உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

கலப்புப் பண்ணையம் 01AgriculturalFieldworksKanchipuramTN scaled e1612833873694

யிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கப்படும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படும். முன்பு, விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகத் தான் பராமரித்து வந்தனர். ஆனால், இப்போது இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தொழிலாகச் செய்யப்படுகின்றன. இதனால் ஏற்படும் நன்மைகளை விட, கலப்புப் பண்ணையில் கிடைக்கும் நன்மைகள் அதிகமாகும். இயற்கை விவசாயத்தை இலாபமுள்ள வகையில் செய்ய வேண்டுமெனில், கலப்புப் பண்ணையை அமைப்பது மிக முக்கியமாகும். இதனால், விவசாயிகள் தன்னிச்சையாகச் செயல்பட முடியும்.

ஆடு வளர்ப்பு

கால்நடைப் பராமரிப்பில் ஆடு வளர்ப்பு மிகவும் எளிமையானது. ஏனெனில், ஆடுகளுக்குத் தீவனத்தேவை மற்றும் நோய்த் தாக்குதல் மிகவும் குறைவு. மேலும், ஆடுகள் அனைத்து வகைத் தாவரங்களையும் உண்ணும் என்பதால் பராமரிப்பது எளிது. ஒரு ஆட்டுக் குட்டியானது பத்தே மாதங்களில் விற்பனைக்குத் தயாராகி விடும். பண்ணைகளில் பட்டியைக் கட்டி ஆடுகளை வளர்க்கும் போது, அவற்றின் புழுக்கைகளும் சிறுநீரும் நிலத்துக்கு உரமாகக் கிடைக்கும். ஆட்டுப் புழுக்கையை விடச் சிறுநீரில் அதிகளவில் சத்துகள் உள்ளன. ஆனால், கொட்டகையில் வளர்க்கும் போது சிறுநீரைச் சேகரிப்பது கடினமாகும்.

மாடு வளர்ப்பு

விவசாயத்துக்குத் தொழுவுரம் மிகவும் முக்கியம். இயற்கை விவசாயம் செய்ய அதிகளவில் தொழுவுரம் தேவை. கால்நடைகளில் தொழுவுரம் அதிகமாகக் கிடைப்பது மாடுகள் மூலம் மட்டும் தான். மேலும், இந்தியாவில் பாலுற்பத்தி குறைவாகவே உள்ளது. சராசரியாக இந்தியாவில் ஒரு மாடு ஆண்டுக்கு 917 கிலோ பாலைத் தருகிறது. ஆனால், இஸ்ரேலில் 6,958 கிலோவும், அமெரிக்காவில் 6,598 கிலோ பாலும் கிடைக்கிறது. அதே போல, இந்தியாவில் சராசரியாக, ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 164 கிராம் பாலைக் குடிக்கிறான். இந்த நுகர்வுத் தன்மை, நியூசிலாந்தில் 637 கிராம், அமெரிக்காவில் 623 கிராம் என உள்ளது.

உலகக் கால்நடைத் தொகையில், ஐந்தில் ஒரு பங்கு பசுக்களும், பாதியளவு எருமைகளும் இந்தியாவில் உள்ளன. இருப்பினும், பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாகக் குறைந்தளவு பாலையே இந்தியர்கள் அருந்தும் நிலையுள்ளது. எனவே, பால்வளப் பெருக்கம் என்னும் வெண்மைப் புரட்சியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

கலப்புப் பண்ணையில் மாடுகளை வளர்த்தால், நிலத்துக்குத் தேவையான தொழுவுரமும் சிறுநீரும் கிடைக்கும். இந்த மாடுகளுக்குப் பண்ணைக் கழிவுகளையும் ஆடுகள் தின்று எஞ்சிய தீவனப் பயிர்களையும் உணவாகக் கொடுக்கலாம்.

கோழி வளர்ப்பு

கலப்புப் பண்ணையில் கோழிகளை வளர்ப்பது எளிதானது. ஏனெனில், கோழிகளுக்குத் தேவையான தீவனத்தை நிலத்தில் விளையும் பொருள்களைக் கொண்டே அளித்து விட முடியும். மேலும், கோழிகள் இடும் முட்டைகள், பண்ணையின் அன்றாடச் செலவுக்குப் பயன்படும். கோழிக்கழிவு பயிருக்கு நல்ல உரமாகும். கோழிகள் பயிர்களில் உள்ள பூச்சிகளை உட்கொண்டு அழிப்பது நமக்குக் கூடுதல் பயனாகும்.

கலப்புப் பண்ணையம் IMAG0451

மீன் வளர்ப்பு

பண்ணைகளில் உள்ள பாசனக் குட்டைகளில் மீனை வளர்த்தால் அதிகமான இலாபத்தை அடைய முடியும். ரோகு, மிர்கால், கட்லா, வெள்ளிக் கெண்டை போன்றவை நீரின் வேறுபட்ட ஆழங்களில் வளரக் கூடியவை. எனவே, இவற்றை குறிப்பிட்ட அளவில் குட்டைகளில் விட்டு வளர்க்கலாம். பண்ணையில் பயன்படுத்த முடியாத தானியங்களை மீனுக்கு உணவாக அளிக்கலாம். குட்டையின் மேற்பரப்பில் கம்பி வலையை அமைத்து அதன்மேல் கோழிகளை வளர்த்தால், இடம் மிச்சமாவதுடன், கோழிக் கழிவானது மீனுக்கு நல்ல உணவாகவும் அமையும். மீன்கள் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து அதிகமான இலாபத்தைத் தரும்.

பன்றி வளர்ப்பு

பன்றி வளர்ப்பும் இலாபத்தைத் தரும் தொழிலாகும். பண்ணையில் தீவனப் பயிர்களை வளர்த்துப் பன்றிகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். பன்றிக் கழிவானது சிறந்த உரமாகும். பன்றிகள் அதிகளவில் குட்டிகளை ஈனுவதாலும், பத்தே மாதங்களில் அவை விற்பனைக்குத் தயாராகி விடுவதாலும் பண்ணை வருமானம் அதிகரிக்கும். மேலும், பன்றியிலிருந்து தயாரிக்கப்படும் குணப ஊட்டம் சிறந்த இயற்கை உரமாகும்.

வாத்து வளர்ப்பு

கலப்புப் பண்ணையில் வாத்துகளை வளர்க்க ஒரு குடில் மட்டுமே போதும். பண்ணைக் குட்டைகளில் கிடைக்கும் சிறிய மீன்கள், நத்தைகள், களைகளின் தழைகள் ஆகியவற்றை உண்டே வளர்ந்து விடும். வாத்து எச்சம் பண்ணைக்கு நல்ல உரமாகும். இந்த வாத்துகள் மூலம் முட்டைகளையும் இறைச்சியையும் பெறலாம்.

முயல் வளர்ப்பு

மூன்று மாதத்தில் விற்பனைக்கும், சினைப் பருவத்துக்கும் முயல்கள் தயாராகி விடும். அதனால், குறுகிய காலத்தில் நல்ல பயனைப் பெற முடியும். குறைவான இடத்தில் அடுக்குப் படுக்கைகளை அமைத்து முயல்களை வளர்க்கலாம். பண்ணை வரப்புகளில் கல்யாண முருங்கை, கிளைரிசிடியா என்னும் சீமை அகத்தி போன்ற மரங்களை வளர்த்து அவற்றின் இலைகளையும், காரட், முட்டைக்கோசு, பூக்கோசு போன்றவற்றின் எஞ்சிய பாகங்களையும், விற்பனைக்கு ஆகாத காய்கறிகளையும் உணவாகக் கொடுத்து, எளிதாக வளர்க்க முடியும். முயல்கள் அதிகளவில் குட்டிகளை ஈனுவதாலும், குறைந்த காலத்தில் விரைவாக வளர்ந்து விடுவதாலும் நல்ல இலாபம் கிடைக்கும்.

இவற்றைப் போலவே, காடை, புறா போன்றவற்றையும் சிறிய கூண்டுகளை அமைத்து வளர்த்துப் பயனடைய முடியும். இப்படிக் கால்நடைகளையும், பறவைகளையும் பண்ணையில் வளர்த்தால், அந்தப் பண்ணை தன்னிறைவைப் பெறுவதுடன், விவசாயிகள் இயற்கையான சூழ்நிலையில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

பயிர் வளர்ப்பு

கலப்புப் பண்ணையில், எல்லா உயிர்களுக்கும் உணவளிக்க ஏதுவாகப் பயிரிட வேண்டும். இதனால், பயிரிலிருந்து கிடைக்கும் பொருளைக் கொண்டு பண்ணையை நடத்த முடியும். கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களை அவற்றின் எண்ணிக்கைக்குத் தேவையான அளவில் பயிரிட வேண்டும். வரப்புகளில் தீவன மரங்களை வளர்க்க வேண்டும்.

கால்நடைகளின் கழிவுகளை மட்கச் செய்து பயிர்களுக்கு உரமாக இட முடியும். ஆகவே, பண்ணையில் பயிர்ச்சுழற்சி முறையைக் கையாள்வது அவசியம். இம்முறையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிரை அடுத்தடுத்துப் பயிரிடாமல், வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த பயிர்களைப் பயிரிட வேண்டும்.

பயிர்ச்சுழற்சி முறையில், ஒரு குடும்பத் தாவரம் விட்டுச் செல்லும் சத்தை மற்றொரு குடும்பத் தாவரம் ஏற்று நல்ல விளைச்சலைத் தருவதுடன், மண்வளத்தையும் காக்கும். மேலும், ஒரு பருவம் முழுவதும் ஒரே பயிரைப் பயிரிடாமல், பலவகையான பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். இதனால், ஒன்றின் விலை குறைந்து இழப்பு உண்டானாலும், மற்றொன்று அந்த இழப்பை ஈடுகட்டி இலாபத்தைப் பெற்றுத் தரும்.

கலப்புப் பண்ணையின் பயன்கள்

விவசாயத்துக்குத் தேவையான தொழுவுரத்தை வெளியிலிருந்து வாங்க வேண்டியது இல்லை. இதனால், தொழுவுரச் செலவும் போக்குவரத்துச் செலவும் குறையும். கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் தேவையான தீவனத்தைப் பண்ணையிலேயே உற்பத்தி செய்து கொடுப்பதால் தீவனச் செலவும் குறைகிறது.

கலப்புப் பண்ணையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதனால், எதுவும் வீணாவதில்லை. ஆடுகள் தின்று எஞ்சியதை மாடுகளுக்குத் தீவனமாகவும், கோழிக்கழிவை மீன்களுக்கு உணவாகவும், இவை அனைத்தின் கழிவுகளையும் பயிர்களுக்கு உரமாகவும் அளிக்க முடியும்.

வெளியே கால்நடைக் கழிவுகளைச் சேகரிக்கும் போது பல்வேறு காரணங்களால் ஒரு குறிப்பிட்ட பகுதி வீணாகிறது. ஆனால், கலப்புப் பண்ணையில் இப்படி வீணாவதில்லை. கலப்புப் பண்ணையின் மூலம் கிடைக்கும், மீன், முட்டை, பால், இறைச்சி போன்றவை இலாபத்தை ஈட்டித் தருகின்றன. இவை அனைத்தையும் தனிதனியாகப் பராமரித்தால் செலவு அதிகமாகி இலாபம் குறையும்.

தன்னிறைவு பெற்ற பண்ணை தன்னிறைவைப் பெற்ற மனிதனை உருவாக்குகிறது. கலப்புப் பண்ணையை அமைப்பதால், மனிதன் இயற்கைச் சூழ்நிலையில் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது. எனவே, கலப்புப் பண்ணையம் உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம் என்பதை உணர்ந்து, நிலமெங்கும் கலப்புப் பண்ணைகளை அமைப்போம். பசியற்ற, வறுமையற்ற சமுதாயத்தைச் சமைப்போம்.


கலப்புப் பண்ணையம் SUGANTHY V 3

முனைவர் வி.சுகந்தி,

ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரி, கலவை-632500, வேலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!