நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020

நெற்பயிரானது, பூசணம், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறது. அவற்றில் முக்கியமான நோய்களைப் பற்றிப் பார்ப்போம்.

குலைநோய்

இதற்குக் கொள்ளை நோய் என்னும் பெயரும் உண்டு. பயிரின் அனைத்து நிலையிலும் இலை, தண்டுக் கணுக்கள் மற்றும் கழுத்துப் பகுதியைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கும். நாற்றங்காலையும் தாக்கும். இதனால், 30-60% மகசூல் இழப்பு ஏற்படும்.

பரவும் விதம்: காற்று மூலம் பரவும். இந்தப் பூசணம் தாக்குதலுக்கு உண்டான வைக்கோல் மற்றும் விதைகளில் உறக்க நிலையில் இருக்கும். இரவில் நிலவும் 15-30 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த வெப்பநிலை, பகலில் நிலவும் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, காற்றில் 90-95% ஈரப்பதம் இருத்தல் ஆகிய நிலைகளில் இந்நோய் பரவும். 20-26 டிகிரி வெப்பம் மற்றும் 90%க்கு மேலுள்ள ஈரப்பதம் ஒருவாரம் தொடர்ந்து இருந்தால், இந்நோய் அதிகமாகப் பரவும்.

இலைக் குலைநோய் 

முதலில் இலையில் சிறிய, பசுமை கலந்த நீலப்புள்ளிகள் உருவாகும். இலைகளில் ஈரப்பதம் அதிகமானால் இவை பெரிதாகி நீளும்; அதன் இரு பக்க நுனிகளும் விரிந்து, நடுப்பகுதியில் அகலமாகவும், முனைகள் கூராகவும் உடைய நீண்ட கண்வடிவமாக மாறும். இப்புள்ளியின் ஓரம் கரும் பழுப்பாகவும், உட்பகுதி இளம் பச்சை அல்லது சாம்பலாகவும் இருக்கும். தாக்குதல் அதிகமானால், புள்ளிகள் ஒன்றாகி, இலைகள் காய்ந்து தீய்ந்ததைப் போல இருக்கும். இறுதியில் இலைகள் உதிர்ந்து விடும்.

கணுக் குலைநோய்

இது பயிரின் தண்டுக்கணுவைத் தாக்கும். தாக்கப்பட்ட பகுதி ஒழுங்கற்ற வடிவில் பழுப்பு நிறத்திலும், இறுதியில் கறுப்பாகவும் மாறிவிடும். மேலும், கணுத்திசுக்கள் அழுகி இறந்து விடுவதால் எளிதில் உடையும் தன்மையில் இருக்கும். பூக்கும் போது கதிர்க் கணுக்கள் தாக்கப்பட்டால் கதிரில் மணிகள் உருவாகாது அல்லது பதராகி விடும். மணிகள் பிடித்த பின் தாக்கினால் கணுவிலிருந்து கதிர்கள் முறிந்து தொங்கும்.

கழுத்துக் குலைநோய்

நெற்பயிரில் பூக்கள் வரும்போது கதிரின் கழுத்துப் பகுதியை இந்நோய் தாக்கும். இதனால், சிறிய பழுப்பு அல்லது கரும்புள்ளிகள் உருவாகும். மேலும், கழுத்து அழுகி, கதிரின் எடையைத் தாங்க முடியாமல் ஒடிந்து விடும். இந்நோயின் தொடக்கத்தில் மணிகள் முழுமையாக உருவாகாமல், கதிர் செங்குத்தாக நிற்பது, தண்டுத் துளைப்பானின் தாக்குதலைப் போல இருக்கும்.

கட்டுப்பாடு: வயலிலும் அதைச் சுற்றியும் களைகள் இருக்கக் கூடாது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் கலந்த கலவையில் ஒருநாள் இரவு முழுதும் ஊற வைத்து மறுநாள் காலையில் நீரை வடித்து விட்டு நிழலில் பரப்பி உலர வைத்து விதைக்க வேண்டும். நடவு நெருக்கமாக இருக்கக் கூடாது. இந்நோயைத் தாங்கி வளரும் ஐ.ஆர்.20, ஏ.டி.டீ.36, 39, 40, கோ.43, 44 ஆகிய இரகங்களை விதைக்கலாம். நோயுற்ற வயல் நெல்லை விதைக்கக் கூடாது. நோயுற்ற பயிர்களைப் பறித்து அழித்து விட வேண்டும். தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது.

தாக்குதல் அதிகமானால், ஏக்கருக்கு 200 கிராம் கார்பன்டசிம் 50 டபிள்யூ.பி. அல்லது 100 கிராம் டிரைசைக்ளோசோல் 75 டபிள்யூ.பி. மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலையில் தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி அல்லது செம்புள்ளி நோய்

பரவும் சூழல்: 25-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 90% ஈரப்பதம் இருத்தல். சிலிக்கா, பொட்டாசியம், மக்னீசியம் குறைவாக இருத்தல். 27-28.5 டிகிரி செல்சியஸ் வெப்பம், 90-99% ஈரப்பதம், மணிக்கு 4-8.8 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று, 0.4-14.4 மி.மீ. மழை ஆகியன, இந்நோயை அதிகமாக்கும். தாமதமாகப் பெய்யும் அதிகமான வடகிழக்குப் பருவமழை மற்றும் நாற்றங்காலில் விதைகளை ஆழமாக விதைத்தலும் காரணமாகும்.

பரவும் விதம்: இது விதை மற்றும் காற்று மூலம் பரவும். நோயுற்ற பயிரின் காய்ந்த பாகங்களில் இருந்தும் பரவும். இலைகள், நெல் மணிகளின் வெளிப்பகுதி, இலையுறையின் மேல் பகுதியில் அறிகுறிகள் தெரியும். இலைகளில் எள்ளைப் போன்ற நீள்வட்டப் பழுப்புப் புள்ளிகள் இருக்கும். இவை ஒரே அளவில் இலையில் சமமாகப் பரவியிருக்கும்.

புதிய மற்றும் முழுதாக உருவாகாத புள்ளிகள் சிறிய வட்டமாக அடர் பழுப்பு நிறத்தில் தெரியும். பிறகு பெரிதாகி ஓரம் குழிவாகவும், வெளிரிய மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இலைகளில் அதிகளவில் புள்ளிகள் தோன்றினால் இலைகள் காய்ந்து விடும். இலையுறையைத் தாக்கினால் அது பழுப்பு நிறமாகி விடும். பின்பு கதிர்கள் வெளிவர முடியாத நிலையில் உருவாகும் ஒரு சில மணிகளும் உருமாறி நிறமிழந்து சுருங்கி விடும்.

கட்டுப்பாடு: வயலிலும் அதைச் சுற்றியும் களைகள் இருக்கக் கூடாது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் எடுத்துக் கலந்த கலவையில் விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். டி.கே.எம்.9, சி.ஆர்.1009 இரகங்களை இது அதிகமாகத் தாக்குவதால், பாதுகாப்பு முறைகளில் கூடுதல் கவனம் தேவை. தாக்குதல் அதிகமானால், ஏக்கருக்கு 200 மில்லி எடிபன்பாஸ் 50 ஈ.சி. அல்லது 400 கிராம் மான்கோசெப் 45 டபிள்யூ.பி. மருந்தை, 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலையில் தெளிக்க வேண்டும்.

இலையுறைக் கருகல் நோய்

பரவும் சூழல்: ஈரப்பதம் 95%க்கு மேல் இருத்தல், 30-32 டிகிரி வெப்பநிலை, தழைச்சத்தை நிறைய இடுதல், நெருக்கமாக நடுதல், நிழலாக இருத்தல் ஆகியன இது பரவிட ஏற்ற சூழல்களாகும். இதனால், 16-49% மகசூல் இழப்பு ஏற்படும். இந்நோய், மண் மூலம் பரவும். மண்ணில் உள்ள இந்நோயின் பூசண இழை முடிச்சுகள், பாசனநீர் மூலமும் பரவும்.

