கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020
பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின் உப்புத் தன்மைக்கும்; போரான், புளுரைட் ஆகியன பயிர்களில் நச்சுத்தன்மை ஏற்படவும் காரணங்களாக இருக்கின்றன.
உப்பால் ஏற்படும் பாதிப்பு
பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகமாக இருந்தால், அவை பயிரின் வேர்ப்பகுதியில் சேரும். மேலும், இந்த உப்புகளால் மண் திரவத்தின் அழுத்தம் அதிகமாவதால், மண்ணிலுள்ள நீரை எடுக்கப் பயிர்கள் சிரமப்படும்.
இதனால், விளைச்சல் பாதிக்கப்படும். பாசன நீரின் உப்புத்தன்மை, மின் கடத்தும் திறனால் அளக்கப்படும். மின் கடத்தும் திறன் 0.25 டெசிமன்/ மீட்டர் அளவுக்குக் குறைந்த பாசன நீரை, எல்லா மண் வகைகளிலும், அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
மின் கடத்தும் திறன் 0.25-0.75 டெசிமன்/மீட்டர் அளவில் இருக்கும் பாசன நீரை, சுமாரான வடிகால் வசதியுள்ள நிலங்களில் பயன்படுத்தலாம். சுமாராக உப்பைத் தாங்கி வளரும் பயிர்களைப் பயிரிட வேண்டும்.
மின் கடத்தும் திறன் 0.75-2.25 டெசிமன்/மீட்டர் அளவுள்ள பாசன நீரை, வடிகால் வசதி குறைந்த நிலங்களில் பாய்ச்சக்கூடாது. உப்பைத் தாங்கி வளரும் பயிர்களைப் பயிரிட வேண்டும்.
மின் கடத்தும் திறன் 2.25 டெசிமன்/மீட்டர் அளவுக்கு மேலுள்ள நீரை, நிலத்தில் பாய்ச்சக் கூடாது. தவிர்க்க முடியாத நிலையில், நிலத்தில் வடிகால் வசதியை மேம்படுத்தியும், போதியளவில் உப்புகளைக் கரைத்து வெளியேறச் செய்தும், உப்பை அதிகமாகத் தாங்கி வளரும் பயிர்களைப் பயிரிட்டும், இத்தகைய நீரைப் பயன்படுத்தலாம்.
களரால் ஏற்படும் பாதிப்பு
குறைவாக உப்புள்ள நீர், பாசனம் செய்ய ஏற்றதாக இருந்தாலும், அந்நீரில் சோடியம் உப்புகள் அதிகமாக இருந்தால், பாசனத்துக்கு ஆகாது. களர்த் தன்மையால் ஏற்படும் பாதிப்பு, சோடிய அயனிகளின் படிமான விகிதத்தால் அளக்கப்படும்.
சோடிய அயனிகளின் படிமான விகிதம் 10 க்கும் குறைவாக உள்ள பாசனநீரை, எல்லா வகை மண்ணிலும், எல்லாப் பயிர்களுக்கும் பாய்ச்சலாம். மண்ணில் களர்த்தன்மை ஏற்படும் வாய்ப்புக் குறைவு.
சோடிய அயனிகளின் படிமான விகிதம் 10-18 அளவிலுள்ள நீரை, மணற்பாங்கான, நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களில் பாய்ச்சலாம். இந்நீரைக் களிமண் நிலத்தில் பாய்ச்சினால், மண்ணில் வடிகால் வசதி குறையும்.
சோடிய அயனிகளின் படிமான விகிதம் 18-26 அளவிலுள்ள நீரைப் பாய்ச்சினால், அதிகமாக அங்கக உரங்களை இடுவது, ஜிப்சம் இடுவது போன்ற பாசனநீர் நிர்வாக உத்திகளைச் செயல்படுத்த வேண்டும். சோடிய அயனிகளின் படிமான விகிதம் 26-க்கு மேலுள்ள நீர், பாசனத்துக்கு ஏற்றதல்ல.
கார்பனேட்டால் ஏற்படும் பாதிப்பு
கார்பனேட், பைகார்பனேட் அயனிகளால் பாசன நீரின் தரத்தில் ஏற்படும் பாதிப்பு, எஞ்சிய சோடியம் கார்பனேட் மூலம் அறியப்படும். எஞ்சிய சோடியம் கார்பனேட் 1.25 மில்லி ஈக்குவலண்ட்/லிட்டர் அளவுள்ள பாசனநீர், மத்திம தரம் உள்ளதாகக் கருதப்படுகிறது. எஞ்சிய சோடியம் கார்பனேட் 2.5 மில்லி ஈக்குவலண்ட்/லிட்டர் அளவுக்கு மேலுள்ள நீர், பாசனத்துக்கு ஏற்றதல்ல.
வடிகால் வசதிகளில் ஏற்படும் பாதிப்பு
பாசன நீரில் சோடியம் உப்புகள் அதிகமாக இருந்தால், மண்ணின் வடிகால் வசதி பாதிக்கப்படும். பயிர்களுக்குத் தேவையான அளவில் நீரும் கிடைக்காது. மண்ணின் காற்றோட்டம் பாதிக்கப்படும். எனவே, மகசூலும் பாதிக்கப்படும். தரம் குறைந்த நீரைப் பாய்ச்சினால், மண்ணின் பௌதிக, இராசயனக் குணங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
அயனி மாற்றத்துக்கு உட்பட்ட சோடிய அயனிகள், பாசன நீரில் அதிகமாக இருந்தாலும், பாசனநீர் உப்பாக இருந்தாலும், மண்ணின் அடர்த்தி, நீர்ப்பிடிப்புத் திறன், நீர் ஊடுருவும் தன்மை, காற்றோட்டம் ஆகிய மண்ணின் பௌதிகக் குணங்கள் பாதிக்கப்படும்.
களருள்ள பாசன நீரால், மண்ணின் கட்டமைப்புச் சிதைக்கப்படும். இந்த மண்ணில் மழை பெய்தால், மண்ணின் மேற்பரப்புக் கடினமாக மாறி விடும். களர் நீரைக் களிமண் நிலத்தில் பாய்ச்சினால், மண்ணில் வெடிப்புகள் தோன்றி, நீர் நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
உப்புத் தன்மையுள்ள பாசனநீர், மணற்பாங்கான நிலங்களைவிட, களிமண் நிலங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். பாசன நீரின் கார்பனேட், பைகார்பனேட் அயனிகள்; கால்சியம், மக்னீசிய அயனிகளின் அளவைவிட அதிகமாக இருந்தால் மண்ணில் களர்த்தன்மை ஏற்படும்.
தரமற்ற நீரால் ஏற்படும் பாதிப்புகள்
உப்புத் தன்மையுள்ள பாசன நீரால், விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். மேலும், பயிர்களின் வளர்ச்சிக் குறையும்; இலைகளின் எண்ணிக்கை குறையும்; இலைகள், கனிகள், தானிய அளவு குறைந்து மகசூல் பாதிக்கப்படும். குளோரைடு மிகுந்த பாசன நீரால் புகையிலையின் தரம் பாதிக்கும்.
தரமற்ற பாசனநீர் நிர்வாகம்
உப்புநீரை, நல்ல நீருடன் கலந்து, உப்புகளின் அடர்த்தியைக் குறைத்துப் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம். ஒருமுறை உப்புநீரைப் பாய்ச்சிய பிறகு, இரண்டு முறை கால்வாய் நீரைப் பாய்ச்சினால், மகசூல் அதிகமாகும்.
சோடிய அயனிகள் படிமான விகிதம், எஞ்சிய சோடியம் கார்பனேட் நிறைந்த நீரைப் பாய்ச்சுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, அந்த நீரில் ஜிப்சத்தைக் கலந்து விடலாம்.
உப்புநீரைப் பயிர்களுக்குப் பாய்ச்சும் இடங்களில் கிடைக்கும் மழைநீரை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். மழைநீர் தரமாக இருப்பதால், மண்ணில் படிந்துள்ள உப்புகளைக் கரைத்து வேர்ப்பகுதியில் இருந்து வெளியேற்றி விடும்.
உப்புநீரைப் பாய்ச்சும் நிலை குறைந்தால், மண்ணுக்கோ, பயிருக்கோ ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
முனைவர் அ.அனுராதா,
முனைவர் மு.இராமசுப்ரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
நீடாமங்கலம், திருவாரூர்-614404.