My page - topic 1, topic 2, topic 3

வெப்ப அயர்ச்சியும் தடுப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020

து கோடைக்காலம் என்பதால், கால்நடைகள் மற்றும் கோழிகள் வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகும். இங்கே வெப்ப அயர்ச்சியால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவற்றைக் களைவதற்கான தீர்வு முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

உண்டாகும் அறிகுறிகள்

ஒரு மாடோ கோழியோ வெப்ப அயர்ச்சியால் பாதிக்கப்பட்டால், மூச்சிரைப்பு, இதயப் படபடப்பு உண்டாகும். நாடித்துடிப்பு பலவீனமாகவும், அதிகமாகவும் இருக்கும். விழிச்சவ்வுகளில் குருதித் திரட்சிகள் இருக்கும். உடல் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். பசியின்மை, குறைவான நோயெதிர்ப்புச் சக்தி, நோய்த் தாக்கம் ஆகியன ஏற்படுவதால், பால், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திப் பாதிக்கப்படும்.

சினையாக இருக்கும் கால்நடைகளில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு. எருமை மாடுகளில் வியர்வைச் சுரப்பிகள் குறைவாக இருப்பதால், உடல் வெப்பச் சீரமைப்பின் மூலம் வெளியேறும் வெப்பமும் குறைவாகவே இருக்கும். கோழிகளில் மூச்சுத் திணறல், மூக்கை நீரிலேயே வைத்துக் கொள்ளுதல், இறகை விரித்து வைத்துக் கொள்ளுதல், தீவனத்தை உண்ணாமல் இருத்தல், நோயெதிர்ப்புச் சக்திக் குறைதல், குறைந்தளவில் இறப்பு ஆகியன ஏற்படும்.

தடுப்பு முறைகள்

கொட்டகைக் கூரையின் மேற்புறம் வெள்ளை வண்ணமும், உட்புறம் கறுப்பு வண்ணமும் பூசப்பட வேண்டும். இதனால், தரை மற்றும் கூரை மூலம் கால்நடைகளின் உடலில் சேரும் வெப்பம் குறைந்து வெப்ப அயர்ச்சித் தடுக்கப்படும்; நோய்த் தாக்கமும் குறையும். கொட்டகையின் வெளியே தென்னை ஓலைகளைக் கட்டி வெப்பத்தைக் குறைக்கலாம்.

கால்நடைகள் குடிப்பதற்குக் குளிர்ந்த நீரைக் கொடுக்க வேண்டும். வெப்பம் மிகுதியாக இருக்கும் போது, ஒரு நாளைக்கு மூன்று முறை கால்நடைகள் மீது நீரைத் தெளித்துக் குளிர்விக்க வேண்டும். கோடைக்காலப் புரதப் பற்றாக்குறையைத் தவிர்க்க, யூரியாவைக் கலந்து வேளாண் கழிவுகளைச் செறிவூட்டிக் கொடுக்க வேண்டும். பகலில் தீவனத்தைக் கொடுக்காமல் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் கொடுக்க வேண்டும்.

கோடையில் கோழிகள் மற்றும் கால்நடைகளைத் தாக்கும் நோய்களுக்கான தடுப்பூசி முறைகள், சிறந்த இனப்பெருக்க உத்திகள், நல்ல தீவனம் போன்ற சிறந்த கோடைக்காலப் பராமரிப்பு மற்றும் சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும். இதனால், வெப்ப அயர்ச்சியைப் போக்கி, கோழிகள் மற்றும் கால்நடைகள் மூலம் நல்ல உற்பத்தியையும் வருவாயையும் அடைய முடியும்.


முனைவர் பா..சண்முகம்,

திட்ட ஒருங்கிணைப்பாளர்வேளாண்மை அறிவியல் நிலையம்

பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks