My page - topic 1, topic 2, topic 3

பதிமுகம் சாகுபடி!

திமுகத்தின் அறிவியல் பெயர்: Biancaea sappan. குடும்பம்: Fabaceae. பெருங் குடும்பம்: Plantae.

பதிமுகம் என்னும் கிழக்கிந்திய சிவப்பு மரம் பல்நோக்கு மரமாகும். மதிப்புமிக்க இயற்கைச் சாயங்களை மூலிகைப் பண்புகளுடன் வழங்குகிறது.

இந்தியாவில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தோட்டங்கள் மற்றும் நாற்றங்கால் பகுதிகளில் வேலியாக வளர்க்கப்படுகிறது.

மண்ணும் தட்ப வெப்பமும்

இது, அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை மிக்கது. இம்மரம், செம்மண்ணில் நன்கு செழித்து வளரும், வறட்சியைத் தாங்கி வளரும்.

அதிக ஈரத்தன்மை உள்ள மண்ணில் வளருவதில்லை. மண்ணின் கார அமிலத் தன்மை 5-7.5 இருக்க வேண்டும். ஆண்டின் சராசரி வெப்பநிலை 24-28 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்.

இனப்பெருக்கம்

பதிமுகம் விதைகள் மூலமும், கிளைகள் மூலமும் இனப்பெருக்கம் செய்யலாம். முதிர்ந்த பதிமுகக் காய்கள் வறட்சிப் பருவத்தில் வெடித்துப் பரவி இருக்கும்.

மழைக்காலம் வரும் வரை அவை உறக்க நிலையில் இருக்கும். போதுமான ஈரப்பதம் கிடைத்ததும் முளைத்து விடும். விதைகளைப் பருத்தித் துணியில் கட்டி ஐந்து நொடிகள் கொதிநீரில் வைத்தால், அவற்றின் முளைப்புத் திறன் 90 சதம் இருக்கும்.

பயிர்ப் பராமரிப்பு

தொடக்கத்தில் பதிமுகம் நேராக வளரும். 2.5 மீட்டர் உயரம் வந்ததும், அதன் கிளைகள் அருகிலுள்ள மரங்களில் மற்றும் அருகிலுள்ள கிளைகளுடன் இணைந்து அடர்ந்து படரும்.

இதன் அடிப்பகுதி வளர்ச்சிக் குறைவாகவே இருக்கும். கீழே விழும் பதிமுகக் கட்டைகளில் இருந்து, இரு வாரங்களில் நிறைய முளைப்புகள் தோன்றும்.

நிறமியாகப் பயன்படும் மரங்களை 6-8 ஆண்டுகளில், அதாவது, அவற்றின் தண்டு 5-6 செ.மீ. விட்டம் வந்ததும் அறுவடை செய்யலாம். நிலத்திலிருந்து ஒரு மீட்டர் உயரம் விட்டு, மரங்களை அறுவடை செய்ய வேண்டும்.

உரம்

நிலத்தைத் தயாரிக்கும் போது குழிக்கு 5 கிலோ தொழுவுரத்தை அடியுரமாக அளிக்க வேண்டும். அங்ககப் பொருள்களைத் தவிர, இரசாயன உரங்களைக் குறைந்தளவில் இடலாம், இடாமலும் விட்டு விடலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

பதிமுகக் காய்களைக் காய்த் துளைப்பானும், மரத்தைக் கரையானும் தாக்கும். காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த, காய்கள் உருவாகும் போது, ஒருவார இடைவெளியில், 0.2 சத மோனோ குரோட்டோபாஸ் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

கரையானைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. குளோர்பைரிபாஸ் அல்லது டர்ஸ்பான் வீதம் கலந்து மண்ணை நனைத்து விட வேண்டும்.

மூலிகைத் தாவரங்களுக்கு இரசாயன உரங்கள் தேவையில்லை. வேம்பு சார்ந்த அங்ககப் பொருள்களே போதும். சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மீன் எண்ணெய் சோப்பைப் பயன்படுத்தலாம்.

உயிர்மப் பொருள்களான பூண்டு விட்டெக்ஸ், கிளிரோ டென்ட்ரான், கலோட்ராபிஸ் ஆகியவற்றைக் கலந்து சீரான இடைவெளியில் தெளிக்கலாம்.

அறுவடை மற்றும் மகசூல்

பதிமுக மரத்தில் உள்ள முக்கியக் கிளை அறுவடை செய்யப்படும். ஒரு மரத்தின் மூலம் சராசரியாக 80 கிலோ மரக்கூழ் கிடைக்கும். பதிமுக விதைகள், நட்ட இரண்டாம் ஆண்டிலிருந்து கிடைக்கும். இவ்வகையில், எக்டருக்கு 2,000- 2,500 கிலோ காய்களும், 200-250 கிலோ விதைகளும் கிடைக்கும்.

பதிமுக மரங்களை, நட்ட 6-12 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். இவற்றைத் துண்டுகளாக வெட்டி, கொதிக்கும் நீரில் இடும் போது மை கிடைக்கும்.

இந்த மையை, சில நெல் மணிகளை இட்டுப் பிரித்து எடுக்கலாம். அதாவது, நெல் உமியே கொதிக்கும் நீருக்குப் போதுமானது. இந்த மை மகசூலானது, இரகங்கள் மற்றும் சாகுபடி முறையைப் பொறுத்து மாறும்.
பயன்கள்

மரக்கட்டை: இது, வணிக நோக்கில், சிவப்பு மரம் அல்லது பிரேசில் மரத்துக்கு ஆதாரமாக உள்ளது. பதிமுக மரம் வெள்ளை நிறம், 90 சதம் கடினமான தண்டுப் பகுதியைக் கொண்டது.

இளம் பருவத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் பதிமுக மரம், பிறகு அடர் சிவப்பு நிறமாக மாறி விடும். இம்மரம், எளிதில் காய்ந்து போவதில்லை.

கரையான் தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. அலுவலக அறைகள் மற்றும் நடைப்பயிற்சிக் குச்சிகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. தண்டுப் பகுதியில் இருந்து பிசின் கிடைக்கிறது.

நிறமி: பதிமுக மரத்தின் மையப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் பளபளப்பான சிவப்பு நிறமி, பருத்தி, பட்டு மற்றும் கம்பளி துணிகளில் சாயம் போடப் பயன்படுகிறது.

பதிமரப் பட்டையும் காய்களும், தோல் பொருள்களில் நிறமிடப் பயன்படுகின்றன. பதிமுக வேரானது, மஞ்சள் நிறமியாகப் பயன்படுகிறது. பதிமுக இலைகளில் நறுமணமுள்ள மற்றும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் உள்ளது.

மருந்து: பதிமுக மரச்சாறு, வயிற்றுக் கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. தோலுக்கு வலுவூட்டும் வெளி மருந்தாகப் பயன்படுகிறது. பெண்களுக்கு டானிக்காக அளிக்கப்படுகிறது.

இரத்த வாந்தியை மட்டுப்படுத்தும். மலேரியா நோய்க்கான மருந்துத் தயாரிப்பில் இதுவும் பயன்படுகிறது. இதன் உலர்ந்த மையப்பகுதி வீக்கம் மற்றும் ஒவ்வாமை மருந்தாக விளங்குகிறது. விதை, மயக்க மருந்தாகப் பயன்படுகிறது.


முனைவர் கா.பரமேஸ்வரி, இணைப் பேராசிரியை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks