மானாவாரி வேளாண்மை உத்திகள்!

மிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பில், 70 சதம் மானாவாரி நிலங்களாகும். ஆண்டுக்கு 75 செ.மீ.க்குக் குறைவாக மழை பெய்யும் இடங்களில் நடக்கும் விவசாயம் மானாவாரி விவசாயம் எனப்படும்.

குறைந்த மழை, சீரற்ற மழை, மாதக்கணக்கில் மழையே பெய்யாமல் இருத்தல் ஆகிய நிலைகளில், மானாவாரி சாகுபடி என்பது சிரமமாகும்.

இத்தகைய பகுதிகளில் சிறப்பாக விவசாயத்தைச் செய்வது என்பது, பெய்யும் மழைநீரை நிலத்தில் சேமிப்பதையும், அதைத் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்ளும் அளவையும் பொறுத்ததாகும்.

இந்தியாவின் விவசாய நிலப் பரப்பாகிய 143 மில்லியன் எக்டரில், 101 மில்லியன் எக்டர் மானாவாரியாக உள்ளது. இது, ஏறக்குறைய 70 சதமாகும்.

நமது மொத்த உணவு உற்பத்தியில் 42 சதம் இதிலிருந்து கிடைக்கிறது. இதில் பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள் ஆகியன அடங்கும்.

எனவே, நாம் மானாவாரி சாகுபடிக்கு மிகுந்த முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது.

மானாவாரி நிலத்திலுள்ள குறைகள்

குறைவான, சீரற்ற மழைப் பொழிவு. கூடுதல் வெய்யிலால் ஈரப்பதம் அதிகளவில் வீணாதல்.

பெரும்பான்மை மானாவாரி நிலங்களான கரிசல் மண்ணில் நீர்ப் பிடிப்புத் தன்மை அதிகமிருந்தும் நீர் உட்புகும் தன்மை குறைவாக இருத்தல்.

மிதமான துகள்கள் உள்ள செம்மண்ணில், பயிர்களுக்குப் பயன்படாத வகையில், அதிக ஆழத்துக்கு நீர் சென்று விடுதல்.

மேடு பள்ளமான நில அமைப்புகளால் பள்ளத்தை நோக்கி மழைநீர் ஓடி விடுவதால், மண்ணில் நீர்ப் பிடிப்புத் தன்மை குறைதல் மற்றும் மண்ணரிப்பு உண்டாதல்.

இந்தச் சிக்கல்களைச் கவனித்துப் பார்க்கும் போது, மழைநீரைச் சேமிப்பு, மண்ணரிப்புத் தடுப்பு மற்றும் மண்ணின் நீர்ப் பிடிப்புத் தன்மையைக் கூட்டுதலைச் சிறப்பாகப் பின்பற்றினால், மானாவாரி விவசாயம் இலாப மிக்கதாக இருக்கும்.

மழைநீர், நிலத்தடி நீரைப் பாதுகாத்தல்

பண்ணைக் குட்டைகள்: நிலத்தின் தாழ்வான பகுதிகளில் சிறிய குட்டைகளை வெட்டி, மேட்டுப் பகுதிகளில் இருந்து ஓடிவரும் மழைநீரைத் தேக்கி வைக்க வேண்டும்.

இந்த நீரை மழையில்லாக் காலத்தில் பயிர்களுக்கு, கால்நடைகளுக்குப் பயன்படுத்தலாம். இதனால், அருகிலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும்.

கசிவுநீர்க் குட்டைகள்: மழைக் காலத்தில் சிறிய வாய்க்கால்களில் ஓடிவரும் நீரை, ஆங்காங்கே சிறிய அல்லது பெரிய குட்டை, குளங்களை வெட்டிச் சேமிக்கலாம்.

இதனால், அருகிலுள்ள கிணறுகளில் நீரூற்று உண்டாகி, நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும். கோடையில், இந்த நீரைக் கால்நடைகளுக்கு, பயிர்களுக்குப் பயன்படுத்தலாம்.

நீர்ப்பிடிப்புக் கரைகள்: பழ மரங்கள், காப்பி, கோக்கோ, ரப்பர், பாக்குமரத் தோட்டங்களைச் சுற்றிக் கரைகளை அமைக்க வேண்டும்.

இதனால், மரங்களின் அடியில் மழைநீர்த் தேங்கி மண்ணுக்குள் புகும்.

சரிவான பகுதியில் உள்ள மரங்களின் அடியில் வரிசையாக, சிறிய கரைகளை அமைக்க வேண்டும்.

இப்படிச் செய்யும் போது, மரங்களின் அடியில் நிலம் சமமாகவும், அகலமாகவும் இருக்க வேண்டும்.

இதனால், மழைநீர் கரைகளால் தடுக்கப்பட்டுச் சேமிக்கப்படும். எஞ்சிய நீர் கரைகளின் ஓரங்களில் வழிந்தோடி விடும்.

தடுப்பணைகள்: மழைநீர் ஓடும் ஓடைகளின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளைக் கட்டி நீரை நிறுத்த வேண்டும்.

இதனால், மண்ணரிப்புக் குறைவதுடன், நிலத்தடி நீரும் கூடும். இந்த நீரை அருகிலுள்ள பயிர்களுக்குப் பயன்படுத்தலாம்.

சரிவான நிலங்களைப் பராமரித்தல்

சரிவுக்குக் குறுக்கே உழுதல்: மானாவாரி நிலங்களில் சரிவுக்குக் குறுக்கே உழ வேண்டும்.

இப்படிச் செய்யும் போது இந்த உழவுப் பள்ளங்களில் நீர்த் தேங்கி மண்ணுக்குள் செல்லும். மேலும், மண்ணரிப்பும் தடுக்கப்படும்.

சரிவுக்குக் குறுக்கே சிறு வரப்புகளை அமைத்தல்: நிலச்சரிவு 0.5% க்கும் அதிகமாக இருக்கும் நிலத்தின் குறுக்கே, 0.5-0.75 அடி அகலமுள்ள சிறு வரப்புகளை ஆங்காங்கே அமைக்க வேண்டும்.

இதனால், மழைநீர் ஓடுவது தடுக்கப்பட்டு, நிலத்தில் ஈரம் நிலை நிறுத்தப்படும். மண்ணரிப்பும் தடுக்கப்படும்.

சம மட்ட வரப்புகளை அமைத்தல்: நிலச்சரிவு 2-10 சதம் இருக்கும் இடங்களில், 130 செ.மீ. அடிமட்ட அகலம், 30 செ.மீ. மேல்மட்ட அகலம், 40 செ.மீ. உயரமுள்ள சம மட்ட வரப்புகளை அமைக்க வேண்டும்.

இதனால், சத்தான மேல்மண் அடித்துச் செல்லாமல் தடுக்கப்படும். மழைநீர் சேமிக்கப்படும். நாளடைவில், நிலம் மண்ணரிப்பு அற்றதாக மாறும்.

தட்டு வயல் அமைத்தல்: மலைப் பகுதியில் சரிவான மற்றும் சமமற்ற நிலங்களைச் சமப்படுத்திப் பயிரிட்டால், மண்ணரிப்பைத் தடுத்து மண்வளம் காக்கலாம்.

தட்டு வயலின் அமைப்பு, மண்ணின் ஆழம், சரிவின் அளவு, மழையளவு, பயிரிடப்படும் பயிர்களின் விவரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

தட்டு வயல்களுக்கு இடையில் உள்ள இடைவெளி, சரிவு, நிலத்தின் குறுக்களவு ஆகியவற்றைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

தட்டு வயலை அமைக்க, சரிவின் மேல்பகுதி மண்ணை வெட்டி, சரிவின் கீழ்ப் பகுதியில் இட்டுச் சமப்படுத்த வேண்டும்.

இப்படி வெட்டிப் போடப்படும் மண், சரிவில் நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நிலப்போர்வை அமைத்தல்: மழைத் துளிகளால் மண் சிதறுவதை, அரிப்பு உண்டாவதைத் தடுத்தல், நீர் ஆவியாவதைக் குறைத்தல், மண்ணில் நீர் புகுவதை அதிகப்படுத்தல்,

களைகளைக் கட்டுப்படுத்தல், மண்ணின் அமைப்பை முன்னேற்றுதல், மண்ணின் ஈரத்தைக் காத்தல் போன்ற நன்மைகளை ஈரம் தாங்கிகள் செய்கின்றன.

இவற்றால் மகசூல் கூடுகிறது. ஈரம் தாங்கிகளை எல்லா வகையான நிலங்களிலும் பயன்படுத்தலாம்.

தென்னைநார்க் கழிவு, பண்ணைக் கழிவு, காய்ந்த இலைகள், களைகள், புற்கள், கரும்புத் தோகை, நெல்லுமி, கடலைத்தோல் போன்ற அனைத்தையும் ஈரம் தாங்கிகளாகப் பயன்படுத்தலாம்.

இவற்றை, வயலிலுள்ள பயிர்களுக்கு இடையில் பரப்பலாம். பெரிய மரங்கள் மற்றும் இளம் மரக் கன்றுகளை நட்ட பின், அவற்றைச் சுற்றி இவற்றைப் பரப்பிப் பாசனம் செய்தால், மண்ணின் ஈரம் காக்கப்படும்.

இதனால், பாசனத்தைக் குறைக்கலாம். இந்த ஈரம் தாங்கிகளைக் கோடையில் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்.

இந்த ஈரம் தாங்கிகள் இயற்கையில் கிடைக்கும் பொருள்களாக இருப்பதால், நிலத்திலேயே மட்கி நல்ல உரமாக மாறிவிடும்.

இதனால், மண்ணின் மட்குத் தன்மை, நுண்ணுயிர்ப் பெருக்கம் போன்றவை அதிகமாகி மண்ணின் அமைப்பை மாற்றும்.

பண்ணையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு சூரியவொளி படாமல் நிலத்தை மூடுவதே நிலப்போர்வை எனப்படுகிறது.

உலகெங்கும் இயற்கை விவசாயத்தில், நிலப்போர்வை உத்தி கையாளப் படுகிறது. நிலப் போர்வையை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

இலை நிலப்போர்வை: வேலி, மரங்கள், நீராதாரங்கள் மூலம் நிறைய இலைகள் கிடைக்கும். இவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி நிலத்தை மூடலாம்.

சருகு நிலப்போர்வை: காய்ந்த சருகுகள் மற்றும் விளை பொருள்களின் எஞ்சிய பாகங்கள், களைகள் போன்றவற்றைப் பெரும்பாலும் தீ வைத்து எரிக்கின்றனர்.

இது அறியாமையில் செய்வதாகும். இப்படித் தீயை இடுவதால் நிலம் செங்கல்லைப் போலாகி விடும். எருவாக வேண்டிய மட்குப் பொருள்கள் சாம்பலாகி விடும்.

எனவே, இப்படிச் செய்யாமல், காய்ந்த சருகுகளை ஒரு சால் விட்டு ஒரு சாலில் மூடாக்காகப் போட வேண்டும். மூடாக்கு இல்லாத சால்களில் மட்டும் பாசனம் செய்ய வேண்டும்.

இந்த முறையைப் பல இடங்களில் கடைப்பிடித்து விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இப்போது தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்புச் சருகை, பார் விட்டுப் பாரில் பரப்பி, வறட்சி மற்றும் களையைக் கட்டுப்படுத்துவதைப் பற்றி எடுத்துரைத்து வருகின்றன.

காய்ந்த சருகுகளை, மஞ்சள், வாழை, தென்னை மற்றும் பிற தோப்புகளில் நிலப் போர்வையாக இடலாம்.

பழ மரங்களைக் கவாத்து செய்யும் போது கிடைக்கும் கிளைகள், இலை தழைகள் மற்றும் சருகுகளைப் பயன்படுத்தலாம்.

லூப்பின் முள்ளங்கி, பட்டாணி, அவரை போன்ற பயிர்களின் கழிவையும் நிலப் போர்வையாக இடலாம்.

சருகு மற்றும் பிற கழிவுகளை முக்காலடி உயரம் பரப்பி நிலப் போர்வையை அமைக்க வேண்டும்.

உயிர் நிலப்போர்வை: பக்வீட், லூப்பின் போன்ற விதைகளை விதைத்து வளர விடுவது, உயிர் நிலப்போர்வை.

இந்தச் செடிகள் உயிருடன் இருந்து நிலத்துக்குக் குடையாகச் செயல்படும். மேலும், நிலத்துக்குத் தழைச்சத்தையும், வளத்தையும் சேர்க்கும்.

பலவகைத் தானியங்களை விதைத்தும் உயிர் நிலப் போர்வையை அமைக்கலாம்.

கல் நிலப்போர்வை: நிலப்போர்வை இடுவதற்குத் தழை மற்றும் சருகுகள் இல்லாத இடங்களில், உயிர் நிலப் போர்வையை வளர்க்க முடியாத இடங்களில்,

அங்கே கிடைக்கும் கற்களைக் கொண்டு மரக் கன்றுகளுக்கு நிலப்போர்வை இடலாம். இதற்குக் கல் நிலப்போர்வை என்று பெயர்.

இந்த நிலப் போர்வை, நிலத்தில் இருந்து ஈரம் ஆவியாவதைத் தடுக்கும். மேலும், நிலத்தை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும்.

பயன்கள்

பாசனம் குறைவதால் அதிகப் பரப்பில் பயிரிடலாம். மண்ணரிப்பைத் தடுக்கலாம். மண்ணுக்குள் நீர்ப்புகும் தன்மை மிகும்.

களைகள் கட்டுப்படும். மண்ணமைப்புச் சீராகும். நிலத்தில் ஈரம் காக்கப்படும்; வெய்யில் படுவது தடுக்கப்படும்.

இதனால், தாவரங்களின் தரைப்பகுதி குளிர்ந்து, நுண்ணுயிர்களின் செயல் திறன் கூடும்.

நிலத்தின் மேற்பரப்பில் மண் புழுக்களின் செயல் திறன் கூடும். ஈரம் தாங்கிகள் நாளடைவில் மட்கிப் பயிர்களுக்கு உரமாகும். பயிர்கள் செழித்து வளர்வதால் மகசூல் அதிகமாகும்.

மேலும், இயற்கை உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்களை இடுதல், மண்ணின் அமைப்பை மாற்றுதல்,

மண்ணுக்குள் நீர்ப்புகும் தன்மையைக் கூட்டுதல், மண்ணில் மட்கின் அளவைக் கூட்டுதல், பஞ்சகவ்யா, தசகவ்யாவைத் தெளித்தல் போன்ற உத்திகளைச் சரியாகப் பயன்படுத்தினால்,

மானாவாரி மண்ணையும் நீரையும் காத்து, பயிர் வளர்ச்சியை அதிகப்படுத்தி நல்ல மகசூலை எடுக்கலாம்.


முனைவர் வி.சு.சுகந்தி, உதவிப் பேராசிரியர், காருண்யா பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!