My page - topic 1, topic 2, topic 3

நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

ற்பொழுது நெல் சாகுபடியில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஆகும். நேரடி நெல் விதைப்பின் மூலம், நடவு செய்வது தவிர்க்கப்படுவதால் ஆட்கள் தேவை குறைவதோடு, நாற்றங்கால் உற்பத்திச் செலவும் குறைகிறது. மேலும், பாசனநீரின் தேவையும் 30 சதம் குறைவதால், அந்த நீரைச் சேமிக்கலாம் அல்லது இன்னொரு பயிருக்குப் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரையிலான செலவு குறைகிறது. சாகுபடிச் செலவில் களையெடுப்பதற்கு மட்டும் 10 முதல் 15 சதம் வரை ஆகிறது.

எனவே, தற்பொழுது நேரடி நெல் விதைப்பை, விவசாயிகள் ஆர்வமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், நேரடி நெல் விதைப்பில் சரியான நேரத்தில் களைகளை நீக்காவிடில், 40 முதல் 60 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். நேரடி நெல் விதைப்பின் முக்கியச் சிக்கலாகக் கருதப்படும் களைகளை, சரியான களைக் கொல்லிகளைத் தெளித்துக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகப்படுத்தலாம்.

களை மேலாண்மை

களையெடுக்கும் கருவி (கோனோவீடர், ரோட்டரி வீடர்): நேரடி நெல் விதைப்பில் களைகளும் நெல் விதைகளும் ஒரே நேரத்தில் வளர்வதால், களைக்கொல்லியை இடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் களைக்கொல்லியை இடா விட்டால், நெல் விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டு விதைகள் இறக்க நேரிடும். ஆகவே, இந்தக் களைகளைக் கட்டுப்படுத்த, களையெடுக்கும் கருவிகளைப் பயன்படுத்தலாம். இதனால், ஆட்களை வைத்துக் கைக்களை எடுப்பதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் குறைவான செலவே ஆகும்.

இக்களைக் கருவியை, நேரடி நெல் விதைப்பு உருளை மூலம் விதைத்த வயலில், வரிசைக்கு வரிசை இடைவெளியில் முன்னும் பின்னும் நகர்த்தி இயக்குவதால், களைகள் கட்டுப்படுவதோடு, மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்பட்டு, அதிகமான தூர்களும், கதிர்களும் உற்பத்தியாகும். இக்களைக் கருவியை, விதைத்த பத்தாம் நாள் முதல் முறையாகவும், அடுத்துக் களைகளின் தீவிரத்தைப் பொறுத்து 10-15 நாட்களுக்கு ஒன்றல்லது இருமுறையும் பயன்படுத்தினால், களைகளைக் கட்டுப்படுத்தி, அந்தக் களைகளை இயற்கை உரமாகவும் மாற்றலாம். நன்கு வளர்ந்த பயிர்களுக்கு இடையே களைக் கருவியைப் பயன்படுத்துவது சிரமமாக இருப்பதால், விதைத்த 30-35 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.

நேரடி நெல் விதைப்பில் நீரின் தேவை குறைவது, வேலையாட்கள் குறைவது, செலவு குறைவது போன்ற காரணங்களால், சமீபக் காலமாக நேரடி விதைப்பு முறை பிரபலமாகி வருகிறது. நேரடி நெல் விதைப்பில் களைகளால் ஏற்படும் 50-60 சத மகசூல் இழப்பைத் தவிர்க்க, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

வெறுமை விதைப்படுகை (Stale seed bedtechnique): வயலை நன்கு உழுது தயாரித்து, லேசாக நீரைப் பாய்ச்ச வேண்டும். இப்படிச் செய்வதால், நிலத்தின் மேற்பரப்பில் உள்ள களைகள் விரைவாக முளைக்கும். அப்போது ஆழமாக இல்லாமல் வயலை 4-5 செ.மீ. ஆழத்தில் மேலோட்டமாக உழுது அல்லது எக்டருக்கு ஒரு கிலோ கிளைபோசேட் களைக்கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் களைகளை அழிக்கலாம்.

இருபயிர் முறை: நெல் மற்றும் பசுந்தாள் விதைகளை ஒருங்கே விதைத்து முப்பது நாளில் எக்டருக்கு 1250 மி.லி. வீதம் 2,4 டி எஸ்டர் என்னும் களைக்கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால், பசுந்தாள் பயிர்கள் மடிந்து மண்வளத்தைக் கூட்டுவதுடன், களைகளும் வெகுவாகக் குறையும்.

இராசயன முறை: விதைகளை விதைப்பதற்கு 5-7 நாட்களுக்கு முன், எக்டருக்கு ஒரு கிலோ கிளைபோசெட் களைக்கொல்லி வீதம் எடுத்து 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். கோரை அதிகமாக இருப்பின், எக்டருக்கு 250 கிராம் 2,4 சோடியம் உப்பு மற்றும் ஒரு கிலோ கிளைபோசேட் களைக்கொல்லியைக் கலந்து தெளிக்கலாம். களைகள் முளைப்பதற்கு முன், எக்டருக்கு 750 கிராம் பிரிட்டிலாகுளோர் களைக்கொல்லி மற்றும் சேப்னரைக் கலந்து, விதைத்த 7-8 நாளில் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

களைகள் முளைத்த பிறகு, விதைத்த 18-21 நாளில் எக்டருக்கு 250 மி.லி. பிஸ்பைரிபாக் சோடியம், 35 கிராம் அசிம்சல்ப்யூரான் வீதம் எடுத்து 500 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம், கோரை உட்பட அனைத்து விதமான களைகளையும் கட்டுப்படுத்தலாம். நேரடி நெல் விதைப்பில் இந்த முறைகளை ஒருங்கே கடைப்பிடித்தால், களைகளைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகப்படுத்தலாம்.


Pachaiboomi_VENKADALAKSHMI

முனைவர் .வேங்கடலெட்சுமி, முனைவர் சே.நக்கீரன், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

குடுமியான்மலை, புதுக்கோட்டை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks