அறிவியல் வளர்ச்சியால் புதுப்புது வேளாண் நுட்பங்கள் வந்து கொண்டே உள்ளன. புதிய இரகங்கள், விதை நேர்த்தி, பயிர்ப் பாதுகாப்பு, உழவியல் மற்றும் உரமிடும் முறைகள் மூலம் உயர் விளைச்சலைப் பெற முயலும் போது, அவற்றைத் தருவதற்கான வளம் மண்ணில் இருக்க வேண்டும்.
செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.
பசுமைப் புரட்சிக்குப் பிறகு நமது விவசாயம், இரசாயன முறைக்கு மாறி விட்டது. கூடுதல் மகசூலுக்காக, பல்வேறு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி, பூசணக் கொல்லிகளை மண்ணில் இட்டு வருகிறோம்.
இவை மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை அழிப்பதுடன், மண் வளத்தையும் பாதிக்கச் செய்கின்றன. இதனால், மண்ணுக்குச் சத்துகள் கிடைக்காமல் போவதுடன், அதன் இயற்கைச் சூழ்நிலையும் மாற்றப்படுகிறது.
கால நிலை, மண்ணின் ஈரப்பதம், வளர்ச்சிப் பருவம் ஆகியவற்றால், சில சத்துகள், கூடுதலாக அல்லது குறைவாகப் பயிருக்குக் கிடைக்கும் நிலை ஏற்படலாம். இதனால், வளர்ச்சி பாதித்து விளைச்சல் குறைந்து விடும்.
குளிர் காலத்தில் பயிர்கள், தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை, குறைவாக எடுத்துக் கொள்கின்றன. சரியான அளவில் ஏதேனும் ஒரு சத்துக் கிடைக்காமல் போனாலும், செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
எனவே, சத்துக் குறைவதால் அல்லது மிகுவதால், பயிரில் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிந்து கொண்டால், மகசூல் குறைவுக்கான காரணத்தை அறிந்து தீர்வு காணலாம்.
நம் நாட்டுக்குத் தேவையான உணவு உற்பத்தி இலக்கை அடைய, கூடுதலாக விளைச்சல் தரும் பயிர்களைத் தொடர்ந்து பயிரிடுகிறோம். இதற்கான உரங்களின் விலையும் கூடிக்கொண்டே இருக்கிறது.
பயிருக்குத் தேவையான சத்துகளை இடாத போது, மண்ணிலுள்ள சத்துகளை, பயிர் உறிஞ்சி எடுத்து விடுகிறது. இதனால் மண்ணில் சத்துகள் குறைந்து கொண்டே உள்ளன. இந்நிலையில், நாம் இடும் உரங்களின் செயல் திறனைக் கூட்டுவதற்கான முறைகளை, உரங்களைத் தவிர மற்ற பொருள்கள் மூலம் சத்துகளை மண்ணில் சேர்க்கும் முறைகளை, கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அறிவியல் வளர்ச்சியால் புதுப்புது வேளாண் நுட்பங்கள் வந்து கொண்டே உள்ளன. புதிய இரகங்கள், விதை நேர்த்தி, பயிர்ப் பாதுகாப்பு, உழவியல் மற்றும் உரமிடும் முறைகள் மூலம் உயர் விளைச்சலைப் பெற முயலும் போது, அவற்றைத் தருவதற்கான வளம் மண்ணில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பயிர்க் காலத்திலும் நாம் செய்யும் சத்து நிர்வாகம், மண்வளத்தை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். மண்வளம் குறைந்து கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் பயிரிடத் தகுதியில்லாத நிலமாக மாறி விடும்.
அதனால், விவசாயிகளின் பொருளாதார வளம் குறைந்து விடும். தரம் குறைந்த மண்ணை உடனே சரி செய்வதும் கடினம். எனவே, மண்வளம் காக்கும் உத்திகளைப் பேணுவது மிகமிக முக்கியம். வளமான மண் என்பது, பயிர் வளர்ச்சிக்கு உகந்த நிலையான இயற்பியல் பண்புகள் மிக்கதாக இருக்க வேண்டும்.
அதாவது, சத்துகளின் இருப்பிடமாய், பயிர்த் தேவைக்கு ஏற்ற நீர்ப்பிடிப்பு, காற்றோட்டம் மற்றும் பயிர் வளர்ச்சிக்குத் தகுந்த சத்துகளை வழங்கும் இயல்புடன் இருக்க வேண்டும். களி, வண்டல், மணல் போன்ற மண் துகள் தொகுப்பு விகிதங்களின் அளவு மாறுவதால் தான், மண்ணின் இயற்பியல் பண்புகள் மாறுகின்றன.
களிமண் நிலத்தில் உழுவது முதல் பாசனம் வரையில் பல இடர்கள் உள்ளன. மணல் சார்ந்த நிலத்தில் விடப்படும் நீர், பயிருக்குக் கிடைக்காமல் வேருக்குக் கீழே சென்று விடும். இப்படி, பல சிக்கல்கள் இருந்தாலும், மண்ணிலுள்ள கரிமப் பொருளின் அளவு சரியான நிலையில் இருந்தால், இந்தச் சிக்கல்களின் தாக்கம் குறைந்து நல்ல மகசூல் கிடைத்து விடும்.
மண் துகள் தொகுப்பு எப்படியிருந்தாலும் அதன் பண்புகளை மேம்படுத்தி மண்வளத்தைக் கூட்டும் ஆற்றல், கரிமப் பொருளுக்கே உள்ளது. இதற்காகத் தான் இயற்கை உரங்களை இட வேண்டியதன் அவசியத்தை, காலங் காலமாகச் சொல்லி வருகிறோம். புதிதாக மண்ணில் சேரும் கரிமப் பொருள்கள், மண்ணின் கரிமமாக மாறுவதற்கு, பாக்டீரியா, பூசணம், ஆக்டினோ மைசிட்ஸ் போன்ற நுண்ணுயிர்கள் உதவுகின்றன.
இந்த உயிர்களின் செயலுக்குத் தடையாய் இருக்கும் காரணிகளால், மண்ணில் கரிமப் பொருள்கள் மட்கும் வேகம், வெகுவாகக் குறைந்து விடுகிறது. நல்ல காற்றோட்டம், போதிய ஈரம், சரியான கார அமில நிலை போன்றவை, கரிமப் பொருள்கள் வேகமாக மட்குவதற்கான காரணிகளாக உள்ளன. பூசண வகைகள், அமில நிலையிலும், பாக்டீரியா, ஆக்டினோமைட்ஸ் வகைகள், நடுநிலை, கார நிலையிலும் வேகமாகச் செயல்படும்.
தழை, எரு போன்றவை மட்கும் போது, மண்ணில் உள்ள அனைத்துத் தழைச் சத்தையும் தம்வசம் இழுத்துக் கொள்ளும். இதனால், உடனே பயிரிட்டால் அல்லது பயிரிட்ட நிலத்தில் மட்காத எருவைப் போட்டால், தழைச்சத்துக் கிடைக்காமல் பயிர்கள் வெளுத்தும், சிறுத்தும், வளர்ச்சியற்றும் இருக்கும். இந்தச் செயல் தழைச்சத்து இறக்கம் எனப்படுகிறது.
எனவே, கரிமம், தழைச்சத்து விகிதம் முப்பதுக்குக் கீழே வரும் வரையில் காத்திருந்து சாகுபடி செய்ய வேண்டும். உழுவதற்கு முன்பே, தழை, எரு முதலியவற்றை இடுவதே நன்மை பயக்கும்.
தழையையும், எருவையும் நிலத்தில் இட்டதும், அவற்றிலுள்ள சர்க்கரை, மாவு, புரதம், நார்ப்பொருள், கொழுப்பு, மெழுகு போன்றவை வேகமாக மட்கி விடும். லிக்னின், கரிமவலை அமிலங்கள் மெதுவாக மட்கும். எல்லாம் மட்கிய பிறகு அவை கரிம வேதிப் பொருளாக மாறிவிடும்.
இவ்வகைப் பொருள்கள் இரு வகைப்படும். சுமார் 10-40 சத நுண்ணுயிர்கள், வேதி வினைக்கு உட்பட்டவை. இவை, சிறிது சிறிதாக மாற்றமடைந்து, சத்துகளை விடுவித்துப் பயிர் வளர்ச்சியைத் தூண்டும்.
எஞ்சியுள்ள 60-90 சத நுண்ணுயிர்கள், ஹியூமிக் அமிலம், ஹியூமின் களிமண்ணில் ஒட்டிக் கொண்டிருக்கும் கரிமப் பொருள்கள் ஆகும். இவை, நேரடி வேதி வினைகளில் பங்கு கொள்வதில்லை. எனினும், இவற்றின் ஆற்றலால் மண்ணின் பௌதிக இயல்புகள், அயனி இயக்கங்களின் பரிமாற்றம் போன்றவை ஊக்கப்படுத்தப் படுகின்றன.
எனவே, மண்வளத்தைப் பாதுகாக்க, அதில், கரிம அளவை நிலை நிறுத்துவது அவசியம். தொடர்ந்து, தழை மற்றும் எருவை இடுவதால், மண்ணின் கரிமம் நிலை பெறும். மிகுதியாக எருவை இடுவதால், மண்ணின் கரிம அளவை உயர்த்துவது கடினம்.
அப்படி உயர்த்தினாலும், மண்ணின் இயல்பு, காலநிலை, பயிரிடும் முறையைப் பொறுத்து, மண்ணின் கரிம அளவு, குறிப்பிட்ட அளவுக்குக் குறைந்து நிலை பெற்று விடும்.
பயிர்க் கழிவுகள், மட்காத எரு போன்றவற்றை இடும் போது, சரியான அளவில் தழைச்சத்து உரத்தை இட வேண்டும். இது, இந்தப் பொருள்கள் வேகமாக மட்கவும், சரியான அளவில் கரிமம் மற்றும் தழைச்சத்து அளவை மண்ணில் விரைவாகக் கொண்டு சேர்க்கவும் உதவும்.
நாம் தான் உலகை ஆட்டிப் படைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் உலகை ஆட்டி வைப்பவை, பூச்சிகள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் தான்.
நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்னும் பொதுவான எண்ணம் உண்டு. ஆனால், உண்மை அப்படியில்லை. தனது அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்திருக்கிறது இயற்கை. ஒரு வாசலை அடைத்தால் இன்னொரு வாசல் திறக்கும்.
அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அத்தகைய நுண்ணுயிர்களைப் பற்றிப் புரிய வைப்பதே இந்தத் தொடரின் நோக்கம்.
இப்போது மண்ணில் அங்ககப் பொருள்களின் அளவு குறைந்து வருகிறது. இதைக் கூட்ட வேண்டியது நமது கடமை. இயற்கையாகவே தாவரங்களின் வேருக்கு அருகில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. இவை மண்ணில் உள்ள சத்துகளை, தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றித் தருகின்றன.
நுண்ணுயிர்கள் மிகவும் சுறுசுறுப்பானவை. நாம் இடும் இயற்கை உரங்களை மட்கச் செய்து மண்வளத்தைப் பெருக்குகின்றன. எனவே, மண்ணில் இயற்கையான மட்குப் பொருள்கள் இல்லையெனில் நுண்ணுயிர்களும் குறையும்.
அங்ககப் பொருள்களை மட்கச் செய்து மண்ணுக்கு அளிக்கும் நுண்ணுயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்த, பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, மண்ணிலுள்ள சத்துகளைக் கரைத்துக் கொடுக்க, பயிர்கள் எதிர்ப்புத் திறனைப் பெற என, பல வகைகளில் உதவுகின்றன.
முனைவர் ரா.பூர்ணியம்மாள், முனைவர் த.ஜானகி, முனைவர் ஜே.இராஜாங்கம், தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம் – 625 604, முனைவர் சி.சாரதாம்பாள், அகில இந்திய வாசனைப் பயிர்கள் வாரியம், கோழிக்கோடு, கேரளம்.
சந்தேகமா? கேளுங்கள்!