தென்னைநார்க் கழிவை உரமாக்குவது எப்படி?

தென்னை coir pith

தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படும் போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது, தென்னை நார்க் கழிவு எனப்படும்.

இந்திய தென்னை நார் ஆலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன் கழிவு ஆண்டுதோறும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து ஐந்து இலட்சம் டன் கழிவு கிடைக்கிறது. இதிலுள்ள மூலப் பொருள்களால், இது வளர் ஊடகமாகப் பயன்படுகிறது.

இதில், அதிகளவில் கரிமச்சத்தும் தழைச்சத்தும், குறைந்தளவில் உயிர்ச் சிதைவும் இருப்பதால், இது இன்றளவும் விவசாயத்தில் முக்கியக் கரிமச்சத்து மூலமாகக் கருதப் படவில்லை.

எனவே, கரிமச்சத்து, தழைச்சத்து விகிதத்தைக் குறைக்கவும், லிக்னின் மற்றும் செல்லுலோஸ் அளவைக் குறைக்கவும் இக்கழிவானது மட்க வைக்கப் படுகிறது.
இதனால், நார்க்கழிவு குறைந்து, உரச்சத்து அதிகரித்து, தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாறுகிறது.

மட்க வைத்தல்

தென்னை நார்க் கழிவைச் சேகரித்து இதிலுள்ள நார்களை அகற்ற வேண்டும். ஏனெனில், இந்த நார்கள் மட்காமல் இருப்பதுடன், மற்ற கழிவு மட்குவதையும் தாமதப் படுத்தும்.

அடுத்து, சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தென்னந் தோப்பு அல்லது ஏதேனும் மர நிழலுள்ள இடத்தில் அமைக்கலாம்.

ஏனெனில், மரநிழல், மட்கும் கழிவு ஈரமாக இருக்க உதவும். தரை சமமாக இருக்க வேண்டும். சிமெண்ட் தரை மிகவும் உகந்தது.

உரக்குவியலை அமைத்தல்

ஒரு டன் நார்க்கழிவை மட்க வைக்க ஐந்து கிலோ யூரியா, 2 கிலோ நுண்ணுயிர்க் கூட்டுக் கலவை தேவை.

இந்த இரண்டு பொருள்களையும் ஐந்து ஐந்து பாகமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். தென்னை நார்க் கழிவைப் பத்துப் பாகமாகப் பிரிக்க வேண்டும்.

முதலில் 4 அடி நீளம், 3 அடி அகலத்தில் 100 கிலோ கழிவைப் பரப்ப வேண்டும். அதன்மேல் ஒரு கிலோ யூரியாவைத் தூவ வேண்டும்.

அடுத்து, 100 கிலோ கழிவைப் பரப்ப வேண்டும். அதன்மேல் 400 கிராம் நுண்ணுயிர்க் கலவையைத் தூவ வேண்டும்.

அடுத்து, 100 கிலோ கழிவைப் பரப்ப வேண்டும். அதன்மேல் ஒரு கிலோ யூரியாவைத் தூவ வேண்டும்.

இப்படி, மாற்றி மாற்றிப் பரப்ப வேண்டும். யூரியாவுக்கு மாற்றாகக் கோழிக் கழிவைப் பயன்படுத்தலாம். இதற்கு 200 கிலோ கோழிக்கழிவு தேவைப்படும்.

குவியலைக் கிளறி விடுதல்

கழிவுக் குவியலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும். இதனால், புதிய காற்று உட்சென்று பழைய காற்றை வெளியேற்றும்.

கழிவு மட்கல் காற்றின் உதவியால் நடைபெறுகிறது. ஏனெனில், மட்க வைக்க உதவும் நுண்ணுயிர்கள் இயங்க மூச்சுக்காற்று அவசியம்.

கிளறி விடுவதற்கு மாற்றாக, துளையுள்ள இரும்பு அல்லது பிவிசி குழாய்களை, செங்குத்தாக அல்லது படுக்கையாகப் புகுத்திக் காற்றோட்டத்தை ஏற்படுத்தலாம்.

ஈரப்பதத்தைத் தக்க வைத்தல்

தரமான உரங்களைப் பெறுவதற்கு, தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைக்க வேண்டும். மட்க வைக்க 60% ஈரப்பதம் அவசியம்.

அதாவது, கழிவு எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். அதேநேரம் தேவைக்கு அதிகமாக இருக்கும் நீரை வெளியேற்றி விட வேண்டும்.

அதாவது, கையளவுக் கழிவை எடுத்து, உள்ளங் கைகளில் வைத்து அழுத்தும் போது நீர்க்கசிவு இருக்கக் கூடாது.

முதிர்வடைதல்

கழிவு மட்கும் கால அளவு, கழிவைப் பொறுத்து மாறுபடும். எல்லாக் காரணிகளும் சரியான அளவில் இருந்தால், 60 நாட்களில் மட்கி உரமாகி விடும்.

கழிவு மட்குவதை அதன் இயற்பியல் கூறுகளை வைத்து முடிவு செய்யலாம். முதலில் கழிவின் அளவு குறைவதால், அதன் உயரம் 30% குறைந்து விடும். அடுத்து, கழிவின் நிறம் கறுப்பாக மாறுவதுடன், அதன் துகள்கள் சிறியதாக இருக்கும்.

மேலும், மட்கிய உரத்தில் இருந்து மண்வாசம் வரும். வேதி மாற்றங்களை ஆய்வுக் கூடத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதில், கரிமச் சத்தும் தழைச் சத்தும் 20:1 எனக் குறைந்து இருக்கும்.

ஆக்ஸிஜன் வாயு உட்கொள்வதும், நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். பயிர்கள் எடுத்துக் கொள்ளும் சத்துகளின் அளவு அதிகமாக இருக்கும்.

சேகரித்தல்

மட்கிய உரத்தைச் சரியான நேரத்தில் சேகரிக்க வேண்டும். உரக் குவியலைக் கிண்டி விட்டு நிலத்தில் நன்றாகப் பரப்ப வேண்டும். இதனால், அதிலுள்ள சூடு தணிந்து விடும்.

இந்த உரத்தைக் காற்றோட்டமும் நிழலும் உள்ள இடத்தில் குவியலாக இட்டுப் பாதுகாக்க வேண்டும். அவ்வப்போது நீரைத் தெளித்து ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

பயன்கள்

மட்கிய நார்க்கழிவை நிலத்தில் இட்டால் மண்ணின் பண்புகள் மேம்படும். மணற் பாங்கான மண்ணின் கடினத் தன்மை அதிகமாகும். களிமண்ணில் காற்றோட்டம் ஏற்படும்.

மண் துகள்கள் ஒன்று சேர்ந்து மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தும். நீரைத் தக்க வைக்கும் தன்மை அதிகமாகும்.

இதில், அனைத்துச் சத்துகளும் இருப்பதால், இது செயற்கை உரத்தோடு நன்கு செயலாற்றும். மண்ணில் நுண்ணுயிரிகளைப் பெருக்கும். அம்மோனிய, நைட்ரேட் மற்றும் நைட்ரஜன் நிலை நிறுத்தல் வினைகள் கூடும்.

பயன்கள்

எல்லாப் பயிர்களுக்கும் எக்டருக்கு ஐந்து டன் மட்கிய நார்க்கழிவு தேவை. இதை, விதைப்பதற்கு முன் அடியுரமாக இட வேண்டும்.

நாற்றங்கால், நெகிழிப்பை மற்றும் மண் தொட்டிகளில் நிரப்ப வேண்டிய மண் கலவையில் 20% மட்கிய நார்க்கழிவு தேவைப்படும்.

நன்கு வளர்ந்த தென்னை, மா, வாழை ஆகிய மரங்களுக்கு முறையே ஐந்து கிலோ இட வேண்டும்.

விலைக்கு வாங்கி அதிகளவில் நிலத்தில் இடுவது கடினம். அதனால், சொந்தமாகத் தயாரித்துக் கொள்வது நல்லது.

மட்கிய கழிவை வாங்குவதற்கு முன், நன்கு மட்கியது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நன்கு மட்காத கழிவை நிலத்தில் இட்டால், இது அங்குள்ள சத்துகளைக் கிரகித்துச் சிதையும். இதனால், நிலத்திலுள்ள பயிர்கள் பாதிக்கும்.


Pachai boomi RAJASEKAR

முனைவர் ம.இராஜசேகர், பயிற்சி உதவியாளர், வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading