சுத்தமான பாலுற்பத்தியில் மடியின் பங்கு!

சுத்தமான பாலுற்பத்தி heading pic 9 scaled e1613731932750 768x515 1

பால் ஒரு முழு உணவாகும். பாலை மதிப்பூட்டித் தேனீர், தயிர், மோர், பால்கோவா, ரோஸ் மில்க், சாக்லேட் மில்க், கேரட் மில்க், பாதாம் மில்க் போன்ற சுவையூட்டிய பால், சன்னா ரசகுல்லா, ஜஸ்கிரீம் என விதவிதமான பொருள்களைத் தயாரிக்கிறோம். இந்த அனைத்துப் பொருட்களுக்கும் மூலம், பாலிலுள்ள கொழுப்பு மற்றும் பொழுப்பில்லாச் சத்துப் பொருட்கள். இப்படி மதிப்பூட்ட வேண்டுமெனில், பாலானது சுத்தமாக இருக்க வேண்டும். பால் கெட்டுப் போக முக்கியக் காரணம், பால்மடியும், காம்பும் சுத்தமில்லாமல் இருப்பதேயாகும். எனவே, பால்மடி மற்றும் காம்பில் ஏற்படும் பாதிப்புகளால் பாலின் தூய்மை எப்படிப் பாதிக்கிறது, இந்தப் பாதிப்பை எப்படித் தடுப்பது என்பதைப் பார்க்கலாம்.

பாலுற்பத்தி மற்றும் வரத்து இடையூறுக்கான காரணங்கள்

மடிநோய், மடியில் இரத்தக்கட்டு, மடியில் சீழ்க்கட்டு, மடியில் மருக்கள், காம்பின் துளையில் காயம், காம்பு பிஸ்துலா, காம்பில் சிராய்ப்பு, அம்மை நோய்க் கட்டிகள், எர்பஸ் வைரஸ் காம்பு ஒவ்வாமை, 5 அல்லது 6 காம்புகள் இருத்தல், பாலில் இரத்தம் கலந்து வருதல், கைமுட்டிப் பால் கறப்பால் ஏற்படும் காம்பு வீக்கம், காம்பில் இரத்தக்கட்டு, கோமாரி நோயால் ஏற்படும் காம்பு மற்றும் மடிப் புண்கள், பால் கறவை இயந்திரத்தில் அழுத்தம், பால் காம்பு கப்பு சரியாக இல்லாமல் இருத்தலால் ஏற்படும் காயங்கள்.

இவ்வாறு காம்பின் நுனி அல்லது மேல்பகுதியில் காயங்கள் அல்லது தசை வளர்ச்சியிருப்பின் அவை நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு இடமளிக்கும். மடிநோய்க்குக் காரணமான ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் மற்றும் ஸ்டிரெப்டோகாக்கஸ் டிஸ்காலக்ஸியே நுண்ணுயிரிகள் அதிகளவில் பெருகும்.

காம்பில் மருக்கள் ஏற்படக் காரணம் நச்சுயிரிகளாகும். மனிதர்களின் கையில் இருக்கும் மருக்களால் பாலைக் கறக்கும் போது காம்புகளில் பரவுகிறது. சிறு மருக்களால் பால் கறவையில் எந்தத் தொந்தரவும் இருக்காது. பெரிதாக இருப்பின் பாலைக் கறக்க இடையூறாகவும், பால் தேங்கிக் கெட்டுப் போகவும் வாய்ப்பாகும்.

காம்பில் ஏற்படும் மருக்கள், காயங்கள்

இயற்கையாக அல்லது கைமுட்டிப் பால் கறவையால் ஏற்படும் காம்பின் தசை வளர்ச்சி, பாலோட்டக் குறைகளை ஏற்படுத்தும். அதிகப்படியான காம்போ அல்லது பிஸ்துலாவோ இருப்பின் அதன் வழியாக மடிநோய் ஏற்படும். நச்சுயிரி அல்லது நுண்ணுயிரிகள் உள்ளே சென்று பாலின் தன்மையை, பால் சுரப்பைக் குறைக்கும்.

கைமுட்டிப் பால் கறத்தல், காம்பில் பிஸ்துலா

ஈன்ற மாடுகளில் மடி மற்றும் காம்புகள் நீர் கோர்த்ததைப் போல வீங்கும். அச்சமயம் கொழுப்பு மற்றும் சத்துகள் இல்லாமல் நீரைப் போலப் பால் வரும். மடியிலும் காம்பிலும் உள்காயங்கள் ஏற்பட்டால் அல்லது சிறிய இரத்த நாளங்கள் வெடித்தால், பாலில் இரத்தம் கலந்திருக்கும். இதை உணவாகப் பயன்படுத்த முடியாது.

சுத்தமான பாலுற்பத்தி

கறவைக்கு முன்னும் பின்னும் மாட்டின் பின் பகுதியை குளிர்ந்த நீரால் மடி மற்றும் காம்பை நன்கு கழுவ வேண்டும். கறவையாளர் சோப்பால் தன் கைகளை நன்கு கழுவிவிட்டுக் கறக்க வேண்டும். கறவையாளரின் கையில் வெட்டுக்காயம், நீண்ட நகம் மற்றும் மருக்கள் இருக்கக் கூடாது. மடி, காம்பு மற்றும் தரையை 1:1000 விகிதத்தில் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலால் கழுவ வேண்டும். கறவை முடிந்ததும் மாட்டைப் படுக்க விடக் கூடாது. இதற்குத்  தீவனத்தைக் கொடுக்கலாம். கொட்டகையும் சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

காம்பில் சிராய்ப்பு அல்லது காயமிருப்பின் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சையளிக்க வேண்டும். மாட்டுக்குச் சத்தான தீவனம் மற்றும் பசும்புல்லைக் கொடுக்க வேண்டும். கறவைப் பாத்திரத்தை நன்கு கழுவிக் காய வைத்துப் பயன்படுத்த வேண்டும். பால் திரித்திரியாக இருந்தால் அது மடிநோய் வந்ததற்கான அறிகுறி. எனவே, கால்நடை மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும்.

மடி மற்றும் காம்புகளில் நீர் கோர்த்ததைப் போல இருந்தால், சோற்றுக் கற்றாழை ஒரு மடல், மஞ்சள் 50 கிராம், சுண்ணாம்பு பாக்கு அளவு, 2 எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து, மடி மற்றும் காம்பில் முதல் நாளில் 6 வேளையும், அடுத்த நாட்களில் 3 வேளையும் என, மொத்தம் 3 நாட்கள் தடவிவர மடிவீக்கம் குறையும்.


PB_VENKATESAN

மரு.மா.வெங்கடேசன்,

மரு.மு.வீரசெல்வம், மரு.ப.செல்வராஜ், மரு.சோ.யோகேஸ் பிரியா,

மரு.கோ.ஜெயலட்சுமி, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு-614625.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!