அறிகுறிகள்: முதலில் நீர் மட்டத்துக்கு அருகிலுள்ள இலையுறையில் முட்டை அல்லது நீள் உருளை வடிவத்தில் பழுப்புடன் கூடிய பசும்புள்ளிகள் ஏற்படும். இவை பெரிதாக மாறும்போது அவற்றின் நடுப்பாகம் சாம்பல் கலந்த வெண்மையாகவும், ஓரம் கரும் பழுப்பாகவும் இருக்கும். இந்தப் புள்ளிகள் மேலும் பெரிதாகி அருகிலுள்ள புள்ளிகளுடன் இணைந்து விடும். அப்போது அந்த இடத்திலுள்ள திசுக்கள் அழிக்கப்படுவதால் இலையானது இறந்து விடும். தாக்குதல் மிகுந்தால் எல்லா இலைகளும் கருகியதைப் போலாகி விடும். 5-6 வாரப் பயிரின் இலையுறைகள் மற்றும் வயதான பயிர்கள் அதிகமான தாக்குதலுக்கு உள்ளாகும். கதிர் உருவாகும் போது தாக்கினால் பயிரின் கீழ்ப்பகுதியிலுள்ள கதிர்களில் மணிகள் முழுதாக உருவாகாது.

கட்டுப்பாடு: வயலிலும் அதைச் சுற்றியும் களைகள் இருக்கக் கூடாது. நோயுற்ற பயிர்களைப் பறித்து அழித்து விட வேண்டும். நோயுற்ற வயலில் இருந்து பக்கத்து வயலுக்குப் பாசனம் செய்யக் கூடாது. நடவு நெருக்கமாக இருக்கக் கூடாது. தழைச்சத்தைப் பிரித்து இட வேண்டும். வயலில் மட்கிய தொழுவுரம், பசுந்தாள் உரத்தை இட்டால், மண்ணிலுள்ள பூசண வித்துகளை அழிக்கலாம். நோயுற்ற வயலில் விளைந்த நெல்லை விதைக்கக் கூடாது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் எடுத்துக் கலந்த கரைசலில் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், நட்ட முப்பதாம் நாள், ஒரு கிலோ சூடோமோனாஸ் புளோரசன்சை, 30 கிலோ தொழுவுரத்தில் கலந்து ஒருநாள் இரவு முழுதும் வைத்திருந்து மறுநாள் காலையில் தூவ வேண்டும். 45 நாளில் ஒரு கிலோவை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும். அடுத்து 10 நாள் கழித்து நிலைமையைப் பொறுத்து மீண்டும் இதைப் போலத் தெளிக்கலாம்.

யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கை, 5:4:1 வீதம் கலந்து இட வேண்டும். ஏக்கருக்கு 400 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக இட்டால் இந்நோயைத் தடுக்கலாம். சாம்பல் சத்தை அதிகமாக இட்டால் இதன் தாக்குதல் குறையும். தாக்குதல் அதிகமாக இருந்தால், ஏக்கருக்கு 200 மில்லி எடிபன்பாஸ் 50 ஈ.சி. அல்லது 100 கிராம் கார்பன்டசிம் 50 டபிள்யூ.பி. அல்லது 200 மில்லி  புரோபிகோனசோல் 25 ஈ.சி. அல்லது 200 மில்லி இப்ரோபென்பாஸ் 48 ஈ.சி. மருந்தை, 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

இலையுறை அல்லது கதிர் உறை அழுகல் நோய்

பரவும் சூழல்: ஈரப்பதம் 90-95% இருத்தல், பகல் வெப்பம் 25-30 டிகிரி செல்சியஸ் இருத்தல், இரவு வெப்பம் 20 டிகிரி செல்சியஸ் இருத்தல். இதனால், 9-26% மகசூல் இழப்பு உண்டாகும்.

அறிகுறிகள்: நெற்பயிர் பூக்கும் போது இந்நோய் தாக்கும். கதிர் வெளிவரும் முன் அதை மூடியிருக்கும் கதிர் இலையுறையைத் தாக்கும். குறிப்பாக இளம் கதிர்களை ஒட்டிய இலையுறையை முதலில் தாக்கும். இலையுறையில் முதலில் முட்டை வடிவ  அல்லது சீரற்ற நீளமான புள்ளிகளை உருவாக்கும். இவை, சாம்பல் கலந்த பழுப்பு நிற மையம் மற்றும் கரும்பழுப்பு ஓரத்துடன் இருக்கும். நாளடைவில் இந்தப் புள்ளிகள் ஒன்றாகச் சேர்ந்து இலையுறை முழுவதையும் பாதிக்கும்.

இதனால், கதிர் முழுமையாக வெளிவராது. வெளிவரும் கதிரின் மணிகள் கரும் பழுப்பாக இருப்பதுடன், பதராக மாறிவிடும். தாக்கம் மிகுந்தால் கதிர்கள் வெளிவராமல் உள்ளேயே அழுகி விடும். கதிரை மூடியிருக்கும் மடலை விரித்துப் பார்த்தால் வெள்ளை நிறத்தில் பூசண வளர்ச்சி இருக்கும். இதனால் தாக்குண்ட பயிர்கள், தண்டுத்துளைப்பான் மற்றும் பிற பூச்சிகளின் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாகும்.

கட்டுப்பாடு: வயலிலும் அதைச் சுற்றியும் களைகள் இருக்கக் கூடாது. ஏக்கருக்கு 100 கிலோ ஜிப்சம் வீதம் எடுத்து, பாதியை அடியுரமாகவும், மீதியைத் தூர் கட்டும் போதும் இட வேண்டும். தேவைக்கு மேல் தழைச்சத்தை இடக்கூடாது. ஒரு கிலோ சூடோமோனாசை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருந்தால், ஏக்கருக்கு 100 கார்பன்டசிம் 50 டபிள்யூ.பி. அல்லது 400 கிராம் மான்கோசெப் 45 டபிள்யூ.பி. அல்லது 200 மில்லி எடிபன்பாஸ் 50 ஈ.சி. அல்லது 200 மில்லி புரோபிகோனசோல் 25 ஈ.சி. அல்லது 200 மில்லி இப்ரோபென்பாஸ் 48 ஈ.சி. மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலையில் தெளிக்க வேண்டும்.

நெற்பழ நோய்

பரவும் சூழல்: இதற்கு இலட்சுமி நோய் என்னும் பெயரும் உண்டு. சம்பாப் பருவத்தில் நெற்பயிர் பூக்கும் போதும், கதிர் வெளிவரும் போதும் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனால் தாக்குண்ட விதைகள், காற்று, மண் மற்றும் நீர் மூலம் பரவும். இந்நோயின் பூசண வித்துகளால் ஒரு வயலிலிருந்து மற்ற வயலுக்கும் பரவும்.

பரவும் சூழல்: காற்றில் 90%க்கு மேல் ஈரப்பதம் இருத்தல், 20-25 டிகிரி செல்சியஸ் வெப்பம், இரவுப் பனி மற்றும் பூக்கும் போது மழை பெய்தல், அப்போது மந்தமான தட்ப வெப்பம் நிலவுதல் இந்நோய் பரவும் சூழலாகும்.

அறிகுறிகள்: பயிர் பூக்கும் போது இதன் அறிகுறிகள் வெளிப்படும். இதனால் தாக்கப்படும் ஒவ்வொரு நெல் மணியும் பச்சைநிறப் பூசணத்தால் மூடப்பட்டிருக்கும். இது பளபளப்பான பந்தைப் போலத் தெரியும். தாக்கத்தின் தொடக்கத்தில் கொஞ்சம் தட்டையாகவும், மஞ்சளாகவும் தெரியும் இது, ஒருவிதச் சவ்வால் மூடப்பட்டு வழவழப்பாக இருக்கும். மேலும், அளவில் பெரிதாகும் போது இந்தச் சவ்வு வெடிப்பதால், இந்தப் பூசணப் பந்தானது முதலில் ஆரஞ்சு நிறமாகவும், பிறகு மஞ்சள் பச்சையாக அல்லது பச்சையும் கறுப்பாகவும் மாறிவிடும். இந்தச் சமயத்தில் பூசணப் பந்தானது உடைந்து விடும். இதனால், கதிரிலுள்ள பெரும்பாலான மணிகள் பாதிக்கப்படும். இதன் பாதிப்பால் விதைகளில் மலட்டுத் தன்மை ஏற்படும்.

கட்டுப்பாடு: பூக்கும் போதும் கதிர் முற்றும் போதும் மழை பெய்யக் கூடாது. நோயற்ற தரமான விதைகளை விதைக்க வேண்டும். பூக்கும் போதும் பால் பிடிக்கும் போதும், ஏக்கருக்கு 500 கிராம் காப்பர் ஹைட்ராக்ஸைடு 77 டபிள்யூ.பி. அல்லது 200 மில்லி புரோபிகோனசோல் 25 ஈசி. மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலையில் தெளிக்க வேண்டும்.

பாக்டீரியா இலைக்கருகல் நோய்

பரவும் விதம்: இதைப் பரப்பும் பாக்டீரியா, விதை மூலம் பரவும்.  பெருங்காற்று வீசும்போது பயிர்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் உண்டாகும் சிறிய காயத்தின் மூலம் இந்த பாக்டீரியா எளிதாகப் பரவும். மேலும், பாசனநீர் மற்றும் மழைநீரானது, பாதிக்கப்பட்ட பயிரின் மேல் விழும்போது, அதன் மூலம் அருகிலிருக்கும் பயிர்களுக்கும் இலைத்துளை வழியாக இந்த பாக்டீரியா சென்று விடும். இந்நோய் தாக்கினால் 60%க்கு மேல் மகசூல் இழப்பு உண்டாகும்.

பரவும் சூழல்: 25-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, ஒருநாள் காற்றில் 12-14 மணி நேரம் 90% மற்றும் அதற்கு மேல் ஈரப்பதம் இருத்தல், ஆகஸ்ட், செப்டம்பரில் காற்றுடன் தொடர்ந்து பெய்யும் மழைத்தூறல் மற்றும் மந்தமான தட்பவெப்பம் ஆகியன, நோய் பரவுவதற்கு ஏற்ற சூழலாகும். அதிக வேகத்துடன் வீசும் காற்று, பனிப்பொழிவு, அதிகமாகப் பாசனம் செய்தல் மற்றும் நீரில் பயிர்கள் மூழ்குவதால் இந்நோய் எளிதில் பரவும். நிழல், நெருக்க நடவு, தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல் சத்தைக் குறைவாகவும் இடுதலும் நோய்க்கான காரணிகளாகும்.

அறிகுறிகள்: பயிரின் அனைத்து நிலைகளிலும் தாக்குதல் இருந்தாலும், இளம் பருவம் மற்றும் பூக்கும் போது அதிகளவில் தாக்குதல் இருக்கும். இலைக் கருகல், வாடல் மற்றும் மஞ்சள் இலை ஆகிய 3 விதமான அறிகுறிகள் இதனால் தோன்றும்.

இலைக்கருகல்: பயிரின் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் இலைகளை மட்டுமே இந்நோய் தாக்கும். நாற்றங்காலில் இலையின் ஓரங்களில் மஞ்சள் புள்ளிகள் வட்டமாக இருக்கும். இவை மற்ற புள்ளிகளுடன் சேர்ந்து பெரிதாகி, இலை முழுவதும் பரவும் போது இலை காய்ந்து உதிர்ந்து விடும். வளர்ந்த பயிரில் இலையின் நுனிப்பகுதி மஞ்சள் அல்லது வெளிரிய மஞ்சள் நீரில் நனைந்த கீற்றுகளாக மாறுவதில் இருந்து இதன் தாக்குதல் ஆரம்பமாகும். இவை பின்பு அளவில் பெரிதாகி மஞ்சள் அல்லது வைக்கோல் நிறமாகி, இறுதியில் பழுப்பு நிறத்தில் காய்ந்த கோடுகளாகத் தெரியும். பாதிப்பு இலையின் இரு ஓரங்களிலும் இருக்கும். கடும் தாக்குதலுக்கு உள்ளான இலை முழுவதும் காய்ந்து விடும். 

வாடல்: நடவு முடிந்து 1-2 வாரம் கழித்து இலைகளில் இந்நோயின் அறிகுறிகள் தோன்றும். இலைகள் பசுமை கலந்த பழுப்பாக இருப்பதுடன், நடுநரம்பை நோக்கிச் சுருண்டும் இருக்கும். பின்பு இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். மேலும், நரம்பை ஒட்டிய பகுதியில் தாக்குதல் அதிகமாகி, இலை முழுவதும் தீய்ந்து காய்ந்தது போலாகி விடும்.

மஞ்சள் இலை: தூர்களில் உள்ள இலைகள் மஞ்சளாக மாறிவிடும். பிறகு மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகிக் காய்ந்து விடும்.

கட்டுப்பாடு: அடித்தாள், வைக்கோல் மற்றும் நெற்கழிவில் இந்த பாக்டீரியா நெடுங்காலம் உயிர் வாழும் என்பதால் அவற்றை அழித்துவிட வேண்டும். நோயுற்ற வயல் விதைகளை விதைக்கக் கூடாது. இந்நோய் விதைகள் மூலம் பரவுவதால் விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து எடுத்து, 53 டிகிரி செல்சியஸ் வெந்நீரில் 30 நிமிடம் வைத்திருந்து விதைத்தால், இந்த பாக்டீரியாக்கள் இறந்து விடும்.

நோயுற்ற இலைகளைப் பறித்து அழித்துவிட வேண்டும். நோயுள்ள வயலில் இருந்து பக்கத்து வயலுக்குப் பாசனம் செய்யக் கூடாது. வயலில் நீர் அதிகமாக இருக்கக் கூடாது. தழை, மணி, சாம்பல் சத்துகளைச் சரியான அளவில் இட வேண்டும். நோயின் அறிகுறிகள் தெரிந்ததும், 20% பசுஞ்சாணக் கரைசலைத் தெளிக்க வேண்டும். அதாவது, ஏக்கருக்கு 40 கிலோ பசுஞ்சாணம் வீதம் 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வடிகட்டி, மேலும் 100 லிட்டர் நீருடன் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலையில் தெளிக்க வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு 30 வேப்பெண்ணெய் வீதம் கலந்த கரைசல் அல்லது 50 மில்லி வேப்பங்கொட்டைச் சாறு வீதம் கலந்த கரைசலை, தேவையான அளவில் ஒட்டும் திரவத்தையும் கலந்து தெளிக்கலாம். அல்லது ஏக்கருக்கு 120 கிராம் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ரா சைக்ளின் கலவை மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்துக் கலவையை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

தானிய நிறமாற்ற நோய்

பரவும் விதம்: இது பல்வேறு பூசணங்களால் உண்டாகிறது. காற்றின் மூலம் பரவும். இவை, தாக்கப்பட்ட மணிகள் மற்றும் பயிர்க்கழிவில் உயிர் வாழும். சம்பா மற்றும் தாளடியில் நிலவும் பனியும் குறைந்த வெப்பமும், இந்நோயை ஏற்படுத்தும் பூசணங்கள் வளர்வதற்கு ஏற்றவை.

அறிகுறிகள்: அறுவடைக்கு முன்னும் பின்னும் நெல் மணிகள் பல்வேறு பூசணங்களால் தாக்கப்பட்டு நிறமாற்றம் அடைகின்றன. இது பருவங்கள் மற்றும் சாகுபடிப் பகுதிகளைப் பொறுத்து அமையும். முதலில் மணிகளில் அடர் பழுப்பு அல்லது கரும்புள்ளிகள் தோன்றும். இந்நோய்க்குக் காரணமான பூசணம் மற்றும் அதன் தாக்கத்தைப் பொறுத்து, நெல்மணி, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு அல்லது கறுப்பாக மாறும்.

கட்டுப்பாடு: தாக்குதல் அதிகமானால், ஏக்கருக்கு 400 கிராம் மான்கோசெப் 45 டபிள்யூ.பி. அல்லது 200 மில்லி இப்ரோபென்பாஸ்  48 ஈ.சி. அல்லது 200 கிராம் கார்பன்டசிம் 50 டபிள்யூ.பி.+200 கிராம் மான்கோசெப் 45 டபிள்யூ.பி. மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலையில் தெளிக்க வேண்டும்.


முனைவர் இராஜா.ரமேஷ்,

உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையம்,

வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!