தென்னந் தோப்பில் இடுவதற்கேற்ற தீவனப் பயிர்கள்!

தென்னை மரம் விவசாயிகளின் வாழ்வில் இரண்டறக் கலந்தது. அதேபோல், விவசாயிகளின் வங்கி என்று அழைக்கப்படும் கால்நடை வளர்ப்பையும் விவசாயிகளிடமிருந்து பிரிக்க முடியாது. பொதுவாக, தென்னை மரங்கள் அவற்றின் இரகங்களுக்கேற்ப 20-30 அடி இடைவெளியில் பயிரிடப்படும். அப்படிச் செய்யும் போது 5-7 ஆண்டுகளில் மரத்தின் வளர்ச்சி குறைவாக இருக்கும். இந்தக் காலங்களில் மரங்களைச் சுற்றி 3-5 அடி இடைவெளி விட்டு அனைத்து விதமான பயிர்களையும் ஊடுபயிராகப் பயிரிட்டு இலாபம் அடையலாம்.

ஆனால், தென்னையின் வயது 7 ஆண்டுகளைக் கடக்கும் போது அது முழுமையாக வளர்ச்சிப் பெற்று நிழலை உருவாக்கும் குணம் உடையது. ஆயினும், அந்தச் சூழ்நிலையிலும், நிழலை ஓரளவு தாங்கி வளரக்கூடிய பயிர்களை ஊடுபயிராக இடும் போது தென்னை மரத்தின் வளர்ச்சியும் மகசூலும் பாதிக்கப்படாமல் ஊடுபயிரிலும் மகசூல் பெறலாம். தீவனப் பயிர்களைத் தனிப்பயிராகப் பயிரிட முடியாத நிலையில், தென்னந் தோப்புக்குள் ஊடுபயிராகப் பயிரிடும் போது கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை எளிதில் பெற முடியும்.

தீவனப் பயிர்களின் வகைகள்

பொதுவாகத் தீவனப் பயிர்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன. தானியவகை தீவனப்பயிர்கள், புல்வகைத் தீவனப் பயிர்கள், பயறுவகைத் தீவனப்பயிர்கள், மரவகைத் தீவனங்கள்.

தானியவகைத் தீவனப் பயிர்கள்

இறவையில் பயிரிடப்படும் மக்காச்சோளமும், இறவை மற்றும் மானாவாரிக்கு ஏற்ற சோளம், கம்பு போன்றவையும் இந்த வகையைச் சார்ந்தவை. பொதுவாக இப்பயிர்கள் ஒரு பருவப் பயிர்களாக இருப்பதாலும், திரும்பத் திரும்ப விதைக்க வேண்டி இருப்பதாலும், இவை தென்னைக்குள் ஊடுபயிராக வளர்க்க ஏற்றவையல்ல.

புல்வகைத் தீவனப் பயிர்கள்

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல், தீனாநாத்புல் போன்ற இறவைக்கு ஏற்ற பயிர்களும், கொழுக்கட்டைப்புல், தீனாநாத் புல், ஈட்டிப்புல் போன்ற மானாவாரிக்கு ஏற்ற பயிர்களும் இந்த வகையைச் சார்ந்தவை. இப்பயிர்கள் பெரும்பாலும் பல்லாண்டுப் பயிர்களாக இருப்பதால், ஒருமுறை பயிரிட்டால் 2-5 ஆண்டுகள் வரை வளர்க்கலாம். கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் மற்றும் கினியாப்புல் வகைகளை நல்ல பாசனமுள்ள தென்னந் தோப்புகளிலும், குறைவான நீர் வசதியுள்ள இடங்களில் கொழுக்கட்டைப் புல்லையும் பயிரிடலாம்.

பயறுவகைத் தீவனப் பயிர்கள்

குதிரைமசால், வேலிமசால், தட்டைப்பயறு, முயல்மசால், சங்குப்பூ, அவரை, சிரேட்டோ போன்ற பயிர்கள் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றுள், குதிரை மசால் மற்றும் வேலிமசால் தென்னந் தோப்புகளில் உள்ள நிழலைத் தாங்கி வளரும். மேலும், பயறுவகைப் பயிர்கள் தென்னை மரங்களுக்கான சத்துகளைப் பங்கு போடாமல் வளரும் தன்மையுடையவை.

மரவகைத் தீவனங்கள்

அகத்தி, சவுண்டல், கிளைரிசிடியா, சித்தகத்தி, வெள்வேல், கருவேல் போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றுள், அகத்தி, கிளைரிசிடியா போன்றவை தென்னந்தோப்பைச் சுற்றி வரப்புகளில் பயிரிட ஏற்றவை.

சாகுபடி முறைகள்

கம்பு நேப்பயிர் ஒட்டுப்புல்: இரகங்கள்: கோ. 3,(க.நே) 4, கோ.(பி.என்.) 5. கம்பு நேப்பயிர் ஒட்டுப்புல்லை, தென்னை மரத்தைச் சுற்றி 5-6 அடி இடைவெளி விட்டுப் பயிரிடலாம். நிலத்தை நன்கு உழுது, ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் இட்டு 50 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து 30 செ.மீ. இடைவெளியில் இருபருக் கரணைகள் அல்லது வேர்க்கரணைகளை நீர்ப்பாய்ச்சி நட வேண்டும்.

அடியுரமாக ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தை இட்டு நடும்போது நல்ல வளர்ச்சி இருக்கும். மண்ணின் தன்மையைப் பொறுத்து வாரம் ஒருமுறை பாசனம் செய்வது நல்லது. முதல் அறுவடையை 75-80 நாட்களிலும், அடுத்தடுத்த அறுவடைகளை 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யலாம்.

ஒரு அறுவடை முடிந்தவுடன் ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்தை இட்டு, பார்களைக் கொத்திக் களைகளை அகற்றுதல் அவசியம். ஒவ்வொரு அறுவடையிலும் 20-25 டன் பசுந்தீவனமும், ஓராண்டில் ஏக்கருக்கு 150-160 டன் பசுந்தீவனமும் மகசூலாகக் கிடைக்கும். தென்னையில் ஊடுபயிராகப் பயிரிடும் போது சுமார் 70-80 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்.

கினியாப்புல்

இரகங்கள்: கோ.2, கோ.(ஜிஜி)3. தண்ணீர் தேங்கி நிற்காத நல்ல வடிகால் வசதியுள்ள மற்றும் அமிலத்தன்மை உள்ள நிலங்களிலும் பயிரிட ஏற்றவை.  பொதுவாக வேர்க்கரணைகளை நடவுக்குப் பயன்படுத்தினாலும் விதைகள் மூலமும் சாகுபடி செய்யலாம். ஆனால், இந்த விதைகள் 6 மாதம் வரையில் உறக்கத்தில் இருப்பதாலும், 6 மாதம் கழித்து 0.1% அடர் கந்தக அமிலத்தில் நேர்த்தி செய்ய வேண்டியிருப்பதாலும், பொதுவாக விதைகளைப் பயன்படுத்துவதில்லை.

நன்கு உழுத வயலில் 50 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து நீரைப் பாய்ச்சி 50 செ.மீ. இடைவெளியில் வேர்க் கரணைகளை நட வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம், 16 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தை இட்டு நட வேண்டும். விதைத்த 60-65 நாட்களில் அறுவடைக்கு வரும். தொடர்ந்து 40-45 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.

ஒவ்வொரு அறுவடையிலும் ஏக்கருக்கு 10-15 டன் அளவுக்குப் பசுந்தீவன மகசூல் கிடைக்கும். தென்னந் தோப்புகளில் நல்ல வளர்ச்சி இருக்குமாதலால் ஏக்கருக்கு 10 டன் அளவுக்குப் பசுந்தீவனம் கிடைக்கும்.

குதிரை மசால்

இரகம்: கோ.1. பயறுவகைத் தீவனப் பயிர்களில் மிகவும் முக்கியமானது குதிரை மசால். நல்ல வடிகால் மற்றும் பாசன வசதியுள்ள பகுதிகளிலும், தென்னை மர நிழல்களிலும் நன்றாக வளரும். ஆடுகள் நன்கு விரும்பி உண்ணும் குதிரை மசால், மாடு, பன்றி, கோழிகளுக்கும் நல்ல உணவாகும்.

நன்கு உழுது பண்படுத்திய நிலங்களில் வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியில் தொடர்ச்சியாக விதைக்க வேண்டும். விதைக்குமுன் அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம், 10 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தை இட்டு 8 கிலோ விதைகளை விதைத்தால் நல்ல வளர்ச்சி இருக்கும். தேவைப்படும் போது களைகளை நீக்கி வாரம் ஒருமுறை பாசனம் செய்து வந்தால், விதைத்த 60 நாளில் முதல் அறுவடையையும், 25-30 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த அறுவடைகளையும் செய்ய முடியும்.

ஆண்டுக்குச் சுமார் 10 அறுவடைகள் வரை செய்யலாம். அப்படிச் செய்யும் போது ஏக்கருக்குச் சுமார் 35-40 டன் வரை மகசூல் கிடைக்கும். தென்னைமர நிழலில் வளர்க்கும் போது 25-30 டன் வரை மகசூல் எடுக்க முடியும். குதிரை மசால் பயறுவகைப் பயிராக இருப்பதால் தென்னை மரங்களை அதிகமாகப் பாதிக்காது. கஸ்குட்டா என்னும் ஒட்டுண்ணி தாக்காத விதைகளை வாங்கி விதைக்க வேண்டும்.

வேலிமசால்

இரகம்: கோ.1. சுமார் நான்கடி உயரத்தில் நன்கு அடர்த்தியாக வளரும் வேலிமசால், வெட்ட வெட்ட மீண்டும் துளிர்க்கும். பாசனமுள்ள எல்லா மண் வகைகளிலும் வளரும் வேலிமசாலை, கம்பு நேப்பியர் ஒட்டுப் புல்லுடன் சேர்த்து ஊடுபயிராக, 3:1 வரிசைகளில் அல்லது கலப்புப் பயிராகப் பயிரிடலாம்.

நிலத்தை நன்கு பண்படுத்தி 50 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்துத் தொடர்ச்சியாக விதைகளை விதைக்க வேண்டும். விதைக்கும் முன், நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கிய நீரில் 3-5 நிமிடம் கழித்து வேலிமசால் விதைகளை நான்கு நிமிடங்கள் வரையில் இட வேண்டும். பிறகு, நிழலில் உலர்த்தி விதைத்தால் சுமார் 80 சதவீத முளைப்புத் திறனைப் பெறலாம்.

அடியுரமாக ஏக்கருக்குத் தொழுவுரம் 10 டன், தழைச்சத்து 4 கிலோ, மணிச்சத்து 25 கிலோ, சாம்பல் சத்து 12 கிலோ வீதம் இட்டு விதைத்தால் நல்ல வளர்ச்சிக் கிடைக்கும். சுமார் 8-10 நாட்களில் பாசனம் செய்து தேவைப்படும் போது களையெடுத்து வந்தால் 90 நாட்களில் முதல் அறுவடையையும், தொடர்ந்து 40-45 நாட்களில் அடுத்தடுத்த அறுவடைகளையும் செய்ய முடியும். ஆண்டுக்கு 8 அறுவடைகள் வரை செய்யும் போது ஏக்கருக்கு 50 டன் வரை மகசூல் கிடைக்கும்.

தென்னை மரங்களுக்கிடையே கம்பு நேப்பியர் ஒட்டுப் புல்லுடன் ஊடுபயிராக அல்லது கலப்புப் பயிராகப் பயிரிட்டால், தானிய மற்றும் பயறுவகைத் தீவனத்தேவை சரியாகும்.

பாசனக் குறையுள்ள தோப்புகளில் தீவனப் பயிர்கள்

பொதுவாக, தென்னை மரம் ஒன்றுக்கு அன்றாடம் 70-100 லிட்டர் தேவைப்படும். ஆயினும், சில பகுதிகளில் நீர் குறைவாக இருக்கும் இடங்களில் அதற்கேற்றாற் போல நீர்த்தேவை குறைவாக இருக்கும் தீவனப் பயிர்களைத் தெரிவு செய்வது முக்கியம். கொழுக்கட்டைப் புல்லும் முயல் மசாலும் குறைவான நீருள்ள இடங்களில் வளரும்.

கொழுக்கட்டைப்புல்

கோ.1. நீலக்கொழுக்கட்டைப் புல்லை, மரத்தைச் சுற்றி 5-6 அடி நீங்கலாக மற்ற இடங்களில் இந்தப்புல்லைப் பயிரிடலாம். அதேபோல, முயல் மசாலும் முதலாண்டில் குறைந்த வளர்ச்சியுடனும், பின்பு நல்ல வளர்ச்சியையும் தரும். கொழுக்கட்டைப் புல்லுடன் முயல் மசாலை ஊடுபயிராக 3:1 விகிதத்தில் பயிரிட்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

மரத்தீவனப் பயிர்கள்

தென்னந் தோப்புகளைச் சுற்றி வரப்புகளில் அகத்தி, கிளைரிசிடியா போன்ற மரங்களைச் சுமார் 3 மீட்டர் இடைவெளியில் நட்டு நன்கு வளர்ந்த பின்பு சுமார் நான்கடி உயரத்தில் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இப்படிச் செய்தால் பக்கக் கிளைகளுடன் மரங்கள் நன்கு வளரும். முற்றிய கிளைகளை ஒடித்துத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

சவுண்டல் நல்ல சத்துள்ள தீவன மரமாகும். ஆனால், இம்மரத்தைத் தோப்புகளில் வளர்க்கும் போது விதைகள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விதைகள் விழுந்து முளைக்க ஆரம்பித்தால் அவற்றை நீக்குவது மிகவும் சிரமமாகும்.

எனவே, விவசாயிகள், இதுவரை கூறியுள்ள உத்திகளைப் பயன்படுத்தி, தென்னந் தோப்புகளில் தீவனப் பயிர்களைப் பயிரிட்டால், மாடுகளின் தீவனத் தேவையை நிறைவு செய்வதுடன் தோப்புகளையும் நல்ல முறையில் பராமரிக்கலாம்.


PB_DR.N.DHAVA PRAKASH

முனைவர் ந.தவப்பிரகாஷ்,

பண்ணை மேலாண்மைத்துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை – 641 003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!