கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!

கால்நடை livestock Infectious diseases

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018

கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் சூனோசிஸ் நோய்கள் எனப்படுகின்றன. இந்தப் பெயர் 19 ஆம் நூற்றாண்டில் ரூடால்ப் விர்ச்சோ என்னும் மருத்துவரால் வைக்கப்பட்டது. கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு 150 நோய்கள் பரவுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கிரேக்கப் பேரறிஞர் அரிஸ்டாட்டில் தான், கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவுவதையும், வெறிநோய் பற்றிய விளக்கத்தையும் முதன் முதலில் கூறினார்.

சீன மக்கள் எலிகள் மூலம் பரவும் நோயை பிளேக் என அழைத்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவின் கூடமாசை இன மக்கள், ஆந்த்ராக்ஸ் என்னும் அடைப்பான் நோயைப் பற்றியும், இந்நோயால் இறக்கும் கால்நடைகளைச் சாப்பிட்டால் கார்பங்கில் என்னும் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

லூயி பாஸ்டர் என்னும் அறிஞர் தான் வெறிநோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்தவர். இந்த மருந்தை 6.7.1885 அன்று ஜோசப் மெயிஸ்டர் என்னும் ஒன்பது வயது சிறுவனுக்குப் போட்டார். இந்த நாள் தான் உலகளவில் கால்நடைத் தொற்று நோய் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 2000 முதல் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

மனிதர்களுக்கு நோய் பரவும் விதம்

நோய்களுக்குக் காரணமான வைரஸ், பாக்டீரியா போன்ற 1,500 கிருமிகளில் 60% கிருமிகள் கால்நடைகள் மூலம் பரவுகின்றன. இன்புளுயன்சா நோய் காற்றின் மூலமும், வெறிநோய் எச்சில் மற்றும் நாய்க்கடி மூலமும் பரவுகின்றன. மேலும், தோல், புண்கள் வழியாகவும், கொசுக்கள், உண்ணிகள் மூலமும் மனிதர்கள் நோய்களால் தாக்கப்படுகிறார்கள்.

இந்நோயால், கர்ப்பிணிகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், செல்லப் பிராணிகளை வளர்ப்போர், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதவர்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கால்நடைகள் நமக்குப் பல வகைகளில் உதவுகின்றன. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வீடுகளில் நாய்களை வளர்த்துள்ளார்கள். வேட்டைக்கும் பாதுகாப்புக்கும் அக்கால மக்கள் நாய்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கி.மு.400 இல் அசோகர் தான் உலகிலேயே முதல் கால்நடை மருத்துவ மனையை இந்தியாவில் அமைத்தார்.

இறைச்சி, பால், முட்டைகள் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவுகிறது. இவற்றை நன்கு வேக வைக்காமல் சாப்பிடுவது தான் இதற்குக் காரணம். காய்கனிகளையும் நன்கு சுத்தம் செய்யாமல் சாப்பிடுவதால் அவற்றில் ஒட்டியிருக்கும் சாணம், சிறுநீர் மூலம் நோய் பரவுகிறது.

கால்நடை நோய்களைத் தடுத்தல்

பண்ணைக்குள் சென்று வந்தால், கைகளை சோப்பால் நன்றாகக் கழுவ வேண்டும். நாய், பூனை, காதல் பறவைகள் போன்ற வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். கொசு, உண்ணி போன்றவை கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சுத்தமான உணவை உண்ண வேண்டும். நன்கு வேகாத உணவைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகள் மூலம் நமக்கு நோய்கள் பரவும் என்னும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

நோய்கள் பெருகுவதற்கான காரணங்கள்

காடுகள் அழிக்கப்படுவதால் அங்குள்ள விலங்குகள் வாழ்விடம் தேடிக் காட்டை விட்டு வெளியே வருவது. மழை குறைந்து வெப்பம் மிகுவதால் நோய்களைப் பரப்பும் பூச்சிகள், கொசுக்கள், உண்ணிகள் பெருகுவது.

உலகமயம் காரணமாக நிகழும் பயணங்கள், வணிகம், குறிப்பாக, இறைச்சி, பால், முட்டை வணிகம் மூலம் உலகளவில் நோய்கள் பரவும் வாய்ப்பு.

நோய்களால் ஏற்படும் விளைவுகள்

புதிய நோய்கள் தோன்றுவதுடன் இறப்பும் கூடுகிறது. வெறிநோயால் மட்டும் அன்றாடம் 160 பேர் இறக்கின்றனர். கால்நடைகளில் நிகழும் நோய்க் கிளர்ச்சியால் சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. 2014-15 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சலால் 18 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டன.

இதனால், 3.3 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. ஆசியாவில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சலால் 200 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டன. இதனால் உண்டான இழப்பு 10 மில்லியன் டாலராகும். எனவே, கிராமப் பொருளாதாரம் சீரழிவதுடன், கால்நடைகளும் குறைந்து விடும்.

நாம் காடுகளை அழிப்பதால், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா, எபோலா, நிபா என புதுப்புது நோய்கள் வருகின்றன. பழம்தின்னி வௌவால்களால் நிபா காய்ச்சல் வருகிறது.

விழிப்புணர்வு நடவடிக்கைகள்

கால்நடைத் தொற்று நோய் நாளில், நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி போடப்படுகிறது. அவற்றுக்குக் கருத்தடை அறுவைச் சிகிச்சையும் செய்யப்படுகிறது. நோய்களைப் பற்றி மக்கள் அறியும் வகையில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

கால்நடைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் வெறிநோய், அடைப்பான், காசநோய், எலிக்காய்ச்சல், கருச்சிதைவு போன்ற நோய்களைப் பற்றியும் அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் விளக்கமாகக் கூறப்படுகிறது.

நாய்க்கடிக்கான முதலுதவி

நாய் கடித்த இடத்தை எக்காரணம் கொண்டும் கைகளால் தொடக்கூடாது. காயத்தைக் குழாய் நீரில் சோப்பால் கழுவ வேண்டும். டிங்சர் அயோடின் அல்லது கார்பாலிக் அமிலத்தைப் பஞ்சால் தடவ வேண்டும். பெரிய காயமாக இருந்தால் தையல் போடக்கூடாது.

காயத்தைக் கட்டுப் போட்டு மறைக்காமல் திறந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். முதலுதவிச் சிகிச்சை முடிந்ததும் மருத்துவ மனைக்குச் சென்று தடுப்பூசியைப் போட வேண்டும்.

தடுப்பூசியைப் போடும் காலம்

நாய் கடித்த நாளில், அடுத்து, 3, 7, 14, 28, 90 ஆகிய நாட்களில் தடுப்பூசியைப் போட வேண்டும். ஒன்றிரண்டு தடுப்பூசிகளை மட்டும் போட்டு விட்டு நிறுத்திக் கொள்வதால் பயனேதும் இல்லை. ATS மற்றும் TT எனப்படும் தடுப்பூசிகளைக் கட்டாயம் போடக்கூடாது.

வீட்டு நாய்களுக்கு 3 மாதத்தில் முதல் தடுப்பூசி, ஆறாம் மாதம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். அடுத்து, முதல் தடுப்பூசியைப் போட்ட நாளிலிருந்து ஓராண்டில் மீண்டும் தடுப்பூசியைப் போட வேண்டும். இதனால் தான் ஆண்டுதோறும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலக வெறிநோய் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஆந்த்ராக்ஸ் என்னும் அடைப்பான் நோயைத் தடுக்க, கன்றுக்கு ஆறு மாதம் ஆனதும் முதல் தடுப்பூசி, ஓராண்டு முடிந்ததும் இரண்டாவது தடுப்பூசி போடப்பட வேண்டும். பிறகு, ஆண்டுக்கு ஒருமுறை போட வேண்டும்.

எலிக்காய்ச்சலைத் தடுக்க, நாய்களுக்கும் மாடுகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசியைப் போட வேண்டும். காசநோயைத் தடுக்க, கன்றுகளுக்கு 20 நாளிலும், பிறகு ஆறாவது மாதமும், பிறகு ஆண்டு முடிந்ததும் தடுப்பூசி போடப்பட வேண்டும். பாலைக் காய்ச்சாமல் குடித்தால் காசநோய் பரவும்.

எனவே, தக்க நேரங்களில் கால்நடைகளுக்குத் தடுப்பூசிகளைப் போடுவோம்; கால்நடைத் தொற்று நோய்கள் தாக்காமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.


கால்நடை Dr.Jegath Narayanan e1612953778555

டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன்,

முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை,

கன்னங்குறிச்சி, சேலம்-636008.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading