கணவரின் தொழில் வெற்றிக்கும் துணையாக இருக்கிறேன்!

ந்த பூமிப்பந்து இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பதைப் போல, இங்கு வாழும் மக்களும் அதைவிட விரைவாகச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். உழைப்பதற்குப் பகல், அந்த உழைப்பின் களைப்பைப் போக்க இரவு என்னும் நிலை மாறி எந்நேரமும் உழைக்கிறார்கள். அதைப் போல, வாழ்க்கைக்கான பொருள் தேட ஆண்கள், அதை வைத்து நல் இல்லறம் நடத்த பெண்கள் என்னும் நிலை மாறி, அவர்களும் ஆடவர்க்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் உழைத்து வருகிறார்கள்.

சுய தொழில்கள், தங்களின் குடும்பத் தொழில்களில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். இன்றைய வாழ்க்கைச் சூழல் அவர்களைப் பல்துறை உழைப்பாளிகளாக மாற்றியிருக்கிறது. இப்படி, வாழ்க்கைத் துணையாக மட்டுமின்றி, தன் கணவரின் செய்தொழில் சிறக்கவும் துணையாக இருந்து, மற்றவர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார், தருமபுரி மாவட்டம், கடகத்தூரில் உள்ள கீதா சுகுமார் என்று கேள்விப்பட்டு, அவரைப் பார்க்கச் சென்றோம். அப்போது அவர் கூறியதாவது:

“என் மாமனார் பேரு ரெங்கசாமி. கடகத்தூர் ஊராட்சித் தலைவரா 1996 இல் இருந்து 2006 வரைக்கும், அதாவது, ரெண்டு முறை இருந்திருக்காரு. பொது வேலைகள்ல ஆர்வம் உள்ளவரு. அவரு தான் 1983 ஆம் ஆண்டுல கரும்பு வெல்லம் தயாரிக்கிற இந்த ஆலையைத் தொடங்குனாரு.

என் கணவர் பேரு சுகுமார். இவரு அப்பாவுக்குத் துணையா ஆலை வேலைகளைச் செஞ்சிட்டு இருந்தாரு. இந்தச் சூழ்நிலையில 2016 ஆம் ஆண்டு எங்களுக்குத் திருமணம் ஆச்சு. 2017 ஆம் ஆண்டுல ஆலையை நடத்துற முழுப் பொறுப்பும் என் கணவர் கைக்கு வந்துச்சு.

அப்போ, நம்ம தயாரிப்பை மக்கள் விரும்பி வாங்கணும், உணவுப் பொருளா இருக்குறதுனால, உடம்புக்கு நன்மை செய்யக் கூடிய வகையில இருக்கணும், அதுக்கு ஏத்த மாதிரி சில மாற்றங்களைச் செய்யணும், நம்ம பொருளுக்கு ஒரு அடையாளம் இருக்கணும்ன்னு யோசிச்சு சில முடிவுகளை எடுத்தோம்.

அதன்படி, வெல்லம் தயாரிக்கிறத விட்டுட்டு, மக்கள் எளிதா பயன்படுத்துற வகையில, சர்க்கரைத் தயாரிப்பை 2017 ஆம் ஆண்டுல தொடங்குனோம். இதுக்கு நற்சுவை நாட்டுச் சர்க்கரைன்னு பேரும் வச்சோம். நற்சுவை நாட்டுச் சர்க்கரைன்னா கலப்படம் இருக்காது, உடம்புக்குக் கெடுதல் செய்யாது, தரமா இருக்கும்ங்கிற பேரை மக்களிடம் கொண்டு சேர்த்தோம்.

எங்க சர்க்கரைக்கு நல்ல பேரு கிடைச்சது. அந்த நேரத்துல, இந்தச் சர்க்கரையில இன்னும் நல்ல பொருள்களைச் சேர்த்துக் குடுக்க முடியுமான்னு யோசிச்சோம். அதன்படி, சர்க்கரையில மூலிகைப் பொருள்களைக் கலந்து குடுத்தா மக்களுக்கு இன்னும் பயனுள்ளதா இருக்கும்ன்னு முடிவெடுத்து, 2019 ஆம் ஆண்டுல மூலிகைச் சர்க்கரை உற்பத்தியைத் தொடங்குனோம்.

ஊர்கள்ல சாதாரணமா தலைவலியோ காய்ச்சலோ வந்தா, உடனே சுக்குமல்லி காப்பியைத் தான் போட்டுக் குடிப்பாங்க. சுக்கு, கொத்தமல்லி, வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையைக் கலந்து கொதிக்க வச்சா, காரசாரமான சுக்குமல்லி காபி தயாராகிரும். அப்போ, இந்த மூனு பொருள்களையும் ஒன்னா கலந்துட்டா பயன்படுத்த எளிதா இருக்குமில்லையா? அதனால, நற்சுவை நாட்டுச் சர்க்கரையில, சுக்கும் கொத்தமல்லியும் கலந்த ஒருவகை சர்க்கரையைத் தயாரிக்கிறோம்.

அடுத்து, இன்னொரு வகை மூலிகைச் சர்க்கரையும் எங்க தயாரிப்புல உண்டு. அது, பல மூலிகைகள் கலந்த சர்க்கரை. அதாவது, அதுல, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், ஆவாரம்பூ, நெல்லிப்பொடி, துளசிப்பொடி, அதிமதுரம், அஸ்வந்தா கலந்த மூலிகைச் சர்க்கரை.

அடுத்து, 2020 ஆம் ஆண்டுல இருந்து பனைச் சர்க்கரையையும் தரமா தயாரிச்சு மக்களுக்குக் குடுக்குறோம். பனை வெல்ல மண்டிகள்ல இருந்து வெல்லத்தை வாங்கிட்டு வந்து, அதைச் சர்க்கரையா மாத்திக் குடுக்குறோம்.

மக்கள் பயன்பாட்டுப் பொருள்கள் தயாரிப்புல நல்ல மாற்றங்களைச் செஞ்சுக்கிட்டே இருக்கணும். காலமெல்லாம் மாற்றமே இல்லாம, குடுத்த பொருள்களையே திரும்பத் திரும்ப எடுத்துட்டுப் போனா, மக்களுக்கு அந்தப் பொருள்கள் மேல சலிப்பு வந்துரும். சிறுசா தொடங்குற தொழிலை பெருசா மாத்தணும்ங்கிற முயற்சி, அதுக்கான உழைப்பு நம்மகிட்ட இருந்தா, நல்ல நல்ல மாற்றங்கள் நம்மைத் தேடி வந்துக்கிட்டே இருக்கும்.

வெள்ளைச் சர்க்கரை உடம்புக்கு நல்லதில்லன்னு பெரும்பாலான மக்களுக்குத் தெரியுது. அவங்கெல்லாம் நாட்டுச் சர்க்கரையை விரும்பி வர்றாங்க. அவங்க நம்பிக்கை வீணாகக் கூடாது. சர்க்கரை அன்றாடம் பயன்படுற பொருள். அதனால, இந்தச் சமூகத்துக்கு நம்மாலான பங்களிப்பா, நற்சுவை நாட்டுச் சர்க்கரையைத் தயாரிக்கிறோம்.

அப்புறம், மக்கள் விரும்பிச் சாப்பிடுற இன்னொரு பொருள் அப்பளம். அப்பளத்தைப் பார்த்தா எடுத்துச் சாப்பிடணும்ன்னு எல்லாருக்கும் ஆசை வரும். அந்தளவுல உணவுல அதிகமா பயன்படுற பொருள். இந்த அப்பளத் தயாரிப்பும் எங்ககிட்ட உண்டு. இதுல, தக்காளி அப்பளம், இராகி அப்பளம், அரிசி அப்பளம்ன்னு மூனு வகையான அப்பளங்களைத் தயாரிச்சுக் குடுக்குறோம். எங்க அப்பளத்துக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கு.

அடுத்து, உணவுல பயன்படுற முக்கியமான பொருள் எண்ணெய். இது இல்லேன்னா உணவுல ருசியே இருக்காது. ஆனா, தரமான எண்ணெய் கிடைக்கிறது பெரிய கேள்விக்குறி தான். ஆனாலும், வேற வழியில்லாம எல்லாரும் அதை வாங்கிப் பயன்படுத்துறோம். நல்ல உணவுப் பொருள்களைத் தயாரிப்பது மட்டுமே எங்கள் நோக்கம். அதனால, மரச்செக்கு மூலமா, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்யைத் தயாரிச்சுக் குடுக்குறோம். இந்தத் திட்டம் இப்போ ஆரம்ப நிலையில தான் இருக்கு.

இந்த எல்லாமே என் கணவர் பொறுப்புல தான் நடக்குது. அதனால அவருக்கு நிறையச் சுமைகள் இருக்கும். இந்தச் சுமைகள்ல என்னால முடிஞ்சளவு நான் எடுத்துக்கிருவேன். குறிப்பா, சர்க்கரையைத் தரமாவும், எடை குறையாமல் சரியாவும் குடுக்கணும். ஏன்னா, ஒரு பொருள் சரியில்லேன்னோ அல்லது சரியான எடையில இல்லேன்னோ மக்கள் நெனச்சுட்டா, நம்ம மேல அவங்க வச்சிருக்கிற நம்பிக்கையை இழந்துருவோம். அதனால, இந்தப் பொருள்களை பேக்கிங் பண்றது முழுசும் என்னோட பொறுப்பு தான். அதுக்கான ஆட்களை வச்சுக்கிட்டு நல்ல முறையில செஞ்சு முடிப்பேன்.

கடகத்தூர் ஆலையையும் பெரும்பாலும் நான் தான் கவனிச்சுக்கிறேன். ஏன்னா, எங்களுக்குப் பவானியிலயும் நாட்டுச் சர்க்கரைத் தயாரிப்பு ஆலை இருக்கு. அதனால, என் கணவர் அங்கேயும் அடிக்கடி போயி வரவேண்டி இருக்கும். அப்புறம், விற்பனை ஆர்டர் எடுக்குறதும் அவரு தான். அதனால அதுக்காகவும் அடிக்கடி வெளியே போக வேண்டியிருக்கும்.

எங்களுக்கு முக்கியமா தேவைப்படுற பொருள் கரும்பு. தமிழ்நாட்டுல பல எடங்கள்ல இருந்து கரும்பை வாங்குறோம். சில நேரங்கள்ல தமிழ்நாட்டுல கரும்பு கிடைக்காது. அப்போ மைசூரு மாண்டியாவுக்குப் போயி கரும்பை வாங்கிட்டு வருவோம். இதைப் போல, நிலக்கடலை, எள், தேங்காய், மூலிகைப் பொருள்கள் கொள்முதலுக்காகப் பல எடங்களுக்கு அவரு அலைய வேண்டியிருக்கும். இந்த நேரங்கள்ல எல்லாம் அவரோட எடத்துல இருந்து வேலையைச் செய்யிறத என்னோட கடமையா எடுத்துக்கிருவேன்.

அவர் ஒரு பட்டதாரி. நானும் நல்லா படிச்சிருக்கேன். இதனால, வாழ்க்கையைப் புரிஞ்சுகிட்டு செயல்படுறோம். நிறையா எங்க தொழிலைப் பத்தி கலந்து பேசுறோம். எங்க முன்னேற்றத்துல எவ்வளவு கவனமா இருக்கோமோ, அதே அளவுல எங்ககிட்ட நல்ல சமூகக் கண்ணோட்டமும் இருக்கு. அதனால தான் இந்த உணவுப் பொருள்கள் உற்பத்தியில தரத்துக்கு முதலிடம் குடுக்குறோம்.

நான் என் கணவருக்கு வாழ்க்கைத் துணையாக மட்டும் இல்லாமல், செய்யும் தொழிலிலயும் துணையாக இருந்து, ஒருத்தருக்கு ஒருத்தர் புரிதலுடன் செயல்படுறதுனால, நாங்க சீராவும் சிறப்பாவும் முன்னேறுவோம். இந்த நம்பிக்கை எங்ககிட்ட இருக்கு’’ என்று சொல்லி முடித்தார்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்பார் வள்ளுவப் பெருந்தகை. அந்த அன்பையும் அறத்தையும் இருவருமே வாழ்க்கைப் பண்புகளாகக் கொண்டிருப்பதால், இவர்கள் எண்ணற்ற வெற்றிப் படிகளில் ஏறுவார்கள் என்பது, உண்மையிலும் உண்மை என எண்ணிக் கொண்டு, அவரிடமிருந்து விடை பெற்றோம்.

நற்சுவை நாட்டு சர்க்கரையைப் பெற விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய எண்: +91 97863 11441


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!