காங்கேயம் மாடுகளின் தனிச் சிறப்புகள்!

PB_Kangayam Kaalai

வெளியான இதழ்: ஜூன் 2021

மிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், வட்டம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தலைமை இடமாகும். இந்த ஊரின் பெயரைக் கொண்ட மாடுகள் உலகப் புகழ் பெற்றவை. இவை காங்கேயக் காளைகள் என எனப்படுகின்றன.

காங்கேயம் காளைகள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரம் போன்ற பகுதிகளிலும் விவசாயப் பணிக்காக வளர்க்கப்படுகின்றன. புகழ் பெற்ற காங்கேயக் காளைகள், தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகப் போற்றப்படுகின்றன.

தனிச் சிறப்புகள்

காங்கேயம் காளைகள் 4,000-5,000 கிலோ எடையுள்ள வண்டிப் பாரத்தைச் சாதாரணமாக இழுத்துச் செல்லும். கடுமையான காலநிலை மற்றும் உள்ளூர்ச் சூழ்நிலைக்கு ஏற்ப வாழக் கூடியவை. நல்ல சூழலில் மட்டுமின்றி, கடும் வறட்சிக் காலத்திலும் நொடித்து போகாமல், பனையோலை, எள்ளுச்சக்கை, கரும்புத்தோகை, வேப்பந்தழை என, கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக் கூடியவை.

தமிழ் நாகரிகத்தின் அடையாளம்

சங்க இலக்கியம், தஞ்சைப் பெரிய கோயில், மாமல்லபுரச் சிற்பங்கள் என்று தொடங்கி, மணப்பாறை முறுக்கு, பத்தமடை பாய் என்று நீண்டு கொண்டே செல்லும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகள். இந்த வரிசையில் காங்கேயம் மாட்டினமும் தமிழ் நாகரிகத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது.

காங்கேய மாட்டினத் தோற்றம்

தமிழகத்தில் மணப்பாறை, பாலமலை மாடு, பெரம்பலூர் மொட்டைமாடு, தொண்டைப்பசு, புங்கனூர்க் குட்டைத்தேனீ, மலைமாடு எனப் பல்வேறு இனங்கள் உள்ளன. இவற்றில், உலகப்புகழ் பெற்ற இரகங்களில் ஒன்று காங்கேயம் மாட்டினம். அழகிய கொம்புகள், மலைக்குன்று போன்ற திமில். வாகான உடல், சாட்டை போன்ற வால், நீளமான கால்கள் என, பார்ப்பதற்குக் கம்பீரமும் வசீகரமும் கொண்ட அழகான தோற்றத்தில் இருக்கும் காங்கேயம் காளைகள்.

காங்கேய மாடுகள், மேக்காட்டு மாடுகள் என அழைக்கப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன. இம்மாடுகள் கொங்கர் ஆ, அதாவது, கொங்கர் மாடு, கொங்க மாடு என்று தமிழிலும், கன்னடத்தில் கங்க மாடு என்றும் அழைக்கப்பட்டன. சங்ககாலக் கொங்கு நாணயங்கள் என்னும் நூலில், கொங்கு மாடுகளைப் போன்ற உருவம் பொறித்த சேரர் கால நாணயங்கள், கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இவை கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

பொலிகாளை

இனச்சேர்க்கைக்கு விடப்படும் பொலிகாளையைப் பூச்சிக்காளை என்கின்றனர். இக்காளை பார்ப்பதற்கு மிடுக்காகவும் கம்பீரமாகவும் வீரியமாகவும் இருக்கும். உடல் சாம்பல் நிறத்தில் இருக்கும். தலை, கழுத்து, திமில், இடுப்பு, கணுக்கால் ஆகியன கருஞ் சாம்பல் நிறத்தில் இருக்கும். இரண்டரை வயதிலேயே பொலிக்கும் தன்மைக்கு வந்து விடும் என்றாலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் முழுமையாகப் பொலிக்கு அனுமதிக்கப்படுகிறது.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காளை மாற்றப்படுகிறது. அதன் மூலம் பிறந்த கிடேரியை இந்தக் காளை மூலம் இனச்சேர்க்கை செய்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. எட்டு வெட்டுப் பற்கள் கீழ்த்தாடையில் முளைத்து விட்டால், கடை சேர்ந்தது அல்லது கடை மொளப்பு என்கின்றனர். காளைகளின் வம்சாவளியைப் பெயர் வைத்து அழைக்கின்றனர். செவலை அல்லது காரி நிறத்தில் பொலிகாளை இருந்தால், அது அசல் காங்கேயமாகக் கருதப்படுவது இல்லை.

கடல் கடந்த காங்கேயம்

காங்கேய மாடுகளைக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநில மக்கள், வேலைக்காக விரும்பி வாங்கிச் செல்கின்றனர். காங்கேய மாடுகள் முன்பு, இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேயா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரேசிலில் காங்கேய மாடுகள் சிறப்பாகக் காக்கப்பட்டு வருகின்றன. பிரேசிலின் தேசிய மரபு வளமையம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மலேசியாவின் இரப்பர் தோட்டங்களுக்கும், அந்நாட்டு பசுக்களுடன் கலப்பினம் செய்யவும் காங்கேயக் காளைகள் அங்கே கொண்டு செல்லப்பட்டன. சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனத் தலைவர் திரு.சிவசேனாபதியிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது, பிரேசிலில் உள்ள ஒரு பண்ணையில் நூற்றுக்கணக்கான காங்கேய மாடுகள் கலப்பு இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அங்கிருந்து சில காளைகளை இறக்குமதி செய்யப் போவதாகவும் கூறினார்.

காங்கேயம் பசு

காங்கேயம் பசுக்களின் பாலில் உயர் தரமான சத்துகள் உள்ளன. ஒரு பசு ஒரு நாளைக்கு 1.8-2.0 லிட்டர் பாலைக் கொடுக்கும். தமிழகத்தின் ஊத்துக்குளி வெண்ணெய் உலகப்புகழ் பெற்றதற்குக் காரணம், இங்கே வெண்ணெய் எடுக்கப் பயன்படுவது முழுக்க முழுக்கக் காங்கேய பசுக்களின் பால் என்பதால் தான். வெளிநாட்டுப் பசுக்கள் மற்றும் கலப்பினப் பசுக்களின் வருகையாலும், விவசாயம் குறைந்து வருவதாலும், காங்கேய மாடுகள் குறைந்து வருகின்றன. 

காங்கேய மரபுவழி மாடுகள்

மணப்பாறை மாடுகள்: இன்றைய கரூர் மாவட்டத்தின் மணப்பாறை என்னும் ஊரில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. சுற்று வட்டார விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய எருதுகளை வாங்கவும், தங்களின் மாடுகளை விற்கவும் இங்கே வருகின்றனர். இச்சந்தையில் காங்கேயக் காளைகளும் விற்பனைக்கு வருகின்றன.

இப்படி விலைக்கு வரும் காங்கேயக் காளைகளுக்கு நல்ல விலை கிடைக்கா விட்டால், வியாபாரிகள் தங்கள் ஊரில் சில நாட்கள் வைத்திருந்து அடுத்த சந்தையில் விற்பர். இப்படித் தங்கும் வேளையில் காளைகள் உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் இனச்சேர்க்கை செய்து விடுவதும் உண்டு. இப்படி உருவானதே மணப்பாறை மாடுகள் என்று, சுப்பிரமணியம் என்பவர் 1947-ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார்.

உம்பளச்சேரி: காவிரி ஆறு கடலில் கலக்கும் திருவாரூர் மற்றும் நாகையில் காணப்படும் சிறுவகை உழவு மாடுகள் தான் உம்பளாச்சேரி மாடுகள். காங்கேயக் காளைகளை உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் இனச்சேர்க்கை  செய்ததால் உம்பளச்சேரி இனம் உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தலையைத் தவிர, காங்கேய மாட்டின் உடல் அமைப்புகள் அனைத்தும் உம்பளாச்சேரி மாடுகளில் இருப்பதாக, கன் என்பவர் (1909) கூறுகிறார்.

காங்கேய மாடுகளைப் பற்றிய சில குறிப்புகள்

இம்மாட்டினம் தமிழ்நாட்டின் ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் கோபிச்செட்டி பாளையம் வட்டங்களின் ஒரு பகுதியிலிருந்து தோன்றியதாகும். நல்லதம்பி சர்க்கார் மன்றாடியார், பழையகோட்டை பட்டக்காரர் போன்றோரின் முயற்சியால் இம்மாட்டினம் தனிச் சிறப்பைப் பெற்றது.

பிறக்கும் போது சிவப்பாக இருக்கும் இந்த மாடுகளின் தோல், ஆறு மாத வயதில் சாம்பல் நிறமாக மாறி விடும். காளை மாடுகளின் முதுகும் கால்களும் சாம்பல் நிறத்தில் இருக்கும். பசு மாடுகள் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், சில மாடுகள் சிவப்பு, கறுப்பு, பழுப்பு மற்றும் பல நிறங்கள் கலந்த கலவையில் இருக்கும். கண்கள் அடர்த்தியான நிறத்தில் கருவளையங்களுடன் இருக்கும். 

பாதுகாப்பு

காங்கேய மாட்டினத்தைப் பாதுகாக்கவும், தரம் உயர்த்தவும், தமிழக அரசு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் காங்கேய மாட்டின ஆராய்ச்சி நிலையத்தை இயக்கி வருகிறது.

மாட்டுச் சந்தைகள்

காங்கேயம் மாடுகளைக் காட்சிப்படுத்தவும், வாங்க விற்கவும், கண்ணாபுரம், அந்தியூர், அவினாசி, திருப்பூர், பொள்ளாச்சி போன்ற இடங்களில் புகழ் பெற்ற சந்தைகள் நடைபெற்று வருகின்றன.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா,

ந.குமாரவேலு, கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-07.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!