தசகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

Panjakavya

“ஏண்ணே.. தசகவ்யான்னு இருக்காமே.. அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுண்ணே..’’

“பஞ்சகவ்யாவைப் போன்றதே தசகவ்யாவும். பத்துப் பொருள்கள் அடங்கிய கலவை என்பதால், தசகவ்யா எனப்படுகிறது. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காகப் பத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த இடுபொருளை, எருமை மற்றும் ஆட்டின் பொருள்களைக் கொண்டு தயாரித்து, தனது விவசாயத்திலும், ஆய்வகங்களிலும் பலமுறை சோதித்த பிறகு விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார், திருப்பூர் மாவட்டம், அவிநாசிப் பழங்கரையைச் சேர்ந்த முனைவர் மு.பழனிசாமி..’’

“சரிண்ணே.. இதைத் தயாரிக்கிறதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’

“எருமைச் சாணம் 10 கிலோ, எருமைக் கோமியம் 5 லிட்டர், ஆட்டுச்சாணம் 5 கிலோ, ஆட்டுச் சிறுநீர் 5 லிட்டர், எருமைப்பால் 15 லிட்டர், எருமைத் தயிர் 15 லிட்டர், இளநீர் 10 லிட்டர், தேன் 5 லிட்டர், திராட்சை 5 கிலோ, பேரீச்சம் பழம் 5 கிலோ, வாழைப்பழம் 100. இந்தப் பொருள்களைக் கொண்டு நூறு லிட்டர் தசகவ்யாவைத் தயாரிக்கலாம்..’’

“செய்முறையைப் பத்திச் சொல்லுங்கண்ணே..’’

“எருமைக் கோமியத்தையும் சாணத்தையும் ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்க வேண்டும். இதில் அரைத்த ஆட்டுப் புழுக்கையையும், ஆட்டுச் சிறுநீரையும் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை நிழலில் வைத்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை கிளற வேண்டும். இப்படி 10-15 நாட்கள் செய்த பிறகு, மற்ற பொருள்களையும் கலந்து, 20-25 நாட்கள் வரையில் இந்தக் கலவையைக் குச்சியால் கிளறிக்கொண்டே இருந்தால் கலவை நன்கு நொதித்துத் தசகவ்யா தயாராகி விடும். இந்த நிலையில் இதைப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம்.

எருமைப் பொருள்களிலும் ஆட்டுப் பொருள்களிலும் பயிர்களுக்குத் தேவையான சத்துகள் நிறைய இருப்பதால், தசகவ்யாவைத் தயாரிக்க இந்தப் பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன. பசுந்தீவனத்தை அதிகமாகச் சாப்பிடும் மாடுகளின் பொருள்கள் என்றால் இன்னும் சிறப்பாகும். நொதிப்பதற்கும், நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கும் தேன் சிறந்தது. அதனால், இங்கே தேன் பரிந்துரை செய்யப்படுகிறது..’’

“இதை எப்பிடிண்ணே பயன்படுத்துறது?..’’

“அளவு கூடினாலும் நோய்; குறைந்தாலும் நோய் என்பது வள்ளுவர் வாக்கு. எனவே, தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 25 மில்லி வீதம் பயன்படுத்தினால் போதும். அனைத்துப் பயிர்களுக்கும் இதே அளவுதான். வளமற்ற நிலமாக இருந்தால் ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். பாசன நீருடன் கலந்து நிலவள ஊக்கியாகப் பயன்படுத்தினால், ஒரு ஏக்கருக்கு 20 லிட்டர் தசகவ்யா போதும்.

விதைநேர்த்தி செய்யவும் ஒரு லிட்டர் நீருக்கு 25 மில்லி போதும். இந்தக் கலவையில் விதைகளை 30-45 நிமிடம் வரையில் ஊறவைத்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். காய்கறிப் பயிர்களில் முதல் களையை எடுத்ததும் தெளிக்கலாம். அடுத்து, பூக்கள் வந்ததும் பத்து நாளுக்கு ஒரு தடவை வீதம் மூன்று முறை தெளிக்க வேண்டும். அடுத்து, தேவைக்கு ஏற்ப, இரண்டு வாரம் அல்லது மாதம் ஒரு தடவை என, அறுவடை முடியும் வரையில் தெளிக்கலாம்.

தசகவ்யாவைச் செறிவூட்டிப் பயிர்களில் தெளிக்கலாம். அதாவது, பயிர்களின் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும், தழை, மணி, சாம்பல் சத்துகளைப் போல, கந்தகம், தாமிரம் போன்ற பதினாறு வகையான நுண் சத்துகளும் தேவை. ஒரு நிலத்தில் கந்தகச்சத்து இல்லை. ஆனால், அங்கேயுள்ள பயிருக்குக் கந்தகம் தேவை. இந்த நிலையில், கந்தகம் எந்த உணவுப் பொருளில் உள்ளதோ, அந்தப் பொருளைத் தசகவ்யாவுடன் சேர்த்துச் செறிவூட்டித் தெளித்தால், அந்தப் பயிருக்குத் தேவையான கந்தகச்சத்துக் கிடைத்து விடும்.

எடுத்துக்காட்டாக, நூறு கிராம் வெந்தயக் கீரையில் 167 மில்லி கிராம், முருங்கைக் கீரையில் 137 மில்லி கிராம், புதினாவில் 64 மில்லி கிராம் கந்தகம் உள்ளது. கொத்தமல்லி, வெங்காயத்தாள், தட்டைப்பயற்றிலும் கந்தகம் உள்ளது. இவற்றில் ஒன்றைத் தசகவ்யாவுடன் சேர்த்துத் தெளித்தால் கந்தகப் பற்றாக்குறை நீங்கும். எப்போதும் நிழலும் காற்றோட்டமும் உள்ள இடத்தில் தான் தசகவ்யா இருக்க வேண்டும் தம்பி..’’

“இதனால கிடைக்கும் நன்மைகளைச் சொல்லுண்ணே..’’

“பயிர் வளர்ச்சி ஊக்கியாக, நோயைக் கட்டுப்படுத்த, தசகவ்யா பயன்படுகிறது. தசகவ்யாவில் விதைநேர்த்தி செய்யும் போது, பயிர்கள் திடமாகவும் வளமாகவும் வளர்கின்றன. நிலவள ஊக்கியாகப் பயன்படுத்தும் போது, மண் வளமாகிறது; மண்புழுக்கள் பெருக்கமடைகின்றன; மண் பொலபொலப்பாக இருக்கிறது; நீர்ப்பிடிப்புத் திறன் கூடுகிறது; எனவே, பயிர்கள் நன்கு வளர்கின்றன. இலைவழியாகத் தெளிக்கும் போது, பூக்கள், பெண் பூக்கள் அதிகமாக வரும். அதனால், நல்ல சுவையுள்ள பிஞ்சுகள், காய்கள் என, நிறையக் காய்க்கும்.

தக்காளியில் தொடர்ந்து தெளித்து வந்தால், நுனிக்கருகல், இலைக்கருகல் நோய்கள் கட்டுப்படும். வாழைக்கன்றை இந்தக் கரைசலில் நேர்த்தி செய்தும், மாதம் ஒரு தடவை தெளித்தும் வந்தால், வாழைக்காய்கள் ஒரே சீராகவும், அதிக எடையுடனும், நல்ல சுவையுடனும் இருக்கும். நிலக்கடலை பூவெடுத்ததும் பத்து நாள் இடைவெளியில் மூன்று தடவை தெளித்தால், பொக்கு இல்லாத, அதிக எடையுள்ள காய்கள் கிடைக்கும்.

தென்னங் கன்றுக்குத் தெளிக்க வேண்டும். மரமென்றால் வேரில் ஊற்ற வேண்டும். இதைப்போல, மஞ்சள், மா, கரும்பு, முருங்கை, தேயிலை, காபிச் செடிகள், மல்லிகை, முல்லை போன்ற பூச்செடிகள், புகையிலை, பயறு வகைகள், நெல் என, அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தி, அதிக மகசூலை அடையலாம் தம்பி..’’

“அண்ணே.. தசகவ்யா பத்தின அத்தனை தகவல்களையும் அருமையா தெரிஞ்சுக்கிட்டேண்ணே..’’


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!