ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

வெள்ளாடு Heading Pic 8

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018

ருங்கிணைந்த பண்ணையம் என்பது குறிப்பிட்ட தட்பவெப்பச் சூழலில் உள்ள பல்வேறு இயற்கை வளங்களைத் தொழில் நுட்பங்கள் வழியாக இணைத்துப் பண்ணை வருவாயைப் பெருக்கும் உத்தியாகும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் சமூகக்காடு வளர்ப்பு போன்ற, ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்பங்களை இணைத்து, ஒரு பிரிவின் கழிவை மற்றொரு பிரிவுக்கு இடுபொருளாக்கிப் பண்ணை வருமானத்தை உயர்த்த வழிவகை செய்யப்படுகிறது. இதனால் உற்பத்திச் செலவு குறைகிறது; கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுகிறது; ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேலைவாய்ப்பு அதிகரிப்பதால் ஆண்டு முழுவதும் வேலையும் வருமானமும் கிடைக்க வழி பிறக்கிறது.

வெள்ளாடு வளர்ப்பின் இன்றைய நிலை

வெள்ளாடுகள் காலங்காலமாக மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகளின் தீவனத்தைப் பொறுத்து அவை காடுகளின் எதிரி என்னும் கருத்தும் உள்ளது. தமிழகத்தில் இன்றளவும் பல ஊர்களில் வெள்ளாடு வளர்ப்புக்கு ஊர்க் கட்டுப்பாடு மற்றும் தடை உள்ளது. இதற்குக் காரணம் அவை பயிர்களையும் மரங்களையும் சேதப்படுத்தும் என்பதுதான். அதனால், ஒருங்கிணைந்த பண்ணை வளர்ப்பு முறையில் வெள்ளாடு வளர்ப்பு சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணையில் வெள்ளாடுகளை வளர்ப்பதன் பயன்கள்

வேளாண்மையில் கிடைக்கும் உபரி இலை தழைகள் ஆடுகளுக்குத் தீனியாவதால் தீவனச் செலவு குறையும். ஆட்டுப் புழுக்கையும் சிறுநீரும், நிலத்திற்கு ஊட்டமாகும். ஆடுகளால் பயிர்களுக்குச் சேதம் ஏற்படா வண்ணம் பண்ணை அமைக்கப்படுகிறது. களைச் செடிகள் மற்றும் புதர்களை ஆடுகள் மேய்ந்து கட்டுப்படுத்தும். ஊட்டச்சத்துச் சுழற்சி சிறப்பாக நடைபெறும். ஆடு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். நிலையான பண்ணையத்துக்குக் கை கொடுக்கும்.

வெள்ளாடு வளர்ப்பு சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணை மாதிரிகள்

நெல் சாகுபடியுடன் வெள்ளாடு வளர்ப்பு: தஞ்சையில் நடத்தப்பட்ட ஆய்வில் திரும்பத் திரும்ப நெல் நடவு செய்வதைக் காட்டிலும் நெல் ஒரு போகம் பின்னர் பருத்தி மற்றும் தீவனப் புல்லுடன் கொட்டில் முறையில் தலைச்சேரி இனத்தைச் சேர்ந்த ஐந்து பெட்டை மற்றும் ஒரு கிடாவை ஒருங்கிணைத்துப் பண்ணையம் செய்வதன் மூலம் கூடுதல் வருவாய், கூடுதல் வேலை நாட்கள் கிடைத்துள்ளன. அதாவது, 109 வேலை நாட்கள் மற்றும் ஆட்டெருவைப் பருத்திப் பயிருக்கு இட்டதால் எக்டரில் 18.89 குவிண்டால் பருத்தி மகசூலாகக் கிடைத்துள்ளதை அறிய முடிகிறது.

மானாவாரி சோளத்துடன் வெள்ளாடு வளர்ப்பு: ஒரு எக்டர் நிலத்தில், 0.8 எக்டர் தானியச் சோளம், 0.20 எக்டர் தீவனச் சோளத்தைப் பயிரிட்டு, சோளத் தட்டையை உலர் தீவனமாகவும், தானியச் சோளத்தைக் குருணையாகவும் அரைத்து தலைச்சேரி இனத்தைச் சேர்ந்த 20 பெட்டையாடுகளுடன் ஒரு கிடாயைக் கொட்டில் முறையில் வளர்ப்பதன் மூலம், நிகர பண்ணை வருவாய் 25% வரை கூடுதலாகக் கிடைக்கின்றது.

மீனுடன் வெள்ளாடு வளர்ப்பு: ஒரு எக்டர் நிலத்தில், 0.90 எக்டர் நெல்-எள்-மக்காச்சோளம் அல்லது நெல்-சோயா மொச்சை-சூரிய காந்தி சாகுபடியும், 0.10 எக்டர் பண்ணைக் குட்டையில் மீன்களையும், குட்டையின் பக்கவாட்டில் கொட்டில் முறையில் 20 வெள்ளாடுகளையும் வளர்ப்பதால் நிகர வருவாய் கூடுதலாகக் கிடைக்கிறது. ஆட்டுப்புழுக்கை நிலத்திற்கு எருவாகவும், மீன்களுக்கு உணவாகவும் உள்ளது.

பட்டுப்புழு வளர்ப்புடன் வெள்ளாடு வளர்ப்பு: பட்டுப்புழு வளர்ப்புக்கு மல்பரி சாகுபடி மிகவும் அவசியம். மல்பரி இலைகள் வெள்ளாடுகளுக்கும் சிறந்த பசுந்தீவனமாக உள்ளது. எனவே, மல்பரியைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் வெள்ளாடுகளைச் சேர்த்து பராமரித்தால் இயற்கை உரமும், கூடுதல் வருமானமும் ஆடுகள் மூலம் கிடைக்கும்.

வெள்ளாடுகளுடன் நாட்டுக்கோழி வளர்ப்பு: கொட்டில் முறையில் பரண் மேல் வெள்ளாடுகளை வளர்ப்பவர்கள் பரணுக்குக் கீழே நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம். திறந்திருக்கும் பரண் தரையை கோழி வலையால் அடைத்து நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம். இதனால், ஆடுகளைத் தாக்கும் உண்ணி மற்றும் பேன்கள் குறைவதோடு, கோழி இறைச்சி, முட்டை விற்பனை வாயிலாக கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மாந்தோப்பில் வெள்ளாடு வளர்ப்பு: நன்கு வளர்ந்த மாந்தோப்பில் மரங்களுக்கிடையே முளைக்கும் புல் பூண்டு, செடி கொடிகள் மற்றும் உதிரும் இலைகளைக் கொண்டு, மேய்ச்சல் முறையில் வெள்ளாடுகளை வளர்த்துப் பயன் பெறலாம். ஒரு எக்டர் பரப்பளவில் 5 ஆடுகள் வரையில் வளர்க்கலாம். மேய்ச்சல் முறையில் அல்லாமல், மர நிழலில் வளரும் தீவனப் பயிர்களான கலப்ப கோனியம், முயல் மசால், சோளம் போன்ற பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்து கொட்டில் முறையிலும் வெள்ளாடுகளை மாந்தோப்பில் வளர்க்கலாம்.

தென்னந்தோப்பில் ஆடு வளர்ப்பு: தென்னந்தோப்பில் தென்னை மரங்களுக்கு இடையே சவுண்டல், அகத்தி, கினியாப்புல் போன்ற தீவனப்பயிர்களை வளர்த்துக் கொட்டில் முறையில் வெள்ளாடுகளை வளர்க்கலாம். ஆட்டெரு தென்னைக்குச் சிறந்த ஊட்டமாக அமையும். இவ்வாறான ஊடுபயிரால் தென்னை மரங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

பயிர் செய்யும் நிலத்தைச் சுற்றி உயிர்வேலியாகச் சவுண்டல், கிளைரிசிடியா, அகத்தி, சித்தகத்தி, கல்யாண முருங்கை போன்ற மரக்கன்றுகளை நட்டு, அவற்றின் தழைகளைத் தீவனமாக அளித்து ஆடுகளை வளர்க்கலாம்.

வெள்ளாடு வளர்ப்பு- சில குறிப்புகள்

வெள்ளாட்டு இனங்கள்:  தலைச்சேரி, கன்னி, பள்ளையாடு, பார்பாரி, சேலம் கறுப்பு, நாட்டாடுகள். கொட்டில் வசதி:  பெட்டை ஆட்டுக்கு 1 சதுர மீட்டர். கிடாவுக்கு 2 சதுர மீட்டர். வளரும் குட்டிக்கு 0.3 சதுர மீட்டர். பாலின விகிதம்:  1 கிடா, 20 பெட்டை ஆடுகள்.

பருவ வயது: கிடா 12-15 மாதம். பெட்டை 10-12 மாதம். சினைக்காலம்: 145-155 நாட்கள். ஈனுதல்:   இரண்டு ஆண்டில் மூன்று ஈற்றுகள். குட்டிகளைத் தாயிடம் இருந்து பிரித்தல்:    பிறந்த 2-3 மாதங்களுக்குப் பிறகு பால் குடிப்பதை மறக்கச் செய்ய வேண்டும்.

நோய்த்தடுப்பு முறைகள்

தேவைக்கேற்ப 4-6 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்துகளை ஆடுகளுக்குப் புகட்ட வேண்டும். உரிய தடுப்பூசிகளை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி ஆடுகளுக்குப் போட வேண்டும்.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா,

முனைவர் ந.குமாரவேலு, முனைவர் ஹ.கோபி, கால்நடை அறிவியல் முதுகலை

ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading