கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019
கோழி முட்டையிடச் சேவல் தேவையில்லை. இனச் சேர்க்கையில் ஈடுபடாத கோழிகூட முட்டையிடும். ஆனால், முட்டைகளில் குஞ்சு உருவாக வேண்டுமானால் சேவல் தேவை. சேவலுடன் விளையாடிய கோழிகள் இடும் முட்டையில் தான் குஞ்சு உருவாகும். முட்டையென்பது ஒரு பெண் செல். விலங்கினங்களில் இப்பெண் செல் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், பறவையினங்களில் நாம் கண்ணால் பார்க்கும் அளவுக்கு வெளியேறுகிறது. அதனால், சேவலுடன் சேர்ந்தாலும் சேரா விட்டாலும் கோழி முட்டைகளை இட்டுக்கொண்டே இருக்கும்.
கோழிப்பண்ணைகளில் கோழிகளுடன் சேவல்கள் வளர்க்கப்படுவதில்லை. இதனால், இந்தப் பண்ணைகளில் கோழிகள் இடும் முட்டைகள் குஞ்சுகளைப் பொரிக்காது. காரணம், இம்முட்டைகளில் உயிர்க்கரு கிடையாது. எனவே, இந்தக் கோழிகள் இடும் முட்டைகள் சைவ முட்டைகளே. பாலைச் சைவ உணவாக எடுத்துக் கொள்வோர், இந்த முட்டைகளையும் சைவ உணவாகவே கருதலாம்.
சில கோழிகள் இடும் முட்டைகளில் ஓடு இருக்காது. அதற்குப் பதிலாகத் தோல் இருக்கும். இப்படித் தோல் முட்டைகளை இடும் கோழிகள் இருப்பது வீட்டுக்கு ஆகாதென்று விற்று விடுவார்கள். அல்லது அறுத்துச் சாப்பிட்டு விடுவார்கள். இதைப்போல நள்ளிரவில் கூவும் சேவல்கள் மற்றும் வெள்ளிக் கிழமையில் முதன்முதலாக முட்டையிடும் கோழிகளையும் வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள். இவையெல்லாம் உண்மை நிலையை அறியாததால் ஏற்பட்ட பழக்க வழக்கங்கள்.
கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்துக் குறைவால் தான் கோழிகள் தோல் முட்டைகளை இடுகின்றன. முட்டையின் ஓடு கால்சியச் சத்தால் உருவாவது. உணவில் கால்சியம் குறையும் போது கோழிகள் மெல்லிய ஓட்டுடன் முட்டைகளை இடுவது இயற்கை. இந்தக் குறையைத் தவிர்க்க, தீவனத்துடன் சுண்ணாம்புத் தூள் அல்லது கிளிஞ்சல் தூளைச் சேர்த்துக் கொடுத்தால், கோழிகளுக்குத் தேவையான கால்சியச் சத்துக் கிடைத்து விடும். தோல் முட்டைகளை இடுவதும் நின்று விடும்.
இன்றைய நிலையில், கோழி வளர்ப்பு மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக உருவெடுத்துள்ளது; கிராமங்கள் முதல் நகரங்கள் வரையில் பெருந் தொழிலாகவும் வளர்ந்து வருகிறது. எனவே, கோழிகள் மீது குறை காணாமல், அவற்றுக்குத் தேவையான சத்துகள் அடங்கிய தீவனத்தைக் கொடுத்து வளர்த்தால், தரமான முட்டைகளும், இறைச்சியும் கிடைக்கும். இதன் மூலம் வளமான வருமானத்தை அடைய முடியும். மேலும் விவரங்களுக்கு, 73580 98090 எண்ணில் பேசலாம்.
மரு.வி.இராஜேந்திரன்,
முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை,
நத்தம்-624401, திண்டுக்கல்.