் கூழைப் பிரித்தெடுக்க வேண்டும்.


சோற்றுக் கற்றாழை CHITRA e1615571068545

முனைவர் இரா.சித்ரா,

முனைவர் த.ஜானகி, முனைவர் மொ.பா.கவிதா, 

தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம், தேனி மாவட்டம்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!