கரும்பைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

PB_Sugar Cane Plantation

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021

மிழகத்தில் மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையான காலத்தில் கரும்பைப் பயிரிட்டால், வெப்பமும் மழையும் உள்ள மாதங்களில் நன்கு வளர்ந்து, குளிர் காலத்தில் அறுவடைக்கு வரும்.

பொதுவாகக் கரும்பை இருபதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றில் பத்து வகைப் பூச்சிகளின் தாக்குதல் கரும்பு மகசூலைப் பாதிக்கும் அளவில் உள்ளது. முக்கியப் பூச்சிகளான, துளைப்பான் பூச்சிகள், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள், மண்ணில் வளர்ந்து பயிரைத் தாக்கும் பூச்சிகள் தமிழகத்தில் பரவலாக உள்ளன.

இளம் குருத்துப் புழுக்கள், இடைக்கணுப் புழுக்கள் ஆகியன, தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கரும்பைத் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான, வெள்ளை ஈக்கள், செதில் பூச்சிகள், மாவுப் பூச்சிகள், பைரில்லா, இலைத் தத்துப் பூச்சிகள் ஆகியன, ஆங்காங்கே அவ்வப்போது தோன்றிப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

துளைப்பான்கள்

இளம் குருத்துப்புழு: கரும்பைத் தாக்கும் மூவகைத் துளைப்பான்களில் இளம் குருத்துப்புழு முக்கியமானது. இளம் பயிரில், அதாவது, 1-3 மாதப் பயிரில் இப்புழுவின் சேதம் பெருவாரியாக இருக்கும். நட்ட 25 நாளில் தொடங்கி 120 நாட்கள் வரை இதன் தாக்கம் இருக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை பாதிப்பு அதிகமாக இருக்கும். 15% குருத்துகள் காய்ந்திருந்தால், அது பொருளாதாரச் சேத நிலையைக் குறிக்கும். இப்புழு தாக்கிய பயிரில் உள்ள நடுக்குருத்து வாடி அழுகிய நிலையில் இருக்கும்.

வாழ்க்கை: இளம் குருத்துப் புழுக்கள் உருவாகக் காரணமாக இருக்கும் அந்துப் பூச்சியின் முன் இறக்கைகள் கப்பி நிறத்தில் சிறிதாக இருக்கும். பின் இறக்கைகள் வெள்ளையாக இருக்கும். இப்பூச்சி, கரும்புத் தோகையின் அடியில் 3-5 வரிசைகளில் முட்டைகளைக் குவியல்களாக இடும். ஒவ்வொரு குவியலிலும் 8-10 முட்டைகள் இருக்கும். ஒரு வாரத்தில் 40 முட்டைகள் வரை இடும்.

இவற்றில் இருந்து உருவாகும் இளம் புழுக்கள், தரைக்குச் சற்று மேலேயுள்ள தண்டைத் துளையிட்டுச் சென்று, நடுக்குருத்தின் அடியை உண்ணும். இதனால், குருத்து நுனிகள் பழுப்பாகிக் காய்ந்து விடும். தண்டின் உள்பாகம் அழுகி விடுவதால் துர்நாற்றம் ஏற்படும்.

ஒரு குருத்தில் ஒரு புழு தான் இருக்கும். நான்கு வாரங்களில் முழுதாக வளர்ந்து விடும் புழுக்களின் தலை பழுப்பாகவும், உடல் வெண் பழுப்புக் கோடுகளுடனும் இருக்கும். இப்புழுக்கள் தண்டுக்கு உள்ளேயே கூட்டுப் புழுக்களாகி, அடுத்த பத்து நாட்களில் அந்துப் பூச்சிகளாக வெளிவரும்.

கட்டுப்படுத்துதல்: பருவத்தே பயிர் செய் என்னும் பழமொழிக்கு ஏற்ப, பட்டம் பார்த்து நடுவதும், உத்திகளைச் செவ்வனே செய்வதும், குருத்துப் புழுக்களின் தாக்குதலைக் குறைக்கும். காய்ந்த குருத்துகளை நீக்கிவிட்டு, நீண்ட மெல்லிய கம்பியால் புழுக்களைக் குத்தி அழிக்க வேண்டும். நிலம் ஈரமாக இருக்க வேண்டும்.

கரும்பு முளைவிட்ட மூன்றாம் நாள், கரும்புத் தோகைகளைப் பார்களில் மூடாக்காக இட வேண்டும். கோடையில் அடிக்கடி பாசனம் செய்தால், தாக்குதலுக்கு உள்ளான தூரிலிருந்து அதிகக் கிளைப்புகள் வந்து, இப்புழுக்களின் சேதத்தைச் சரி செய்யும். கரும்பு முளைத்து 30 மற்றும் 60 நாளில், பார்களின் அரைப்பகுதி வரை மண்ணை அணைக்க வேண்டும்.

தக்கைப் பூண்டை ஊடுபயிராக விதைக்கலாம். எக்டருக்கு 20 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து, தாய் அந்துப் பூச்சிகளை அழிக்கலாம். நட்ட 35 மற்றும் 50 நாளில், ஸ்டெர்மியாப்சிஸ் இன்பரன்ஸ் என்னும் சூல் கொண்ட ஒட்டுண்ணியை, எக்டருக்கு 125 வீதம் வெளியிடலாம்.

எக்டருக்கு எட்டு கிலோ குளோரென்ட நெல்லிப்புரோல் 4 ஜி குருணையை எடுத்து 42 கிலோ மணலில் கலந்து நிலத்தில் இட வேண்டும். நடுவதற்கு முன், குளோரிபைரிபாஸ், இமிடாகுளோபிரிட் போன்ற மருந்துத் தூளைப் பார்களில் இட வேண்டும்.

இடைக்கணுப்புழு: இதன் தாக்குதல் நான்கு மாதக் கரும்பில் இருந்து அறுவடை வரை தொடரும். இதன் தாக்குதலால் கரும்பின் கணுப்பகுதியில் துளைகள் உண்டாகி, அவற்றின் வழியே சக்கைகள் வெளிவரும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேலும் கீழும் உள்ள பருக்கள் முளைக்கத் தொடங்கும்.

கடும் தாக்குதலுக்கு உள்ளாகும் பயிர்கள் சிறிது சிறிதாகக் காயத் தொடங்கும். கரும்பு மகசூலும், சர்க்கரைச் சத்தும் கணிசமாகக் குறையும். பெருங்காற்று வீசினால் கரும்புகள் ஒடிந்து விடும். புழுக்கள் ஏற்படுத்திய துளைகள் மூலம் பூசண நோய்கள் பரவும்.

வாழ்க்கை: இந்தப் புழுவின் அந்துப் பூச்சியின் முன் இறக்கைகள் வெண் பழுப்பாக இருக்கும். பின் இறக்கைகள் வெள்ளையாக இருக்கும். இது, இளம் குருத்துப் புழுவின் அந்துப் பூச்சியை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும். கரும்புத் தோகையின் மேற்பரப்பில் இரு வரிசையில் குவியல் குவியலாகச் செதிலைப் போன்ற வெண் முட்டைகளை இடும். குவியலில் 9-11 முட்டைகள் இருக்கும்.

சுமார் மூன்று நாட்களில் இந்த முட்டைகளில் இருந்து புழுக்கள் வெளிவரும். பிறகு, கரும்பு மடலைத் தாக்கி, கரும்பைத் துளைத்துச் சதைப்பற்றை தின்பதால், அப்பாகம் சிவப்பாக மாறிவிடும். இப்புழு கரும்புள் இருப்பதை, துளைக்கு வெளியே இருக்கும் கழிவை வைத்து அறியலாம்.

இப்புழுக்கள் கரும்புத் தண்டைப் பல இடங்களில் தாக்கும். ஒரு மாதத்தில் முழுதாக வளர்ந்து விடும் இப்புழுக்களின் தலை பழுப்பாகவும், உடல் வெள்ளையாகவும் இருக்கும். உடலின் ஒவ்வொரு மடிப்பிலும் நான்கு பழுப்புப் புள்ளிகள் இருக்கும். உடலின் நீளவாட்டில் பக்கத்துக்கு இரண்டாக மங்கலான நீலக்கோடுகள் இருக்கும். 35-40 செ.மீ. நீளமுள்ள இப்புழுக்கள், கரும்பு மடலில் கூட்டுப் புழுக்களாக மாறி, 7-10 நாட்களில் அந்துப் பூச்சிகளாக வெளிவரும்.

கட்டுப்படுத்துதல்: இப்புழுக்கள் உருவாகும் முட்டைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். இவற்றின் தாக்குதல் இல்லாத கரும்பு வகைகளை நடலாம். எக்டருக்கு 20 இனக்கவர்ச்சிப் பொறிகளை 90-120 செ.மீ. உயரத்தில் வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறிகளின் குப்பிகளை 45 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

கரும்புத் தோகைகளை 5 மற்றும் 7 மாதத்தில் உரித்து விடலாம். தழைச்சத்தைத் தேவையான அளவில் மட்டுமே இட வேண்டும். நட்டு நான்கு மாதங்களில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் குறைந்தது ஆறுமுறை, டிரைக்கோகிராமா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை, எக்டருக்கு 2.5 சி.சி. அளவில் விட வேண்டும்.

புழு ஒட்டுண்ணிகளான, ஸ்டீனோபிரக்கான் டீசே, ஐந்தோ பிம்பில்லா நர்சியை மற்றும் அப்பான்டில்லஸ் பிலவிப்பஸ் அல்லது கூட்டுப்புழு ஒட்டுண்ணிகளான, டெட்ராஸ்டிக்கஸ் அய்யரி மற்றும் டிரைக்கோபைலஸ் டையடிரியே ஆகியவற்றை நிலத்தில் விட வேண்டும்.

எக்டருக்கு எட்டு கிலோ குளோரென்ட நெல்லிப்புரோல் 4 ஜி குருணையை எடுத்து 42 கிலோ மணலில் கலந்து நிலத்தில் இட வேண்டும். நடவுக்கு முன், குளோரிபைரிபாஸ், இமிடா குளோபிரிட் போன்ற மருந்துத் தூளைப் பார்களில் இட வேண்டும்.

நுனிக் குருத்துப்புழு: இப்பூச்சியின் தாக்குதல் எட்டு மாதப் பயிரிலிருந்து பெருகத் தொடங்கும். தோகையின் நடுநரம்பைத் துளைக்கும். இப்புழுக்கள் தாக்கிய கரும்பின் நுனித் தோகைகள் வரிசையாகக் கிளைத்து முடிக்கொத்தைப் போலத் தெரியும். தோகையின் நடுவில் வரிசை வரிசையாக வட்டத் துளைகள் இருக்கும்.

பாதிக்கப்பட்ட கரும்பின் நுனிக்குருத்து வாடிக் காய்ந்து விடும். இந்தக் குருத்தைப் பிடுங்கினால் எளிதாக வராது. இப்புழுக்களின் பாதிப்பால் மகசூல் இழப்பை விடச் சர்க்கரைச்சத்து இழப்பு அதிகமாக இருக்கும்.

வாழ்க்கை: இந்தப் புழுவின் அந்துப்பூச்சி வெள்ளையாக இருக்கும். கரும்புத் தோகையின் நரம்பில் நீள்வட்ட முட்டைகளைக் குவியல் குவியலாக இட்டு, பழுப்பு நிற உரோமங்களால் மூடிவிடும். மீன் செதில்களை அடுக்கியதைப் போல ஒவ்வொரு குவியலிலும் 9 முதல் 79 முட்டைகள் வரை இருக்கும். 6-11 நாட்களில் இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்கள், தோகை நரம்பைத் துளைத்துக் குருத்தைத் தாக்கும். இதனால், குருத்துக் காய்ந்து விடும்.

இந்த வெண்மஞ்சள் புழுக்கள் 25-42 நாட்களில் முழுதாக வளர்ந்து, கரும்பின் குறுக்கே துளைத்து வெளிவர வழி செய்து கூட்டுப் புழுக்களாக மாறும். 12-21 நாட்களில் அந்துப் பூச்சிகளாக வெளிவரும். தமிழகத்தில் ஆகஸ்ட்- பிப்ரவரி காலத்தில் மூன்று தலைமுறைகள் வரை உருவாகும்.

கட்டுப்படுத்துதல்: முட்டைக் குவியல்கள் மற்றும் தாக்குண்ட பகுதிகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கலாம். ஐசோடிமா ஜாவன்சிஸ் என்னும் ஒட்டுண்ணிக் குளவிகளைப் பெருக்கி நிலத்தில் விடலாம்.

முட்டை ஒட்டுண்ணிகளான, டெலினோமஸ் பெனிபிசியஸ், டெட்ராஸ்டிக்கஸ் ஸ்கினோபியை மற்றும் டிரைக்கோகிராமா மைனூட்டம் அல்லது புழு ஒட்டுண்ணிகளான, கொனியஸ் இந்திகஸ், செலினேகஸ் அல்லது கூட்டுப்புழு ஒட்டுண்ணியான, டெட்ராஸ்டிக்கஸ் அய்யரியை நிலத்தில் விடலாம்.

மண்ணில் வளர்ந்து கரும்பைத் தாக்கும் பூச்சிகள்

வேர்ப்புழு: இந்த வெண்ணிறப் புழு மண்ணுக்குள் இருந்து வேர்களைக் கடித்து உண்ணும். சில நேரங்களில் கரும்பின் சதைப் பகுதியை உண்டு உள்ளே செல்லும். வனத்தை ஒட்டியுள்ள கரும்பில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

வாழ்க்கை: வேர்ப்புழுவுக்குக் காரணமான வண்டுகள் ஓராண்டு வாழும். கோடை மழைக்குப் பிறகு அக்டோபர் நவம்பரில் முட்டையிடும். டிசம்பரில் முட்டைப் பருவம் 15 நாட்களாகும். இவற்றில் இருந்து வெளிவரும் இளம் புழுக்கள் அங்ககப் பொருள்களை உண்ணும். இரண்டு, மூன்றாம் பருவப் புழுக்கள் வேர்களைக் கடித்து உண்ணும். மூன்றாம் பருவம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இருக்கும். கூட்டுப்புழுப் பருவம் 14 வாரங்கள்.

கட்டுப்படுத்துதல்: ஆழமாக உழ வேண்டும். உயிர் எதிர்க்கொல்லியான நூற்புழுக்களைப் பயன்படுத்த வேண்டும். பிரவேரியா பிரைங்கைட்டிஸ் என்னும் பூசணத்தைப் பயன்படுத்தலாம். விளக்குப் பொறியை வைத்தும், கரும்புக்குள் வேப்பமரக் கிளைகளை நட்டு வைத்தும் வண்டுகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.

எக்டருக்கு வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ அல்லது பிப்ரோனில் 0.3 ஜி 25 கிலோ அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைட் 15 கிலோவை நிலத்தில் இடலாம். மே, ஜூனில் கரும்பு நிலத்தின் அருகிலுள்ள வேப்ப மரங்களில் குளோரிபைரிபாசைத் தெளிக்கலாம்.  

கரையான்: இது கூட்டம் கூட்டமாக வாழும் பூச்சியினம். செம்மண் மற்றும் களிமண் நிலத்திலுள்ள கரும்பில் கரையான்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். கடும் வெய்யில் மற்றும் வறட்சிக் காலத்தில் கரும்பை அதிகமாகத் தாக்கும். விதைக் கரணைகளைத் தின்பதால் 40-60% கரணைகள் முளைக்காமல் போகும். ஒடான்டோடெர்ம்ஸ் ஒபிசஸ் என்னும் கரையான் கரும்பு நிலங்களில் இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: பாசனம் மூலம் தற்காலிகத் தீர்வு கிடைக்கும். நடவுக்கு முன், குளோரிபைரிபாஸ் 50 டி.சி, இமிடாகுளோபிரிட், பென்தியான் போன்ற மருந்துகளைப் பார்களில் இடலாம்.

சாற்றை உறிஞ்சும் பூச்சிகள்

தோகைத் தத்துப்பூச்சி: இதைக் கரும்பு பைரில்லா என்றும் சொல்வார்கள். இப்பூச்சி மங்கலான பழுப்பு நிறத்தில் இருக்கும். முன்பகுதி மூக்கைப் போல நீண்டிருக்கும். சில நேரங்களில் கரும்பில் அதிகமாக இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: தழைச்சத்தைத் தேவையான அளவில் மட்டுமே இட வேண்டும். விளக்குப் பொறியை வைத்துத் தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். தோகைகளை 5 மற்றும் 7 மாதத்தில் உரித்து விடலாம். ஊண் விழுங்கிகளான, புருமஸ் சுட்ராலிஸ், கைலோமினஸ் செக்ஸ்மெகுலேட்டஸ், காக்சிநல்லா செப்டம்பங்டேடா ஆகியவற்றை நிலத்தில் விட வேண்டும். புரபோனோபாஸ், குளோரிபைரிபாஸ், மாலத்தியான் போன்ற மருந்துகளைத் தெளிக்கலாம்.

மாவுப்பூச்சி: உடல் முழுதும் வெண்மாவைப் போன்ற மெழுகினால் மூடப்பட்ட இளம் சிவப்புப் பூச்சிகளும் அவற்றின் இளம் பூச்சிகளும், தோகை மடல்களில் இருக்கும். இளம் பூச்சிகள் கறுப்பாக, உடலைச் சுற்றிலும் மெல்லிய வெண் கம்பிகளைப் போன்ற மெழுகுடன் இருக்கும். இவை, தோகைகளில் உள்ள சாற்றை உறிஞ்சிச் சேதத்தை ஏற்படுத்தும். இதனால், தோகைகள் மஞ்சளாக மாறிக் காய்ந்து விடும். இவை கூட்டுப் புழுக்களாக மாறி, 2-3 வாரங்களில் நான்கு இறக்கைகள் உள்ள பூச்சிகளாக வெளிவரும்.

கட்டுப்படுத்துதல்: தாக்குதலைச் சரியாகக் கவனிக்க வேண்டும். தோகைகளை 5 மற்றும் 7 மாதத்தில் உரித்து விட வேண்டும். தழைச்சத்தைத் தேவையான அளவில் மட்டுமே இட வேண்டும். இப்பூச்சிகள் தாக்காத கரணைகளை நட வேண்டும். இவற்றால் தாக்கப்பட்ட தோகைகளை எரித்துவிட வேண்டும். நிலத்தில் நீர்த் தேங்கக் கூடாது. ஊணுண்ணிகளான, டைப்பா எப்பிடிவோரா, மைக்ரோமஸ் இகுரோட்டஸ் ஆகியவற்றை நிலத்தில் விட வேண்டும்.

வெள்ளை ஈ: இது சுமார் 150 முட்டைகளை வட்டமாக இடும். இளம் பூச்சிகளும் நீள்வட்டமாக இருக்கும். சாற்றை உறிஞ்சிச் சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்துதல்: இளம்புழு ஒட்டுண்ணியான என்கார்சியா ஐசக்கி அல்லது ஊண் விழுங்கிகளான, கைலோகேரஸ் நைகரேட்டஸ், ஸ்கிம்னஸ் நுபுலிஸ் ஆகியவற்றை நிலத்தில் விட வேண்டும். அசடம்பிரைடு, ஸ்பைரோமெசிபென், புரபோனோபாஸ், வேம்பின் மூலக்கூறு 5 சதம் ஆகியவற்றில் ஒன்றை, 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

செதில் பூச்சி: இது, அடர் பழுப்பும் கறுப்பும் கலந்த வட்டச் செதில்களைக் கொண்டிருக்கும். கரும்புத் தண்டிலும், தோகை மடல்களிலும் காணப்படும். தண்டில் ஆயிரக்கணக்கில் இருக்கும். இப்பூச்சிகள் சாற்றை உறிஞ்சுவதால், பயிரின் வளர்ச்சிக் குன்றி விடும்.

கட்டுப்படுத்துதல்: தோகைகளை அவ்வப்போது உரித்து விட வேண்டும். இதனால் தாக்கப்படாத கரணைகளை நட வேண்டும். வரப்புகள் சுத்தமாக இருக்க வேண்டும். மறுதாம்பு சாகுபடியைத் தவிர்க்க வேண்டும். நிலத்தில் நீர்த் தேங்கியிருக்கக் கூடாது. டைமெத்தயேட், புரபோனோபாஸ் போன்ற மருந்துகளை, 5 அல்லது 7 மாதத்தில் தோகைகளை உரித்ததும் தெளிக்க வேண்டும்.

இந்தப் பூச்சிகளைத் தவிர பலவித வண்டுகளும், நாவாய்ப் பூச்சிகளும், அசுவினிகளும், இலைப்பேன்களும் கரும்பைத் தாக்கும். ஆனால், இவற்றால் பெரியளவில் பொருள் சேதம் ஏற்படுவது இல்லை.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

பூச்சித் தாக்குதல் இல்லாத கரணைகளை நட வேண்டும். இதனால், செதில் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிகள் தாக்கிய பகுதிகளை அகற்றி அழித்தால், பூச்சிகள் பெருகிச் சேதம் விளைவிப்பதைத் தடுக்கலாம். தோகைகளை அவ்வப்போது உரித்து விட்டாலும் பூச்சிகளின் தாக்கம் ஓரளவு குறையும். நிலத்தில் தேங்கியிருக்கும் நீரை வடிகட்டுவதும் பயனளிக்கும்.

நுனிக் குருத்துப் புழுக்களைக் கட்டுப்படுத்த, முட்டைக் குவியல்கள் மற்றும் தாக்குண்ட பகுதிகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். ஐசோடிமா ஜாவன்சிஸ் என்னும் ஒட்டுண்ணிக் குளவிகளைப் பெருக்கிக் கரும்பில் விடலாம்.

வேர்ப்புழு வண்டுகளை விளக்குப்பொறியை வைத்துப் பிடிக்கலாம். இந்த வண்டுகள் மழைக்குப் பிறகு வேப்ப மரங்களில் அதிகமாக இருக்கும். மாலை நேரத்தில் இந்த வண்டுகளைச் சேகரித்து அழிக்கலாம்.

குருத்துப் புழுக்களைக் கட்டுப்படுத்த, நட்ட 15 மற்றும் 45 நாளில், ஏக்கருக்கு கார்போபியுரான் 4% குருணை மருந்து 5 கிலோ அல்லது குளோரிபைரிபாஸ் 10% மருந்து 750 மில்லி அல்லது பாசலோன் 35% மருந்து 450 மில்லி வீதம் தெளிக்கலாம்.

பைரில்லா தாக்குதலைக் கட்டுப்படுத்த, நட்ட 150 மற்றும் 210 நாளில், ஏக்கருக்கு 600 மில்லி மாலத்தியான் வீதம் தெளிக்கலாம். கரையானைக் கட்டுப்படுத்த, நடவின் போது, குயினால்பாஸ் 1.5% தூளை, ஏக்கருக்கு 50 கிலோ வீதம் பார்களில் இடலாம்.

செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 400 மில்லி மாலத்தியானை, இப்பூச்சிகள் தோன்றும் போது தெளிக்கலாம். சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, தழைச்சத்தைத் தேவையான அளவில் மட்டுமே இட வேண்டும். தோகைகளை உரித்து விட்டம் கட்டி விட்டால், துளைப்பான்கள் மற்றும் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைப் பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.


PB_V.BASKARAN

முனைவர் .பாஸ்கரன்,

பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர்-641003.

முனைவர் மு.சண்முகநாதன், முனைவர் வெ.இரவிச்சந்திரன்,

கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்-607001.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks