வனவாசம் நலவாசம்!

வனவாசம் a beautiful home in the heart of forest. wallpaper Copy

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019

னது பூர்விக நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டிக் கொண்டிருந்தார் விவசாயி ஒருவர். 600 அடிக்கும் மேல் தோண்டி விட்டார். நீர் கிடைக்கவில்லை. அதனால் நம்பிக்கையை இழந்த அவர், இன்னும் 10 அடி மட்டும் தோண்டலாம் என முடிவெடுத்துச் செயல்பட்டார்.

வெற்றி கிடைத்து விட்டது. ஆம். நன்னீர் பீய்ச்சியடித்தது. அதில் சின்னஞ்சிறு கூழாங்கற்களும் சேர்ந்து வெளியேறின. அவற்றுள் ஒரு கல் தேய்ந்து நீள் உருண்டை வடிவில் அழகாக இருந்தது. அதையெடுத்துத் துடைத்து, முத்தம் கொடுத்து மகிழ்ந்தார். காரணம், அவருடைய நிலம் முதுபெரு நிலமாம்.

தன் மூதாதையாரை நினைத்துக் கண் கலங்கி, வானத்தைப் பார்த்து வணங்கி விட்டு நிலத்தில் படுத்தவர், குலுங்கிக் குலுங்கி அழுதார். இருட்டி விட, எல்லோரும் வீட்டுக்குச் சென்று விட்டார்கள்.

அந்த விவசாயியும் நானும் கடைசியாகக் கிளம்பினோம். “தம்பி இன்று என்னால் பேச முடியவில்லை. நாளைக் காலையில் வா பேசுவோம்’’ என்றபடி அவரின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று விட்டார்.

அன்று இரவு எனக்குப் பசியில்லாததால் படுத்து விட்டேன். உறக்கமும் சரியாக வரவில்லை. பிறகு எப்படித் தூங்கினேன் என்றும் தெரியவில்லை. திடுக்கிட்டுப் பார்த்தால் விடியும் நேரமாக இருந்தது.

ஆற்றுக்கு ஓடிக் கடன்களை முடித்து விட்டு, அந்த விவசாயியின் நிலத்துக்குப் போனேன். அவர், நறுவுளிப் பழத்தைச் சுவைத்துக் கொண்டிருந்தார்.

“என்னைவிடப் பதட்டத்தில் வருகிறாயே? தூங்கவே இல்லையா? வா உட்கார்’’ என்றார். அவரின் கையில் அதே கூழாங்கல் இருந்தது. வியந்து பார்த்தபடியே அமர்ந்தேன். “தம்பி.. இந்தக் கூழாங்கல் விடியும் வரையில் என்னிடம் பேசியது.. நிறையக் கதைகளைச் சொல்லியது.. அவற்றில் உனக்குத் தேவையானதை மட்டும் சொல்கிறேன்.. இந்தக் கல்லின் வயது பல இலட்சம் ஆண்டுகளாம்.. எங்கோ பிறந்து நீரில் உருண்டு உருண்டு.. கல்லும் மண்ணும் மூட.. நீருக்கு அடியில் மாட்டிக் கொண்ட கல் இன்று தான் உலகத்தைப் பார்க்கிறதாம்..

மண்ணுக்குள் புதைந்த போது அன்றைய மக்கள் எப்படி எந்த மொழியில் பேசினார்களோ.. அதே மொழிதான் இன்றும் பேசப்படுகிறதாம்.. கல் தோன்றாக் காலத்துக்கும் மூத்த மொழி தமிழ் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?.. எப்போதோ உருவான கல் ஆயிரம் அடிக்குக் கீழே புதையுண்டு கிடக்கிறது என்றால், எத்தனை பெரிய இயற்கைச் சீற்றம், வெள்ளம், புயல் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்க வேண்டும்?..

இந்தக் கல்லால் இன்று பேச முடிந்தால் எத்தனை வரலாறுகளை.. எத்தனை ஆட்சி.. அரசர்கள், அவர்கள் அடைந்த வெற்றி தோல்வி.. என்னென்ன கேட்கலாம்?.. நமது தொல்காப்பியம் தான் உலகின் முதல் அறிவியல் நூலாம்.. உலக வரலாறே தொல்காப்பியத்தில் உள்ளதாம். இந்த பூமி விற்பனைக்கு அல்லவாம்.. இதைக் கூறு போட மனிதன் எண்ணியதே தவறாம்.. தனக்குப் பின்னும் இந்த உலகம் இருக்கும் என்பதை, மனிதன் மறந்து விட்டானாம்..

இப்படி நிறையச் செய்திகளை இந்தக் கல் சொன்னது. இன்னும் ஒன்றைச் சொல்கிறேன்.. மரம் இல்லையானால் மனிதன் வாழவே முடியாது.. ஆனால், மனிதன் இல்லையானால் மரங்கள் நன்றாக வாழுமாம்.. வரம் தருவது மரம்.. சாகாவரம் தருவது தாவரம்.. மரங்களை வளர்ப்போம் என்று இன்று வருபவர்கள் கூட, மரங்கள் உயிர்க்காற்றைத் தருவதால் தான், மரவளர்ப்பைத் தூண்டி விடுகிறார்கள்.. ஆனால், மனிதனுக்கு நோயே இல்லாத சூழலை உருவாக்குவது தான் மரம்..

காட்டு விலங்குகளுக்கு நோய் வருகிறதா?.. அவற்றை வீட்டு விலங்குகளாக மாற்றியதால் தான் ஆடுகள் மாடுகள் நோய்களுக்கு உள்ளாகின்றன.. காட்டிலே வாழ்ந்த மனிதனுக்கு நோயே வந்ததில்லை.. மரங்கள் மூச்சுக் காற்றை மட்டும் வழங்கவில்லை.. எந்த உயிருக்கும் நோயே வராமல் பார்த்துக் கொள்வதும் மரங்கள் மட்டுமே..

ஆங்கில மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம்  என எத்தனை பிரிவுகள் வந்தாலும், மர மருத்துவத்துக்கு இணை எதுவும் இல்லை. ஒவ்வொரு மலருக்கும் வாசம் இருப்பதைப் போல, எல்லா மரங்களுக்கும் தனித்தனி வாசம் உண்டு. இந்த வாசம் தான் மருத்துவம்.. பழங்காலத்தில் மருந்துகளைத் தயாரிப்பதில், தனி மரத்து விறகைப் பயன்படுத்த வேண்டும் எனச் சித்தர்கள் கூறியுள்ளார்கள்..

ஒரு விறகு எரியும் போது வெளிவரும் ஆவிதான் மருந்து.. பச்சை மரத்தில் இருந்து கிடைக்கும் ஆவி, மிகச் சரியான மருத்துவம் என்று பயன்படுத்தி வாழ்ந்துள்ளார்கள்.. பகலில் பலா மரத்தடியில் படுத்துறங்கு என்னும் மருத்துவப் பழமொழியின் அடிப்படை இதுதான்.. அதிகாலை நான்கரை முதல் ஆறுமணி வரை, மரத்தடியில் நின்று அதன் காற்றைச் சுவாசித்து வருவோருக்கு, நோய் இருந்தால் விரைவில் குணமாகி விடும்..

காலையில் செய்யும் உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் தான் நமக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டுள்ளோம்.. ஆனால், உண்மையில் நாம் உள்வாங்கும் ஓசோன் காற்றுதான் நமக்குப் பேருதவி புரிகிறது.. சூரியனுக்கு முன்னெழுந்து மரத்தின் ஆவியை, அதாவது ஓசோன் காற்றைச் சுவாசிப்போர் நோயற்றவர்களாக வாழ்வார்கள்..

இயற்கை மருத்துவ முகாம்கள் பெருகி வருவதைப் போல, மரவளச் சிகிச்சையும் உலகில் பெருகத் தொடங்கி விட்டது.. மரங்களை நெருக்கமாக வளர்த்து அவற்றின் ஊடே நடந்து ஒவ்வொரு மரத்தையும் கட்டிப் பிடித்து அதன் ஆவியை, வாசத்தைத் தினமும் நுகர்ந்து வந்தால் நோயே நெருங்காத அளவில் உடல் வலிமை பெறும்..

இப்படிப்பட்ட மர வாசனைச் சிகிச்சையை மக்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.. ஆனால் சில பாவிகள் மலர்களின் வாசத்தைக் கூட நுகரக் கூடாதென்று, நெகிழி மாலையை அணிந்து மணமேடையில் அமர்ந்திருக்கிறார்கள்.. இவர்களின் அறிவுக்கூர்மையை என்ன சொல்ல?..’’ என்று அந்த விவசாயி சொல்லி முடிக்கவும், அந்தக் கூழாங்கல் அவர் கையிலிருந்து காணாமல் போகவும் சரியாக இருந்தது. அவரும் நானும் அந்தக் கல்லைத் தேடத் தொடங்கினோம்.


வனவாசம் KASI PICHAI

மருத்துவர் காசிபிச்சை,

தலைவர், இயற்கை வாழ்வியல் இயக்கம், திருமானூர், அரியலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!