My page - topic 1, topic 2, topic 3

அரசியலும் விவசாயமும் கலந்த வாழ்க்கை!

அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்!

ரசியல்வாதிகளுக்கே உரிய பகட்டு எதுவும் கிடையாது. அதிர்ந்து பேச மாட்டார். எப்போதும் சிரித்த முகம். யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியதும் இல்லை; பேசியதும் இல்லை. அமைச்சர் அளவுக்குப் பொறுப்புகளில் இருந்தாலும், எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளானதில்லை. பெரியளவில் புகார் எதுவும் இவர் மீது சொல்லப்பட்டதில்லை.

பணி செய்; பொறுப்பு வரும்

“பொறுப்பு என்பது நாம் தேடிப் போக வேண்டிய விஷயமில்லை. நம்முடைய பொறுப்பை உணர்ந்து தொடர்ச்சியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலே போதும்; தானாகவே அது நம்மை வந்து சேரும். அதுவரை பொறுமை தான் அவசியம்” என்பதை உறுதியாகக் கடைப்பிடிப்பது மட்டுமல்ல; தன் அடியொற்றி அரசியல் செய்ய வரும் அத்தனை ஆதரவாளர்களுக்கும் அவர் சொல்வதும் இதைத் தான்.

கட்சியின் நேர்த்திமிகு தொண்டர்

கட்சித் தலைமை மீது அசாத்திய நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டவர். ஒருநாளும், கட்சித் தலைமை விரும்பியதற்கு எதிராக எதையும் செய்ததில்லை. ‘இதை இவர் செய்தால் நன்றாக இருக்கும்’ எனக் கட்சித் தலைமை நினைப்பதை, அப்படியே புரிந்து கொண்டு அதன் வழி நடக்கும் நேர்த்தியான தொண்டர்.

கட்சியின் இளைஞர் அணியை வழி நடத்தும் முக்கியப் பொறுப்பில் இருந்தார். கட்சித் தலைமையின் குடும்பவழி இளைஞருக்கு, அப்பொறுப்பை வழங்க வேண்டும் என்று கட்சித் தலைமையின் குடும்பத்தினர் சிலர் விருப்பப்பட்டார்கள்.

இது தெரிய வந்ததும், தலைமையைத் தேடிப் போனார். ‘தலைவரே, இப்படியொரு செய்தி கேள்விப்பட்டேன். எனக்கான பதவியே நீங்கள் மனமுவந்து கொடுத்தது தான். இன்றைய சூழலில், இளைஞர் என்னும் தகுதிக்கு அடுத்த நிலைக்குச் சென்று விட்டேன். உங்கள் விருப்பம் போல, தாங்கள் விரும்பும் இளைஞர் ஒருவரை, கட்சியின் இளைஞர் அணிக்குத் தலைமை தாங்கச் சொல்வது தான் சரியாக இருக்கும். இளைஞர்களுக்கு உற்சாகம் அளிப்பதோடு, புதிய இளைஞர்களைக் கட்சியை நோக்கி வரவழைக்கும்’ எனச் சொல்லி, தன்னுடைய பொறுப்பைத் தானாகவே முன்வந்து இராஜினாமா செய்தார்.

தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர்

‘கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் இவரைப் போல இருந்து விட்டால், கட்சித் தலைமைக்கு எந்தக் காலத்திலும் நெருக்கடியே இருக்காது’ என்று, கட்சித் தலைவரே வியந்து சொல்லும் அளவுக்கு, கட்சி மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற்றவர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது மகனின் திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின் திருமண மேடையில் பேசியபோது, “கட்சித் தலைமை, நான்கும் மூன்றும் எட்டு என்று சொன்னால், ஆமாம் அண்ணா சரி தான் என்பார்’’ என்றார். இவருடைய இத்தகைய பணிவான அணுகுமுறை தான், அவரை இந்தளவிலான உயரத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது. இன்றைக்கும் அவர் அமைச்சர்.

உதவி செய்யும் பண்பு

கட்சித் தொண்டர்களிடமும், தன்னுடைய ஆதரவாளர்களிடமும் இதே பணிவான அணுகுமுறை தான். தேடி வரும் அத்தனை பேருக்கும் தன்னால் ஆனதை இன்றைக்கும் செய்து கொண்டிருக்கிறார். செய்ய முடியாத காரியம் என்றால், அதை வெளிப்படையாகச் சொல்வாரே தவிர, யாருக்கும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்ற மாட்டார். அதே நேரம், தேடி வரும் எல்லோரையும் இயலாது என்று சொல்லி புறக்கணிக்கவும் மாட்டார்.

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை

வயது என்னவோ, ஐம்பதுகளைக் கடந்து இருந்தாலும், இன்னும் முப்பதுகளில் இருக்கும் மனிதரைப் போலவே காட்சி அளிக்கிறார். அதற்கு மிக முக்கியக் காரணம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை. “வெற்றியோ தோல்வியோ, இரண்டையும் சமமாகப் பார்க்கும் பக்குவம் வந்து விட்டால், அரசியல் என்றாலும், மன அழுத்தம் ஒருபோதும் இருக்காது” என்று சொல்வது மட்டுமல்ல; வாழ்ந்தும் காட்டிக் கொண்டிருக்கிறார்.

