வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கூட்டுக் குடும்பம், வீடு நிறைய ஆட்கள்; ஊருக்குள்ளும் உறவுகளால் பின்னிப் பிணையப்பட்ட வீடுகள் என இருந்த காலத்தில், விவசாய வேலைகளைச் செய்ய ஆட்கள் பஞ்சம் இல்லை; கூலியாட்களே தேவைப்படவில்லை.
சொந்த ஏர் மாடுகளை வைத்துப் புழுதி கிளம்ப உழுதனர். சொந்த ஆட்களே பாத்தி கட்டினர். சொந்த ஆட்களே நடவு நட்டனர், களை பறித்தனர், பயிரை விளைய வைத்துக் கதிரறுத்தனர், களத்து மேட்டில் தூற்றி, தானியங்களை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர், உண்டு மகிழ்ந்தனர்.
சொந்த விதை, சொந்த உரம், சொந்த உழைப்பு என இருந்த காலத்தில் எதற்கும் தட்டுப்பாடு இல்லை. நன்கு விளைந்த கதிர் மணிகளை விதைகளாகச் சேகரித்து வைத்தனர். ஆடு மாடுகள் இட்ட சாணம் இயற்கை உரமாக நின்று மண்ணை வளமாக்கி வைத்தது.
வேலையாட்களுக்கும் கூட, தானியங்கள் தான் கூலியாக வழங்கப்பட்டன. அதனால், பணம் என்பதும் இரண்டாம் நிலைப் பொருளாகவே இருந்து வந்தது. ஊர் மக்கள் மன உளைச்சல் இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.
ஆனால், அறிவியல் உத்திகள் புழக்கத்தில் வந்ததால், சொந்த விதை காணாமல் போனது, சொந்த உரம் காணாமல் போனது, சொந்த உழைப்புக் காணாமல் போனது. நிலத்தில் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலைக்கும் பணம் தேவைப்பட்டது, பணத்துக்காக விளைபொருள்கள் அனைத்தும் விற்கப்பட்டன.
ஆனாலும், அந்தப் பணம் போதவில்லை. விவசாயிகள் கடனாளிகளாக ஆகினர். திருப்பிக் கொடுக்க இயலாதவர்கள் நிலங்களை விற்று விட்டு, வாழக் கதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, ஊரை விட்டே வெளியேறினர்; இப்படி வெளியேறிய பெருங்கூட்டம் நகரங்களில் கரைந்து அடையாளத்தை இழந்து கிடக்கிறது.
ஆடு மாடுகள், தோட்டம் துரவு என வாழ்ந்த கிராம மக்கள், நூற்பாலைத் தொழிலாளர்களாக, கட்டட வேலை ஆட்களாக, காவல் காரர்களாகப் புதுப்புது அடையாளங்களில் வாழ்ந்து வருகின்றனர். விவசாயத்தை இழந்த ஊர்கள், களையிழந்து கிடக்கின்றன; கரும்பு, கடலை, தானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள் என விளைந்து கிடந்த வளமான நிலங்கள் முள் காடுகளாக மாறிக் கிடக்கின்றன.
இவற்றின் பழைய நிலையை, பசுமையான நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்; தூர்ந்து போன ஒற்றையடிப் பாதைகளில் மீண்டும் கிராமத்து உயிர்களின் நடமாட்டம் இருக்க வேண்டும்; பால் பிடித்த கதிர்களைத் தேடும் குருவிகளும் காக்கைகளும் கூட்டம் கூட்டமாகப் பறந்து திரிய வேண்டும்; ஊர்கள் திரிபற்ற ஊர்களாக மாற வேண்டும். அதை நோக்கிய பயணம் ஒன்று இந்த மண்ணில் உருவாக வேண்டும்.
ஆசிரியர்
சந்தேகமா? கேளுங்கள்!