இராணித் தேனீக்களின் இராணி!

இராணித் தேனீ 13335760 1203586729660757 4709496152781414272 n

முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் நம்பிக்கை வரிகளை மனதில் கொண்டு, வாழ்க்கையில் நிகழும் துயரங்களைப் புறந்தள்ளி விட்டுத் தொடர்ந்து உழைப்பவர்கள், வெற்றிச் சிகரத்தை அடைந்தே தீருவார்கள் என்பது வரலாற்று உண்மை. இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு, கடச்சனேந்தல் ஜோசபின். பிறந்த வீட்டில் இருந்த நிம்மதி, புகுந்த வீட்டில் இல்லாமல் தத்தளித்த பெண்களின் பட்டியலில் இவரும் அடக்கம்.

கணவர் வீட்டிலிருந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, ஆசையாய்ப் பெற்றெடுத்த பிள்ளைகளை வளர்க்க, இவரும் சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது இவரின் கண்ணில் பட்டது, தேனீ வளர்ப்புப் பயிற்சி. மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இப்பயிற்சியைப் பெற்ற இவர், தான் பிறந்த சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியில் பத்துப் பெட்டிகளுடன் தேனீ வளர்ப்பைத் தொடங்குகிறார். தொடக்க வருமானம் சுமாராக இருந்தாலும், போகப்போக, சிறப்பாக இருக்கும் என்னும் நம்பிக்கையில், தேனீ வளர்ப்பில் கவனமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நேரம் பார்த்து, இவரின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில், ஈன்றெடுத்த அன்பு மகளும், ஆசைக் கணவரும் நோயுற்றுக் காலமாக, சுக்குநூறாய் நொறுங்கிப் போகிறார்; “இனி யாருக்காக வாழ வேண்டும்?’’ என்னும் கடும் மனத்தளர்ச்சிக்கு உள்ளாகிப் போகிறார் ஜோசபின். சில நாட்களில், தன்னைச் சுற்றிச் சுற்றி வரும் மகனின் எதிர்கால நினைப்பு கவனத்தில் வர, “இந்த ஜீவனைக் காக்க வேண்டுமே?’’ என்னும் கடமையுணர்வில், கடும் கவலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்ட ஜோசபின், மீண்டும் தேனீ வளர்ப்பில் ஈடுபட, அது, கோடிகள் புரளும் தேன் வணிகத்தையும், தேசியளவில் விருதுகள் என்னுமளவில் சமூக உயர்வையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த வெற்றி எப்படிக் கிடைத்தது என்பது குறித்து அவர் நம்மிடம் கூறியதாவது:

“இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் அருமையான உணவு தேன். நீண்ட வாழ்நாளைத் தரும் இந்தத் தேனை, தங்களின் இருப்பிடத்தில் இருந்து இரண்டு கிலோ தொலைவு வரையில் மலர்களைத் தேடிச் சென்று சேகரித்து வரும் தேனீக்கள், நமக்குத் தேனை மட்டும் தரவில்லை; அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிர்களை எல்லாம் விளைய வைத்து, நமக்கு விதவிதமான உணவுப் பொருள்கள் கிடைக்கக் காரணமாக இருக்கின்றன.

உழைப்புக்கும் சுறுசுறுப்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தேனீக்கள் இல்லாமல் போனால், மனித இனமும் உணவின்றி அழிந்து விடும். அதனால் தான் உலகளவில், தேசியளவில், தேனீ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பொருளைத் தேடும் நோக்கத்தில் நான் தொழிலைத் தேடியபோது எனக்கு முதல் வாய்ப்பாக அமைந்தது இந்தத் தேனீ வளர்ப்பு. மற்றபடி தேனீ வளர்ப்பில் தான் ஈடுபட வேண்டும் என்னும் திட்டமிடல் எதுவும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், பணத்துக்காக நான் தொடங்கிய தேனீ வளர்ப்பு, மாபெரும் சமூக நன்மைக்கானது என்பதை அறிந்தபோதும், அதை நினைக்கும் போதும் எனக்குப் பெருமையாக இருக்கிறது.

அதனால், 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய தேனீ வளர்ப்பில், தேனீக்களைப் போலவே சுறுசுறுப்பாக இயங்கி வருகிறேன். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சியைப் போல, பழுப்புப் புரட்சியில் எனது கடமையைச் சிறப்பாகச் செய்யும் நோக்கத்தில், வீட்டுக்கொரு தேனீப்பெட்டி குடும்பத்துக்கு ஆயுள் கெட்டி என்னும் முழக்கத்துடன் ஈடுபட்டு வருகிறேன். தாங்க முடியாத துயரங்கள் என்னை வாட்டியெடுத்த போது, தன்னந்தனி மனுஷியாக நான் தொடங்கிய தேனீ வளர்ப்பு, இன்று நூறு பேருக்கு வேலையைக் கொடுத்து அவர்களின் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இராணித் தேனீ DSC00444 Copy

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் ஆறு இடங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் தேனீ வளர்ப்பு மையங்கள் உள்ளன. இதைப்போல, கேரளத்திலும், கர்நாடகத்திலும் தேனீ வளர்ப்பு மையங்கள் உள்ளன. இவ்வகையில், மொத்தம் ஏழாயிரம் தேனீப் பெட்டிகள் மூலம், மாதந்தோறும் 5,000-7,000 கிலோ தேன் கிடைக்கிறது. ஒரு கிலோ தேனை நானூறு ரூபாய்க்கு விற்கிறோம். நாவல் தேன், வேம்புத் தேன், சூரியகாந்தி தேன், முருங்கைத் தேன் என, பலவகைத் தேனை உற்பத்தி செய்கிறோம்.

தேன் உற்பத்தியில் ஈடுபடுவதை விட, நமக்கு உண்மையான நண்பர்களாக விளங்கும் தேனீக்களை, இந்த மண்ணில் பெருக்க வேண்டும் என்பது எனது தாகமாக இருந்தது. அந்த வகையில், பூனா, பஞ்சாப்புக்குச் சென்று பயிற்சி எடுத்தும், அனுபவத்தின் மூலமும், இராணித் தேனீக்கள், ஆண் தேனீக்கள், வேலைக்கார தேனீக்களை உற்பத்தி செய்து, தேனீப் பெட்டியுடன் விற்பனை செய்கிறோம். ஒரு தேனீப் பெட்டியில் ஒரு இராணித் தேனீ, 50-100 ஆண் தேனீக்கள், 15,000 வேலைக்கார தேனீக்கள் இருக்கும்.

எங்களிடம், 2,000, 2,500, 4,000 ரூபாய் விலையில், தேனீப் பெட்டிகள் விற்பனைக்கு உள்ளன. மாதந்தோறும் இரண்டு, நான்காம் சனிக்கிழமையில், தேனீ வளர்ப்புப் பயிற்சியை வழங்கி, தேனீ வளர்ப்போரை உருவாக்கி வருகிறோம். அரசாங்கம் விவசாயிகளைத் தேனீ வளர்ப்பில் ஈடுபடுத்தும் பொருட்டு, தேனீப் பெட்டிகளை வழங்கி வருகிறது. இந்தத் தேனீப் பெட்டிகளை, வேளாண்மைத் துறைக்கு, தோட்டக்கலைத் துறைக்கு வழங்குகிறோம். இவ்வகையில், அரசாங்கம் எங்களுக்கு உதவியாக இருக்கிறது. எங்களின் தேனீ வளர்ப்புக்கு வங்கிகளும் உதவி செய்கின்றன.

தேனீக்களைப் பற்றிய அறியாமை இருந்த காலத்தில் அவற்றைப் பார்த்துப் பயந்தோம். இப்போது தேனீக்கள் கொட்டுவது கூடச் சுகம் தான் என்பது தெரிய வந்திருக்கிறது. தேனீக்கள் கொட்டினால் நோயெதிர்ப்புச் சக்தி, நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும், இரத்தழுத்தம், சர்க்கரை, மூட்டுவலி, நரம்பு நோய்கள் குணமாகும் என்றும் தெரிந்து, நிறையப் பேர்கள் அன்றாடம் எங்கள் பண்ணைக்கு வந்து தேனீக்களிடம் கொட்டு வாங்கிச் செல்கிறார்கள். இதை இலவசமாகச் செய்து கொடுக்கிறோம்.

இப்படி, தேன், தேனீ சார்ந்த எனது கடின உழைப்பைப் போற்றும் வகையில், தேசியளவிலான விருதுகள் மற்றும் தமிழக அரசு, தனியார் நிறுவனங்கள் மூலம் என, சுமார் அறுபது விருதுகளைப் பெற்றுள்ளேன். இந்தியளவில் சிறந்த பெண் தேனீ வளர்ப்பாளர் விருதும் கிடைத்துள்ளது. நான் பெறும் ஒவ்வொரு விருதும் எனக்கு ஊக்கச் சக்தியாக இருக்கிறது. அதனால், மென்மேலும் இந்தப் பழுப்புப் புரட்சியில் சாதிப்பேன் என்னும் நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.

இராணித் தேனீக்களின் இராணியாக மட்டுமின்றி, அவற்றின் உற்ற தோழியாகவும் விளங்கும் ஜோசபினின் நம்பிக்கை ஈடேற வேண்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம். மேலும் விவரங்களுக்கு: 98420 55047.


பொ.பாண்டி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!