‘நமக்குக் கிடைக்க வேண்டிய எதுவும், வீட்டில் உட்கார்ந்திருந்தாலும் நம்மைத் தேடி வரும். இல்லையென்றால், இமயமலைக்கே ஏறினாலும் தோல்வி தான் மிஞ்சும். உள்ளச் சுத்தியோடு செய்ய வேண்டிய காரியங்களை மட்டும் எதிர்பார்ப்பில்லாமல் செய்தால், கட்டாயம் அதற்குப் பலன் இல்லாமல் போகாது’ என்று சொல்வார். இதெல்லாம் அடுத்தவருக்கான பொன்மொழி அல்ல. தானும் அப்படித் தான் வாழ்கிறார்.

இப்படி இருப்பவருக்கு எங்கிருந்து மன அழுத்தம் வந்து விடும்? இதனால் ஏற்பட்டிருக்கும் பிரகாசம், அவருடைய தேகத்தில் மட்டுமல்ல; முகத்திலும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. மொத்தத்தில், அரசியல்வாதியாக இருந்தாலும், பின்பற்ற வேண்டிய ஆயிரம் விஷயங்களைத் தன்னுள்ளே வைத்திருக்கும் அசாத்திய மனிதர்.

அவர் வேறு யாருமல்ல. தமிழகத்தின் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர்  வெள்ளக்கோவில் சாமிநாதன் தான். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய, தமிழகத்தின் முக்கிய மனிதர்களில் இவரும் ஒருவர். இவருக்கும் விவசாயம் கலந்த அரசியல் வாழ்க்கை உண்டு.

அந்த வகையில், நம்முடைய ‘வி.ஐ.பி. விவசாயம்’ பகுதிக்காக வெள்ளக்கோவில் சாமிநாதனைத் தொடர்பு கொண்டோம். பொங்கல் நாளையொட்டி இரண்டு நாட்கள் அவரோடு பயணிக்கும் வாய்ப்புக் கிட்டியது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இடையே, தன்னுடைய விவசாயம் கலந்த அரசியல் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார் அமைச்சர் சாமிநாதன்.

இனி அவருடனான பயணத்திலிருந்து. பொங்கலுக்கு முதல் நாள்-ஜனவரி 13 ஆம் தேதி. வைகுண்ட ஏகாதசி தினம். அன்றைய தினம் திருப்பூர் மாவட்டம், மூலனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜும் உடனிருந்தார்.

விவசாயியின் ஆசையை நிறைவேற்றிய அமைச்சர்

அதைத் தொடர்ந்து நம்மையும் தனது காரில் ஏறிக்கொள்ளச் சொல்ல, சுமார் ஐந்து நிமிடப் பயணத்தை அடுத்து, தாளக்கரைப் பகுதியில் ஒரு தோட்டத்தின் வெளியே புதிய டிராக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் தன்னுடைய புதிய டிராக்டரை அமைச்சர் இயக்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, அதை ஏற்றுக் கொண்ட அமைச்சர் காரிலிருந்து இறங்கி, விவசாயிகளுக்கே உரித்தான பச்சை வண்ணத் துண்டை எடுத்துத் தலையில் கட்டினார். பின், டிராக்டரில் ஏறி அமர்ந்தார்.

அப்போது டிராக்டரை ஸ்டார்ட் செய்து கொடுப்பார் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்க, டிராக்டரை இயக்கிய அவர், பின்னால் இருந்த கலப்பையைத் தூக்கி விட்டு, டிராக்டரை நிலத்தில் ஓட்டிச் சென்றார். அதை வியப்பு மேலிட நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தென்னை மரங்களுக்கு இடையில் சென்று, மீண்டும் கலப்பையை இறக்கிய அவர், சரியாக ஒரே நேர் கோட்டில், முன் பின் பார்த்து, கை தேர்ந்த டிராக்டர் டிரைவர் போல உழத் தொடங்கினார்.

இப்படிச் சுமார் பத்து நிமிடங்கள் அந்தத் தென்னை மரங்களுக்கு இடையில் உழுது விட்டு டிராக்டரில் இருந்து இறங்க, அப்போது அந்தத் தோட்டத்துக்கார பெண், “இப்படியே மொத்தமா உழுது கொடுத்துட்டா நல்லா இருக்கும்’’ என்று கூற, “அதுக்கென்ன உழுது கொடுத்துட்டா போச்சு, சாப்பாடு எடுத்துட்டு வரச் சொல்லிடுங்க’’ என்று அமைச்சர் சொல்ல, அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரே சிரிப்பலை. அதன் பின்னர் அங்கிருந்து விடைபெற, கார் வெள்ளக்கோவிலை நோக்கிப் பயணித்தது. அப்போது அவரிடம் நாம் அவருடைய பூர்வீகம் மற்றும் குடும்பம் குறித்துக் கேட்டோம்.

பிறப்பு வளர்ப்பு

“நான் பிறந்து வளர்ந்தது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் முத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன முத்தூர் என்னும் கிராமம். அப்பா பெருமாள்சாமி, அம்மா தங்கமணியம்மாள். விவசாயம் தான் எங்கள் குடும்பத் தொழில். விவசாயத்தோடு அரிசி ஆலை, நிதி நிறுவனம் ஆகியவற்றையும் நடத்தி வந்தோம். என்னுடைய தாத்தா காலத்திலிருந்தே இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வருவதால், சாமியப்பக் கவுண்டர் என்னும் அவரை, ‘பேங்கர் சாமியப்பக் கவுண்டர்’ என்று தான் எல்லோரும் அழைப்பார்கள்.

நான் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் இளங்கலை சமூகவியல் பட்டம் முடித்துள்ளேன். என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்கா. என்னுடைய மனைவி உமாதேவி. எனக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்’’ என்றவரிடம், “அரசியலுக்கு வந்தது எப்படி?’’ என்ற கேள்வியை முன் வைத்தோம்.

முதல்வரைப் பின்பற்றும் எண்ணம்

“பொது சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம், கலைஞர் அய்யா மேல் இருந்த ஈர்ப்பு ஆகியவையே நான் அரசியலுக்கு வர முக்கியக் காரணம். நான் பிஎஸ்ஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது கோவையிலுள்ள ஒரு கார் மெக்கானிக் நிறுவனத்தில் எங்கள் காரின் இருக்கை உறையை மாற்றுவதற்குக் கொடுத்திருந்தோம். அங்கே தான் நமது மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களும் தனது காரின் இருக்கை உறையை மாற்றுவதற்குக் கொடுத்திருக்கிறார். அப்போது தான் அங்கு வந்த அவரை முதன் முதலாகப் பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது. அப்போது பேசவில்லை. ஆனால், அவரைப் பின்பற்ற வேண்டும் என்னும் எண்ணம் வந்தது.

45 நாட்கள் சிறைவாசம்

அதைத் தொடர்ந்து உள்ளூர் திமுக நிர்வாகிகளிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். அதன் பின் 1986 ஆம் ஆண்டு என்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வந்த சமயம், மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான சட்ட நகல் எரிப்புப் போராட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளக்கோவிலில் நடந்தது. அதில் கலந்து கொண்ட போது, அப்போதைய ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், இப்போதைய ஈரோடு பாராளுமன்ற உறுப்பினருமான கணேச மூர்த்தி அவர்கள், “இது சட்ட நகல் எரிப்புப் போராட்டம். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரையில் கூடச் சிறையில் இருக்க நேரிடலாம். எனவே, அதையெல்லாம் யோசித்துப் பார்த்து, குடும்பத்தில் முடிவு செய்து கலந்து கொள்ளுங்கள்’’ என்று கூறினார்.

அவர் கூறியதை ஏற்றுக் கொண்டு நான் போராட்டத்தில் கலந்து கொண்டேன். கைது செய்யப்பட்டு 45 நாட்கள் கோவை மத்திய சிறையில் இருந்தேன். அங்கே தான் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தோழர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அது முதல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டத் துவங்கினேன்.

கட்சியில் பொறுப்புகள்

அதைத் தொடர்ந்து 1987இல் வெள்ளக்கோவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர், அடுத்து 15 நாட்களில் ஈரோடு தெற்கு மாவட்டத் துணை அமைப்பாளர், 1993-1994 இல் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்று, கட்சிப் பதவிகள் தொடர்ந்து கிடைத்தன.

சட்டமன்ற உறுப்பினர்

இந்நிலையில், 1996 சட்டமன்றத் தேர்தலில், வெள்ளக்கோவில் சட்டமன்றத் தொகுதியின் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். எனக்கு எதிராக அதிமுகவில் நின்றவர் துரை.இராமசாமி. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இறுதியில் அமைச்சராகவும் இருந்தவர். அவரை D.R. என்று செல்லமாக அழைப்பார்கள். ‘D.R-ஐ வென்றவனும் இல்லை, கடவுளைக் கண்டவனும் இல்லை’ என்பார்கள். அந்தளவுக்கு சக்தி வாய்ந்த மனிதராக இருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கழகம் ஆட்சி அமைத்தது. 1999 இல் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.

அதன் பின் மீண்டும் 2001 இல் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2002 இல் மாநில இளைஞரணித் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அடுத்ததாக 2006 சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் கழக ஆட்சி.

கலைஞர் வைத்த பெயர்

அப்போது கலைஞர் அய்யா அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டார். அதில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டேன். அப்போது, நான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான வெள்ளக்கோவில் என்பதை, என் பெயருக்கு முன் சொல்லாகச் சேர்த்து வெள்ளக்கோவில் சாமிநாதன் என்று கலைஞர் அய்யா அறிவிக்க, மு.பெ.சாமிநாதனாக இருந்த நான், அன்றிலிருந்து வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் என்று அழைக்கப்படுகிறேன்’’ என்றார்.

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, கார் வெள்ளக்கோவில் நெடுஞ்சாலைத்துறை விடுதியை அடைய, நேரமும் மாலை 3 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அங்கே மதிய உணவை முடித்து விட்டு, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடம் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைக் பெற்றுக் கொண்டு, அவர் மீண்டும் கிளம்ப, திருப்பூர் மாவட்டக் கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை நோக்கி கார் விரைந்தது.

முதல் மாவட்டச் செயலாளர்

அப்போது மீண்டும் தொடர்ந்த அவர், “2009 ஆம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம் உருவானதும் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆனேன். அடுத்து 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். அதையடுத்து 2015 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டேன்.

மாநில இளைஞரணிச் செயலாளர்

அதன் பின், 2016 ஆம் ஆண்டு திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு நமது மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள், கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட காரணத்தால், அவர் வகித்த மாநில இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நம்முடைய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞரணிச் செயலாளர் ஆன பிறகு, கழக உயர் நிலைச் செயல் திட்டக்குழு உறுப்பினர் பொறுப்பில் நியமிக்கப்பட்டேன்.

மீண்டும் அமைச்சர்

அதன் பின், 2020 ஆம் ஆண்டு திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சராக இருக்கிறேன்’’ என்றார். இப்படி அவர் சொல்லி முடிக்கையில், கார் திருப்பூர் மாவட்டக் கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை அடைந்திருந்தது.

பிரம்மாண்ட அலுவலகம்

காரை விட்டு இறங்கினோம். பிரம்மாண்டமாய் நிமிர்ந்து நின்றிருந்தது கலைஞர் அறிவாலயம். கொங்கு மண்டலப் பகுதிக்கே உரிய வகையில், முன்பகுதி முழுவதும் சாணத்தால் மெழுகிக், கோலமிட்டு மாங்களகரமாய்க் காட்சியளித்தது. முன்பகுதியில் பெரியளவில் பார்க்கிங் வசதி. தரைத்தளம் முழுவதும் அலுவலகங்கள். முதல் தளம் அரங்கம் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கான அமைப்பில் இருந்தது. நமக்குத் தெரிந்த வரையில் திருச்சி, விழுப்புரத்தை அடுத்து, பெரியளவில் நல்ல இட வசதியுடன் கூடிய பிரம்மாண்டமான கலைஞர் அறிவாலயம் இதுதான்.

இந்த அறிவாலயக் கட்டடம் குறித்து அவரிடம் பேசினோம். அதற்கு அவர்,  தான் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது கட்டியதாகவும், இதை இன்றைய முதல்வர் ஸ்டாலின் தான் திறந்து வைத்ததாகவும், அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போல் இருப்பதாகப் பாராட்டிப் பேசியதாகவும் கூறினார்.

அதன் பின்னர் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து விட்டு, பின்னர் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தையும் நடத்தி முடித்து விட்டு, அங்கிருந்து கிளம்பி முத்தூரிலுள்ள அவருடைய வீட்டை அடைந்த போது நேரம் இரவு 11 மணியைக் கடந்திருந்தது.

உடற்பயிற்சி

தொடர்ந்து, மறுநாளான பொங்கலன்று காலை 7 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற நம்மை வரவேற்ற அவர், “அப்படியே தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டே பேசலாம்’’ என்றவர், “நான் தினமும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். அப்படியே சுமார் ஒருமணி நேரம் வீட்டுக்குள்ளேயே உடற் பயிற்சிகளை முடித்து விட்டு, தோட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்வேன். அப்போது தோட்டத்தில் நடந்திருக்கும் விவசாய வேலைகளைப் பார்த்து விட்டு, இங்கிருக்கும் மாடு, கன்றுகளுடன் சிறிது நேரம் செலவிடுவேன்’’ என்றவர், தனது விவசாய வாழ்க்கையை விவரிக்க ஆரம்பித்தார்.

விவசாய அனுபவங்கள்

“எங்களுக்குச் சுமார் 80 ஏக்கர் பூர்வீக நிலம் இருக்கிறது. எங்கள் நிலத்தில் நெல், கரும்பு, கடலை, பயறு வகைகள், தானிய வகைகள் முதலியவற்றைப் பயிர் செய்வோம். அந்தக் காலத்தில் இப்போது இருப்பதைப் போல மின் மோட்டார்கள் கிடையாது. இரண்டு மாடுகளைப் பூட்டி நீர் இறைப்போம். அப்படி நீர் இறைப்பதை இந்தப் பகுதிகளில் ‘கவளை-ஏற்றம்’ என்பார்கள். நானும் கவளையில் நீர் இறைத்திருக்கிறேன். அறுவடைக் காலத்தில் நெல் அடிப்பது முதல், அந்த நெல்லைச் சுத்தம் செய்து வீட்டில் கொண்டு சேர்ப்பது வரை அனைத்து வேலைகளையும் செய்வேன்.

எங்களிடம் அப்போது சுமார் 25 க்கும் மேற்பட்ட காங்கேயம் நாட்டு மாடுகளும், காளை மாடுகளும் இருக்கும். இந்த நாட்டு மாடுகள், சிந்து மாடுகளைப் போல அதிகமாகப் பால் கறக்காது. குறைவாகத்தான் பால் கறக்கும். ஆனால், இந்த நாட்டு மாட்டுப் பாலில் தான் சத்துகள் மிக அதிகம்’’ என்றவரிடம், டிராக்டரில் சரியாக உழுததைப் பற்றிக் கேட்டோம்.

“இதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரிந்த, நான் பார்த்த வேலை தான். விவசாயத்தில் அனைத்து வேலைகளும் தெரியும். பள்ளிப் பருவத்தில் இப்படி விவசாய வேலைகளில் ஈடுபடும் போது தான் இந்த டிராக்டர் ஓட்டுவதைக் கற்றுக் கொண்டேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஏர் பூட்டி உழுவதையும் கற்றுக் கொண்டேன். 1986 ஆம் ஆண்டில் என்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் சிறிது காலம் முழுமையாக விவசாயத்தில் ஈடுபட்டேன். தீவிர அரசியலுக்கு வந்த பிறகு இந்த விவசாய வேலைகளைச் செய்வது குறைந்து விட்டாலும், இப்போதும் எங்களுடைய தோட்டத்தில் நேரம் கிடைக்கும் போது, எல்லா வேலைகளையும் செய்வேன்.

எங்கள் தோட்டத்தில் தென்னை, நெல், கடலை, எள், பயறு வகைகள், சிறுதானிய வகைகளைப் பயிர் செய்கிறோம். தற்போது நெல் அறுவடை முடிந்து உளுந்து பயிரிட்டுள்ளோம். மேலும், மா, கொய்யா, மாதுளை, பூச்செடிகள் ஆகியவையும் உள்ளன. நாட்டுக் கோழிகளும் வளர்த்து வருகிறோம். கீழ் பவானியிலிருந்து வரும் நீரைக் கொண்டு பாசனம் செய்கிறோம். என்னுடைய அம்மா வழி நிலத்தில் பரம்பிக்குளம் ஆழியார் நீர்ப் பாசனம். மேலும், இங்கே நான்கு கிணறுகள் உள்ளன’’ என்றவர், அங்கிருந்த ஒரு கிணற்றைக் காட்டி, “இந்தக் கிணற்றைச் சமீபத்தில் தான் வெட்டி ஆழப்படுத்தினோம்’’ என்றபடி, கிணற்றில் எவ்வளவு நீர் இருக்கிறது என்று எட்டிப் பார்த்தார்.

அதன் பிறகு, அங்கிருந்த தோட்டக்காரரிடம் தென்னை மரத்தில் ஏறி இளநீர்க் காய்களைப் பறித்துப் போடச் சொன்னார். அவரும் பறித்துப் போட, ஒரு இளநீர்க் காயை எடுத்துக் கை தேர்ந்தவர் போலச் சீவிய அமைச்சர், அதைக் குடித்தபடியே, அங்கிருந்த அனைவருக்கும் இளநீர்க் காய்களை வெட்டிக் கொடுக்கச் சொன்னார்.

மாடுகளுக்கு இனிப்பு வழங்குதல்

தொடர்ந்து, அங்கிருந்த தோட்டத்துப் பணியாளரிடம் மாடுகளைப் பிடித்து வரச் சொல்லி அவற்றுக்கு மனைவியுடன் சேர்ந்து புல் மற்றும் வாழைப் பழங்களைக் கொடுத்தபடியே, “என்னுடைய மனைவியும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். எங்களிடம் இப்போது பத்து மாடுகள், கன்றுக் குட்டிகள் உள்ளன. இந்த மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலில், எங்களுக்குத் தேவையானது போக மீதமுள்ள பாலை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் கொடுத்து விடுகிறோம்’’ என்றவரிடம், “இன்றைய சூழலில் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படத் தாங்கள் கூற விரும்புவது என்ன?’’ என்று கேட்டோம்.

கலப்புப் பண்ணை

அதற்கு அவர், “விவசாயம் என்பது முழுக்க முழுக்க இயற்கையோடு இணைந்தது. அதனால், எப்போதும் விவசாயிகளுக்கு இயற்கை ஒத்துழைக்க வேண்டும். இப்போது இயற்கை விவசாயம் என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இயற்கை விவசாயத்தின் மூலம் விளையும் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. மேலும், விவசாயிகள் ஒரே பயிரை மட்டுமே நம்பி இருக்காமல், பல்வேறு வகையான பயிர்களை மாற்றி மாற்றிப் பயிரிட வேண்டும். இதன் மூலம் ஒரு பயிர் விலை இல்லாமல் போனால் இன்னொரு பயிர் காப்பாற்றும்.

மேலும், விவசாயத்தோடு, ஆடு, மாடு, கோழி, முயல், காடை வளர்ப்பு என்று செயல்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இருந்தும் பலன் கிடைக்கும். முக்கியமாக வேலையாட்களை மட்டுமே நம்பியிராமல், நம்முடைய சொந்த உழைப்பையும் போட்டால், விவசாயத்தில் அதிகம் இலாபம் பெறலாம்’’ என்றார்.

இலட்சியம்

அப்போது அவரிடம், இந்தப் பகுதி விவசாயிகளுக்குத் தாங்கள் செய்யவிருப்பது என்ன என்று கேட்டோம். அதற்கு அவர், கொங்கு மண்டலத்தில் விவசாயத்தைப் பாதுகாக்க, மேம்படுத்த நீர்ப்பாசனத் திட்டங்களை ஒழுங்குபடுத்தி, புதிய திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக எங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டுள்ள படி, தமிழகம்-கேரளம் இணைந்து உருவாக்கிய பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில், கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டிக் கொண்டால், அதன் பின்னர் துணை ஒப்பந்தங்களை ஏற்படுத்தி நல்லாறு-நீராறு திட்டத்தையும், ஆனைமலையாறு திட்டத்தையும் நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயனளிக்கும்.

அதுபோல, கேரள அரசோடு போடப்பட்ட இன்னொரு ஒப்பந்தமான, நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பாண்டியாறு-பொன்னம்பலா திட்ட நீராதாரத்தைப் பயன்படுத்தி, கீழ் பவானி ஆறு பாசனத் திட்டத்தை மேம்படுத்துவதும், வட்டமலை ஓடை அணை, உப்பாறு அணை, நல்லதங்காள் ஓடை அணை ஆகியவற்றுக்கு அமராவதி ஆற்று உபரி நீரைக் கொண்டு பாசனப் பரப்பை மேம்படுத்துவதும் எனது இலட்சியம் என்றார்.

சமத்துவப் பொங்கல்

அதன் பின், மீண்டும் வீட்டுக்கு வந்த அவர், அங்கே வந்திருந்த கட்சியினரிடம் பொங்கல் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டிருக்கையில், சென்னிமலையில் நடக்கும் சமத்துவப் பொங்கல் விழாவுக்குக் கட்சியினர் அழைக்க, உடனே சென்னிமலைக்குக் கிளம்பினார்.

அப்போது, “ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் சேர்ந்து சமத்துவப் பொங்கலையும், திருவள்ளுவர் தினத்தையும் கொண்டாடுகிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக இதை நடத்தி வருகிறோம்’’ என்று கூறிக் கொண்டிருக்க, சுமார் பத்து நிமிடப் பயணத்தில் சென்னிமலையை அடைந்தோம்.

சென்னிமலை பேருந்து நிலையத்தின் அருகே கட்சியினர் திரளாகக் கூடியிருக்க, அவர்களுடன் இணைந்து சமத்துவப் பொங்கல் விழாவைக் கொண்டாடி, அனைவருக்கும் பொங்கல் வழங்கினார். மேலும், முதியோர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என, நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் புத்தாடைகளை வழங்கி, அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, அருகிலிருந்த ஒரு வீட்டுக்குச் சென்ற அவர், அங்கே உடல்நிலை சரியில்லாமல் இருந்த கட்சி நிர்வாகியைச் சந்தித்து நலம் விசாரித்து விட்டுக் கிளம்பினார். கார் திருப்பூர் மாவட்டக் கட்சி அலுவலகத்தை நோக்கி விரைந்தது.

நல்லுறவுப் பாலம்

அப்போது அவரிடம், “செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சரான நீங்கள், உங்கள் துறையில் செய்த, செய்யவிருக்கும் பணிகள் குறித்துக் கூறுங்களேன்’’ என்று கேட்டோம். அதற்கு அவர், “மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் வழிகாட்டுதலில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். முதல்வர் கூறியபடி, பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் முக்கியக் கோரிக்கையான பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்தோம். அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தோம். கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்குப் பத்து இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினோம்.

போலி பத்திரிகையாளர்கள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன. அதை எப்படி சரி செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மொத்தமாகத் துறைச் செயலாளர், இயக்குநருக்குக் கீழே இருந்த மக்கள் தொடர்பு அதிகாரிகளை, நிர்வாக வசதிக்காக, ஆறு மண்டலங்களாகப் பிரித்து, இணை இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் மாற்றியிருக்கிறோம். இதன் மூலம் அரசின் மேல் வைக்கப்படும் நிறை-குறைகளை உடனடியாக அறிந்து, உடனுக்குடன் சரி செய்வதோடு, பணிகளையும் முடுக்கி விட்டுள்ளோம். மொத்தத்தில், பத்திரிகையாளர்களுக்கும் -அரசுக்கும் -மக்களுக்கும் இடையில் ஒரு நல்லுறவுப் பாலமாக இருந்து செயல்பட்டு வருகிறேன்’’ என்று சொல்லி முடிக்க, திருப்பூர் மாவட்டக் கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை அடைந்திருந்தோம்.

அங்கே கட்சியினர் ஏராளமாகக் கூடியிருக்க, பெண்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருக்க, உள்ளிருந்த அறையில் கட்சியினரிடம் பேசி, அவர்களின் பொங்கல் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளையும் மனுவாகப் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது நம்மிடம் பேசிய கட்சியின் மிக மூத்த நிர்வாகி ஒருவர், கடந்த 2006 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த போது செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.

“நம்முடைய அமைச்சர் கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் காலிப் பணியிடங்கள் நிறைய இருந்தன. அதையெல்லாம் நிரப்பினார். சாலை ஆய்வாளர் பணிக்கு ஓய்வு பெறும் வயதை அடைந்தும் பலரை நிரப்பவில்லை. அந்தப் பணிக்கான கல்வித்தகுதி போன்ற வரையறைகள் கூடத் தெளிவாக இல்லை. அதைப் பணி மூப்பு அடிப்படையில் 25 சதவிகிதமும், மீதமுள்ள பணியிடங்களை சிவில், ஐடிஐ படித்தவர்களைக் கொண்டும் நிரப்பினார்.

முன்மாதிரிச் செயல்கள்

சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மஞ்சள் நிற எல்லைக் கற்களை நட்டார். அதன் மூலம் பெருமளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த நிலங்கள் அரசின் வசம் சேர்க்கப்பட்டன. அதைப் பார்த்துத் தான் பொதுப்பணித் துறையும் நீர் நிலைகள், ஏரிகளில் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீல நிறக் கற்களை நட்டது.

அன்றைய காலக்கட்டத்தில் தார்ச் சாலைகளை அமைக்க நீண்ட நாட்களாகி வந்த நிலையில், அவற்றை விரைந்து அமைக்கும் நோக்கத்தில், நீர்க்கப்பிச் சாலை போன்ற நவீன முறைகளை முதன் முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் நம்முடைய அமைச்சர் தான்.

உலக வங்கியின் பாராட்டு

அதைப் போல, இவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக வருவதற்கு முன், ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, உலக வங்கியின் 5,000 கோடி ரூபாய் கடனுதவித் திட்டத்தில், நாகை முதல் தூத்துக்குடி வரையிலான கடற்கரைச் சாலை அமைக்கும் திட்டத்தைத் தீட்டிக் கிடப்பில் போட்டிருந்தது. அந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாததைக் கண்ட உலக வங்கி, இந்தத் திட்டத்தை ஏன் இரத்து செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.

அதற்கு நமது அமைச்சர், தமிழ்நாட்டில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது என்றும், எங்கள் அரசு அதைச் சிறப்பாகச் செயல்படுத்தும் என்றும் பதில் எழுதினார். அதன்படி, அந்தச் சாலைத் திட்டத்தை விரைவாகவும் முடித்துக் காட்டினார். அதன் மூலம் 16 மணி நேரப் பயணம் 6-8 மணி நேரப் பயணமாகக் குறைந்தது. அதை உலக வங்கியும் பாராட்டியது.

இவருடைய நெடுஞ்சாலைத் துறையின் கீழேதான், சிறு துறைமுகங்கள் துறையும் இருந்தது. அதில், நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த கடல்சார் வாரியத்தை இலாபத்தில் இயங்க வைத்தார். அதைப் போல, தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் குழுமத்தையும் இலாபத்தில் இயங்க வைத்தார்.

மனிதநேயம்

2005 ஆம் ஆண்டு என்று ஞாபகம். அப்போது அமைச்சராக இல்லை. சட்டமன்ற உறுப்பினர் தான். நம்முடைய முதல்வர் இளைஞரணிச் செயலாளராக இருந்த போது செயல் வீரர்கள் கூட்டத்துக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன்படி தாராபுரம் சென்று கொண்டிருக்கையில். அவருடைய வாகனத்துக்கு முன்னே போய்க் கொண்டிருந்த பெரியவர் ஒருவர், சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கீழே விழுந்து விட்டார். பலமாக அடிபட்டு விட்டது.

அவரைத் தன்னுடைய காரில் ஏற்றிச் சென்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்து விட்டுத் திரும்பினார். அதன் பிறகு இம்மாதிரி ஒரு பொங்கல் நேரத்தில், அடிபட்ட அந்த முதியவர் ஒரு மாலை நாளிதழில், எனது உயிரைக் காப்பாற்றிய சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனுக்கு நன்றி என்று விளம்பரம் வெளியிட்டார்.

அதை மையமாக வைத்துத் தான், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், ‘வேகத்தடைகள் என்பது வேகத்தைக் குறைப்பதற்குத் தான், உயிரை எடுப்பதற்கு அல்ல’ என்று கூறி, வேகத்தடைகளைச் சீரான அளவில் அமைக்கும் வழிமுறைகளை ஏற்படுத்தினார். நெடுஞ்சாலைத் துறையில் தரமான சாலைகளை அமைக்க, பணிகளை கவனிக்க, தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களைக் கொண்ட புதிய அலகை ஏற்படுத்தினார்.

மேலும் தமிழகம் முழுவதும் 3 முறை சுற்றிப் பயணம் செய்து மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் என அனைவரையும் சந்தித்துப் பேசி, ஒருங்கிணைத்துச் சாலைப்பணிகளை விரைந்து முடித்தார்.

கோடிக்கணக்கில் மரங்கள் வளர்ப்பு

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது, 2007 முதல் 2011 வரையான நான்கு ஆண்டுகளில், கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு, சாலையோரங்களில் மரங்களை வளர்க்க ஆவன செய்தார். இதன் மூலம் வளர்க்கப்பட்ட மரங்கள் ஒரு கோடிக்கு மேல் இருக்கும். இவ்வகையில், சுற்றுச்சூழல் மேம்படுவதற்குச் சிறந்த பங்காற்றியுள்ளார்.

வருமுன் காப்போம் திட்டம்

அதைப் போல, இவர் 1996 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, அண்ணா, கலைஞர் ஆகியோரது பிறந்த நாட்களில் அரசு மருத்துவர்களை அழைத்துப் பொது மருத்துவ முகாம்களை நடத்தி, அவற்றின் புகைப்படங்களைத் தலைவர் கலைஞரிடம் அளிக்க, அவற்றைப் பார்த்த தலைவர் கலைஞர், “நல்ல திட்டமாக இருக்கிறதே!’’ என்று கூறி, அதை வருமுன் காப்போம் திட்டம் என்று 1997-1998 ஆம் ஆண்டில் அறிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் உருவாதல்

திருப்பூர் மாவட்டம் உருவானதில் நமது அமைச்சருக்குப் பெரும்பங்கு உண்டு. நமது அமைச்சர் தான், அப்போது தமிழக முதல்வராக இருந்த தலைவர் கலைஞரிடம், திருப்பூரைத் தனி மாவட்டமாக உருவாக்கும் கோரிக்கையை முன் வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட கலைஞர் அவர்கள், திருப்பூர் மாவட்டத்தை உருவாக்கினார். பொதுவாக, ஒரு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்துப் புதிய மாவட்டத்தை உருவாக்குவது நடைமுறை. ஆனால், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்த பகுதிகளைப் பிரித்து அமைக்கப்பட்டது. இது நமது அமைச்சரின் தனிச் சாதனையாகும். இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டதன் காரணம், இந்தியாவிலேயே அந்நியச் செலாவணியை அதிகமாக ஈட்டித்தரும் தொழில் நகரங்களில் ஒன்றாகத் திருப்பூர் விளங்குவது தான்.

குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு

இவர் 1996 இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, இப்பகுதியில் கடும் குடிநீர்ப் பிரச்சினை இருந்தது. அதைத் தீர்க்கும் வகையில் தலைவர் கலைஞரை அணுகி, கொடுமுடியின் அருகில், காவிரி நதியிலிருந்து நீரெடுக்கும் கோரிக்கையை வைத்தார். அந்தக் கோரிக்கை 2000 ஆண்டின் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும், முத்தூர்-காங்கேயம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார். இதன் மூலம், காங்கேயம், தாராபுரம் ஆகிய வட்டங்களின் பெரும் பகுதிகள் பயனடைந்து வருகின்றன.

மேலும், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் கட்டப்பட்டது வட்டமலை ஓடை அணைத் திட்டம். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த அணை நிரம்பியிருப்பது, இப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து, இப்பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினையத் தீர்த்து வைத்துள்ளார். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் நல்லதங்காள் ஓடை அமராவதி ஆற்றில் கலப்பதற்கு முன்னுள்ள கொன்னிவாடி என்னும் கிராமத்தில், ஒரு தடுப்பணையைக் கட்டிக் கொடுத்துள்ளார். இது, நமது அமைச்சர், 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கட்டிக் கொடுத்தது.

ஏளனப் பேச்சு

திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்றபோது, தமிழ்நாட்டிலேயே கொங்கு மண்டலத் திமுக நிர்வாகிகள் தான் அவருடன் அதிகமாகச் சென்றனர். அப்போது, “நீ மட்டும் திமுகவில் இருந்து என்ன செய்யப் போகிறாய்?’’ என்று, நமது அமைச்சரை ஏளனம் செய்தனர். பலரின் கேலிப் பேச்சுக்கு ஆளானாலும், கட்சிக்கும், தலைவருக்கும், தளபதிக்கும் உண்மையாக இருந்தவர் நமது அமைச்சர்.

கட்சியின் தீவிர விசுவாசி

இப்படி, தன்னுடைய சிறு வயது முதலே கழகத்தில் இருந்து, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இப்போது இரண்டாம் முறையாக அமைச்சராகவும் இருக்கும் நம்முடைய அமைச்சர், கட்சிக்கும் தலைமைக்கும் உண்மையாக, விசுவாசமாக இருப்பதுடன், கொங்கு மண்டலத்தில் கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறார்.

முக்காலம் உணர்ந்து உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர், முக்கால மக்களுக்கும் பொருந்தும் வகையில் தான் ஒவ்வொரு குறளையும் இயற்றியுள்ளார். இவ்வகையில், வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு என்னும் குறள், நம்முடைய அமைச்சருக்கு அப்படியே பொருந்தும் வகையில் இருக்கிறது என்றால், அது மிகையில்லை’’ என்று முத்தாய்ப்பாகக் கூறினார்.

அப்போது பொங்கல் பொங்க, வெளியே வந்த அமைச்சர், ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி, அரிசியை அள்ளிப் போட, சற்று நேரத்தில் சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் தயாராக, கரும்புகளுடன் அனைவருக்கும் பொங்கல் வழங்க, அவருடனான விவசாயம் மற்றும் பொங்கல் பயணம் இனிதே நிறைவு பெற்றது.


மு.உமாபதி

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks