வாழையைத் தாக்கும் தண்டுக் கூன்வண்டு!

தண்டுக் கூன்வண்டு feed banana

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019

லகளவில் வாழை சாகுபடிப் பரப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மராட்டியத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் ஓராண்டில் உற்பத்தியாகும் சுமார் 35 இலட்சம் டன் வாழைப் பழங்கள், சௌதி அரேபியா, ஓமன், பக்ரான், கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. எனவே, விவசாயிகள் வாழையை விரும்பிப் பயிரிட்டு வருகிறார்கள். ஆனால், சில பூச்சிகள் வாழையைத் தாக்கிக் கடும் சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இவற்றில் ஒன்று தண்டுக் கூன்வண்டு.

தாக்குதல்

இவ்வண்டு, நேந்திரன், செவ்வாழை, ரொபஸ்டாவை அதிகளவில் தாக்கும். இத்தாக்குதல் ஆண்டு முழுதும் இருந்தாலும், கோடையில் அதிகமாகும். ஆறு மாதம் அல்லது அதற்கு மேலுள்ள வாழைகளை இந்த வண்டுகள் தாக்கும். இதனால் வலுவிழக்கும் மரங்கள் இலேசான காற்றிலும் ஒடிந்து விடும். பூப்பதற்கு முன் தாக்கினால் பூக்கள் வருவது பாதிக்கும். வாழையைத் தொடர்ந்து பயிரிடும் பகுதிகளில் இதன் தாக்கம் மிகுதியாக இருக்கும். இங்குள்ள கிழங்குகளை எடுத்து வேறொரு பகுதியில் நட்டால், அங்கும் இவ்வண்டின் முட்டைகள், புழுக்கள் பரவும்.

அறிகுறிகள்

தாய்வண்டு தனது கூரிய மூக்கால் இலையுறையைப் பிளந்து முட்டைகளை இடும். இந்தப் பிளவிலிருந்து பழுப்பு நிறத்தில் திரவம் வழியும். இந்த முட்டைகள் பொரிக்கும் புழுக்கள், தண்டைக் குடைந்து திசுக்களை உண்ணும். இந்தத் திசுக்கள் சிவப்பாக மாறி அழுகி விடுவதால், சத்துகள் செல்வது தடைபட்டு வாழையின் வளர்ச்சிக் குன்றிவிடும். இலைகள் வராது. குலை வந்தாலும் காய்கள் பெருக்காது.

வாழ்க்கை

தாய்வண்டு தடித்து, சிவப்புக் கலந்த பழுப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் கூரிய மூக்குடன் இருக்கும். ஒவ்வொரு இடத்துக்கும் பறந்து சென்று இனவிருத்தி செய்யும். முட்டைகள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் உருளையாக இருக்கும். புழுக்கள் வெள்ளை நிறத்தில் பழுப்புத் தலையுடன் கால்களின்றி இருக்கும். தண்டிலேயே கூட்டுப்புழுவாக மாறி, தாய்வண்டாக வெளிவரும்.

கட்டுப்படுத்துதல்

இவ்வண்டினம் தாக்கிய தோப்பிலிருந்து விதைக் கிழங்குகளை எடுக்கக் கூடாது. தோட்டம் சுத்தமாக இருக்க வேண்டும். காய்ந்த, சாய்ந்த மரங்களை அகற்றிவிட வேண்டும். காய்ப்பு மரத்தைச் சுற்றி வளரும் கன்றுகளை மாதம் ஒருமுறை நீக்க வேண்டும். எக்டருக்கு 65 என்னும் கணக்கில், தோப்புக்குள் ஆங்காங்கே ஓரடி அல்லது ஈரடி வாழைத் தண்டுகளை வெட்டிப் பிளந்து வைத்து, தாய்வண்டுகளின் நடமாட்டத்தைக் கவனிக்க வேண்டும்.

இந்த வண்டுகளால் சேதமான மரத்தைச் சிறிய துண்டுகளாக நறுக்கி எரித்துவிட வேண்டும். இதனால், இவ்வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்கள் அழியும். பிவேரியா பேசியானா கரசலைத் தெளித்து இவ்வண்டின் புழுக்களை அழிக்கலாம். 20 கிராம் வீதம் பிவேரியானா அல்லது ஹெட்ரோரேப்டிடிஸை எடுத்து, இரண்டடி வாழைத் தண்டில் தடவி ஆங்காங்கே வைக்க வேண்டும். இதனால் ஈர்க்கப்படும் வண்டுகளின் உடலில் இம்மருந்து பட்டால் அவை 1-2 நாட்களில் இறந்து விடும்.

50 மில்லி மோனோகுரோட்டோபாசில் 350 மில்லி நீரைக் கலந்து, 2 மில்லி வீதம் எடுத்து, இவ்வண்டு தாக்கிய மரத்தண்டில், தரையிலிருந்து 45 செ.மீ. உயரத்திலும், 150 செ.மீ. உயரத்தில் இதற்கு எதிர்ப்புறமும் ஊசி மூலம் செலுத்த வேண்டும். இப்படி 6, 7, 8 ஆம் மாதம் செய்தால் கூன்வண்டுப் புழுக்கள் அழியும். அலுமினிய பாஸ்பைடு மாத்திரையை மரத்துக்கு ஒன்று வீதம் அடித்தண்டில் செலுத்தியும் இப்புழுக்களை அழிக்கலாம்.


முனைவர் இரா..சௌந்தரராஜன்,

முனைவர் மோ.சந்திரசேகரன், முனைவர் தே.சரளாதேவி,

மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி, திருச்சி-620027.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading