My page - topic 1, topic 2, topic 3

மக்காச்சோளத்தைத் தாக்கும் நோய்கள்!

மக்காச்சோள

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச்.

தெற்கு மெக்சிகோவில் தோன்றிய மக்காச்சோளம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதீத சத்துகளைக் கொண்ட இது, உலகில் முக்கிய உணவுப் பயிராக, கோதுமை, நெல்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க, அண்மைக் காலமாக வீரிய ஒட்டு இரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

அதே நேரம், இப்பயிர் நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாவதால், அதிகளவில் விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

அடிச்சாம்பல் நோய்

இலையில் வெளிறிய கீற்றுகள் தோன்றுவது இதன் முக்கிய அறிகுறி. செடி குட்டையாக, வளர்ச்சிக் குன்றி, கணு இடைவெளி குறைந்து காணப்படும். வெண் சாம்பல் பூச்சானது, இலையின் அடியிலும், அதற்கு இணையான இலையின் மேற்பரப்பிலும் காணப்படும்.

முழுமையாக விரியாத பசுமையான ஆண் மலர்களின் உறையில் இப்பூச்சுக் காணப்படும். ஆண் மலரில் சில சமயம் சிறிய இலைகளைப் போன்ற பகுதி தோன்றும். இந்த இலைகளிலும் சாம்பல் பூச்சு இருக்கும். தண்டின் பக்க மொட்டுகளில் இருந்து, பக்கக் கிளைகள் தோன்றும்.

இலைக்கருகல் நோய்

இளம் பயிரைத் தாக்கக் கூடியது. சிறிய, மஞ்சள் நிற வட்ட அல்லது நீள்வட்டப் புள்ளிகள் இலைகளில் தோன்றும். பிறகு, இப்புள்ளிகள், நடுவில் சாம்பல் நிறத்தில், பழுப்பு நிற விளிம்புடன், நீள்வட்டப் புள்ளிகளாக விரியும்.

அடுத்து, புள்ளிகள் ஒன்றாக இணைந்து முழுவதும் பரவ, இலை கருகி விடும். புள்ளிகளின் மீதும் பசுமை கலந்த ஆலிவ் நிறத்தில், பஞ்சைப் போன்ற பூசண வித்துகளும், பூசண இழைகளும் காணப்படும்.

துருநோய்

இலையின் அடிப்பகுதியில் சிறிய பருவைப் போன்ற துகள்கள் ஆங்காங்கே தோன்றும். இலையின் மேற்பரப்பில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.

பயிர் முதிர்ச்சி அடையும் போது, துகள்கள் பழுப்பு மற்றும் கறுப்பாக மாறும். அடிப்பகுதி முழுவதும் புள்ளிகள் இணைந்து துருப் பிடித்ததைப் போல, செம்பழுப்பு நிறத்தில் பூசண வித்துகள் காணப்படும்.

தலைக் கரிப்பூட்டை நோய்

இது, மக்காச்சோளக் கதிரிலும், ஆண்மலர்க் கதிரிலும் காணப்படும். பெரிய கரிப்பூட்டை விதைப் பைகள் கதிர் இருக்கும் இடத்தில் காணப்படும். ஆண் மலர், பகுதியாக அல்லது முழுமையாக, விதைப் பைகளாக மாறியிருக்கும்.

தனித்தனியாக அல்லது அனைத்து மலர்களும் இலையைப் போல மாறி இருக்கும். கரிப்பூட்டை தாக்கிய செடி, வளர்ச்சிக் குன்றி, மற்ற பயிர்களை விடப் பசுமையாக, விளைச்சல் குறைந்து காணப்படும்.

கரிக்கோல் அழுகல் நோய்

இது, இளம் நாற்றுகளின் வேரைத் தாக்கும். நோயுற்ற பயிர் வாடியிருக்கும். பலவீனமான பயிரின் தண்டில் பழுப்புக் கோடுகள் காணப்படும். தண்டுக்குள் இருக்கும் திசு, பழுப்பு நிறத்தில் நார் நாராக உரிந்திருக்கும்.

மேலும், சிறிய, கடுகைப் போன்ற கரும் பூசண வித்துத் தொகுப்புகள் ஆங்காங்கே காணப்படும். திசுப்பகுதி நாராகப் பிரிந்து விடுவதால், தலைப்பகுதி பலவீனமாகி, தண்டு ஒடிந்து காணப்படும். வேர்ப்பகுதியும் உரிந்து காணப்படும்.

ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை

கோடையுழவு செய்ய வேண்டும். நோயுற்ற இடத்தில் கிடைக்கும் விதைகளைப் பயிரிடக் கூடாது. இலைக்கருகல் நோய், துருநோய் மற்றும் அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைப் பயிரிட வேண்டும். பயிர்ச் சுழற்சியைக் கையாள வேண்டும்.

நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். எக்டருக்கு 150 கிலோ வேப்பம் புண்ணாக்கை, அடியுரத்தில் கலந்து இட வேண்டும். பொட்டாசிய வகை உரத்தைப் பயிருக்கு இட்டால், நோய்ச் சேதம் குறையும்.

அடிச்சாம்பல் நோயால் தாக்கப்பட்ட செடிகளை, அறிகுறிகள் தெரிந்ததும் பிடுங்கி அழிக்க வேண்டும். பூசணக் கொல்லியான மெட்டாலக்சில் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 6 கிராம் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு திரம் 2 கிராம் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது சூடோமோனாஸ் புளோரசன்சை எடுத்து, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து, பத்து நாட்கள் வைத்திருந்து இட வேண்டும்.

நோயின் அறிகுறி தெரியும் போது, எக்டருக்கு ஒரு கிலோ மெட்டாலக்சில் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேங்கோசெப் அல்லது எக்டருக்கு 500 மில்லி ஹெக்சகோனசோல் வீதம் தெளிக்க வேண்டும். பூக்கும் போது நீரைப் பாய்ச்ச வேண்டும்.


ப.நாராயணன், தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, திருவண்ணாமலை – 604 410.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks