காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

PB_ Waste vegetable

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018

மக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்குக் காய்கறிகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. பெரும்பாலான காய்கறிகள் எளிதில் அழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது சவாலான செயலாக உள்ளது. உலகளவில் காய்கறிக் கழிவு அதிகளவில் உருவாகிறது. இதை மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கேடில்லாமல் அகற்றுதல் அவசியமாகும். இதற்கு நுண்ணுயிரிகள் உதவுகின்றன.

அறுவடையின் போதும், அறுவடைக்குப் பின்பு, சேகரித்தல், போக்குவரத்து மற்றும் சந்தையில் விற்கும் போதும் காய்கறிகள் அழுகி விடுகின்றன. காய்கறிகளை முறையாகப் பதப்படுத்தி, பையகப்படுத்தாமல் விடுவதே இதற்குக் காரணமாகும். இப்படி அழுகி, உயிர்வழியில் சிதைவடையக் கூடிய காய்கறிகள் பெருமளவில் வீணாக்கப்படுகின்றன.

மேலும், இவை காலியிடத்திலும் திறந்த வெளியிலும் போடப்படுவதால், மேலும் அழுகி, துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், கவரப்படும் பறவைகள், எலிகள், பன்றிகள் போன்றவை, மனிதர்களுக்கு நோயைப் பரப்புகின்றன. இந்தக் காய்கறிக் கழிவை முறையாகப் பயன்படுத்தி, நொதித்தல் மூலம் உயிர் எதிர் பொருட்களை உற்பத்தி செய்யலாம். நுண்ணுயிரி வளர்சிதைமாற்ற வினைப் பொருட்களைத் தயாரிக்கலாம். மட்கச் செய்து உரமாகவும் பயன்படுத்தலாம்.

காய்கறிக் கழிவின் இயற்பியல், வேதியியல் பண்புகள்

காய்கறிக் கழிவின் பண்புகளைச் சோதனையிடுதல், அதன் முறையான மேலாண்மை முறைகளுக்கு அவசியமாகிறது. பொதுவாக, கழிவின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகள் சோதனை யிடப்படுகின்றன. இயற்பியல் பண்புகளான எடை, ஈரப்பதம், மொத்தத் தின்மப்பொருள், வாசனை, நிறம் மற்றும் வெப்ப நிலையும், வேதியியல் பண்புகளான செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், சர்க்கரை, புரதம், மொத்தக் கரிம கார்பன், பாஸ்பரஸ், ஹைட்ரஜன் உயிரியல் உயிர்வெளித் தேவை, கரிம வாயு தேவை, அமில காரக் குறியீடு, ஹாலோஜன் மற்றும் நச்சு உலோகங்கள் ஆகியவையும் சோதிக்கப்படுகின்றன.

காய்கறிக் கழிவின் பண்புகளைக் கண்டறிதல், அதை மறுசுழற்சி செய்வதா, இல்லையெனில் அப்புறப்படுத்துவதா என முடிவு செய்ய உதவுகிறது.

காய்கறிக் கழிவைப் பயன்படுத்தும் நுண்ணுயிரிகள்

காய்கறிக் கழிவு உயிர்வழியில் சிதைவடைவதால், இதை நுண்ணுயிரிகள் எளிதாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இது, சுற்றுச்சூழல் மாசடைவதைக் குறைக்க உதவுகிறது. நுண்ணுயிரிகளில் உள்ள பல நீர்வழிச் சிதைவடையும் நொதிகள், காய்கறிக் கழிவின் செயலாக்கத்திற்கு உதவுகின்றன. இந்தக் கழிவை உயிர்வழி மாற்றம் செய்து பயனுள்ள பொருளாக மாற்றுவது என்பது, கழிவிலுள்ள வேதிப்பொருட்களின் அளவைப் பொறுத்தது. கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், நுண்ணுயிரிகளைக் கொண்டு உயிர் எரிபொருள்களான, பயோ மீத்தேன், பயோ ஹைட்ரஜன், பயோ எத்தனால், பயோ பியுட்டனால் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாகக் காய்கறிக் கழிவு பயன்படுகிறது. இயற்கையான முறையில் நுண்ணுயிரிகளால் சிதைவடையும் காய்கறிக் கழிவு தரமான உரமாக மாறுகிறது.

எரிபொருள்கள் தயாரிப்பில் காய்கறிக் கழிவுகள்

பழம் மற்றும் காய்கறிகளில் அதிகளவில் இருக்கும், பாலிசாக்கரைடு எனப்படும் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், லிக்னின் ஆகியன திட நொதித்தலுக்கு உள்ளாகி, உயிர் எரிபொருள்களான மீத்தேன், டீசல், எத்தனால், பியுட்டனால் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. நுண்ணுயிரிகள் மூலம் காற்றில்லாத நிலையில் பயோ மீத்தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மலிவாகக் கிடைக்கும் எரிபொருளாக விளங்குகிறது.

உயிர்வழியில் உற்பத்தியாகும் வாயுக்களில் 40-70% மீத்தேன், 30-45% கார்பன் டை ஆக்ஸைடு, 0.5-1.0% ஹைட்ரஜன் சல்பைடு, 1-5% நீராவி மற்றும் சிறிதளவில் ஹைட்ரஜன், அம்மோனியா, நைட்ரஜன் ஆகிய வாயுக்கள் உள்ளன. உயிர் வாயுக்களைத் தயாரிக்க, காய்கறிக் கழிவு பயன்படுவதால், சுற்றுசூழல் மாசடைவது குறைவதுடன், விறகின் பயன்பாடும் குறைகிறது.

ஓரணு புரதத் தயாரிப்பில் காய்கறிக் கழிவு

ஓரணு புரதம் என்பது, முழு நுண்ணுயிரியைப் புரத மூலமாக மனிதர்களும், தீவனமாகக் கால்நடைகளும் பயன்படுத்துவதாகும். பல காய்கறிக் கழிவுகள் ஓரணுப் புரதத் தயாரிப்புக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற முறைகளை விட, நுண்ணுயிரிகள் மூலம் தயாரிக்கப்படும் இந்தப் புரதம் அதிகளவில் இருப்பதுடன், விரைவாகவும் உற்பத்தியாகிறது.

ஓரணு புரதத் தயாரிப்பில் நுண்ணுயிரிகள்

அஸ்பர்ஜில்லஸ், ஃப்யூசெரியம், ரைசொபஸ் என்னும் பூசணங்கள். ஸ்பைருலினா, குளோரல்லா என்னும் ஆல்கா. பேசில்லஸ், லாக்டோபேசில்லஸ், சூடோமோனாஸ் என்னும் நுண்ணுயிரிகள்.

காய்கறிக் கழிவானது, நுண்ணுயிரிகள் உயிர் பாலிமர், நொதிகள் மற்றும் வளர்சிதைமாற்ற வினைப்பொருட்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருளாகவும் விளங்குகிறது. உயிர்வழி உரங்கள், உயிர்வழி பூச்சிக்கொல்லிகள், நுண்ணுயிரி உள் மற்றும் வெளி பாலிமர் (பாலிஹைட்ராக்ஸி பியுட்ரிக் அமிலம்) உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. இவை உணவுப் பொருட்களை பையகப்படுத்துதல், மருத்துவம், வேளாண்மை போன்ற துறைகளில் பயன்படுகின்றன. நொதித்தலைப் பயன்படுத்திப் பல நொதிகளை உற்பத்தி செய்யலாம். உதாரணம், அமைலேஸ் மற்றும் செல்லுலோஸ்.

உரம் தயாரித்தல்

காய்கறிக் கழிவின் கரிமப் பொருட்களை மட்கச் செய்து உரமாகப் பயன்படுத்தலாம். இந்தச் செயல்முறை, நுண்ணுயிரிகள் மற்றும் பூசணங்களால் நடைபெறுகிறது. திட நார்ச்சத்து அதிகமுள்ள கழிவை, காற்றில்லா நிலையில் மட்கச் செய்து மண்ணின் கரிமப் பொருளை அதிகரிக்கும் உரமாகப் பயன்படுத்தலாம். இதை, இரசயனப் பொருளுக்கு மாற்றாக, இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம்.

பயிர்களில் காய்கறி மட்கின் பயன்பாடுகள்

தாவர வளர்ச்சியைத் தூண்டுகிறது. பயிர்களில் பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளைத் தாவரங்களுக்கு அளிக்கிறது. மண்ணிலிருந்து உருவாகும் தாவர நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்துகிறது. நன்மை செய்யும் கிருமிகளை மண்ணிலிருந்து பயிர்களுக்கு அளிக்கிறது.

மண்ணில் காய்கறி மட்கின் பயன்பாடுகள்

மண்ணின் அமைப்பு, நீர் ஊடுருவும் திறன், மண்ணின் அடர்த்தி ஆகியவற்றை மேம்படுத்தி, தாவர வேர்கள் நன்கு வளர்வதற்கான சூழ்நிலையை அளிக்கிறது. மண்ணில் கரிமப் பொருட்களின் அளவைக் கூட்டுகிறது. மண்ணில் அயனிக் கடத்தலை அதிகரிக்கிறது. கடினமான மண்ணில் ஈரப்பதம் மற்றும் ஊடுருவும் திறனை அதிகரிக்கிறது. நீரைத் தக்க வைக்கும் திறனை மேம்படுத்தி நீரிழப்பைக் குறைக்கிறது. மண்ணில் காற்றோட்டத்தைக் கூட்டி, மண் வளத்தைப் பெருக்குகிறது.


முனைவர் சு.ஸ்ரீவிக்னேஷ்,

முனைவர் த.துர்காதேவி, ஐ.ஆறுமுக பிரவீன், நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்

துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!