மருந்துக் கத்தரி சாகுபடி!

கத்தரி Solanum violaceum

சிலவகை மருந்துப் பயிர்கள், ஸ்டிராய்டு மருந்துப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் காய்களிலும் விதைகளிலும் சொலாசொடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. சொலாசொடின் ஆல்கலாய்டுகள் டெஸ்டோஸ்ட்டிரோன் மற்றும் கார்டிக்கோ ஸ்டிராய்டு மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்த மருந்து வகைகள் உடலில் ஏற்படும் வலியை உடனடியாகக் குறைக்கவும், கர்ப்பத் தடை மாத்திரைகளைத் தயாரிக்கவும் பெரிதும் பயன்படுகின்றன.

மருந்துக் கத்தரியில், சொலானம் வயாரம் அல்லது கேசியானம் (Solanum viatum or S.Khasiahum) மற்றும் சொலானம் லெசினேட்டம் (S.Lacinatum) ஆகிய வகைகள் உள்ளன. சொலானம் வகையில், அர்க்கா சஞ்சீவினி என்னும் இரகமும், சொலானம் லெசினேட்டத்தில் கிளாக்சோ என்னும் இரகமும் உள்ளன.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

ஓரளவு குளிர்ச்சியான இடங்கள் மிகவும் ஏற்றவை. வறட்சியையும் தாங்கி வளரும். தற்போது ஆந்திரம், கர்நாடகம், குஜராத், மராட்டியம் போன்ற மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதை, ஏப்ரல்- மே அல்லது ஆகஸ்ட்- செப்டம்பரில் பயிரிடலாம். நாற்றங்காலை அமைத்து விதைகளை விதைக்க வேண்டும். எக்டருக்கு 450 கிராம் விதைகள் தேவைப்படும்.

நாற்றங்கால்

ஏழு மீட்டர் நீளம் 1.20 மீட்டர் அகலம், 10 செ.மீ. உயரமுள்ள மேடைப் பாத்திகளை அமைக்க வேண்டும். ஒரு எக்டரில் விதைக்க பத்துப் பாத்திகளை அமைக்க வேண்டும்.

பாத்திகளை அமைப்பதற்கு முன் 20 கிலோ மட்கிய தொழுவுரத்தை இட்டு கலக்கி மண்ணைச் சமப்படுத்த வேண்டும். 7.5 செ.மீ. இடைவெளியில் நேர்க்கோடுகளை அமைத்து விதைகளைச் சீராகத் தூவி விதைத்த பின், மண்ணை மேலாக மூட வேண்டும்.

பிறகு, காய்ந்த இலைச் சருகுகளைப் பாத்திகளில் பரப்ப வேண்டும். நாற்றுகள் நன்றாக வளரும் வரை தினமும் நீரைத் தெளிக்க வேண்டும். நாற்றுகளை வேரழுகல் நோய்த் தாக்காமல் இருக்க, 0.25% காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தை, வேர் நனையுமாறு ஊற்ற வேண்டும்.

நடவு

நிலத்தை நன்றாக உழுது எக்டருக்கு 10 டன் தொழுவுரத்தை இட வேண்டும். பிறகு, 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். 30 நாள் நாற்றுகளை 45 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.

உர நிர்வாகம்

எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 80 கிலோ சாம்பல் சத்தைத் தரும் உரங்களை இட வேண்டும். நாற்றுகளை நடுமுன் நீர்ப்பாய்ச்சி நடுவது நல்லது. செடிகளுக்கு, ஒரு மாதம் கழித்து 10 கிலோ தழைச்சத்து உரத்தை மேலுரமாக இட வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

வேரழுகல் நோய் பெரும்பாலும் நாற்றுகளையும் வளர்ந்த செடிகளையும் தாக்கும். இது, ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் (Fusarium oxasporum) என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த, மண்ணில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். நோயுற்ற செடிகளின் வேர்கள் நனையும் வகையில், ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் தாமிரப் பூசணக்கொல்லி வீதம் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும்.

அறுவடை

காய்கள் இளம்பழுப்பு நிறமாக மாறும் போது பறிக்க வேண்டும். நட்ட ஆறு மாதங்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்களை இளம் வெய்யிலில் ஒருவாரம் உலர்த்த வேண்டும்.

மகசூல்

ஒரு எக்டரில் 5,000 கிலோ பச்சைக் காய்கள் அல்லது 1,000-1,500 கிலோ உலர் காய்கள் மகசூலாகக் கிடைக்கும். இந்தக் காய்களில் 2.0% சொலாசொடின் ஆல்கலாய்டு இருக்கும்.


Pachaiboomi_VENKADALAKSHMI

முனைவர் க.வேங்கடலெட்சுமி, இணைப் பேராசிரியை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading