கட்டுரை வெளியான இதழ்: மே 2020
மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர் பாலி எத்திலின் பைகளில் சேமிக்கலாம். சேமிப்புக் கிடங்கின் வெப்பநிலை மிகாமலும், ஈரப்பதம் 20-40% க்குள்ளும் இருக்க வேண்டும். இதனால், தரம் குறையாமல் 3-5 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பரிந்துரை அளவு
மண்புழு உரம், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் நிறைந்த இயற்கை உரம். இதை இரசாயன உரங்களுடன் சேர்த்து இட்டால் அதிலுள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி, நொதிகளின் செயல் திறன் பாதிக்கப்படும். எனவே, இதை அடியுரமாக இட்டுச் சில நாட்கள் கழித்து இரசாயன உரங்களை இட வேண்டும். மண்புழு உரத்துடன் நுண்ணுயிர் உரங்களையும் சேர்த்து இட்டால், இதன் பயனை முழுமையாகப் பெறலாம். நுண்ணுயிர்களின் சிறந்த உணவாக மண்புழு உரம் இருப்பதால், அவை பெருகிப் பயிர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
மண்புழு உரத்தில் உள்ள தழைச்சத்தும், வளிமண்டலத் தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும் நுண்ணுயிர்கள் மற்றும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்காத தழைச்சத்தை, பயிருக்குக் கிடைக்கச் செய்யும் நுண்ணுயிர்களும், தழைச்சத்து உரங்களான யூரியா, அம்மோனியம் குளோரைடின் தேவையை ஈடு செய்கின்றன. ஏக்கருக்கு 5 டன் மண்புழு உரத்தை இட வேண்டும் என்றாலும், இந்த அளவு மண் மற்றும் பயிரைப் பொறுத்தும் மாறுபடும்.
மண்புழு உரத்தால் காய்கறிப் பயிர்களில் பூச்சி, நோய்களின் தாக்கம் குறைந்து மகசூல் அதிகமாகக் கிடைக்கிறது. காய்கறிகள் தரமாக, சுவையாக இருப்பதால் நல்ல விலையும் கிடைக்கிறது. பாகல், வெண்டை, கத்தரி சாகுபடியில், ஏக்கருக்கு 5 டன் மண்புழு உரத்தை இட்டால், இட வேண்டிய இரசாயன உரங்களில் பாதியைக் குறைத்து இடலாம்.
இடும் முறை
தென்னை மற்றும் பழ மரங்களில், மரத்தைச் சுற்றி ஒரு அடி தள்ளி 15-20 செ.மீ. ஆழத்தில், சிறிதளவு காய்ந்த மாட்டுச் சாணத்தை இட்டு அதனுடன் மண்புழு உரத்தை இட்டு மண்ணை மூடிவிட வேண்டும். மண்புழு உரத்தை இட்டுப் பண்ணைக் கழிவுகளால் மூடியும் விடலாம். இதனால் மகசூல் கூடுவதுடன், பாசனநீரும் மிச்சமாகும். தொட்டியில் வளர்க்கப்படும் அழகுச் செடிகளுக்கு மாதந்தோறும் 250-500 கிராம் மண்புழு உரத்தை இட வேண்டும். கொய் மலர்களான ஆந்தூரியம், ஆர்கிட், கிளாடியோலஸ், ரோஜா போன்றவற்றில், செடிக்கு 100-200 கிராம் இட வேண்டும்.
இயற்கைச் சூழலைப் பாதிக்காமலும், தொடர்ந்து சீரான விளைச்சலைப் பெறுவதிலும் மண்புழு உரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழுவுரம், பசுந்தாள் உரம் மற்றும் மட்கிய இயற்கை உரங்களுக்கு மாற்றாக மண்புழு உரத்தை இட்டால், பரிந்துரை செய்யப்படும் இரசாயன உரங்களில் 25-50% சேமிக்கலாம்.
முனைவர் கு.சுதாகர்,
முனைவர் சு.தாவீது, முனைவர் எ.முருகன்,
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி.
சந்தேகமா? கேளுங்கள்!