குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

நெல்

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021

மிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த மொத்தப் பரப்பில் 15.7% ஜூன்-அக்டோபர் காலத்தில் வரும் குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் குறுவை நெல் சாகுபடி நடைபெறுகிறது.

ஆனால், இப்போது குறுவை நெல் சாகுபடிப் பரப்பானது குறைந்து கொண்டே வருகிறது, பெருகி வரும் மக்கள் தொகையையும் இப்போதைய உற்பத்திக் குறியீட்டு அளவையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இனிவரும் ஆண்டுகளில் எக்டருக்குச் சராசரியாக 9 டன் விளைச்சல் என்னும் இலக்கை கட்டாயம் எட்ட வேண்டும். சீரான விளைச்சல் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்க, வேளாண் உத்திகளைச் சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும்.

உயர் விளைச்சல் இரகங்களைத் தேர்ந்தெடுத்தல், சீரிய உழவியல், நீர் மற்றும் களை நிர்வாகம், சமச்சீர் உர நிர்வாகம், தேவைக்கேற்ப பயிர்ப் பாதுகாப்பு ஆகியன, நெல் விளைச்சலை அதிகப்படுத்தும் காரணிகளாகும்.

இவற்றில் சமச்சீர் உர நிர்வாகம், நெல் உற்பத்திக்கான முக்கியக் காரணியாகும். ஏனெனில், நெல்லின் விளைச்சலில் சுமார் 40% உர நிர்வாகத்தைப் பொறுத்தே உள்ளது.

சமச்சீர் உர நிர்வாகம் என்றால் என்ன? இயற்கை உரங்களான பசுந்தாள் உரம், தொழுவுரம், மண்புழு உரம், மட்கிய தென்னைநார்க் கழிவு; செயற்கை உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்;

உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம் மற்றும் நுண் சத்துகளைச் சரியான அளவில் சேர்த்துக் கொடுப்பதே சமச்சீர் உர நிர்வாகம். இதனால் நிலவளத்தைக் காத்து விளைச்சலை அதிகரிக்க இயலும்.

கோடையில், சணப்பை, தக்கைப் பூண்டைப் பயிரிட்டு, மடக்கி உழுதால் மண்ணில் கரிமப் பொருள்களின் அளவு கூடுவதுடன், பயிருக்கு வேண்டிய தழைச்சத்தும் கிடைக்கும்.

அடியுரம்

ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம், 2 டன் மட்கிய குப்பை அல்லது மண்புழு உரத்தை இட்டால், மண்ணின் அங்ககத் தன்மையை நிலை நிறுத்தி அதிக விளைச்சலைப் பெறலாம். இதனால் சேமிப்புத் திறனும் அதிகமாகும்.

இரசாயன உரங்களை மண்ணாய்வு அடிப்படையில் இட வேண்டும். மண்ணாய்வு மூலம் நிலத்தில் இருந்து பயிருக்குக் கிடைக்கக் கூடிய உரங்களின் அளவையும் அறிந்து கொள்ளலாம். இதனால், தேவைக்கு குறைவான அல்லது அதிகமான உரத்தை இடுவதைத் தவிர்த்துப் பயிருக்குத் தேவையான உரத்தை மட்டும் இடலாம்.

மண்ணாய்வு செய்யப்படாத நிலமாக இருந்தால் பொதுவான அளவுப்படி உரங்களை இட வேண்டும். காவிரி டெல்டா மற்றும் கோவைப் பகுதியில் உள்ள குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்தும் 20 கிலோ மணிச்சத்தும் 20 கிலோ சாம்பல் சத்தும் தேவைப்படும். மற்ற பகுதிகளுக்கு ஏக்கருக்கு 48 கிலோ தழைச்சத்தும் 16 கிலோ மணிச்சத்தும் 16 சாம்பல் சத்தும் தேவைப்படும்.

இளம்பருவ நெற்பயிர் நன்கு வேர்ப்பிடித்து வளர்வதற்கு, பூப்பதற்கு, மணிகள் வளர்ச்சி, எண்ணிக்கை மற்றும் முதிர்தல் சீராக அமைந்து விளைச்சல் பெருக மணிச்சத்து உதவுகிறது.

எனவே, டெல்டா மற்றும் கோவைப் பகுதியில் உள்ள குறுவை நெற்பயிர்களுக்கு, ஏக்கருக்கு 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ யூரியா வீதம் இட வேண்டும். மற்ற பகுதிகளுக்கு ஏக்கருக்கு 100 கிலோ சூப்பர் பாஸ்பேட், 26 கிலோ யூரியா, 6.6 கிலோ பொட்டாஷ் வீதம் இட வேண்டும்.

நுண்ணுரம் இடுதல்

நிலத்தில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச் சத்துக்குறை இருந்தால், ஏக்கருக்கு 20 கிலோ இரும்பு சல்பேட், 10 கிலோ சிங்க் சல்பேட் வீதம் எடுத்து, நடவின் போது அல்லது விதைப்பின் போது இட வேண்டும். அல்லது வேளாண் துறையின் நுண்ணுரக் கலவையை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் எடுத்து 20 கிலோ மணலுடன் கலந்து நடவின் போது இட வேண்டும்.

உயிர் உரம் இடுதல்

ஏக்கருக்கு நான்கு பொட்டல அசோஸ்பைரில்லம் 4 பொட்டல பாஸ்போ பாக்டீரியாவை, 10 கிலோ தொழுவுரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து வயலில் இட வேண்டும். நட்ட 3-5 நாட்களுக்குள் ஏக்கருக்கு 100 கிலோ அசோலா வீதம் இட்டு, களை எடுக்கும் போது இதை மிதித்து விட்டு நிலத்தில் மட்கச் செய்ய வேண்டும். இதனால், காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தி, நெற்பயிருக்குக் கிடைக்கச் செய்யலாம்.

மேலுரம் இடுதல்

நெற்பயிருக்கு மேலுரம் இடுவதில் மிகுந்த கவனம் தேவை. நெற்பயிர்கள் தூர்க்கட்டும் பருவம், தண்டு திரளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் சத்துகள் அதிகமாகத் தேவைப்படும். தூரில் அதிகக் கிளைகள் உருவாக, அதிக மணிகள் உருவாக, மணிகள் நன்கு விளைய, தழைச்சத்து உதவும்.

குறுவை நெற்பயிர்களில் இந்தப் பருவங்கள் முறையே நட்ட 35-40, 45-50, 70-75 நாளில் உண்டாகும். இந்த நாட்களில், காவிரி டெல்டா மற்றும் கோவைப் பகுதியில் உள்ள குறுவை நெற்பயிர்களுக்கு, ஏக்கருக்கு 32 கிலோ யூரியா, 8 கிலோ பொட்டாசை இட வேண்டும். மற்ற பகுதிகளில் ஏக்கருக்கு 26 கிலோ யூரியா, 6.6 கிலோ பொட்டாசை இட வேண்டும்.

இலைவழி உரமிடல்

இலைவழி உரமாக, 1 சதம் யூரியா + 2 சதம் டிஏபி + 1 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை, குருத்து உருவாகும் போதும், அடுத்து 10 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

இதுவரை கூறியுள்ள வழிமுறைகளை ஒருங்கே கடைப்பிடித்து, விலையுயர்ந்த இரசாயன உரத்தைச் செம்மையாக, சிக்கனமாகப் பயன்படுத்தி, திட்டமிட்ட நெல் விளைச்சலைப் பெருக்கி அனைவருக்கும் எப்போதும் உணவு கிடைக்க நாம் வழிவகுக்க வேண்டும்.


PB_Anuradha

முனைவர் .அனுராதா,

முனைவர் மு.இராமசுப்ரமணியன், துரை.நக்கீரன், வேளாண்மை அறிவியல் நிலையம்,

நீடாமங்கலம், திருவாரூர்-614404.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!